ஜெபக்குறிப்பு: மார்ச் 22 சனி

சத்தியவசன ஊழியத்திலிருந்து அனுதினமும் மொபைலில் அனுப்பப்படும் வேத வாக்கியம், வெப் சைட், மற்றும் வெப் டிவி ஊழியங்களின் மூலமாக தேவனுடைய வார்த்தைகளை பெற்றுக் கொள்ளும் ஒவ்வொருவரும் வார்த்தை என்னும் மன்னாவால் போஷிக்கப்பட்டு, ஆசீர்வதிக்கப்பட வேண்டுதல் செய்வோம்.

கீழ்ப்படிதல்

தியானம்: மார்ச் 22 சனி; வாசிப்பு: 1பேதுரு 1:13-22

“…இச்சைகளின்படி இனி நடவாமல், கீழ்ப்படிகிற பிள்ளைகளாயிருந்து
உங்களை அழைத்தவர் பரிசுத்தராயிருக்கிறதுபோல,
நீங்களும் பரிசுத்தராயிருங்கள்.” (1பேதுரு 1:14-15)

ஆதாம் ஏவாளின் கீழ்ப்படியாமையினால் ஏற்பட்ட விளைவிலிருந்து மனுஷ வாழ்வில், ‘கீழ்ப்படிதல்’ எத்தனை முக்கியத்துவம் வாய்ந்தது என்பது நமக்கு விளங்கவேண்டும். கீழ்ப்படியாமையால் அவர்கள் ஏதேன் தோட்டத்தில் இருந்து துரத்தப்பட்டார்கள். ஆதாம் வியர்வை சிந்தி உழைக்க நேர்ந்தது. ஏவாளின் பிள்ளைப்பேறு வேதனைமிக்கதானது. மனிதனுக்குள் பாவமும் பாடுகளும் தொடர்ந்து வந்தது. ஆனால், இயேசுகிறிஸ்துவின் கீழ்ப்படிதலால் மனுஷன் பாவத்திலிருந்து மீட்பைப் பெற்றான். என்றாலும், இவ்வுலகில் வாழும்வரைக்கும் மனிதனுக்குள் இருக்கும் பாவசுபாவம் திரும்பவும் திரும்பவும் அவனைக் கீழ்ப்படியாமைக்குள் வீழ்த்தத்தான் செய்கிறது. ஆனாலும், தேவன் மனிதனைக் கைவிடவில்லை. கிறிஸ்துவின் மாதிரியும், அவர் அளித்த போதனைகளும் இன்று நமக்கு உண்டு. வாழவேண்டிய வழியையும், பரிசுத்த ஆவியானவரின் துணையையும் தேவன் நமக்குத் தந்திருக்கிறார்.

இப்படியிருக்க இன்னமும் நாம் கீழ்ப்படியாமையின் பிள்ளைகளாய் இருப்பது எப்படி? முன்னே அறியாமையினாலே இச்சைகளுக்கு உடன்பட்டு நடந்து விட்டோம். இப்போது சத்தியத்தை அறிந்த பின்பும் மாம்ச இச்சைக்கு நாம் இடம் அளிக்கக்கூடாது. இதைத்தான் சிதறடிக்கப்பட்டிருந்த விசுவாசிகளுக்கு பேதுரு தனது முதலாவது நிருபத்திலே ஆணித்தரமாக வலியுறுத்தியுள்ளார். அந்த எச்சரிப்பு இன்று நமக்கும் வருகிறது. ஏனெனில், நாம் பரிசுத்த தேவனைப் பிரதிபலிக்க அழைக்கப்பட்டவர்கள். மனைவி கணவனுக்கும், பிள்ளைகள் பெற்றோருக்கும், வேலையாட்கள் எஜமானுக்கும் இளைஞர்கள் மூப்பருக்கும் கீழ்ப்படிந்திருக்க வேண்டும் என்பது தேவசித்தம். நாம் தேவனுக்குக் கீழ்ப்படியும்போது பிறருக்குக் கீழ்ப்படிவது நமக்குக் கடினமாயிராது.

கிறிஸ்து மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தார் என்று பவுல் தெளிவாக எழுதியுள்ளார் (பிலி.2:8). கிறிஸ்தவ வாழ்க்கை மரணபரியந்தமும் கிறிஸ்துவின் மாதிரியைப் பின்பற்றி வாழவேண்டிய வாழ்க்கையாகும். இவ்வாழ்க்கையில் அவரது குணாதிசயங்களைத் தரித்துக்கொண்டு, இறுதிவரை அவருக்கே சாட்சியாக வாழவேண்டும். குடும்பத்திலும் சபையிலும் சமுதாய வாழ்விலும்கூட கிறிஸ்து எப்படி வாழ்ந்தாரோ அப்படி நாமும் வாழுவதே தேவனுக்குப் பிரியமான வாழ்க்கையாகும். இப்படியிருக்க, தேவனுக்குக் கீழ்ப்படிந்து வாழுவதில் நாம் எதிர்நோக்கும் பிரச்சனைகளை அடையாளங்கண்டு தேவகரத்தில் ஒப்புவிப்போமாக. நம்மை தேவனின் வழியில் நடத்தவென்று பரிசுத்தாவியானவர் நமக்கு இருக்கிறாரே! தேவன், நம்மிடம் எதிர்பார்ப்பது எல்லாம் இந்தக் ‘கீழ்ப்படிதல்’ ஒன்றைத்தான்.

ஜெபம்: “பிதாவே, கிறிஸ்து உமக்கு மரணபரியந்தமும் கீழ்ப்படிந்ததுபோல, உமது வார்த்தைக்கு நானும் கீழ்ப்படிந்து வாழ பெலன் தாரும். ஆமென்.”