ஜெபக்குறிப்பு: மார்ச் 16 ஞாயிறு
“கர்த்தரைப் பாடுங்கள், கர்த்தரைத் துதியுங்கள்; அவர் எளியவனுடைய ஆத்துமாவைப் பொல்லாதவர்களின் கைக்குத் தப்புவிக்கிறார்” (எரேமி.20:13) எல்லாத் தீமைக்கும், பொல்லாப்புக்கும் விலக்கி தப்புவிக்கிற தேவனை இந்தநாளில் முழுப்பெலத்தோடே ஆராதித்து உயர்த்துவோம்.
அன்பு
தியானம்: மார்ச் 16 ஞாயிறு; வாசிப்பு: 1கொரிந்தியர் 13:1-13
“இப்பொழுது விசுவாசம், நம்பிக்கை, அன்பு இம் மூன்றும்
நிலைத்திருக்கிறது. இவைகளில் அன்பே பெரியது.”
(1கொரிந்தியர் 13:13)
1கொரிந்தியர் 13ஆம் அதிகாரமானது 12ஆம் அதிகாரத்தின் தொடர்ச்சியாகும். கொரிந்து சபையினருக்கு ஆவியின் வரங்களைக்குறித்து தெளிவாக்கிய பவுல், “முக்கியமான வரங்களை நாடுங்கள். இன்னும் அதிக மேன்மையான வழியையும் உங்களுக்குக் காண்பிக்கிறேன்” (1கொரி.12:31) என கூறியபின், அதின் தொடர்ச்சியாக “அன்பின்” முக்கியத்துவத்தைக் குறித்து 13ஆம் அதிகாரத்தில் எழுதுகிறார். பின்னர், 14ஆம் அதிகாரத்தில் வரங்களையும் அவற்றின் செயற்பாட்டையும் குறித்து கூற வரும்போது, அதன் ஆரம்பமாக, “அன்பை நாடுங்கள்” என்று “அன்பை” வலியுறுத்திக் கூறுவதை நாம் வாசிக்கிறோம்.
“அன்பு” என்பது பல பகுதிகள் ஒன்றிணைந்து செயற்படும் ஒரு செயற்பாட்டின் “கூட்டமைப்பாகும்.” இதை 1கொரிந்தியர் 13ஆம் அதிகாரத்தில் பவுல் கூறிய அன்பின் தன்மைகளிலிருந்து நாம் அறிந்துகொள்ளலாம். இத்தகைய அன்பையே தேவன் தமது பிள்ளைகள் ஒவ்வொருவரிடமும் எதிர்பார்க்கின்றார். இதிலிருந்து வழுவிப்போன எபேசு சபையின் தூதனுக்கு எழுதும்படி தேவன் யோவானுக்கு வெளிப்படுத்தியதும் இந்த அன்பைக் குறித்த செய்திதான். எபேசு சபையில் பல நற்காரியங்கள் நிறைந்திருந்தன. “உன் கிரியைகளையும், உன் பிரயாசத்தையும், உன் பொறுமையையும், நீ பொல்லாதவர்களைச் சகிக்கக் கூடாமலிருக்கிறதையும், அப்போஸ்தலரல்லாதவர்கள் தங்களை அப்போஸ்தலரென்று சொல்லுகிறதை நீ சோதித்து அவர்களைப் பொய்யரென்று கண்டறிந்ததையும், நீ சகித்துக்கொண்டிருக்கிறதையும், பொறுமையாயிருக்கிறதையும், என் நாமத்தினிமித்தம் இளைப்படையாமல் பிரயாசப்படுகிறதையும் அறிந்திருக்கிறேன்” என்றார் கர்த்தர். இத்தனை நற்காரியங்கள் இருந்தபோதும் அவர்களிடம் இருந்த முக்கிய குறையையும் தேவன் சுட்டிக்காட்டத் தவறவில்லை. “ஆனாலும், நீ ஆதியில் கொண்டிருந்த அன்பை விட்டாய் என்று உன் பேரில்; எனக்குக் குறை உண்டு” (வெளி.2:4). மட்டுமல்ல, அத்தனை நன்மைகள் இருந்தும், இந்த விஷயத்தில் மனந்திரும்பாதபட்சத்தில், “…உன் விளக்குத்தண்டை அதனிடத்திலிருந்து நீக்கிவிடுவேன்” என்றும் தேவன் எச்சரித்தார்.
ஆண்டவரை நாம் ஏற்றுக்கொண்ட நாட்களில் நமக்குள் ஊற்றெடுத்த அந்த அன்பு இன்றும் நம்மிடம் உண்டா? மாறுபட்ட போதனைகளும், தீர்க்கதரிசனங்களும் உருவாகி, தேவனிடத்திலுள்ள அன்பைவிட்டு திருச்சபை வழுவிப் போகும்படி செய்கிறது என்பதையும் நாம் மறுக்கமுடியாது. இந்நிலையில் நமது ஆதிஅன்புக்குத் திரும்புவது மாத்திரமல்ல, பிறரையும் கிறிஸ்துவுடனும் சபையுடனும் இணைக்கின்றதான அன்பின் பாலமாக, பிறரிலும் அன்புகாட்டும்படி நம்மை இன்றே ஒப்புவிப்போமா!
ஜெபம்: “தேவனே! எந்த நிலையிலும் உமது அன்பில் நிலைபெறவும், பிறரை உம்முடனும் சபையுடனும் இணைக்கும்படி அன்பில் நிரப்பப்பட்டு செயற்படவும் என்னை நடத்தும். ஆமென்.”