• Prof.S.C.எடிசன் •
(மார்ச் – ஏப்ரல் 2025)

அவர் இங்கே இல்லை, அவர் உயிர்த்தெழுந்தார் (லூக்கா 24:6).

இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் சத்திய வசன நேயர்களுக்கு என் அன்பின் வாழ்த்துக்கள். இயேசுகிறிஸ்து உயிர்த்தெழுந்த நாள் ஒரு வெற்றியின் நாள்! அந்த நாள் நமக்கு ஒரு விடுதலையின் நாள்! மரணம் ஜெயித்து அதன் கூர் ஒடிக்கப்பட்ட நாளைத்தான் நாம் கொண்டாடுகிறோம்.

மரணம் நமக்கு ஒரு முடிவல்ல! மனிதன் தன் வாழ்க்கையைக் குறித்து ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு வினாடியும் மனிதன் கல்லறையை நோக்கி ஓடுகிறான். ஆனால், மனித வாழ்க்கை கல்லறையோடு முடிவடைந்து போவதல்ல; அது அதற்குப் பின்னாகவும் தொடருகிறது என்பதை இந்த உயிர்த்தெழுதல் நமக்குக் காண்பித்தது. இது மரணத்தின் கசப்பை அகற்றிப்போட்டது; எல்லாமே முடிந்துவிட்டது; இனி என்ன இருக்கிறது? நான் மண்ணாகி மண்ணோடு மண்ணாகி போவேன் என்று நினைக்கிற ஒருவனுக்கு சகோதரனே, உன் நினைவு தவறு; மரணத்திற்குப் பின்னதாக உமக்கொரு நீண்ட வாழ்க்கை இருக்கிறது. அது இரண்டே இரண்டு இடத்தில்தான் இருக்கலாம். ஒன்று மோட்சம் அல்லது நரகம்.

இந்த இரண்டு இடங்களில் ஓரிடத்தில்தான் நீங்கள் நித்தியநித்தியமாக வாழப்போகிறீர்கள் என்பதை உமக்கு இந்த உயிர்த்தெழுதல் உணர்த்துகிறது. இயேசு மரணத்தை வென்று உயிர்த்தெழுந்ததினால் அவர் சொன்னார்: நான் எப்படி எழுந்தேனோ, அப்படியே நீங்களும் ஒருநாளில் உயிர்த்தெழுவீர்கள். ஒரு நாளிலே தேவஎக்காளம் தொனிக்கும். அவர் வருவார். அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். பின்பு, உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக, மேகங்கள்மேல் அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம் (1தெச.4:16,17) என்கிற வார்த்தை நமக்கு கிடைத்திருக்கிறது. இந்த வார்த்தையினால் ஒருவரை ஒருவர் ஆறுதல்படுத்துகிறோம். ஆகவே கிறிஸ்துவின் உயிர்த்தெழுந்த நாளை கொண்டாடும இவ்வேளையில் நான் உங்களுக்கு ஒரு ஆறுதலான வார்த்தை சொல்வது என்னவென்றால், நாம் மரித்து மண்ணோடு மண்ணாய் போவதில்லை. நாம் மறுபடியும் எழுந்து மறுபடியும் உயிர்வாழ்வோம். நமக்கு முன்னாக மரித்த நம் உற்றார் இனத்தார் எல்லாரையும் நாம் காண்போம் என்பதாகும்.

அதாவது நாம் இங்கே தேவனுக்கேற்ற பிரகாரமாய் வாழ்ந்தால் தேவனோடு இருப்போம். கிறிஸ்து உயிர்த்தெழாவிட்டால் இந்த நம்பிக்கை ஒரு மனிதனுக்கு இருக்கமுடியாது. ஏனென்றால், அவருடைய கல்லறை காலியாகவில்லையே. அதற்குள் கிறிஸ்துவின் எலும்புகள் இருந்தால் அவர் மரித்துவிட்டார்; ஆகையால் வாழ்க்கையும் அதோடு முடிந்துவிடும் என்று இருக்கலாம். ஆனால், அந்த காலியான கல்லறை இன்றைக்கும் நம் வாழ்க்கை முடிவதில்லை என்று உலகம் அனைத்திற்கும் ஒரு சாட்சியாக இருக்கிறது.

