• Dr.உட்ரோ குரோல் •
(மார்ச் – ஏப்ரல் 2025)
9. தியத்தீரா – சகிப்புத் தன்மையுடைய சபை !

இந்த இதழில் நாம் தியத்தீரா சபையைப் பற்றி ஆராய்வோம். முதலாவது இச்சபையின் இருப்பிடத்தை அறிந்துகொள்வோம். உங்களது வேத புத்தகத்தின் பின்பகுதியில் வரைபடங்கள் இருக்குமானால் அதைப் பாருங்கள். இன்றைய துருக்கியான ஆசியா மைனரின் மேற்கு விளிம்பில் எபேசு சபை அமைந்திருந்தது. வடக்கே சென்று, கிழக்கே திரும்பி, மீண்டும் தெற்கு மற்றும் மேற்கே சென்றால் அனைத்து சபைகளையும் நாம் காணலாம். இவை ஒரு வட்டத்தில் அமைகிறதல்லவா?
தியத்தீரா சபை பெர்கமுவிலிருந்து தென் கிழக்கே 40 மைல் தொலைவில் உள்ளது. இது ஒரு நகர சபை அல்ல; இங்கு வர்த்தகம் நடைபெற்றது, தியத்தீரா நகரத்துக்கென்று தனி கடவுள் இல்லை; இதுவொரு கைவினை பொருட்களின் வர்த்தக நகரமாகும்.
வர்த்தகம் தொடர்பான பல சங்கங்கள், அமைப்புகள் இங்கு இருந்தன. இவை மக்களை தங்களது அமைப்புகளில் இணைய வற்புறுத்தின. பொற்கொல்லர்கள் சங்கம், வெள்ளி கைவினைஞர்கள் சங்கம், மற்றும் சாயத்தொழிலாளர்கள் சங்கம் போன்றவை இருந்தன. தியத்தீரா ஓர் இரத்தாம்பர நிற நகரமாகும். ஐரோப்பாவில் முதன்முதலில் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய லீதியாள் பிலிப்பி நகரத்தில் வாழ்ந்தவள். அவள் தியத்தீரா நகரத்தைச் சேர்ந்தவள். அவள் துணிகளுக்குச் சாயம் ஏற்றி, அந்நிற ஆடைகளைத் தயாரித்து விற்று வந்தாள். சங்கங்களின் வலுவான ஆதிக்கத்தினால் அதில் ஒருவர் அங்கத்தினராவது அவசியமாகக் கருதப்பட்டது; இல்லையெனில் தியத்தீரா நகரில் எந்த பணியையும் பார்க்க இயலாது. மேலும் அவை பல தெய்வ வணக்கமுடையதாய்த் திகழ்ந்தது. மேலும் பாலியல் சார்ந்த நெறியுடையவர்களாயும் இருந்தன.
அநேக கிறிஸ்தவர்கள் இந்த சங்கங்களில் சேர விரும்பவில்லை. ஏனெனில் ஞாயிற்றுக்கிழமை போதகரின் பிரசங்கத்தைக் கேட்டதும், வார நாட்களில் தங்களது பணித்தளத்தில் காண்பதும் மதக்கொள்கைகளுக்கு முரணாக அமைந்திருந்தது.
பாலியல் கொள்கைகள் காரணமாகவும் பலர் இச்சங்கங்களில் சேர மனதற்றிருந்தனர். ஆனால் வேலையில்லாமல் அவர்களால் வாழ இயலவில்லை. மிகக்கடினமான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டனர். வேறு வழியின்றி தியத்தீரா சபை மக்களும் இச்சங்கங்களில் இணைந்தனர். இவ்வாறாக பாலியல் பாவம் சபைக்குள் நுழைந்தது.
அவர்கள் நற்செய்தியை நம்பினர். கர்த்தருடைய வார்த்தையை அவர்கள் தங்களுடைய அறிவுக்கேற்றபடி நம்பினார்கள். அதனால் நகரத்தில் காணப்பட்ட மற்ற நம்பிக்கையையும் சகித்துக் கொண்டனர். அவர்கள் வாழ்வாதாரத்துக்கு அது தேவைப்பட்டது. வாழ்க்கையை அந்நகரில் வாழ்வதற்கு எல்லாவற்றையும் சகித்துக்கொண்டனர். வெளிப்படுத்தல் புத்தகத்தில் காணப்பட்ட ஏழு சபைகளிலும் இதுவே சிறிய சபையாகும். ஆனால் அது பெற்ற கடிதம் மிக நீளமானது. அதில் 12 வசனங்கள் உள்ளன.
