• சுவி. சுசி பிரபாகரதாஸ் •
(மார்ச் – ஏப்ரல் 2025)

நானோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சிலுவையைக் குறித்தேயல்லாமல் வேறொன்றையுங்குறித்து மேன்மை பாராட்டாதிருப்பேனாக; அவரால் உலகம் எனக்குச் சிலுவையிலறையுண்டிருக்கிறது, நானும் உலகத்திற்குச் சிலுவையிலறையுண்டிருக்கிறேன் (கலா.6:14).

ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம். நாங்கள் உங்களுக்காக ஜெபித்து வருகிறோம். நீங்களும் எங்களுக்காக தொடர்ந்து ஜெபியுங்கள்.

சிலுவையைக் குறித்து உபதேசமானது ஏராளமாக நிருபங்களில் எழுதப்பட்டுள்ளது. ஒரு நண்பர் இவ்விதமாக பகிர்ந்துகொண்டார்: அதாவது, இயேசுவானவர் கிறிஸ்தவத்திற்கு அவர் எலும்புக் கூடுகளைப்போல உபதேசங்களை வைத்தார். ஆனால், அப்போஸ்தலனாகிய பவுலோ நிருபங்களாகிய சதையை வைத்து அந்த உருவத்தை அழகு படுத்தினான் என்று சொல்கிறார். இன்றைக்கு எவ்வளவு பெரிய ஊழியக்காரராக இருந்தாலும் அப்போஸ்தலனாகிய பவுலின் எழுதிய வசனங்களைக் கையாளாமல் பிரசங்கிக்க முடியாது.

இந்தச் செய்தியை நீங்கள் கவனமாக வாசிக்க உங்களை அன்போடு அழைக்கிறேன். கலாத்தியர் 6:14ஆம் வசனத்தை நாம் தியானிக்கலாம். இந்த வசனத்திலிருந்து மூன்றுவிதமான சிலுவைகளைக்குறித்து நான் உங்கள் முன்னால் வைக்க விரும்புகிறேன்.

அந்த மூன்று சிலுவைகளையும் மூன்று கோணங்களில் மூன்று தொகுதிகளாக நாம் தியானிக்கவிருக்கிறோம்.

தொகுதி: 1

நானோ நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சிலுவையைக் குறித்தேயல்லாமல் வேறொன்றையுங்குறித்து மேன்மை பாராட்டாதிருப்பேனாக.

அருமையானவர்களே, மூன்று சிலுவைகள் கல்வாரி மலையிலே காணப்பட்டது. அந்த மூன்று சிலுவைகளின் நடுவிலே நம்முடைய இரட்சகர் தொங்கிக்கொண்டிருக்கிறார். இந்த சிலுவையைக் குறித்து லூக்கா 23:39 – 43 வேதபகுதியில் நாம் பார்க்கிறோம். இது மீட்பின் சிலுவையாகும்!

வலது பக்கமும் இடது பக்கமும் அறையப்பட்டிருந்த இரண்டு கள்ளரில் ஒருவன் ஆண்டவரை ஏற்றுக்கொள்ளவில்லை. அவரை தள்ளுகிறான்; அவரை தூஷிக்கிறான். அந்த சிலுவைக்கு பெயர் நிராகரித்த சிலுவை (Cross of Rejection). அதாவது, இது இயேசுவை நிராகரித்த சிலுவையாகும். அந்த கள்ளனுடைய இருதயம் கடினப்பட்டிருந்தது. இது இரண்டாவது சிலுவையாகும்

மூன்றாவது, அர்ப்பணிக்கும் சிலுவையாகும். அதாவது, அர்ப்பணிப்பின் கிருபையைக் (Grace of Surrender) குறித்து இங்கு பார்க்கிறோம். இந்த சிலுவையில் தொங்கின கள்ளன் இயேசுவைப் பார்த்து, “ஆண்டவரே! உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது என்னை நினைத்துக்கொள்ளும்” என்று சொல்லுகிறான். ஆண்டவரை ராஜாவாக அவன் நம்புகிறான்; அவருக்குத்தான் தன்னை ராஜ்ஜியத்தில் சேர்க்க அதிகாரம் உண்டு என்பதையும் நம்பி அவரை ராஜாவாக ஏற்றுக்கொண்டான்.