சகோதரரே, இதை நம்புகிறீர்களா? நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும் இயேசு உயிர்த்தெழுந்தது உண்மை! அவர் நம்மையும் உயிர்த்து எழுப்புவாரென்பதும் உண்மை! நமக்கு ஒரு நித்திய வாழ்வு உண்டு; நமக்காக ஒரு வாசஸ்தலத்தை ஆயத்தம் பண்ணுகிறார் என்பதும் உண்மை! இத்தனை உண்மைகளையும் நாம் விசுவாசிக்கும்பொழுது நமக்குள் ஒரு நம்பிக்கை ஆழமாக இருக்கிறது. ஒருநாளில் நான் பரலோகத்தில் இயேசுவோடு இருப்பேன் என்பதாகும்.

சகோதரனே, சகோதரியே, இந்த நம்பிக்கை ஈஸ்டர், கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் உங்களுக்குத் தந்திருக்கிறது. உயிர்த்தெழுந்த இயேசு அநேகருக்கு தரிசனமானார். அவர் சீஷர்களை அப்படியே விட்டுவிட்டு போய்விடவில்லை. அவர் தாம் நேசித்தவர்களையும் தம்மோடு இருந்தவர்களையும் விசுவாசத்தில் திடப்படுத்தி, உயிர்த்தெழுந்ததின் உண்மையை அவர்கள் உணரவும் உயிர்த்தெழுந்ததற்கு அவர்களை சாட்சியாக மாற்றவும் அவர் இந்த பூமியிலே 40 நாட்கள் இருந்து அவர்களை திடப்படுத்தினார்.

முதலாவது, மகதலோன மரியாள் அவருடைய உயிர்த்தெழுதலை நம்பவில்லை. ஆகவே அவள் கல்லறையண்டையிலே சுகந்த வர்க்கங்களுடன் நின்று அவருடைய சரீரத்தைக் காணாமல் அழுது கொண்டிருந்தாள். அவளுக்கு விசுவாசம் இல்லை; அன்பு ஒன்றுதான் இருந்தது. ஏனென்றால் அவளிடத்திலிருந்து ஏழு பிசாசுகளை இயேசு விரட்டி இருந்தார். ஆகையால் அளவில்லாத அன்பு கொண்டவளாக இருந்தார். இயேசு வந்து: ஏன் அழுகிறாய்? என்று கேட்டபொழுது இயேசுவின் சரீரத்தைக் காணவில்லை என்று சொன்னாள். அவர் தன்னை உயிரோடு இருக்கிறவராக காண்பித்து அவளை உற்சாகப்படுத்தினார். அதற்குப் பின்பதாக அவரது சரீரத்தை அவள் தேடவில்லை. அவள் இயேசுவின் உயிர்த்தெழுதலுக்கு சாட்சியாக இருந்தாள். பரிசுத்த அகஸ்டின் அவளைக் குறித்து சொல்லும்பொழுது, அப்போஸ்தலர்களுக்கு ஒரு நற்செய்தி அறிவித்த அப்போஸ்தலனாக மகதலேனா மரியாள் இருக்கிறாள் என்றார். ஏன்?

இயேசுகிறிஸ்து அவளிடம் சொன்னார்: நான் உயிர்த்தெழுந்ததை என் சகோதரருக்குப் போய் சொல் என்றார்.

