ஜெபக்குறிப்பு: மார்ச் 1 சனி
“இதோ, நான் புதிய காரியத்தைச் செய்கிறேன்; இப்பொழுதே அது தோன்றும்” (ஏசா.43:19) என்று வாக்குப்பண்ணின தேவன் இப்புதிய மாதத்தில் பராக்கிரமம் செய்யும் அவரது வலதுகரத்தால் நம்மை தாங்கி நடத்திட அர்ப்பணித்து ஜெபிப்போம்.
வாழ்வின் பெறுமதிப்பு என்ன?
தியானம்: மார்ச் 1 சனி; வாசிப்பு: அப்போஸ்தலர் 19:23-31
“…என் பிராணனையும் நான் அருமையாக எண்ணேன்.
….நான் கர்த்தராகிய இயேசுவிடத்தில் பெற்ற ஊழியத்தை
நிறைவேற்றவுமே விரும்புகிறேன்.” (அப்.20:24)
கி.பி. முதலாம் நூற்றாண்டில், இன்றைய தொலைக்காட்சி கேமராக்கள் இருந்திருந்தால், எபேசு பட்டணத்தில் கலகக்காரர் செய்த கலகத்தைப் படம் பிடித்துக் காட்டியிருப்பார்கள். தியானாளிள் கோவிலைப்போல சிறிய கோவில்களை வெள்ளியினால் செய்து பெரிய ஆதாயத்தைத் தேடிக்கொண்டிருந்தவனே இந்தக் கலகத்தைத் தூண்டிவிட்டிருந்தான். கைகளினால் செய்யப்பட்ட தேவர்கள் தேவர்களல்ல என்று பவுல் பிரசங்கித்ததின் நிமித்தம் மனந்திரும்பியவர்கள் அநேகர். இதனால் இந்த மனுஷன் ஆத்திரமடைந்தான். இந்தக் கலகக்காரர் பவுலின் தலையை உடைத்து நொறுக்கத் தயாராயிருந்தனர்.
இப்படிப்பட்டதொரு நெருக்கம் நமக்குண்டானால் என்ன செய்வோம்? கடின இதயங்கொண்ட இக்கூட்டத்தாருக்கு, நாம் சுவிசேஷம் சொல்லத்தான் வேண்டுமா என்று கேட்கமாட்டோமா? பவுலோ இவர்களை கலகக்காரர் என்றோ, கொலைகாரர் என்றோ பார்க்கவில்லை. மாறாக, சுவிசேஷம் அறிவிக்கப்பட வேண்டியதொரு பணித்தளமாகவே அந்த இடம் பவுலின் கண்களுக்குத் தெரிந்தது. உண்மையில் அந்தக் கூட்டத்தினர் முன்பாகச் சென்று பேச பவுல் விருப்பமாயிருந்தார். ஆனால், அவருடைய நண்பர்கள் பவுலை அனுமதிக்கவில்லை (அப்.19:30,31).
பவுலைப் பொறுத்தளவில் தன் ஜீவிய ஓட்டம் முடிந்துவிடுமே என்ற கவலை அவருக்கு என்றுமே இருந்ததில்லை; மாறாக, அது எப்போ முடிந்தாலும் எங்கே முடிந்தாலும், முடியும்வரைக்கும், தான் எதற்காகப் பிடிக்கப்பட்டாரோ, தன்னை நம்பி தேவன் எந்தப் பொறுப்பை ஒப்புக்கொடுத்தாரோ, அதை சரியாகச் செய்து முடிக்கவேண்டுமென்ற வைராக்கியம்தான் அவரை முன்நடத்திச் சென்றது. கிறிஸ்துவின் சுவிசேஷத்தை எல்லோரும் அறியவேண்டுமே என்ற ஒரே எண்ணம் தான் அவரை ஆட்கொண்டிருந்தது. அதற்காக அவர் தனது உயிரையும் கொடுக்கத் தயாராயிருந்தார். பவுல் தனது வாழ்வில் இயேசுகிறிஸ்துவை மட்டும் பெறுமதிப்பாகக் கணக்கிட்டிருந்தார்.