இயேசு சிலுவையிலே தொங்கும்பொழுது தங்களை பாடாய்படுத்தினவன் தங்களைவிட்டு அகன்றுபோனான் என்று மதப்பெரியவர்கள் எண்ணினர். ஜனங்கள் மத்தியிலே கலகத்தை உண்டு பண்ணினவன் மடிந்துபோனான் என்று ரோமர்கள் எண்ணினர். இயேசுவினுடைய சாம்ராஜ்யத்தை ஒழித்துவிட்டோம் என்று மதவிரோதிகள் கங்கணம் கட்டினர். கிறிஸ்து இயேசுவாகிய தேவ குமாரனை கொன்றுவிட்டேன் என்று சாத்தான் ஆர்ப்பரித்தான்.

இந்தச் செய்தியை கேட்கிற சகோதர சகோதரிகளே, உங்களை ஆண்டவருடைய நாமத்தில் கேட்கிறேன். இந்த கொல்கொதா மலையிலே இரண்டு பக்கங்களிலும் இருக்கிற கள்ளர்களில் நீங்கள் யாராக இருக்கிறீர்கள்? ஒருவன் மீட்பரை ஏற்றுக்கொள்கிறான். மற்றொருவன், அந்த மீட்பின் சிலுவையில் தொங்கிய இயேசுவை ஏற்றுக்கொள்ளாமல் நிராகரித்தான். ஏனென்றால், அவனது இருதயம் கடினப்பட்டு இருந்தது.

ஒன்று, நீங்கள் ஆண்டவரை ஏற்றுக்கொள்ளாமல் தள்ளிவிடவேண்டும் அல்லது அவரை ஏற்றுக்கொண்டு அவரை ராஜாவாக அங்கீகரிக்க வேண்டும். நீங்கள் யாராக இருக்கிறீர்கள்? நான் ஒரு காலத்தில் ஆண்டவரை அறியாதவனாக இருந்தேன். தூரம் போனவனாய் இருந்தேன். வெளியே வெள்ளை அடிக்கப்பட்ட கல்லறைபோல இருந்தேன். உள்ளேயோ கறைபட்ட ஒரு வாழ்க்கையாக இருந்தேன். என் பாவ வாழ்க்கையை விடுவதற்கு எவ்வளவோ சுயமுயற்சி செய்தேன். எவ்வளவோ செலவு செய்தேன். எவ்வளவு முயற்சி செய்தேனோ அவ்வளவுக்கு அவ்வளவு நான் தோல்வியடைந்தேன். ஒருநாள் இரட்சகரை நான் விசுவாசித்து அவருக்கு என்னை ஒப்புக்கொடுத்தேன். மகாபெரிய பாவியாய் இருந்த என்னை அவர் ஏற்றுக்கொண்டார். என்னை அவர் தம்முடைய ராஜ்யத்தின் பிள்ளையாகவும் பிறகு ராஜ்யத்தின் ஊழியக்காரனாகவும் மாற்றினார்.

கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய சிலுவையானது மீட்பின் சிலுவையாகும்! இந்த சிலுவையானது நமக்காக விலைக்கிரயம் கொடுத்தது. இது நம்மை பாவக்குழியிலிருந்து தூக்கிவிடுகிறது. இது நம்மை பரத்திற்கு நேராக இணைக்கிறது. இந்த சிலுவை மிக முக்கியமானது. ஆகையினால்தான் பவுல் கலாத்தியர் 6:14இல் “நானோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சிலுவையைக் குறித்தேயல்லாமல் வேறொன்றையுங் குறித்து மேன்மைபாராட்டாதிருப்பேனாக” என்றார்.