இரண்டாவதாக, சீஷர்களுக்கு ஆண்டவர் தரிசனமானார். அவர்கள் யூதர்களுக்கு பயந்து ஒரு அறைக்குள்ளாக ஒளிந்துகொண்டிருந்தனர். இயேசு அவர்கள் நடுவில் நின்று உங்களுக்கு சமாதானம் என்றார். இந்த மகதலேனா மரியாளையும் அவர்கள் நம்பவில்லை. இயேசு வந்ததையும் அவர்கள் நம்பவில்லை. ஏதோ ஆவியைக் காண்கிறதாக அவர்கள் நினைத்தார்கள். இயேசு சொன்னார்; நான் ஆவியல்ல, எனக்கு சரீரமும் இருக்கிறது. ஏதாவது புசிக்கக் கொடுங்கள் என்று கேட்டார். பொரித்த மீன் துண்டையும் தேன்கூட்டு துணிக்கைகளையும் வாங்கி அவர் சாப்பிட்டார். இயேசுவை கண்டபொழுது சீஷர்கள் சந்தோஷப்பட்டார்கள். ஆகவே அவர்களை திடப்படுத்தினார்.

ஆனாலும் இன்னும் அவர்களுக்குள் சந்தேகம் இருந்தது. தோமா அந்நேரத்தில் அங்கே இல்லை. நீங்கள் எதைக் கண்டு, இயேசுவை கண்டோம் என்று சொல்லுகிறீர்கள்? நான் அதை நம்ப மாட்டேன். நீங்கள் பயத்தினால் எதையாவது பார்த்திருப்பீர்கள். அவருடைய கையில் உள்ள காயத்தில் என் விரலை இட்டு, அவர் விலாவிலே என் கையை போட்டாலொழிய நான் விசுவாசிக்க மாட்டேன் என்றான். எட்டு நாளைக்கு பின்பு இயேசு மறுபடியும் வந்து தோமாவே, உன் கையை நீட்டி என் விலாவில் போடு; அவிசுவாசியாயிராமல் விசுவாசியாய் இரு என்றார். அவன் என் ஆண்டவரே, என் தேவனே My Lord, My God என்று சொல்லி, அவன் அந்த நேரத்தில் தன்னை முற்றிலுமாய் அர்ப்பணித்தான். அதற்குப் பின்னதாக அவர் ஒருநாளும் இயேசுவின் உயிர்த்தெழுதலைக் குறித்து சந்தேகப்படவில்லை. அந்த உயிர்த்தெழுந்த வல்லமை தனக்குள் இருக்கிறது என்பதை குறித்தும் அவன் சந்தேகப்படவில்லை. எல்லா அப்போஸ்தலர்களிலும் அதிகதூரம் சென்றது தோமாதான். இந்தியாவிற்கு வந்து அவன் இயேசுவை அவருடைய உயிர்த்தெழுதலை ஜனங்களுக்கு அறிவித்தான்.

இன்னும் இரண்டு சீடர்கள் இருந்தார்கள். அவர்கள் இயேசு மரித்தவுடனே, இனி நமக்கு இங்கே வேலை இல்லை; நாம் பழையபடி நமது கிராமத்திற்கு போய் தொழிலை செய்வோம் என்று எம்மாவூரை நோக்கிப் புறப்பட்டனர். ஆனால் இயேசு, அவர்களோடு நடந்து, நீங்கள் ஏன் துக்கமுகமாய் இருக்கிறீர்கள் என்று கேட்டார். அவர்கள் சொன்னார்கள்: இயேசுவானவர் இஸ்ரவேலை இரட்சித்து மீட்கிறவர் என்று இருந்தோம். அவர் இறந்து மூன்று நாள் ஆயிற்று. சில ஸ்திரீகள் கல்லறைக்கு போய் அவர் உயிர்த்தெழுந்தார் என்றார்கள். எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றனர். எருசலேமில் இருந்து கிட்டத்தட்ட 8 மைல் தூரம் அவர்களோடு இயேசு நடந்துசென்றார்.

