• சகோதரி சாந்தி பொன்னு •
(மார்ச் – ஏப்ரல் 2025)

உலகமும் காலநிலைகளும் உருண்டுருண்டு வருடாவருடம் திரும்பத்திரும்ப அதே இடத்துக்கே வந்து நிற்கின்றன. அப்படியே இந்த ஆண்டிலும் திரும்பவும் ஒரு லெந்து நாட்கள், பெரிய வெள்ளி, உயிர்த்த ஞாயிறு என்று ஒரு காலநிலைக்கு சமீபமாக நாமும் வந்துவிட்டோம். ஆனால், ஒரு கிறிஸ்தவனின் வாழ்வு, உருண்டோடுகின்ற வாழ்வே அல்ல; காலநிலைகளுடன் மாறுகின்ற வாழ்வும் அல்ல. அது ஒரு ஏணியின் ஏற்றம் போன்றது. கிறிஸ்தவ வாழ்வில் வளர்ச்சியடைந்து, முதிர்ச்சியடைந்த பின்னர், திரும்பவும் இந்த உலகில் ஒரு குழந்தையாக நாம் பிறக்கிறவர்கள் அல்ல; மாறாக, காலம் நிறைவேறும்போது நமது இரட்சகரை, நமது மணவாளனை சந்திப்பதற்கு ஆயத்தமாகின்ற, அதை நோக்கிய வளர்ச்சியிலே வளருகின்ற அற்புத வாழ்வைப் பெற்றிருக்கிறவர்கள். இதனை இன்றைய கிறிஸ்தவ சமுதாயம் எவ்வளவுக்கு உணர்ந்து, உணர்வடைந்து வாழுகிறது?

மனிதனைத் தமது சாயலிலும் தமது ரூபத்திலும் உருவாக்கிய தேவன், மற்ற ஜீவ ஜந்துக்களுக்கு இல்லாத உறவுப் பிணைப்புகளை மனிதனுக்கு கொடுத்திருக்கிறார் என்றால், படைப்பிலே மனிதனுக்கு அவர் கொடுத்திருக்கும் பெறுமதி எவ்வளவு உயர்ந்தது என்பதை நாம் உணரவேண்டும். நம்மைச் சுற்றியிருக்கிற இயற்கையின் ஒவ்வொரு படைப்பிலும் அசைவிலும் தொனியிலும் நாம் ஆண்டவரை உணரலாம்; உணர்ந்து அனுபவிக்கலாம்; அனுபவிக்க வேண்டும். வானில் செங்கதிர் புறப்படுகின்ற அதிகாலையில், புல்லின் நுனியில் ஒளிருகின்ற பனித்துளியில் ஆண்டவரின் அன்பையும் ஒளியையும் கருணையையும் நீங்கள் அனுபவித்திருக்கிறீர்களா? எங்கேயோ ஒலிக்கின்ற சிட்டுக்குருவியின் தனி இசையிலும், சலசலத்து ஓடுகின்ற ஆற்றின் அலைகளிலும் ஆண்டவரின் மெல்லிய ஓசையைக் கேட்டிருக்கிறீர்களா? வானின் இடிமுழக்கத்திலும், கண்ணைப் பறிக்கும் மின்னல் வெளிச்சத்திலும் தேவனுடைய மகத்துவத்தை உணர்ந்திருக்கிறீர்களா?

ஒவ்வொன்றிலும் ஆண்டவர் இருக்கிறார். அது போல அவர் தாமே மனிதனுக்கு அளித்த ஒவ்வொரு மனித உறவுப் பிணைப்பிலும், ஆண்டவர் நம்மில் கொண்டிருக்கும் உறவின் ஆழத்தை நமக்கு உணர்த்துகிறார். ஒரு மனிதன் தன் பிள்ளையைச் சுமந்துவருகிறதுபோல…… இங்கே ஒரு தகப்பன் தன் பிள்ளையில் கொண்டுள்ள உறவை கர்த்தரில் காண்கிறோம்; ஒரு தாய் தேற்றுவதுபோல… நமது தாயின் அரவணைப்பிலே நாம் தேவஅன்பை உணருகிறோம். ஒரு சகோதரனாக, ஒரு உற்ற நண்பனாக, ஒரு ஆசானாக, ஒரு குருவாக, எல்லாவற்றுக்கும் மேலாக நமது ஆத்ம நேசராக மணவாளனாக நமது ஆண்டவரை அனுபவிக்கின்ற மகாபெரிய கிருபையை நாம் பெற்றிருக்கிறோம்.