நமது வாழ்வுக்கு நாம் கணக்கிட்டிருக்கும் பெறுமதிப்பு என்ன? “என் பிராணனையும் நான் அருமையாக எண்ணேன்” என்று சொன்ன பவுல் எங்கே? நாம் எங்கே? நாம் பிராணனைக் கொடுக்கவேண்டாம்; குறைந்தபட்சம், தேவனுடைய வார்த்தையினிமித்தம், அவர் நம்மை இரட்சித்ததினிமித்தம், அவர் நம்மில் வைத்திருக்கும் சித்தத்தினிமித்தமாவது நாம் கிறிஸ்துவுக்காக வாழலாமே! தேவனுடைய வார்த்தையின் நிமித்தம் நாம் இதுவரைக்கும் எதையாவது இழந்திருக்கிறோமா? நமது வாழ்வின் பெறுமதிப்பு கிறிஸ்துவா? அல்லது, நமது சொந்த விருப்பங்களா? சிந்திப்போம்.
ஜெபம்: “பிதாவே, என் வாழ்வில் காணப்படும் சுயநேசத்தை முற்றிலும் அழித்துப்போட நீரே என்னை உமதாவியால் நிறைத்து வழிநடத்தும். ஆமென்.’’
கர்த்தரை நோக்கும் கண்கள்
அதிகாலை வேளையில்… (மார்ச்-ஏப்ரல் 2014)
– Dr.உட்ரோ குரோல்
“தேவனுடைய மனுஷனின் வேலைக்காரன் அதிகாலமே எழுந்து வெளியே புறப்படுகையில், இதோ, இராணுவமும் குதிரைகளும் இரதங்களும் பட்டணத்தைச் சுற்றிக்கொண்டிருக்கக் கண்டான்; அப்பொழுது வேலைக்காரன் அவனை நோக்கி: ஐயோ, என் ஆண்டவனே, என்ன செய்வோம் என்றான்.” (2இராஜா.6:15)
ஆங்கில நாளேடு ஒன்றில் இரண்டு பிரபலமான மனிதர்களைப் பற்றிய செய்தி ஒன்று வெளிவந்தது. அதில் ஒருவர் ஓவியர், மற்றவர் நாவலாசிரியர். அந்த நாளேடு, “நேற்று, ஜேம்ஸ் மெக்நெயில் விஸ்ட்லரும் ஆஸ்கார் ஒயில்ட் என்பவரும் தங்களைப் பற்றி பிரைட்டன் நகரில் பேசிக் கொண்டனர்” என்ற செய்தியை வெளியிட்டது. விஸ்ட்லர் இந்த செய்திப் பகுதியை வெட்டி தனது நண்பருக்கு “ஆஸ்கார், இந்த செய்தியாளர்கள் தங்கள் செய்தியைத் தெளிவாக வெளியிட வேண்டும். அன்று நாம் இருவரும் என்னைப் பற்றிதானே பேசிக்கொண்டிருந்தோம். உனக்கு நினைவிருக்கிறதா?” என்று தனது குறிப்புடன் அனுப்பினார். அதற்கு ஆஸ்கார் மறுமொழியாக, “ஆம், ஜிம்மி, நாம் உன்னைப் பற்றிதான் பேசிக் கொண்டிருந்தோம்; ஆனால் நான் என்னைப் பற்றிய எண்ணத்தில் இருந்தேன்” என்ற தந்தியை அனுப்பினார். இந்நிகழ்ச்சி வேடிக்கையாக இருக்கலாம். ஆனால் இது மனிதனுடைய ஒரு பயங்கரமான குணத்தை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. நாம் மிக சுயநலத்துடன் நமது காரியத்திலேயே கண்ணோக்கமாயிருக்கிறோம். நம்மைச் சுற்றியுள்ள மற்றவர்களைப் பற்றியோ நம்மீது அக்கறையுள்ள தேவனுடைய செயல்பாட்டையோ கண்டுகொள்வதைத் தவறவிட்டு விடுகிறோம்.