சகோதரனே, இந்த காரியத்தை நீங்கள் கொஞ்சம் யோசித்துப்பாருங்கள். அவர்களால் அவர் உயிர்த்தெழுந்ததை விசுவாசிக்க முடியவில்லை. விசுவாசிக்கிறதற்கு மந்த இருதயமும் மந்த புத்தியும் உள்ளவர்களாக இருந்தனர். ஆனால் இயேசு, அவர்களோடு நடந்தார். அருமையானவர்களே, உங்களுடைய விசுவாசம் குறைவுள்ளதாய் இருக்கட்டும். உங்களுடைய அறிவு குறைவுள்ளதாய் இருக்கட்டும். ஆனால் இயேசு, வாழ்க்கையில் உங்களோடு நடப்பார் என்பதற்கு இந்த எம்மாவூர் சீஷர்கள் ஒரு சாட்சியாய் இருக்கின்றனர். உயிர்த்தெழுந்த இயேசு 8 மைல் தூரம் அவர்களோடு நடந்துசென்று வேதத்தை விளக்கிச் சொன்னார். அவர்கள் சொன்னார்கள்: அவர் நமக்கு விளங்கக் காட்டினபொழுது நம்முடைய இருதயம் கொழுந்துவிட்டு எரியவில்லையா?

அணைந்து போயிருந்த அவர்களது விசுவாசத்தையும் இருதயத்தையும் அவர் கொழுந்துவிட்டு எரியச் செய்தார். உங்களுக்குள்ளும் அதே அனலைத் தந்து பரிசுத்த ஆவியினால் உங்களை நிரப்பி, எரிந்து பிரகாசிக்கிற விளக்காக உங்களை மாற்ற இயேசுவால் முடியும். ஏனென்றால் அவர் உயிர்த்தெழுந்தவர், உங்களோடு நடக்கிறவர், உங்கள் சந்தேகங்களை நீக்குகிறவர். அவர்களோடு சென்றார். அப்பம் பிட்கையில் அவர்கள் அவரை கண்டார்கள். என்ன நடந்தது? இயேசு உயிர்த்தெழுந்தார்; நாம் அவரைக் கண்டுவிட் டோம் என்று அப்படியே இருந்தார்களா? இல்லை, கிறிஸ்துவை தரிசித்தவர்களும் உயிர்த்தெழுதலை விசுவாசிக்கிறவர்களும் சும்மாவே இருக்கமுடியாது. அவர்கள் உடனே எருசலேமுக்கு ஓடிவந்து சீஷர்களிடத்திலே நாங்கள் இயேசுவை கண்டோம் என்றனர். அந்த செய்தியை அவர்களால் அடக்கி வைக்கவே முடியவில்லை. விசுவாசமில்லாதவர்களாய் மந்த இருதயமுடையவர்களாகத்தான் போனார்கள். ஆனால், வரும்போதோ அனலுள்ளவர்களாய் எரிகிற பிரகாசமான விளக்குகளாய் வந்து இயேசுவை கண்டோம் என்றனர். சகோதரனே, நீங்களும் உலகத்திற்கு ஒரு சாட்சியாய் இருக்கவே அவர் விரும்புகிறார். நீங்கள் அவருக்கு சாட்சிகளாயிருப்பீர்கள்.

அப்போஸ்தலர் 1:8ஆம் வசனத்தைப் பாருங்கள். பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும் பொழுது நீங்கள் பெலனடைந்து யூதேயாவிலும் சமாரியாவிலும் பூமியின் எல்லைகள் எங்கிலும் எனக்கு சாட்சியாய் இருப்பீர்கள்; என் உயிர்த்தெழுதலுக்கு சாட்சிகளாய் இருப்பீர்கள் என்றார். இயேசு பிறக்கவில்லை என்றால் மரணம் இல்லை. இயேசு மரிக்கவில்லை என்றால் உயிர்த்தெழுதலும் இல்லை. அவர் உயிர்த்தெழாவிட்டால் நமக்கு நம்பிக்கையும் இல்லை. ஆனால், அவர் பிறந்தது உண்மை. அவர் மரித்தது உண்மை. அவர் உயிர்த்தெழுந்ததும் உண்மை. ஆகவே நமக்கு ஒரு நிச்சயமான நம்பிக்கை உண்டு. ஆகவே நம்முடைய வாழ்க்கையில் இருக்கும் சந்தேகங்களை நீக்குவார்; நம்மைப் பலப்படுத்துவார்;