இயேசு எனக்காகவே வந்தார்!

இந்த அத்தனை உறவுகளையும் மனித உறவில் நிறைவாய்த் தந்துள்ள ஆண்டவர், ஒரு மனிதனாய் இந்த உலகில் ஏன் வந்து உதித்தார்? இந்தக் கேள்விக்கு நாம் பலவிதங்களில் பதில் சொல்ல அறிந்திருக்கிறோம். நமது பாவங்களை மன்னித்து, நம்மை மீட்கும்படி வந்தார்; நமது பாவத்திற்குக் கிரயமாக தமது இரத்தத்தைச் சிந்தி நம்மை மீட்க வந்தார்; நமக்குப் புதிய வாழ்வு தர வந்தார்; நம்மைத் தமது பிள்ளைகளாக்க வந்தார். நித்தியவாழ்வின் நிச்சயத்தைத் தர வந்தார் என்று பலவிதங்களில் நாம் சொல்லலாம். இவை அத்தனையும் சத்தியம்!

ஆனால், எவ்வளவு காலத்துக்கு நாம் இப்படியே சொல்லிக்கொண்டு, திரும்பத்திரும்ப ஆண்டவரைத் துக்கப்படுத்தும்படி ஜீவிக்கப்போகிறோம்? “நான் ஆண்டவரைத் துக்கப்படுத்துகிறேனா” என்று இந்தக் கேள்வி ஒரு சிலரைத் துக்கப்படுத்தலாம். என்றாலும், நம்மை நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டுமென்றால் சற்று ஆழத்துக்கு நாம் கடந்து போகத்தான் வேண்டும். அன்று இராமுழுவதும் வலைகளைப் போட்டுப் பிரயாசப்பட்டு ஒரு மீன் கூடப் பிடிக்கமுடியாமல் கரைக்கு வந்திருந்த பேதுருவிடம் இயேசு, “ஆழத்தில் …உங்கள் வலைகளைப் போடுங்கள்” என்றார். வலை கிழியத்தக்க மீன்கள் கிடைத்ததுமன்றி, பேதுரு என்ற ஒரு “பாறை” கிடைத்ததும் அங்கேதான். ஆக, நாமும் சற்று ஆழத்துக்குச் செல்லலாமே.

கர்த்தர் நமக்களித்த மனித உறவுகளிலே நாம் எவ்வளவுக்கு மகிழ்ந்திருக்கிறோம். அத்தனை உறவுகளைப் பார்க்கிலும் ஒரு மேலான ஒப்பற்ற உன்னத உறவு ஒன்றை தேவன் படைப்பிலேயே நமக்கு ஏற்படுத்திக்கொடுத்துள்ளார். அதுதான் விவாக உறவு! அதாவது, மணவாளன் – மண வாட்டி உறவு; கணவன் மனைவி உறவு! இதற்கு ஒப்பானதும் சமமானதுமான எந்த உறவும் கிடையாது என்று சொன்னால் மிகையாகாது.

இந்த உறவின் வாசனையைத்தான் நாம் வேதாகமம் முழுவதிலும் நுகருகிறோம். அது ஒரு ஒப்பற்ற வாசனை! ஒரு மணவாளன் மணவாட்டி உறவில், புருஷன் மனைவி உறவில், தேவாதி தேவன் நம்மில் வைத்திருக்கிற ஒப்பற்ற உறவை தெளிவாகவே அவர் வெளிப்படுத்தியுள்ளார். உலகில் ஏற்படுத்தப்படுகின்ற ஒவ்வொரு திருமண உடன்படிக்கையும், விவாக வைபவமும், புருஷன் மனைவி தாம்பத்திய உறவும், மணவாளனாகிய கிறிஸ்து தமது மணவாட்டியாகிய சபையுடன் (அதாவது நம்முடன்) செய்துகொண்ட உடன்படிக்கைக்கும், உறவுக்கும், இறுதியில் நிறைவேறப் போகின்ற கலியாண விருந்துக்கும் ஒப்பீடாக இருக்கிறது, சாட்சியாக இருக்கிறது என்பதை இன்று யார் உணருகிறோம்? உணரக்கூடுமானால் தேவன் வெறுக்கின்ற விவாகரத்துக்கள் மலிந்ததும் ஏன்?

மணவாளன் இயேசு உலகிற்கு வந்தது ஏன்?