இஸ்ரவேலின் வரலாற்றிலே அநேகமுறை தமஸ்கு நாட்டிலிருந்து படைகள் ஊடுருவி பயமுறுத்தின. சீரியரின் அரசன் மீண்டும் ஒருமுறை இஸ்ரவேல் அரசனால் ஏற்றுக் கொள்ளமுடியாதபடி தனது கோரிக்கைகளை வெளியிட்டான். அக்காலத்தில் சீரியாவின் ராஜா இஸ்ரவேலுக்கு விரோதமாய் யுத்தம் பண்ணி, இன்ன இன்ன ஸ்தலத்திலே பாளயமிறங்குவேன் என்று தன் ஊழியக்காரரோடே ஆலோசனை பண்ணினான். தேவமனுஷன் இஸ்ரவேலின் ராஜாவினிடத்தில் ஆள் அனுப்பி: இன்ன இடத்துக்குப் போகாதபடிக்கு எச்சரிக்கையாயிரும்; சீரியர் அங்கே இறங்குவார்கள் என்று சொல்லச்சொன்னான். அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா தேவமனுஷன் தன்னை எச்சரித்து, தனக்குக் குறித்துச் சொன்ன ஸ்தலத்திற்கு மனுஷரை அனுப்பிப் பார்த்து எச்சரிக்கையாயிருந்து, இப்படி அநேகந்தரம் தன்னைக் காத்துக் கொண்டான்.
எனவே சீரிய அரசன் தங்களுக்குள்ளேயே ஒற்றர்கள் இருந்து இஸ்ரவேலின் இராஜாவுக்கு செய்தியைத் தருகிறார்கள் என்றும், எனவேதான் அவன் தான் வைத்த கண்ணிகளிலிருந்து தப்பிவிடுகிறான் என்றும் எண்ணினான். இந்தக் காரியத்தினிமித்தம் சீரிய ராஜாவின் இருதயம் குழம்பி, அவன் தன் ஊழியக்காரரை அழைத்து: நம்முடையவர்களில் இஸ்ரவேலின் ராஜாவுக்கு உளவாயிருக்கிறவன் யார் என்று நீங்கள் எனக்கு அறிவிக்க மாட்டீர்களா என்று கேட்டான். அப்பொழுது அவனது அரசவையிலிருந்த அவன் ஊழியக்காரரில் ஒருவன்: அப்படியில்லை; என் ஆண்டவனாகிய ராஜாவே, நீர் உம்முடைய பள்ளி அறையிலே பேசுகிற வார்த்தைகளையும் இஸ்ரவேலிலிருக்கிற தீர்க்கதரிசியாகிய எலிசா இஸ்ர வேலின் ராஜாவுக்கு அறிவிப்பான் என்றான்.
இது சீரிய அரசனுக்கு சினத்தை உண்டு பண்ணியது. எனவே அவன் தோத்தானுக்கு சீரியரின் படைகளை அனுப்பி எலிசாவை பிடித்து வர அனுப்பினான். அதன்மூலம் இஸ்ரவேல் இராஜாவுக்கு அவன் எதிர் காலத்தில் நிகழ்வதைக் கூறுவதை தடுத்துவிட எண்ணினான். சீரியர்களின் இரதமும் குதிரை வீரர்களும் இரவில் அந்த பட்டணத்தைச் சுற்றி வளைந்துகொண்டார்கள். தேவ மனுஷனின் வேலைக்காரன் அதிகாலமே எழுந்து வெளியே புறப்படுகையில், இதோ, இராணுவமும் குதிரைகளும் இரதங்களும் பட்டணத்தைச் சுற்றிக் கொண்டிருக்கக் கண்டான்; அப்பொழுது வேலைக்காரன் அவனை நோக்கி: ஐயோ, என் ஆண்டவனே, என்ன செய்வோம் என்றான். திகிலும் நடுக்கமும் நிறைந்த தனது வேலைக்காரனுக்கு எலிசா கொடுத்த பதிலானது, புயலின் மத்தியில் இருக்கும் அமைதிக்கு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. “அதற்கு அவன்: பயப்படாதே; அவர்களோடிருக்கிறவர்களைப்பார்க்கிலும் நம்மோடிருக்கிறவர்கள் அதிகம் என்றான்.” (2 இராஜா.6:16)
எலிசாவையும் அவனது வேலைக்காரனையும் சுற்றியிருந்த படைகள் அச்சத்தை விளைவிப்பதாயிருந்தாலும், எலிசா தனது வேலைக்காரன், தன்மீதும் தன் எதிரிகள் மீதும் உள்ள கண்களை விலக்கி, தங்களைக் காப்பதற்கு தேவ சேனைகளை அனுப்பியுள்ள சேனைகளின் கர்த்தரை நோக்கிப் பார்த்தால், அவன் அவ்வாறு பயப்படமாட்டான் என்பதை அறிந்திருந்தார். எனவே “எலிசா விண்ணப்பம் பண்ணி: கர்த்தாவே, இவன் பார்க்கும்படி இவன் கண்களைத் திறந்தருளும் என்றான்; உடனே கர்த்தர் அந்த வேலைக்காரன் கண்களைத் திறந்தார்; இதோ, எலிசாவைச்சுற்றிலும் அக்கினிமயமான குதிரைகளாலும் இரதங்களாலும் அந்த மலை நிறைந்திருக்கிறதை அவன் கண்டான்” (2இராஜா.6:17).