வெளிப்படுத்தல் 2:18இல் மற்ற சபைகளைப் பாராட்டுவதுபோலவே இச்சபையையும் இயேசு பாராட்டுகிறார். அவருடைய கண்கள் அக்கினி ஜூவாலை போன்று இருந்தது; அவருடைய கால்கள் வெண்கலம்போன்று காணப்பட்டது. “உங்களுடைய கிரியை, அன்பு, சேவை, நம்பிக்கை மற்றும் பொறுமை ஆகியவற்றை நான் அறிவேன். ஆனால், அவை முந்தினவைகளைவிட அதிகமாய் இருந்தன.”
இங்கும் ஓர் அமைப்பு காணப்படுகிறது. ஒவ்வொரு முறையும் சபைகளுக்கு செய்தியை அளிக்கும்பொழுது அவர் அவர்களை முதலாவது பாராட்டுகிறார்; பின்னர் கண்டிக்கிறார். தியத்தீரா சபைக்கு அவர் “சிறப்பானது” என்று பாராட்டுகிறார். ஆனால் இங்கு இயேசுவின் தோற்றத்தைக் கவனியுங்கள். முதல் அதிகாரத்தில் காணப்பட்டது போன்று அவருடைய கண்கள் அக்கினி ஜூவாலை போன்றும், பாதங்கள் பிரகாசமான வெண்கலம் போன்றும் இருந்தது. இது அவருடைய கூர்ந்தாயும் திறமையையும், அம்மக்களின் வாழ்வை உற்று நோக்கும் திறமையையும் வெளிப்படுத்துகிறது. ஆம், அவர் உங்கள் வாழ்க்கையையும் என்னுடைய வாழ்க்கையையும் ஆராய்ந்து பார்ப்பவர்!
தியத்தீரா சபை 21ஆம் நூற்றாண்டின் தேவாலயத்தைப் போன்றது என்பதை நாம் அறிவோம். முதலாவதாக, “உன் செய்கைகளையும், நீ செய்யும் நல்ல கிரியைகளையும் அவைகளுக்குப் பின்னாலிருக்கும் தூண்டுதலையும் நான் அறிவேன். இரண்டாவதாக, இவைகளை நீ அன்பினால் செய்தாய் என்பதையும் நான் அறிவேன்” என்றார்.
இச்சபை மாத்திரமே அதன் அன்புக்காகப் பாராட்டப்படுகிறது. மற்ற சபைகள் அதன் அளவுக்காகவும், அதன் விசுவாசத்தைக் காத்துக்கொண்டதற்காகவும் பாராட்டைப்பெற்றன. இந்த சபை சிறியதாயிருந்தாலும் அதனுடைய அன்புக்காக பாராட்டப்பட்டது. எபேசு சபை மிகப் பெரிய சபை. ஆனால், நீ ஆதியில் கொண்டிருந்த அன்பை விட்டாய் என்று கூறினார்.
மூன்றாவதாக, “உன் நம்பிக்கையை நான் அறிவேன். உனக்கு முன்னிருந்தவர்களுக்கு அளிக்கப்பட்ட சத்தியத்தின் மீதான உன்னுடைய அர்ப்பணிப்பையும் நான் அறிவேன்.”
“உன் சேவையை நான் அறிவேன்.” இங்கு தியக்கோன் என்ற சொல் குறிக்கப்பட்டுள்ளது. ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் சபைக்கு நீ செய்துவரும் உன்னுடைய தன்னார்வ சேவைகளை நான் அறிவேன். அதிகமான ஆர்வத் தூண்டுதலினால் இதைச் செய்தாய் என்பதையும் நான் அறிவேன். “சிறந்த கிரியை!” என்று பாராட்டுகிறார். தொடர்ந்து “உன்னுடைய பொறுமையையும் விடாமுயற்சியையும் நான் அறிவேன். நீ அதை ஒருபோதும் கைவிடவில்லை” என்றார். இறுதியாக அவர், “உன்னுடைய முந்தின கிரியைகளைவிட பிந்தின கிரியைகள் சிறப்பாக உள்ளன என்பதையும் அறிந்துள்ளேன். உன்னுடைய வாழ்வில் நான் முன்னேற்றத்தைக் காண்கிறேன். மக்களாக நீங்கள் வளர்ந்து சபையாக மாறியுள்ளீர்கள். கடந்தகால சாதனைகளை நினைத்து நின்றுவிடவில்லை; ஊழியத்தில் முன்னேறிச் செல்வதையும் என்னால் காணமுடிகிறது. உன்னை நான் பாராட்டுகிறேன். உன் வாழ்வில் உண்மையாய் இருப்பதனைத்துக்கும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்” என்றார்.