பாவத்தில் விழுந்துபோன தமது பிள்ளைகளை மீட்டெடுக்க கிறிஸ்து உலகிற்கு வந்தார்; தமது பரிசுத்த இரத்தத்தைச் சிந்தி பாவிகளாகிய நம்மை இரட்சித்தார் என்று வெறுமனே சொல்லிவிட்டு நாம் கடந்து சென்றுவிடுகிறோம். தமது பரிசுத்த இரத்தத்தைச் சிந்தி நம்மை அவர் மீட்க நினைத்தது எதற்காக? நாம் விடுதலையோடு பாவம் செய்வதற்காகவா? இன்று அப்படித்தான் நமது கிறிஸ்தவ வாழ்வு இருக்கிறதோ என்று சிந்திக்கத் தோன்றுகிறது. தமது பிதாவின் மடியைவிட்டு, பரலோகின் சகல துதி வாழ்த்துக்களையும் விட்டு, சகலத்தையும் துறந்து, இந்தப் பாவ உலகில் அவருடைய பரிசுத்த கால்கள் பட்டது ஏன்? எவ்வளவு துணிகரமாக நாம் அவருடைய திருப்பந்தியில் அமருகிறோம்! உண்மைதான், நமது பாவங்களுக்குப் பரிகாரமாக, அதற்கான விலைகிரயமாக கிறிஸ்து தம்மைத் தாமாகவே கொடுத்தார் என்பது சத்தியம். ஆனால், நமது உணர்வுகள் உணர்வடையும்படி நாம் சற்று சிந்திப்பது நல்லது. வெறுமனே நம்மைச் சுற்றிக் கட்டியிருக்கிற பாவசங்கிலியை அறுத்தெறிந்து விடுதலையாக்க மாத்திரமா இயேசு வந்தார்? இல்லை; அதற்கும் மேலே….…

ஆண்டவர் இயேசுவுக்கும் நமக்கும் உள்ள உறவின் ஆழத்தை பவுலடியார் அழகாகவும் உணர்வுப்பூர்வமாகவும் எழுதியே கொடுத்திருக்கிறார். “…கிறிஸ்துவும் சபையில் (நம்மிலே) அன்பு கூர்ந்து, தாம் அதைத் திருவசனத்தைக் கொண்டு தண்ணீர் முழுக்கினால் சுத்திகரித்து, பரிசுத்தமாக்குகிறதற்கும், கறைதிரை முதலானவைகள் ஒன்றும் இல்லாமல் பரிசுத்தமும் பிழையற்றதுமான மகிமையுள்ள சபையாக (பிள்ளைகளாக) அதைத் தமக்குமுன் நிறுத்துவதற்கும் தம்மைத்தாமே அதற்காக ஒப்புக்கொடுத்தார் (எபே.5:25-27) என்றும், மேலும், “நாம் அவருடைய சரீரத்தின் அவயவங்களாயும், அவருடைய மாம்சத்திற்கும் அவருடைய எலும்புகளுக்கும் உரியவர்களாயும் இருக்கிறோம்” (எபே.5:30) என்றும் பவுல் தெளிவாகவும் திட்டவட்டமாகவும் எழுதியிருக்கிறார்.

இதிலே சில சொற்களை நாம் கவனிக்கவேண்டும். “கறைதிரை அற்றவர்களாக்க”, “பரிசுத்தமாக்க”, “அவருடைய மாம்சத்திற்கும் அவருடைய எலும்புகளுக்கும் உரியவர்களாக்க”. இவற்றுக்காக கிறிஸ்து பலவந்தமாக அல்ல, தாமே அதாவது, “தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார்”. இது வெறுமனே மாறிப்போகும் இந்த உலக வாழ்வுக்கு மாத்திரமல்ல, இது என்றும் மாறாத நமது நித்திய வாழ்வுக்காக கிறிஸ்து செய்துமுடித்த பெரிய கிரியையாகும்! யாரும் அவரை வற்புறுத்தவில்லை, தமது பிள்ளைகளை மீட்டெடுப்பதற்காக அவரே தம்மை இரத்தம் சிந்துதலுக்கும் மரணத்துக்கும் ஒப்புக்கொடுத்தார்.