அப்பொழுது எலிசாவின் வேலைக்காரன் தேவனுக்குப் பயந்தவர்களை தேவதூதர்கள் சூழ்ந்து நின்று காத்திடுவார்கள் என்பதை அறிந்துகொண்டான். அவன் தன் கண்களை விலக்கி தன்னைக் காக்க எல்லையில்லா பாதுகாவல்களை வைத்துள்ள சேனைகளின் தேவன் மீது நம்பிக்கை வைத்தான்.
சீரியர்கள் அவனிடத்தில் வருகையில் எலிசா கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணி: இந்த ஜனங்களுக்குக் கண்மயக்கம் உண்டாகும்படி செய்யும் என்றான்; எலிசாவுடைய வார்த்தையின்படியே அவர்களுக்குக் கண் மயக்கம் உண்டாகும்படி செய்தார். இந்த குழப்பத்தில் எலிசா அவர்களை நோக்கி: இது வழி அல்ல; இது பட்டணமும் அல்ல; என் பின்னே வாருங்கள்; நீங்கள் தேடுகிற மனுஷனிடத்தில் நான் உங்களை வழிநடத்துவேன் என்று சொல்லி, அவர்களை இஸ்ரவேலின் தலைநகரான சமாரியாவுக்கு அழைத்துக் கொண்டு போனான். அவர்கள் சமாரியாவில் வந்தபோது, எலிசா: கர்த்தாவே, இவர்கள் பார்க்கும்படிக்கு இவர்கள் கண்களைத் திறந்தருளும் என்றான்; பார்க்கும்படிக்குக் கர்த்தர் அவர்கள் கண்களைத் திறக்கும்போது இதோ, அவர்கள் சமாரியாவின் நடுவே இருந்தார்கள். தேவன் இஸ்ரவேலின் கரங்களில் அவர்களது எதிரிகளை அதிசயமாய் ஒப்புவித்தார்.
நமது பிரச்சனைகளையும் அதன் தீர்வுகளையும் அதன் சூழ்நிலைகளையும் கண்டு நிற்காமல், யாவையும் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் தேவன்மீது திருப்பினால் அவர் நமக்குச் செய்யும் காரியங்கள் அதிசயங்களாயும் அற்புதங்களாயும் அமையும்.
மொழியாக்கம்: Mrs.அகஸ்டா மங்களதுரை
அனைத்துலக மொழிபெயர்ப்புப் பணிகள்
புனித வேதாகமத்தின் வரலாறு (மார்ச்-ஏப்ரல் 2014)
அத்தியாயம்-9
சகோ.M.S.வசந்தகுமார்
(11) பஞ்சாபி மொழிபெயர்ப்பு
இந்தியாவிலுள்ள சீக்கியர்கள் பேசும் பஞ்சாப் மொழியில் வேதாகம மொழிபெயர்ப்பு வேலைகள் 1807 இல் செரம்பூரில் இருந்த மிஷெனரிகளினால் ஆரம்பிக்கப்பட்டது.