மற்ற சபைகளைப் பாராட்டுவதுபோலவே, “தியத்தீரா சபையே உன்னைப் பாராட்டுகிறேன்” என்பதுடன் அவர் நிற்கவில்லை. இச்சபையின் அன்பை அவர் பாராட்டுகிறார். ஆனால், நம்முடைய அன்பை வெளிப்படுத்தும் விதம் சகிப்புத் தன்மைக்கு நேராக வழிநடத்தவேண்டும். இதை எவ்வாறு கண்டுபிடிப்பது?
அனைத்து உணர்ச்சிகளும் ஓர் உண்மையை அடிப்படையாகக் கொண்டிருக்கும். அநேக மக்கள் உணர்ச்சியை அடிப்படையாகக் கொண்டே செயல்படுகிறார்கள். அவர்கள் ஆதாரத்தைக் காண்பதில்லை. உங்களுடைய உணர்ச்சி அன்புகூரத் தூண்டுகிறது. ஆனால், உண்மையானது எல்லாவற்றையும் அன்புகூர வேண்டாம் என்கிறது. சகலத்தையும் நம்மால் அன்புகூர முடியாது. சாலையில் நடந்த துப்பாக்கிசூட்டின் செய்தி உங்களுக்கு விருப்பமானதா? போர், பொறாமை, வெறுப்பு இவற்றை நாம் விரும்பக்கூடாது. அது போலவே ஏமாற்றுக்காரர், தூஷணக்காரர், இரக்க மற்ற கொலைகாரர் இவர்களை நாம் விரும்பக் கூடாது. எனவேதான் வேதாகமம் சத்தியத்தை அன்புடன் எடுத்துக்கூற இயம்புகிறது. நமது செயலின் அடிப்படையில் சத்தியம் விளங்கவேண்டும். நாம் சத்தியத்தைக் கூறும்விதத்தை அன்பு வெளிப்படுத்தவேண்டும்.
அநேகர் வெளிப்படுத்தலில் காணப்படும் சபையின் கடிதங்களை எச்சரிக்கையாகவும் பமுறுத்தலாகவும் காண்கின்றனர். ஆனால், சபைகளை எச்சரிக்குமுன் அவர் அவர்களைப் பாராட்டும் விதங்களை கவனியுங்கள். தீய வழிகளில் வாழும் சிலரிடம் பாராட்டக்கூடிய நல்ல விஷயங்களைப் பாருங்கள். தேவனும் இச்சபைகளின் சிறந்த பண்புகளைப் பாராட்டுகிறார். ஆனால், தவறுகளைச் சுட்டிக்காட்டவும் தயங்கவில்லை.
இயேசு தியத்தீரா சபையைப் பாராட்டும் காரி யங்களை 18 மற்றும் 19ஆம் வசனங்களில் நாம் காண்கிறோம். 20ம் வசனத்தில் “ஆகிலும்” என்ற சொல் காணப்படுகிறது.
“ஆகிலும், உன்னிடம் நான் காணும் குறை ஒன்று உண்டு. என்னவெனில், தன்னை தீர்க்கதரிசி என்று சொல்லுகிற யேசபேல் என்னும் ஸ்திரீயானவள் என்னுடைய ஊழியக்காரர் வேசித்தனம் பண்ணவும் விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளைப் புசிக்கவும் அவர்களுக்குப் போதித்து, அவர்களை வஞ்சிக்கும்படி நீ அவளுக்கு இடங்கொடுக்கிறாய். அவள் மனந்திரும்பும்படியாய் அவளுக்குத் தவணை கொடுத்தேன்; தன் வேசி மார்க்கத்தைவிட்டு மனந்திரும்ப அவளுக்கு விருப்பமில்லை (வெளி. 2:20-21). தியத்தீரா சபையின் சகிப்புத்தன்மையைப் பாராட்டிய இயேசு இங்கு நான்கு பிரச்சனைகளைக் கூறுகிறார்.
முதலாவது, “ஒருபோதும் பொறுத்துக்கொள்ளாத காரியங்களை நீங்கள் பொறுத்துக்கொள்ளுகிறீர்கள்.” நீங்களும் நானும் ஒரு நவீன உலகத்தில் வாழ்கிறோம். அதன் ஒரு தன்மை சகித்துக்கொள்வதாகும்.
அனைத்து மதங்கள் மற்றும் தேவன் அங்கி கரிக்காத வாழ்க்கை முறைகள் ஆகிய எல்லாவற்றையும் சகித்துக்கொள்ள நாம் கேட்கப்பட்டுள்ளோம்.