இந்த எபேசியர் 5:21-33 வரையான பகுதியில் பவுல், ஒரு புருஷனுக்கும் மனைவிக்கும் உள்ள உறவை கிறிஸ்துவுக்கும் சபைக்கும் உள்ள உன்னதமான உறவுக்கு ஒப்பிட்டு ஆணித்தரமாகவும் தெளிவாகவும் எழுதியுள்ளார். அப்படியானால் கணவன் மனைவி உறவு கர்த்தருக்கு முன்பாக எவ்வளவு மேன்மையானது என்பதை நாம் சிந்திக்கவேண்டும். அதனை வெறும் போதனையாக அல்லாமல், கிறிஸ்து தமது மணவாட்டியாகிய சபைக்காக எதனைச் செய்தார், அதனை எப்படி நேசிக்கிறார் என்று செயல்முறையில் செய்து காட்டி, உலகிலே கணவன் மனைவி உறவானது, கிறிஸ்து சபையில் வைத்திருக்கிற உறவுக்கு மாதிரியாக சாட்சியாக இருக்கவேண்டுமென்பதையே இந்த வேதவாக்கியங்கள் நமக்கு உணர்த்துகின்ற சத்தியம்.

உன்னதமான திருமண பந்தம்

ஆனால், இந்த எபேசியர் பகுதியானது திருமண பந்தத்திற்கு மிகமிக உயர்வானதொரு பார்வையைக் கொடுத்திருக்கிறது. திருமணம் என்பது ஏதோ மனித வாழ்விலே நிகழவேண்டிய ஒன்று என்றோ, அல்லது மனதில் உருவாகும் பாலியல் ரீதியான இச்சைக்கு மருந்தாகவோ ஏற்படுத்தப்பட்டது அல்ல; மாறாக, இது கிறிஸ்துவுக்கும் திருச்சபைக்கும் உள்ள உறவுக்கான ஒரு உன்னதமான காட்சியைக் கொடுக்கிறது! இது ஒரு பரிசுத்த பந்தம், வாழ்வின் ஒரு அடையாளம், சுயஅர்ப்பணிப்பிலும் அன்பிலும் அஸ்திபாரமிடப் படவேண்டிய ஒரு உறுதியான உறவு. இந்த உறவைத்தான் இயேசு சிலுவையிலே தம் பிள்ளைகளுடன் ஏற்படுத்தினார். கிறிஸ்துவின் மரணம் நமது பாவங்களை மன்னித்து, தமது சபையை (நம்மை) பாவங்களிலிருந்து பரிசுத்தமாக்கி, சுத்திகரித்து, தமக்குச் சொந்தமாக்கும்படி நம்மை வேறுபிரித்திருக்கிறது. இதைத்தான் திருவசனம் இன்றும் செய்கிறது. “சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்” என்றார் இயேசு.

அடுத்து, அந்நாட்களில் கிழக்கத்திய நாடுகளில் திருமண சடங்காக மணமகளுக்கு ஒரு குளியல் கொடுத்து அவளைத் திருமணத்திற்கு ஆயத்தம் செய்வார்கள். இதைத்தான் இங்கே, ஞானஸ்நானத்தினாலே நாம் சபைக்குள் நுழைய ஆயத்தப்படுத்தப்படுகிறோம் என்பது செயல்முறைப்படுத்தப் படுகிறது.

மேலும், ஆதாமின் விலா எலும்பையும் அதனுடன்கூடிய தசையையும் கொண்டு ஆதாமுக்கு ஒரு துணையைத் தேவன் உருவாக்கினார். கெத்சமெனே தோட்டத்திலேயே இரத்தம் சிந்த ஆரம்பித்த நமது இரட்சகர், அடிக்கப்படும்போதும், எருசலேம் வீதியெங்கிலும், பின்னர் ஆணிகளால் கடாவப்பட்டபோதும், சிலுவையிலே தொங்கியபோதும் தமது பரிசுத்த இரத்தத்தை நமக்காகவே சிந்தினார். இவை போதாதென்று அவர் மரித்துவிட்டாரா என்பதை உறுதிப்படுத்தும்படி போர்வீரன் ஒருவன் ஈட்டியினால் அவருடைய விலாவிலே குத்தினான். உடனே இரத்தமும் தண்ணீரும் புறப்பட்டது என்று யோவா.19:34ல் வாசிக்கிறோம். ஆம், ஆண்டவருடைய விலாவிலிருந்து உண்டான தமது மணவாட்டி சபையினிமித்தம் தமது கடைசி சொட்டு இரத்தத்தைக்கூட மிச்சம் வைக்காமல் சிந்தி, “எல்லாம் முடிந்தது” (யோவான் 19:30) என்று சொல்லி யாவையும் செய்துமுடித்தவராக, “என் மணவாட்டி கறைதிரை அற்றவள் என்று பறைசாற்றினாரே” நமது ஆண்டவர்! யாருக்காக?