1812 ஆம் ஆண்டின் தீ விபத்து அம்மொழி பெயர்ப்பு வேலைகளைப் பாதித்தாலும் 1815இல் பஞ்சாபி மொழி புதிய ஏற்பாட்டை அவர்கள் வெளியிட்டனர். 1826இல் எசேக்கியேல் வரையிலான புத்தகங்கள் பஞ்சாபி மொழியில் மொழிபெயர்க்கப்பட்டிருந்தன. எனினும், இம்மொழி பெயர்ப்பு பஞ்சாப் மக்களால் அதிகளவில் உபயோகிக்கப்படவில்லை. 1834இல் பஞ்சாபில் தமது ஊழியத்தை ஆரம்பித்த அமெரிக்க பிரஸ்பிட்டேரியன் மிஷன் சங்கத்தைச் சேர்ந்த ஜே.நியூட்டன், 1837இல் பஞ்சாபி மொழியில் புதிய ஏற்பாட்டை மொழிபெயர்க்கத் தொடங்கினார். இதன் பயனாக 1840 இல் மத்தேயு சுவிசேஷமும், 1841 இல் யோவான் சுவிசேஷமும் பஞ்சாப் மொழியில் வெளியிடப்பட்டது.
நியூட்டன், அப்போஸ்தலர் நடபடிகள் வரை மொழிபெயர்த்திருந்தாலும் 4 சுவிசேஷங்களும் அப்போஸ்தலர் நடபடிகளும் அச்சிடப்பட்டபோது, 1845இல், அச்சகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் அச்சிடப்பட்ட பக்கங்கள் அனைத்தும் எரிந்துவிட்டன. மறுபடியுமாக இவ்வைந்து புத்தகங்களும் தனி ஒரு புத்தகமாக பஞ்சாபி மொழியில் அச்சிட்டு வெளியிடப்பட்டது. அதேசமயம், இம்மிஷனைச் சேர்ந்த ஜன்வியர் ஆதியாகமத்தையும் யாத்திரகமத்தில் 20 அதிகாரங்களையும் பஞ்சாபி மொழியில் மொழிபெயர்த்திருந்தார். இவை 1851இல் வெளி வந்தன. இவர் மொழிபெயர்த்த லூக்கா சுவிசேஷம் 1856இலும், சங்கீதப் புத்தகம் 1863இலும் வெளிவந்தன. 1863இல் ஸ்தாபிக்கப்பட்ட பஞ்சாப் வேதாகமக் கிளைச் சங்கம் 1868இல் புதிய ஏற்பாடு முழுவதையும் பஞ்சாப் மொழியில் வெளியிட்டது. இம்மொழிபெயர்ப்பு வேலைகள் ஜே.நியூட்டனின் தலைமையிலேயே நடைபெற்றன. 1889இல் பஞ்சாப் மொழி புதிய ஏற்பாட்டைத் திருத்தி மொழிபெயர்ப்பதற்கு ஒரு குழு நியமிக்கப்பட்டது.
இதன் பயனாக 1900இல் திருத்தப்பட்ட பஞ்சாப் புதிய ஏற்பாடு வெளிவந்தது. அதேசமயம் ஜே.ஹார்வி என்பவர் மொழிபெயர்த்த பல பழைய ஏற்பாட்டுப் புத்தகங்கள் தனித் தனியாக பஞ்சாப் மொழியில் வெளியிடப்பட்டன. 1959இல் கல்கத்தாவிலிருந்த பப்டிஸ்ட் மிஷன் அச்சகம் பழைய ஏற்பாட்டின் பஞ்சாபி மொழிபெயர்ப்பை வெளியிட்டது.
(12) ஏனைய மொழி பெயர்ப்புகள்
இந்தியாவில் பேசப்படும் மொழிகள் 1652 என கணிப்பிடப்பட்டுள்ளது. இவற்றில் பல மொழிகளில் வேதாகமம் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. 1970ஆம் ஆண்டின் கணிப்பீட்டின்படி 25 இந்திய மொழிகளில் முழுவேதாகமமும், 40 மொழிகளில் புதிய ஏற்பாடும், 65 மொழிகளில் வேதாகமத்தின் பகுதிகளும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. இதன்படி, அவ்வாண்டுவரைக்கும் மொத்தம் 130 இந்திய மொழிகளில் வேதாகமம் மொழி பெயர்க்கப்பட்டுள்ளதை அறிகின்றோம். 1994ஆம் ஆண்டு வரை இந்திய வேதாகமச் சங்கம் 171 இநதிய மொழிகளில் வேதாக மத்தைப் பிரசுரித்துள்ளது.
