ஜெபக்குறிப்பு: நவம்பர் 7 வெள்ளி

“.. தங்கள் இருதயத்தில் உற்சாகமடைந்த ஸ்திரீ புருஷர் யாவரும் கர்த்தருக்குக் காணிக்கையை மனப்பூர்வமாய்க் கொண்டுவந்தார்கள்” (யாத்.35:29) இவ்விதமாய் சத்தியவசன வானொலி மற்றும் தொலைகாட்சி பணிகளை மனப்பூர்வமான காணிக்கையாலே தாங்கிவரும் ஆதரவாளர்களை கர்த்தர் ஆசீர்வதிக்க ஜெபிப்போம்.

கர்த்தருடைய நாள்!

தியானம்: நவம்பர் 7 வெள்ளி; வாசிப்பு: மத்தேயு 24:42-46

“கர்த்தருடைய நாள் இரவிலே திருடன்
வருகிறவிதமாய் வரும்” (2 பேதுரு 3:10).

எதிர்பாராத நேரத்தில் நமது வீட்டுக்கு யாரும் வந்துவிட்டால், ஆண்டவரும் இப்படித்தான் ஒருநாள் வரப்போகிறார் என்று நாம் சொல்லுவதுண்டு. உண்மைதான், “கர்த்தருடைய நாள் இரவிலே திருடன் வருகிறவிதமாய் வரும்.” (2பேதுரு3:10). இந்த வசனத்திலிருந்து ஆண்டவரின் இரண்டாம் வருகையைக் குறித்து இரு காரியங்கள் தெளிவாக விளங்குகிறது. ஒன்று, “கர்த்தருடைய நாள்”. இது கர்த்தருடைய நியாயத்தீர்ப்பின் நாள். இங்கே பேதுரு, கிறிஸ்துவின் வருகையைக் குறிப்பிட்டு இதனை எழுதியுள்ளார். அதாவது, அது ஒருநாள், அந்த நாளிலே ஒரு நிகழ்வு நடக்கப்போகிறது என்பது புரிகிறது. அடுத்ததாக, இரவிலே திருடன் வருகிறவிதமாய் வரும் என்று எழுதப்பட்டுள்ளது. திருடன் சொல்லிக்கொண்டா வருவான்! அதுபோலவே ஆண்டவரின் வருகையும் யாரும் எதிர்பாராத நேரத்திலே நிகழும் சம்பவமாகவே இருக்கும்.

“நீங்கள் நினையாத நாழிகையிலே மனுஷகுமாரன் வருவார்” (மத்.24:44) என்று வாசிக்கிறோம். “நாழிகையிலே வருவார்” என்றால், அவருடைய வருகைக்கு ஒருநேரம் உண்டு என்று விளங்குகிறது. ஆனால், அந்த நாழிகையைப் பிதாவைத் தவிர வரப்போகிற குமாரனும் அறியார் என்பதே சத்தியம். பரிசுத்த வேதாகமத்து சம்பவங்கள் யாவும் சரித்திரமே தவிர வெறும் புராணங்கள் அல்ல. இயேசுவும் ஒரு புராண புருஷர் அல்ல. அவர் வரலாற்றில் மனிதனாகப் பிறந்த கடவுள். அவருடைய இரண்டாம் வருகையும் வரலாற்றுச் சம்பவமாக நிகழும்.

கட்டாயம் நடக்கும், நினையாத நேரத்திலே நடக்கும் என்று தெரிந்தால் அதற்குரிய ஆயத்தம் நமக்கு அவசியமல்லவா! இவற்றை நாம் நம்பினாலும், அதைக்குறித்துக் கரிசனையற்றவர்களாய், விசுவாச வாழ்வில் தளர்ந்தவர்களாய் சிலசமயம் நாம் காணப்படுகிறோம். “நான் விசுவாசித்திருக்கிறவர் இன்னார் என்று அறிவேன், நான் அவரிடத்தில் ஒப்புக்கொடுத்ததை அவர் அந்நாள் வரைக்கும் காத்துக்கொள்ள வல்லவராயிருக்கிறாரென்று நிச்சயித்துமிருக்கிறேன்” என்று பவுல் ஆணித்தரமாய் எழுதியுள்ளார் (2தீமோ.1:12). அந்த விசுவாசம் நம்மிடம் உண்டா? வருவேன் என்றவர் நிச்சயம் வருவார். அதை நம்பாதவர்களுக்கு அந்த நாள் பயங்கரமாகவே இருக்கும். தேவனுடைய பிள்ளைகளாகிய நமக்கு அது ஆச்சரியம் அல்ல. ஏனெனில், நாம் அதற்காக தினமும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம். உண்மையாகவே நமக்கு அது மகிழ்ச்சி தரும் நல்ல நாள். அந்த வருகையைக் குறித்து நாம் பயப்படுகிறோமா? அல்லது, அந்த நாளுக்காகக் காத்திருக்கிறோமா?

ஜெபம்: “ஆண்டவரே, கரிசனை அற்றிருந்த என்னை மன்னித்து, நீர் வாக்கு மாறாத தேவன் என்பதை எனக்கு உணரச் செய்ததற்காக நன்றி. ஆமென்.”