சகோதரர்களே, 1கொரிந்தியர் 13ஆம் அதிகாரம் அன்பிற்கு ஒரு அதிகாரமாய் இருந்தால், 1கொரிந்தியர் 15வது அதிகாரம் உயிர்த்தெழுதலுக்கு ஒரு அதிகாரமாய் இருக்கிறது. இந்தஅதிகாரத்தில் மூன்று, நான்கு ஆகிய வசனங்களில் பவுல் முழு சுவிசேஷத்தையும் சொல்லி இருக்கிறான். நான் அடைந்ததும் உங்களுக்குப் பிரதானமாக ஒப்புவித்ததும் என்னவென்றால், கிறிஸ்துவானவர் வேத வாக்கியங்களின்படி நமது பாவங்களுக்காக மரித்து, அடக்கம் பண்ணப்பட்டு வேதவாக்கியங்களின்படி மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்து, கேபாவுக்கும் பின்பு பன்னிருவருக்கும் தரிசனமானார். இதுதான் பூரண சுவிசேஷமாகும்! அந்த உயிர்த்தெழுதலுக்குப் பின்பு அவர் 500 பேருக்கு தரிசனமானார் என்று சொல்லியிருக்கிறார். 14ஆம் வசனத்தை பாருங்கள்: கிறிஸ்து எழுந்திருக்கவில்லையென்றால், எங்கள் பிரசங்கமும் விருதா, உங்கள் விசுவாசமும் விருதா. அவர் உயிர்த்தெழுந்ததினால்தான் எங்கள் பிரசங்கத்திற்கும் ஊழியத்திற்கும் ஒரு அர்த்தம் இருக்கிறது. மரித்தோர் உயிர்த்தெழாவிட்டால், தேவன் எழுப்பாத கிறிஸ்துவை அவர் எழுப்பினாரென்று நாங்கள் தேவனைக் குறித்து சாட்சி சொன்னதினாலே தேவனுக்காகப் பொய்ச்சாட்சி சொல்லுகிறவர்களாவும் காணப்படுவோமே (வச.15). இல்லை; அவர் உயிர்த்தெழுந்தது உண்மை. ஆகவே எங்கள் சாட்சியும் உண்மை என்கிறார் பவுல்.

இரண்டாவதாக, பதினேழாம் வசனத்தை பாருங்கள்: கிறிஸ்து எழுந்திராவிட்டால், உங்கள் விசுவாசம் வீணாயிருக்கும்; நீங்கள் இன்னும் உங்கள் பாவங்களில் இருப்பீர்கள். கிறிஸ்து உயிர்த்தெழுந்ததினால்தான் அந்தப் பாவத்திலிருந்து நமக்கு ஒரு பூரண விடுதலை கிடைத்தது. அவருடைய இரத்தம் நம் பாவங்களை கழுவி சுத்திகரித்தது. ஆனால் அவர், உயிர்த்தெழுந்ததினால் நாம் பாவம் நீங்கி பரலோகத்திற்கு போகிறோம். அந்தப் பாக்கியத்தை தமது உயிர்த்தெழுதலினால் அவர் நமக்குத் தருகிறார்.