இந்தியாவுக்கு அப்பால் வேதாகமம்
இந்தியாவுக்கு மிஷெனரிகள் வரத்தொடங்கிய பின்னர், இந்தியாவுக்கு கிழக்குப் பகுதியிலுள்ள நாடுகளிலும் கிறிஸ்தவம் பரவியது. பர்மா, திபெத், சீனா, கொரியா, ஜப்பான் எனும் நாடுகளுக்கும், தெற்கே இலங்கைக்கும் மிஷெனரிகள் வந்தனர். இதன் பயனாக இவ்வாசிய நாடுகளின் மொழிகளிலும் வேதாகமம் மொழி பெயர்க்கப்படலாயிற்று. இம் மொழிபெயர்ப்புச் சரிதையை இப்பகுதியில் பார்ப்போம்.
(1) பர்மிய மொழிபெயர்ப்பு
கடும் எதிர்ப்புகளுக்கும் இழப்புகளுக்கும் மத்தியிலும் கிறிஸ்தவம் உட்புகுந்த நாடுகளில் ஒன்றாக பர்மா விளங்குகிறது. பர்மிய மொழியின் வேதாகம மொழிபெயர்ப்பானது அமெரிக்க மிஷெனரியான அதோனி ராம் ஜட்சன் என்பவரிலேயேதான் ஆரம்பத்தைக் கொண்டுள்ளது. 1788இல் பிறந்த இவர் திருமணம் முடித்து 13 நாட்களின் பின், 1812 ஆம் ஆண்டு இந்தியாவிலுள்ள கல்கத்தாவிற்கு வந்து சேர்ந்தார். அங்கு சிறிதுகாலம் வில்லியம் கேரியோடு இருந்த அவருக்கு, கிழக்கிந்திய கம்பனி இந்தியாவில் தொடர்ந்து இருப்பதற்கு அனுமதி கொடுக்காதமையினால், அவர் தன் மனைவி நான்சியுடன் கல்கத்தாவிலிருந்து பர்மாவுக்குச் சென்றார்.
அவர்கள் ரங்கூன் துறைமுகத்தை அடைவதற்கு முன்பதாக, கப்பலில் வைத்து நான்சி குறைப்பிரசவத்தில் தன் குழந்தையைப் பறிகொடுத்தாள். ரங்கூனுக்கு வந்த ஜட்சன் தம்பதியர் பலவிதமான இக்கட்டுகளுக்கு முகங்கொடுத்தனர். ஆறுவருடங்களாக ஜட்சன் பர்மிய மொழியைக் கற்பதிலும் சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பதிலும் செலவிட்டார். அப்படியிருந்தும் ஒருவரும் இரட்சிக்கப்படவில்லை. அதேசமயம் பர்மிய அரசு ஜட்சனின் சுவிசேஷப்பணியை எதிர்க்கத் தொடங்கியது. 1820இல் ஒரு சில பர்மியர்கள் இயேசுகிறிஸ்துவை ஏற்றுக்கொண்டனர். பர்மாவுக்கு வந்த ஜட்சன் தம்பதியர் அடிக்கடி நோய்களினால் பாதிக்கப்பட்டனர். ரங்கூனில் அவர்களுக்குப் பிறந்த மகனும் 6 மாதங்களில் மரித்துவிட்டான். 1822 இல் வியாதி காரணமாக நான்சி இந்தியாவுக்குச் செல்ல வேண்டியதாயிற்று.
மனைவியின் பிரிவால் தனிமைப்பட்ட ஜட்சன் புதிய ஏற்பாட்டை பர்மிய மொழியில் மொழி பெயர்க்கத் தொடங்கினார். ஒரு வருடத்துக்குள்ளாக அவ்வேலைகள் பூர்த்தியடைந்தன. அதேசமயம் ஜட்சன் ரங்கூனிலிருந்து ஆவா எனுமிடத்திற்குச் சென்றார். 1824 இல் அவரது மனைவியும் அங்கு வந்து சேர்ந்தாள்.