பழைய ஏற்பாட்டிலே எண்ணாகமம் 9ஆம் அதிகாரம் 6முதல் 9ஆம் வசனங்களை வாசித்துப் பாருங்கள். அங்கே வனாந்தரத்திலே இஸ்ரவேலர் பாவம் செய்தபோது கர்த்தர் கொள்ளி வாய்ச்சர்ப்பங்களை அனுப்பினார். அவைகள் ஜனங்களைக் கடித்ததினால் இஸ்ரவேலருக்குள்ளே அநேக ஜனங்கள் செத்தார்கள். மோசே ஜனங்களுக்காக விண்ணப்பம் பண்ணினான். அப்பொழுது கர்த்தர் வெண்கலச் சர்ப்பத்தை உண்டாக்கி அதை ஒரு கம்பத்தின்மேல் தூக்கி வை. கடிக்கப்பட்டவன் எவனோ அவன் அதை நோக்கிப் பார்த்தால் பிழைப்பான் என்றார். அப்படியே அந்த வெண்கலச் சர்ப்பத்தை நோக்கிப்பார்த்தவர்கள் இரட்சிக்கப்பட்டார்கள். அதேபோல மனுஷகுமாரனாகிய ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவை சிலுவையிலே நோக்கிப்பார்க்கிறவர்கள் மீட்கப்படுகிறார்கள்.

அருமையானவர்களே, அவரே நமக்காக உயர்த்தப்பட்ட வெண்கலச் சர்ப்பமாக இருக்கிறார். ஆதியாகமம் 28:12ஆம் வசனத்திலே யாக்கோபு ஒரு சொப்பனத்தைக் காண்கிறான். “இதோ, ஒரு ஏணி பூமியிலே வைக்கப்பட்டிருந்தது, அதின் நுனி வானத்தை எட்டியிருந்தது, அதிலே தேவ தூதர் ஏறுகிறவர்களும் இறங்குகிறவர்களுமாய் இருந்தார்கள்.” அதற்கு மேலாகக் கர்த்தர் நின்று யாக்கோபோடு பேசுகிறார். யாக்கோபு பயந்து இது தேவனுடைய வீடேயல்லாமல் வேறல்ல என்று சொல்லி அங்கே தேவனுக்கு தன்னை அர்ப்பணித்து பொருத்தனை செய்கிறான்.

யோவான் 1:51ஆம் வசனத்தில், பின்னும், அவர் அவனை நோக்கி: வானம் திறந்திருக்கிறதையும், தேவதூதர்கள் மனுஷகுமாரனிடத்திலிருந்து ஏறுகிறதையும் இறங்குகிறதையும் நீங்கள் இதுமுதல் காண்பீர்கள் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். பழைய ஏற்பாட்டிலே வெண்கல சர்ப்பமாக இருந்த ஆண்டவர் புதிய ஏற்பாட்டிலே அவர் சிலுவையிலே தொங்குகிறவராய் இருக்கிறார். பழைய ஏற்பாட்டில் யாக்கோபு கண்ட ஏணியாக இருக்கிற அவர் மூலமாகத்தான் நித்தியத்திற்கு நாம் செல்கிறோம்.

தொகுதி – 2

அவரால் உலகம் எனக்குச் சிலுவையிலறையுண்டிருக்கிறது; நானும் உலகத்திற்குச் சிலுவையிலறையுண்டிருக்கிறேன் (கலா.6: 14).

இரண்டாவது, இங்கு ஒரு சிலுவை இருக்கிறது. ஆண்டவர் உலகத்தை அந்த சிலுவையில் அறைந்திருக்கிறார். உலகம் என்பது நாம் காண்கிற இந்த பூமியைச் சொல்லலாம் அல்லது பூமியில் இருக்கிற மக்களைச் சொல்லலாம். ஏனென்றால் இந்த பூமி முழுவதும் அவர் பின்னாலே செல்கிறது என்றால் இங்கு ஜனங்களைத்தான் குறிக்கிறது. இன்னொன்று, பூமி என்றால் தேவனுடைய திட்டம், தேவனுடைய ஆட்சி, தேவனுடைய ஆளுகைக்கு விரோதமாய் எழும்புகிற மாம்ச அதிகாரங்கள் யுக்திகள் ஆகியவற்றை அதில் சொல்லலாம்.

ஆகவே பவுல், கிறிஸ்து எனக்காக சிலுவையிலே மரித்தார். இப்போது உலகம் சிலுவையில் அறையுண்டு இருக்கிறது என்று சொல்கிறார். அவரால் உலகம் சிலுவையில் அறையுண்டு இருக்கிறது. உலகத்தை நீங்கள் சிலுவையில் அறைய முடியாது. அவர்தான் உலகத்தை நமக்காக சிலுவையில் அறைந்தார். அவர் சிலுவையில் அறையும்போது அந்த உலகம் நம்மை மேற்கொள்ளாது. நம்மை ஜெயிக்காது. தன்னுடைய ஆளுகையை நம்மில் அது செய்யாது. ஆகையால்தான் இன்றைக்கு ஆண்டவரால் ஆளப்பட்டவர்கள் உலகத்தை மேற்கொண்டு ஜெயம் கொண்டவர்களாய் வாழ்கிறார்கள்.

