ஜெபக்குறிப்பு: மே 21 புதன்
“… அவர்களெல்லார்மேலும் பூரண கிருபை உண்டாயிருந்தது” (அப்.4:33) சத்தியவசன வானொலி மற்றும் தொலைகாட்சி ஊழியத்தை ஆதரவாளர் திட்டத்தில் இணைந்து தாங்கிவருகிற யாவரது குடும்பங்களுக்காகவும் அவர்களது கைகளின் பிரயாசங்கள் ஆசீர்வதிக்கப்படுவதற்கும் ஜெபிப்போம்.
பாவம் சகலரையும் பாதிக்கும்!
தியானம்: மே 21 புதன்; வாசிப்பு: யோசுவா 7:6-15
“இஸ்ரவேலர் பாவஞ்செய்தார்கள்; நான் அவர்களுக்குக்
கட்டளையிட்ட என் உடன்படிக்கையை மீறினார்கள்”
(யோசுவா 7:11).
8415 பேரிடம் ஒரு ஆராய்ச்சி நடத்தப்பட்டது. அதில் வெளிப்படுத்தப்பட்ட உண்மையானது, புகைமண்டலத்தில் வேலை செய்பவர்கள் புகையை சுவாசிப்பதினால் கழுத்தின் இருபக்கமும் உள்ள மூளைக்கு இரத்தம் கொண்டு செல்லும் சுத்த இரத்தகுழாய்களின் சுவர்கள் 10 சதவீதம் அதிகமாகத் தடித்திருந்தது. இது மாரடைப்பு ஏற்படுவதற்கு முக்கிய காரணமாகும். இதுபோல, போதை மருந்துகளையும், மதுபானங்களையும் அதிகமாகப் பயன்படுத்துவதால், ஏற்படும் விளைவாக, ஒரு வருடத்தில் தொழில்துறையில் 60 பில்லியன் டாலர் மதிப்பில் இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும் கண்டறியப்பட்டுள்ளது. வேலைக்கு தொழிலாளர் வராமலிருத்தல், வேலைத்தலங்களில் விபத்துக்கள், அதிகளவு ஆயுள் காப்பீட்டு தொகை இழப்பு, தொழிற்சாலைகளில் உற்பத்திக் குறைவு, சேதம், கழிவு ஆகிய இவைகளே மேற்கண்ட இழப்புக்குக் காரணமாகும். இந்த இழப்பை ஈடுகட்ட நுகர்வோர்மீது அதிக விலை, அதிக சேவைக் கட்டணம் இவற்றை விதித்துச் செயல்படுத்தி பொதுமக்கள் பாதிப்படையச் செய்கிறார்கள். நாம் செய்யும் பாவம் நம்மை மாத்திரம் பாதிப்பதில்லை.
ஆகான் ஒருவேளை தான் செய்த பாவம் தன்னை மட்டும் பாதிக்கும் என்று நினைத்திருக்கக்கூடும். ஆயியில் இஸ்ரவேலர் தோல்வியடைந்ததற்குக் காரணம் என்ன என்று விசாரிக்கும்படி யோசுவா தேவசமுகத்திற்கு சென்றபோது, “இஸ்ரவேலர் பாவஞ்செய்தார்கள்” என்றார் தேவன். ஆகானின் பாவம் யோசுவாவுக்கு வேதனையை உண்டாக்கிற்று (வச.6,7). அச்சமயம், அந்த யுத்தத்தில் கொல்லப்பட்ட 36 பேரினரும் அவர்களது குடும்பங்களுக்கும் எப்படி இருந்திருக்கும்? (வச.5) குறிப்பாக ஆகானுடைய குடும்பத்தார் அனைவரும் கல்லெறிந்து கொல்லப்பட்ட நிலையைக் கற்பனை செய்துபாருங்கள் (வச.24,25). ஆகானின் பாவம் அவனை மாத்திரமல்ல, குடும்பம் முழுவதையும், உடைமைகளையும் பாதித்தது. “என்னுடைய பாவம் என்னைத் தவிர வேறு எவரையும் பாதிக்காது” என்று நாம் கூறுகிறோம். அது தவறு. நியூயார்க் நகரத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒரு புள்ளிவிபரம் கீழ்க்கண்ட உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளன. அங்குள்ள ஒரு சுரங்க பாதையின் கட்டணம் 1.25 டாலர். டோக்கன் வாங்காமல் போகின்ற ஏமாற்றுப் பேர்வழிகள் இல்லாவிட்டால் அக்கட்டணம் 1.19 டாலர் மட்டுமே. சொத்துச்சேதத்திற்கு உரிய காப்பீட்டு கட்டணம் 600 டாலர். அதில் கள்ளத்தனம் செய்பவர்கள் இல்லாவிட்டால் அது 540 டாலராக இருக்கும். இப்படி இன்னும் உண்டு. சாத்தான் உங்களைப் பாவம் செய்யத் துண்டும்போது, பாதிக்கப்படுவது நாம் மட்டுமல்ல, பாவம் நம் அனைவரையும் பாதிக்கிறது.
ஜெபம்: “பரிசுத்த பிதாவே, என் ஒருவனின் பாவம் யார் யாரைப் பாதித்ததோ, என்னையும் மன்னித்து, அவர்களையும் காத்தருளும். உமக்கே மகிமை உண்டாகட்டும். ஆமென்”.