இந்த இரகசியம்˜

இதுதான் பவுல் எபேசியருக்குக் குறிப்பட்ட “இரகசியம்”. திருச்சபையானது (நாம்) பூரணமற்றதும் கறைகள் உள்ளதுமாயிருந்தபோதிலும் கிறிஸ்து அதை நேசித்தார். அதைச் சுத்திகரிக்கும்படி தம்மையே தாமாகவே கொடுத்தார். இதற்கு ஒப்பாக ஒரு புருஷன் எப்படி இருக்கவேண்டும் என்பதையும் சபை கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிந்திருக்கிறதுபோல மனைவிகளும் எப்படி தங்கள் சொந்தப் புருஷருக்குக் கீழ்ப்படிந்திருக்கவேண்டும் என்பதைக் குறித்தும் பவுல் எழுதிய எபேசியர் 5: 21-33 பகுதியைப் படிப்போம். இவற்றை உணர்ந்த பின்னரும், மணவாளன் கிறிஸ்துவுக்கும் மணவாட்டி சபைக்கும் உள்ள பரிசுத்த உறவின் வெளிப்பாடாக இருக்கிற கணவன் மனைவி உறவை நாம் கொச்சைப்படுத்தலாமா? அப்படிச் செய்தால் அது தேவனுடைய அநாதி திட்டத்தைக் குலைக்கும் செயலாகும். அது தேவனைவிட்டுப் பிரியும் செயலாகும். அது தேவனைத் துக்கப்படுத்தும் செயலாகும். அது கிறிஸ்து நம்மில் கொண்டிருக்கும் உறவை மாசுபடுத்தும் செயலாகும். நம்மைப் பழுதற்றவர்களாக பரிசுத்தர்களாக கறையற்றவர்களாக தமக்கு முன்னே நிறுத்தும்படிக்கு தம்மைத்தாமே அர்ப்பணித்த, பலியாக்கிய கிறிஸ்துவைப் புறக்கணிப்பது போலாகும்.

இறுதியாக, “சத்தியத்தை அறியும் அறிவை அடைந்தபின்பு நாம் மனப்பூர்வமாய்ப் பாவஞ் செய்கிறவர்களாயிருந்தால், பாவங்களினிமித்தம் செலுத்தத்தக்க வேறொரு பலி இனியிராமல், நியாயத்தீர்ப்பு வருமென்று பயத்தோடே எதிர்பார்க்குதலும், விரோதிகளைப் பட்சிக்கும் கோபாக்கினையுமே இருக்கும்.” மேலும், “தேவனுடைய குமாரனைக் காலின் கீழ் மிதித்து, தன்னைப் பரிசுத்தஞ் செய்த உடன்படிக்கையின் இரத்தத்தை அசுத்தமென்றெண்ணி, கிருபையின் ஆவியை நிந்திக்கிறவன் எவ்வளவு கொடிதான ஆக்கினைக்குப் பாத்திரவானாயிருப்பான் என்பதை யோசித்துப் பாருங்கள்” (எபி.10:26,27; 29).

நம்மை நாமே சோதித்தறிந்துகொள்வோம். கிறிஸ்து நம்மில் கொண்டிருக்கிற அன்பு, நித்திய விவாகத்திற்காக நம்மை நியமித்த அவருடைய கிருபை, திரும்ப வந்து நம்மைத் தமது வீட்டுக்கு அழைத்துச் செல்லவிருக்கும் அவரது கருணை இவற்றை உணர்ந்து, நமது விவாக உறவை, விவாக துணையை, விவாக பந்தத்தைக் கர்த்தருக்கு மகிமையாக, மணவாளன் சபையாகிய தனது மணவாட்டிக்காகத் தம்மை அர்ப்பணித்த அர்ப்பணிப்புக்குச் சாட்சியாகவும் மாதிரியாகவும் வாழ நம்மைப் பரிசுத்த ஆவியானவர் கைகளில் கொடுப்போமா? கர்த்தர் தாமே உங்கள் அனைவரையும் தமது கிருபையால் நிறைந்து நடத்துவாராக. ஆமென்.

உங்களுக்குத் தெரியுமா?

கிறிஸ்துவின் சிலுவைப்பாடுகளும் மரணமும் சர்வவல்லவராகிய தேவனுடைய பொறுமையை நமக்கு விளக்குகிறது!