இன்றைய சபைகளும் இவ்வாறே போதிக்கின்றனர். உண்மையை அறியாததால் அனைத்தையும் நாம் சகித்துக்கொள்ளுகிறோம். மிகப் பெரிய ஆங்கில எழுத்தாளர் செஸ்டாடன் “சகிப்புத் தன்மை என்பது எதையும் நம்பாத மக்களின் நற்பண்பு” என்று கூறியது மிகவும் உண்மையே. உண்மை என்னவென்று தெரியாவிட்டால் உண்மையில்லாதவற்றையும், தவறானவற்றையும் நீங்கள் பொறுத்துக்கொள்வீர்கள்.
“நான் செய்வதை நீங்கள் அங்கிகரிக்க வேண்டுமென்று சகிப்புத்தன்மை கூறுகிறது. ஆனால், அன்போ உன்னுடைய நடத்தை என்னை பாதித்தாலும் நான் உன்னை நேசிப்பேன்” என்று ஜோஷ் மெக் டூவல் என்பவர் சகிப்புத்தன்மையைப்பற்றி எழுதியுள்ளார்.
“நீ என்னை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று சகிப்புத்தன்மை கூறுகிறது; ஆனால், அன்போ நான் நம்பிய உண்மையை உனக்கு எடுத்துக் கூறுகிறேன், ஏனெனில் சத்தியம் உன்னை விடுதலையாக்கும்” என்கிறது.
“என் வழியில் செல்ல என்னை அனுமதிக்க வேண்டும்” என்று சகிப்புத்தன்மை கூறுகிறது. ஆனால் அன்போ, “நீ சரியான பாதையில் செல்ல வேண்டும் என்று உன்னிடம் நான் கெஞ்சுகிறேன். ஏனென்றால் நீ அதற்கு தகுதியானவர்” என்கிறது.
நம்மைச் சுற்றியுள்ள உலகத்தில் நடப்பதை பாவம் என்று அன்புடன் சுட்டிக்காட்டாமல், நாம் சகித்துக்கொண்டால் நாம் எதிரிக்கு உதவுபவர்களாக இருப்போம்.
இத்தியத்தீரா சபை இதைத்தான் செய்துகொண்டிருந்தது. ஆண்டவர் பாராட்டும் காரியங்கள் இருந்தாலும், “எச்சரிக்கையாயிரு, உலகத்தின் ஒரு பகுதியான உன் சபையில் நான் சகிக்கக்கூடாத காரியங்களை நீ சகித்துக் கொள்கிறாய்” என்றார்.
முதலாவதாக, “யாவற்றையும் சகிப்பதில் கவனமாயிருக்கவேண்டும் என்று எச்சரிக்கிறார்.”
இரண்டாவதாக, யேசபேல் என்னும் பெண்ணைக் குறித்து உன்னை எச்சரிக்கிறேன் என்றார்.
இந்த பெண் யாரென்று எனக்குத் தெரியாது. சிலர் அது போதகரின் மனைவி என்று கூறுகின்றனர். இப்பெண் இச்சபையில் உயிரோடிருந்த ஒரு பெண். ஆனால், யேசபேலின் பண்புகளைக் கொண்டிருக்கலாம்.
பழைய ஏற்பாட்டில் ஆகாப் அரசரின் மனைவி இந்த யேசபேல் என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள். அவளைப் பற்றி 1 இராஜாக்கள் 16,18, 19,21 ஆகிய அதிகாரங்களில் கூறப்பட்டுள்ளது. பழைய ஏற்பாட்டில் பாவ காரியங்களுக்கு அதிகமான தாக்கத்தை அந்த பெண் உண்டுபண்ணியிருந்தாள்.
பழைய ஏற்பாட்டில் யேசபேல் அரசி ஒரு புத்திசாலியான ஏமாற்றுப் பெண்ணாக இருந்தாள். தன்னைச் சுற்றியிருந்த மக்கள்மீது அவள் அதிகாரம் செலுத்தும் தலைவியாக இருந்தாள். இவளிடம் இருந்த பிரச்சனை யாது? வசனம் 20 இல் நாம் அதனை வாசிக்கிறோம். என் ஊழியக்காரர்களுக்கு கற்பிக்கவும், ஏமாற்றுவதற்கும் தன்னை தீர்க்கதரிசி என்று யேசபேல் கூறிக்கொண்டாள். அவளிடம் தீர்க்கதரிசன வரம் இருந்தது. சத்தியத்தை அறிவிக்கும்பொழுது சபை மக்களை ஏமாற்றுகிறாள்.