(தொடரும்)
வாசகர்கள் பேசுகிறார்கள்
(மார்ச்-ஏப்ரல் 2014)
1. “அனுதினமும் கிறிஸ்துவுடன்” இதில் வரும் தியானங்கள் பரிசுத்த வாழ்வுக்கு உறுதுணையாயிருக்கிறது. தியானங்களை ஜெபத்துடன் எழுதும் ஒவ்வொருவருக்கும் நல்ல சுகத்தையும், பெலத்தையும், ஞானத்தையும் அருள இறைமகன் இயேசுவை வேண்டுகிறேன். சத்தியவசனம் இருமாத இதழ், தொலைகாட்சி மற்றும் வானொலி மூலமாக பாரத்தோடும் ஜெபத்தோடும் செய்துவருகிற உங்களை ஆண்டவர்தாமே ஆசீர்வதிப்பாராக.
Mr.G.Dhanraj, Coimbatore.
2. உங்களது தினதியான பத்திரிக்கை சஞ்சிகைகள் தவறாமல் கிடைக்கப்பெற்று வருகிறோம். பயன் அடைந்தும் வருகிறோம். விசுவாசப் பாதையில் முன்னேற எங்களுக்கு இவைகள் மிகவும் உதவியாக உள்ளது. உங்கள் சீடி ஊழியங்கள், T.V. Radio Programmes-க்காக தினமும் Prayer பண்ணி வருகிறோம். 1985ஆம் ஆண்டில் நாங்கள் விசுவாச பங்காளராக சேர்ந்து இதுவரையிலும் தேவஊழியத்தை நிறைவேற்றி வர உதவிய தேவனை மனதார துதிக்கிறோம். தேவன்தாமே வரும் நாட்களிலும் ஆண்டுகளிலும் அதிகதிகமாய் தேவபணி செய்திட உங்கள் அனைவருக்கும் வேண்டிய பெலன் சுகம் ஜீவன் தந்திட ஜெபிக்கிறோம்.
Mrs.Elizabeth, Madurai.
3. ஒவ்வொரு மாதமும் சத்தியவசனம், அனுதினமும் கிறிஸ்துவுடன் புத்தகங்களுக்காக அதிக ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருப்பேன். அனுதினமும் கிறிஸ்துவுடன் எங்கள் குடும்ப ஜெபத்திலும் வேத வாசிப்பிலும் பயன்படுத்துகிறோம். சத்தியவசன புத்தகத்தில் ஒவ்வொரு மாதமும் செய்தி எழுதுபவர்களுக்காகவும், விசேஷமாக சாந்திபொன்னு அவர்களுக்காகவும் விசேஷித்து ஜெபித்து வருகிறேன். உங்கள் ஊழியம் மேன்மேலும் வளர ஜெபிக்கிறேன்.
Mrs.Menaka George, coimbatore.
4. சகோதரி சாந்திபொன்னு அவர்களின் Dec-மாத தியானம் 13ஆம் தேதி வந்தவர் வருவார். மனுக்குலத்தின் மீட்பு அநாதியாய் நியமிக்கப்பட்டபடியே ஏற்ற காலத்தில் இரட்சகர் உலகத்திற்கு வந்தார். இந்த தியான பகுதியின் பாகம் எங்கள் ஆலயத்தில் கடந்த 15.12.2013 சிறுவர் கிறிஸ்துமஸ் நிகழ்ச்சி சற்று மாறுபட்ட முறையில் நடத்த இருந்த எங்களுக்கு பெரும் உதவியாக இருந்தது. மட்டுமல்ல, எங்கள் ஆவிக்குரிய வாழ்க்கைக்கு மிகப் பிரயோஜனமாக இருந்து வருவதற்காக சகோதரி சாந்திபொன்னு அவர்களுக்கும் மற்றும் இதை எழுதுகிற அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் உள்ளத்தின் ஆழத்திலிருந்து நன்றியைக் கூறுகிறோம்.
Mr.A.Chandra Sekar, Bangalore.
5. கர்த்தரின் வார்த்தைகளை சத்தியவசன டிவி நிகழ்ச்சி மூலமும், சத்தியவசன சஞ்சிகை, அனுதினமும் கிறிஸ்துவுடன் எல்லாவற்றின் மூலமும் அறிந்துகொள்கிறேன். அனுதினமும் கிறிஸ்துவுடன் சத்திய வேதத்தைப் படிப்பதற்கு மிக பிரயோஜனமாக உள்ளது.
Mr.R.V.Christian, Trichy.