இரண்டாவது, அவரோடு சிலுவையில் அறையப்பட்ட நான் சுயத்திற்கு மரித்த ஒரு வாழ்க்கை வாழவேண்டும். உலகத்தைக் கண்டு நீங்கள் பயப்பட வேண்டாம். ஒரு சகோதரனுக்கு நான் நற்செய்தியைச் சொன்னேன். அவர் தூர இடத்துக்கு போகும்போது கதறி அழுதார். ஐயா, நான் பாவக்குழியிலிருந்து மீட்டெடுக்கப்பட்டேன். மறுபடியும் அந்த பாவக்குழியில் விழுந்து விடுவேனா என்று பயந்தார். நான் அவரிடம், “நீ ஆண்டவருடைய கையில் இருக்கிறாய். ஒருவரும் அவரது கையிலிருந்து உன்னை பறித்துக்கொள்ள முடியாது” (யோவான் 10:29) என்று இயேசு கூறியதை சொன்னேன். அந்த சகோதரர் அந்த இடத்துக்குப் போனார். அங்கு சாட்சியாக மாறினார். பின்பு வல்லமையான ஒரு ஊழியக்காரனாக திகழ்ந்தார். உலகத்தை ஆண்டவர் சிலுவையில் அறைந்திருக்கிறார். உலகத்தினுடைய அதிகாரங்கள், உலகத்தினுடைய இச்சைகள், உலகத்தினுடைய ஆசாபாசங்கள் உலகத்திலுள்ள கறைகள் உங்களை மேற்கொள்ளாத அளவுக்கு அவர் சிலுவையிலே அறைந்து வைத்திருக்கிறார்.

அது மாத்திரமா, பவுல் மூன்றாவதாக சொல்லுகிறார்: நானும் உலகத்திற்கு சிலுவையில் அறையுண்டிருக்கிறேன். உலகத்தின் பார்வையிலே நான் சிலுவையிலே அறையுண்டிருக்கிறேன். சிலுவையில் அறையப்பட்ட மனிதன் அவன் இஷ்டமான இடத்துக்கு போகமுடியாது, இஷ்டமான செயலைச் செய்ய தனது கையை நீட்டமுடியாது. இஷ்டமான காரியங்களை செய்வதற்கு தான் சரீரத்தை அவன் பயன்படுத்த முடியாது. சிலுவையில் அறையப்பட்டவன் அவன் உண்மையாகவே அடிக்கப்பட்டவனாக இருக்கிறான்.

இதைத்தான் கலாத்தியர் 2:20இல் பவுல் சொல்கிறார்: கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன்; ஆயினும், பிழைத்திருக்கிறேன்; இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்; நான் இப்பொழுது மாம்சத்தில் பிழைத்திருக்கிறதோ, என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரனைப் பற்றும் விசுவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன். தான் சிலுவையில் அறையுண்ட நிலையை பவுல் இங்கு குறிப்பிடுகிறார்.

தொகுதி – 3

இன்னொரு தொகுதி சிலுவையைச் சொல்ல நான் உணர்த்தப்பட்டேன். அது என்னவென்றால், முதலாவது, தன் சிலுவை (Personal Cross). தன் சிலுவையைச் சுமந்துகொண்டு எனக்குப் பின் செல்லாதவன் எனக்கு சீஷனாயிருக்கமாட்டான் என்று இயேசு லூக்கா 14:27இல் கூறியிருக்கிறார். இது ஒவ்வொருவருக்கும் ஆண்டவர் வைத்த சிலுவையாகும். இந்த சிலுவையைச் சுமக்க நாம் அழைக்கப்படுகிறோம். தனிப்பட்ட வாழ்க்கையில் நம் ஒவ்வொருவருக்கும் ஒரு பொறுப்பு, ஒரு கடமை, பாடுகள் உண்டு. இவைகளை சிலுவை பாடுகள் என்று நாம் சொல்லலாம், பொறுப்புகள் என்று சொல்லலாம்,