அவளுக்கு தீர்க்கதரிசனம் வரம் இருந்தது என்று கூறுவதால் அல்ல. சத்தியத்தை கற்பிப்பதாலும் அல்ல. ஆனால், பாலியல் ஒழுங்கீனத்தை ஊக்குவித்தாள்.
தன்னை ஆசிரியர் என்றும், தீர்க்கதரிசி என் றும் அறிவித்து, ஒழுக்கக்கேடான வாழ்வு நடத்திக் கொண்டு, அதேசமயத்தில் ஊழியத்தையும் செய்தாள். உங்களுடைய சபையில் இவ்வாறு இருப்பவர்களை சகித்துக்கொள்ளாதீர்கள்.
மூன்றாவதாக, “இந்தப்பெண் தன்னை ஒரு தீர்க்கதரிசி என்று கூறிக்கொள்ளுகிறாள். பிரபலமான பன்முகத்தன்மை கொண்டிருந்தாள். பாலியல் ஒழுக்கக்கேடு மற்றும் சிலைகளுக்கு படைக்கப்பட்ட உணவுகள் இவைகளை விசுவாசிகளுக்குக் கற்பித்து அவர்களை ஏமாற்றிக்கொண்டிருந்தாள். “தேவன் எனது ஊழியத்தை ஆசீர்வதிப்பதால் அதிகமான பணம் கிடைக்கிறது. ஆகவே நான் வாழும்விதம் சரியானதே, நீங்களும் அவ்வாறே செய்யுங்கள்” என்று யேசபேல் குணம் கொண்டவர்கள் கூறுவார்கள்.
இறுதியாக, வசனம் 21-23இல் “அவள் மனந் திரும்பும்படியாய் அவளுக்குத் தவணை கொடுத்தேன். தன்னுடைய வேசிமார்க்கத்தைவிட்டு மனந்திரும்ப அவளுக்கு விருப்பமில்லை. இதோ அவளைப்படுத்த படுக்கையாக்குவேன். அவளோடு விபச்சாரம் செய்வோரும் தங்கள் தீயச்செயல்களைவிட்டு மனம்மாறாவிட்டால், அவர்களையும் கொடிய வேதனைக்கு உள்ளாக்குவேன். அவளுடைய பிள்ளைகளையும் கொன்றுபோடுவேன். அப்பொழுது உள்ளங்களையும் இதயங்களையும் துருவி ஆராய்கிறவர் நானே என்பதை எல்லாச் சபைகளும் அறிந்துகொள்ளும். அன்றியும் உங்களில் ஒவ்வொருவனுக்கும் உங்கள் கிரியைகளின் படியே பலனளிப்பேன்” என்றார்.
21ஆம் நூற்றாண்டில் பரவி வரும் வியாதிகள், பாலியல் நோய்கள் இவையாவும் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து எதிர்பாராதது அல்ல; “கடினமான சூழ்நிலையில் தன்னைச் சுற்றிலும் இருந்த அனைத்தையும் அச்சபை சகித்துக்கொண்டது. குறிப்பாக தங்களை வழிவிலகச் செய்யும் யேசபேலையும் சகித்துக்கொண்டது. எனவேதான் நான் உன்னை எச்சரிக்கிறேன் என்றார்.
இயேசுகிறிஸ்து எல்லாவற்றையும் ஆராய்கிறவர். “சபையிலுள்ள ஒவ்வொருவரும் செய்யும் காரியங்கள் ஒவ்வொன்றையும் அவர் அறிவார். அதன் உள்நோக்கத்தையும் அவர் அறிவார். அவர்களுடைய கிரியைக்கு ஏற்றபடி அவர் களுக்கு பதிலளிப்பார்.
உத்தம இருதயத்தோடும் சுத்தமான கைகளுடனும் இருந்தால்மட்டுமே அவர் நம்மை ஆசீர்வதிப்பார். அதற்கு நாம் அனுதினமும் அவருடைய சமுகத்தில் வந்து நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டு அவருடைய மன்னிப்பையும் அவருடைய நீதியையும் பெற்றுக்கொள்ள வேண்டும் (1 யோவான் 1:9).
நம்முடைய பாவங்களை நான் மறைக்க முயலும்போது அது மீண்டும் முளைத்து நம்மையும் நம்முடைய ஊழியத்தையும் பாதிக்கும். நாம் அவருக்காக செய்த கிரியைகளைப் பொறுத்து இயேசு நம்மை நியாயந்தீர்ப்பார்.
மொழியாக்கம்: Mrs.அகஸ்டா மங்களதுரை