பவுல் எழுதுகிறார்; “கிறிஸ்து எழுந்திருக்காவிட்டால் உங்கள் விசுவாசம் வீணாயிருக்கும்; நீங்கள் இன்னும் உங்கள் பாவத்தில் இருப்பீர்கள்” என்று. கிறிஸ்துவுக்குள் நித்திரை அடைந்தவர்களும் கெட்டிருப்பார்கள். கிறிஸ்துவோ மரித்தோரிலிருந்து எழுந்து நித்திரை அடைந்தவர்களில் முதற்பலன் ஆனார். மனுஷனால் மரணம் உண்டானபடியால் மனுஷனால் மரித்தோரின் உயிர்த்தெழுதலும் உண்டாயிற்று என்று உயிர்த்தெழுதலின் சகல சத்தியங்களையும் பவுல் தெளிவாக அங்கே சொல்லுகிறான். 22ஆம் வசனத்தைப் பாருங்கள். ஆதாமுக்குள் எல்லாரும் மரிக்கிறதுபோல, அதாவது, பாவத்திற்குள் எல்லாரும் மரிக்கிறதுபோல, கிறிஸ்துவுக்குள் எல்லாரும் உயிர்ப்பிக்கப்படுவார்கள். அதாவது, பரிசுத்தத்திற்குள் எல்லாரும் உயிர்ப்பிக்கப்படுவார்கள். நமது தன்மை மாறுகிறது. பாவத் தன்மையிலிருந்து பரிசுத்தத்தன்மைக்குள் நாம் வருகிறோம்.

இதற்கு காரணம் என்ன? இயேசு உயிர்த்தெழுந்தார். இயேசு உயிர்த்தெழாவிட்டால் மரித்தோரின் உயிர்த்தெழுதலும் இல்லை. மரித்தோர் உயிர்த்தெழாவிட்டால் புசிப்போம் குடிப்போம் நாளைக்கு சாவோம் என்று சொல்லலாமே. பவுல் சொல்லுகிறார், இயேசு உயிர்த்தெழவில்லையென்றால் நம் வாழ்க்கை இந்த மண்ணோடு முடிந்துவிடும் என்று. ஆனால், இயேசு உயிர்த்தெழுந்ததினால் அந்த நிலைமை மாறி நாம் கணக்கு ஒப்புவிக்க வேண்டியவர்களாய் இருக்கிறோம். நியாயத்தீர்ப்பின் நிச்சயத்தை இந்த உயிர்த்தெழுதல் உறுத்துகிறது. நாம் ஒருநாளில் நியாயாசனத்துக்கு முன்பு நிற்க வேண்டும். நாம் மரித்தோரிலிருந்து எழுவோம், நியாயத்தீர்ப்பு நமக்கு உண்டு என்பதை கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் இங்கே நமக்குக் காட்டுகிறது.

சகோதரனே, சகோதரியே, உங்களுக்கு இந்த உணர்வு உண்டா? நான் எப்படியும் வாழ்வேன், என் வாழ்க்கை இதோடு முடிந்துவிடும் என்று நாம் எண்ணக்கூடாது. ஒருநாளில் நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் எழுப்பப்படுவோம். உங்களுடைய வாழ்க்கையை அங்கே நியாயந்தீர்ப்பதற்கு இயேசுகிறிஸ்து நியாயாசனத்தில் இருப்பார். உங்களைக் குறித்து நியாயத்தீர்ப்பு எழுதின புத்தகத்தை அவர் திறப்பார். அதில் எழுதினபடி நீங்கள் நியாயத்தீர்ப்படைந்து விசுவாசியாயிருந்தால் பரலோகத்துக்கும், அவிசுவாசியாயிருந்தால் நரகத்திற்கும் தள்ளப்படுவீர்கள்.

கிறிஸ்து உயிர்த்தெழுதலினால் பரலோகத்துக்கு உரிய பாக்கியவானாய் அவர் நம்மை மாற்றி இருக்கிறார். உங்களையும் மாற்றுவார். உயிர்தெழுந்த இயேசுவை ஏற்றுக்கொள்வீர்களா!