இரண்டாவது, மாற்கு 15:21இல், சிரேனே ஊரானும், அலெக்சந்தருக்கும் ரூப்புக்கும் தகப்பனுமாகிய சீமோன் என்னப்பட்ட ஒருவன் நாட்டிலிருந்து அவ்வழியே வருகையில், அவருடைய சிலுவையைச் சுமக்கும்படி அவனைப் பலவந்தம் பண்ணினார்கள். ஆண்டவருடைய சீடர்கள் யாரும் அவருடைய சிலுவையை சுமக்கவில்லை. அந்த கொல்கொதா பயணத்திலே. அங்கே ஒரு மனிதன் சிரேனே ஊரானும் அலெக்சந்தருக்கும் ரூப்புக்கும் தகப்பனுமாகிய சீமோன் என்பவன் வருகிறான். அவனை ரோம வீரர்கள் இயேசுவின் சிலுவையை சுமக்கும்படி கட்டாயம் பண்ணுகிறார்கள். முதலாவது நம்முடைய தனிப்பட்ட சிலுவை. இரண்டாவது ஆண்டவரது சிலுவையை சுமக்க நாம் பலவந்தம் பண்ணப்படுகிறோம். ஒருவேளை அந்நாட்களிலே சிரேனே ஊரானாகிய சீமோன் இந்தச் சிலுவையைச் சுமக்கும் போது அவன் அழுதிருக்கலாம். இது அவனுக்கு நிந்தையாய் இருந்திருக்கலாம். ஆனால் பின் நாட்களில் அவன் புரிந்திருப்பான். நான் ஆண்டவருடைய சிலுவையைச் சுமக்க பேறுபெற்றேன் என்று சொல்லியிருக்கலாம்.

மூன்றாவது, கொலோசெயர் 1:24ஆம் வசனம் இப்படிச் சொல்கிறது: இப்பொழுது நான் உங்கள் நிமித்தம் அநுபவிக்கிற பாடுகளில் சந்தோஷமடைந்து கிறிஸ்துவினுடைய உபத்திரவங்களில் குறைவானதை அவருடைய சரீரமான சபைக்காக, என் மாம்சத்திலே நிறைவேற்றுகிறேன். ஆண்டவர் சிலுவையிலே பாடுபட்டார் உண்மை. ஆனால், அவருடைய சபைக்காக படுகிற அந்த உபத்திரவத்தை என் சரீரத்திலே நான் ஏற்றுக்கொண்டேன் என்று பவுல் சொல்கிறார். இது ஊழியத்தில் வந்த ஒரு சிலுவை என்று சொல்லப்படுகிறது. ஒருவேளை நீங்களாக சிலுவை சுமக்கலாம். சிலுவை சுமக்க பலவந்தப் பண்ணப்படலாம். அல்லது ஆண்டவருடைய சபைக்காக அவருடைய பாடுகளில் உபத்திரவங்களில் குறைவானதை அனுபவிக்க அழைக்கப்படலாம்.

அருமையானவர்களே, முதல் ஒரு தொகுதியில் கல்வாரியிலுள்ள மூன்று சிலுவையான மீட்பின் சிலுவை, ஆண்டவரை நிராகரித்த சிலுவை, அர்ப்பணித்த சிலுவை ஆகியவற்றைக் குறித்து தியானித்தோம். இரண்டாவது தொகுதியில் கலாத்தியர் 6:14லிலே கிறிஸ்து நமக்காக மரித்த சிலுவை, ஆண்டவர் உலகத்தை அறைந்த சிலுவை, நம்மையும் அறைந்த சிலுவை ஆகிய மூன்று சிலுவைகளைப் பார்த்தோம். மூன்றாவது தொகுதியில் முதலாவது நாம் ஒவ்வொருவரும் சுமக்கும் சொந்த சிலுவை, நாம் சுமக்கும் ஆண்டவருடைய சிலுவை, ஊழியத்தில் வருகிற சிலுவை ஆகிய சிலுவைகளைத் தியானித்தோம்.

இந்த மூன்று தொகுதி சிலுவைகளிலே நாம் எதில் இருக்கிறோம்? சிந்திப்போம்!

நினைவுகூருங்கள்! 

உலகிலேயே அதிவல்லமை மிக்க ஆயுதம் கிறிஸ்தவனின் ஜெபமே!