ஜெபக்குறிப்பு: மே 30 வெள்ளி

சத்தியவசன முன்னேற்றப்பணிகளை கர்த்தர் ஆசீர்வதிக்க கர்த்தருடைய சித்தத்தின்படியான இடங்களில் கூட்டங்கள் நடத்தப்படுவதற்கு வழிகளை தேவன் திறந்தருள, ஊழியத்தின் எல்லைகள் விரிவாக்கப்பட, ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்காக பாரத்துடன் ஜெபிப்போம்.

தெரிவு உங்களுடையதே!

தியானம்: மே 30 வெள்ளி; வாசிப்பு: யோசுவா 24:14-18

“…நானும் என் வீட்டாருமோவென்றால்,
கர்த்தரையே சேவிப்போம் என்றான்”
(யோசுவா 24:15).

தன் கணவனுக்கு வேறு இரண்டு மனைவிகளும், அவர்கள் ஒவ்வொருவருக்கும் பல பிள்ளைகளும் உண்டு என்று அறிந்ததால் மூன்றாம் மனைவி தன் கணவனை விவாகரத்துச் செய்தாள். கணவனுடைய விளக்கம் இதுதான். “நான் ஊர் ஊராய் சுற்றித்திரியும் ஒரு விற்பனையாளன். நான் சந்தித்த பெண்கள் மூவர். அவர்களும் என்னை விரும்பினர். எனவே, அவர்கள் மனதை நோகச் செய்ய விரும்பாமல், ஒவ்வொருவரையும் திருமணம் செய்து கொண்டேன்” எனக் கூறினான். கடினமாயினும் சரியான ஒரு தெரிந்தெடுப்பைச் செய்யமுடியாமல், அவர்கள் ஒவ்வொருவரையும் திருமணம் செய்கின்ற எளிதான குறுக்கு வழியானதொரு தெரிந்தெடுத்தலைச் செய்திருந்தான் அவன்.

இஸ்ரவேலர் வாக்குப்பண்ணப்பட்ட கானான் தேசத்தில் குடியமர்ந்த பின்னர், அவர்கள் தெரிந்தெடுக்கக்கூடிய பல வாய்ப்புகள் இருந்தன. அவை சுலபமானவைகள் அல்ல. அவர்களது பிதாக்கள் எகிப்தில் பழக்கப்பட்டிருந்த எகிப்தின் கடவுள்களை அவர்களும் வணங்கலாம். இப்போது அவர்கள் அகப்பட்டிருப்பது எமோரியரின் கடவுள்களிடம். இந்தக் கடவுள்கள் மாம்ச இச்சைக்கு இடம் கொடுத்தன. இது பலருக்குக் கவர்ச்சியாக இருந்தது. பலர் இத் தெரிந்தெடுப்புகளில் திகைத்து நிற்கையில், யோசுவா கடினமான தீர்மானத்தைச் செய்திருந்தான். யாரைத் தெய்வமாகக் தொழுதுகொள்வது என்று தீர்க்கமாகத் தெரிந்து கொண்டிருந்தான். எனவேதான், “நானும் என் வீட்டாருமோவென்றால், கர்த்தரையே சேவிப்போம்.” என்று உறுதியாக அறிக்கை செய்தான்.

“கர்த்தரைச் சேவிப்பது” என்பதைத் தெரிந்துகொள்ளுவது இலேசான காரியமல்ல. சில வேளைகளில் இது குடும்பத்தாரின் சமய நம்பிக்கைகளுக்கு எதிரானதாக இருக்கலாம். சில நேரங்களில் நண்பர்களின் நெருக்கடி, எல்லோருடனும் ஒத்துப்போகவேண்டும் என்ற எண்ணம் என்பன, ஆண்டவர்மீது நமக்குள்ள பற்றுதலை வெளிப்படையாக அறிவிக்க அனுமதிப்பதில்லை. மேலும் பலர், இடத்துக்குத் தகுந்தவாறு தன் நிறத்தை மாற்றிக்கொள்ளும் பச்சோந்தியைப்போல, இடத்திற்கேற்ப தங்களையும் மாற்றிக் கொள்கிறார்கள். இது, உறுதியான தீர்மானம் எடுப்பதைத் தடுக்கும். ஒரு முடிவை நீங்களே எடுங்கள். நீங்கள் யாரைச் சேவிப்பீர்கள்? உல்லாசத்தையும், ஆஸ்தியையும், சிற்றின்பத்தையும் தருகின்ற கடவுள்களையா? அல்லது, உங்களை நேசிக்கும் இயேசுகிறிஸ்துவையா? கிறிஸ்துவுக்காக ஒரு தீர்மானம் செய்வது கடினமாக இருந்தாலும், அவரைச் சேவிப்பதையே தீர்க்கமாகத் தெரிந்து கொள்வீர்களானால், அதற்காக நீங்கள் ஒருபோதும் உங்கள் வாழ்வில் மனம் வருந்தவேண்டிய நிலை நேரிடாது.

ஜெபம்: “பிதாவே, நானும் என் குடும்பமும் எந்த நிலையிலும் உம்மையே சேவிப்போம். நீரே எங்களை நடத்தும். ஆமென்”.