ஜெபக்குறிப்பு: நவம்பர் 8 சனி
கடந்த நாட்களில் நடந்த சத்தியவசன முன்னேற்றப்பணிக் கூட்டங்களை கர்த்தர் ஆசீர்வதித்து தந்தமைக்காக நன்றி செலுத்தி, இக்கூட்டங்களில் கர்த்தருக்காக அர்ப்பணித்தவர்கள் தொடர்ந்து கர்த்தருடைய ஆவியானவரால் நடத்தப்படவும், அவர்களது விசுவாச வாழ்க்கைக்காகவும் ஜெபம் செய்வோம்.
மகிமையின் வருகை
தியானம்: நவம்பர் 8 சனி; வாசிப்பு: வெளிப்படுத்தல் 1:1-8
“இதோ, மேகங்களுடனே வருகிறார்.
..அப்படியே ஆகும், ஆமென்”
(வெளிப்படுத்தல் 1:7).
வானத்திலே வெண்பஞ்சுபோல முகில்கூட்டம் வேகமாகக் கடந்துசெல்லும் காட்சி அற்புதம். இப்படிப்பட்ட ஒரு மேகக்கூட்டத்தின் மேலேதான் ஆண்டவர் ஒருநாள் வருவார் என்று கற்பனைப் பண்ணிப் பார்த்திருக்கிறீர்களா!
கர்த்தருடைய இரண்டாம் வருகைக்கும் இந்த மேகத்திற்கும் சம்பந்தம் இருப்பது தெரிகிறது. அதாவது, மேகக்கூட்டம் எப்படி மெய்யாகவும், கண்களுக்குத் தெரிகிறதாகவும் தெளிவாகவும் இருக்கிறதோ, அப்படியே கிறிஸ்து வரும் போதும் எல்லாக் கண்களும் காணும்படி அது நிகழும் என்பது விளங்குகிறது. “கர்த்தர்… வானத்திலிருந்து இறங்கிவருவார்…. பின்பு, உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக, மேகங்கள்மேல் அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு…” (1தெச.4:16,17). “அப்பொழுது மனுஷகுமாரன் மிகுந்த வல்லமையோடும் மகிமையோடும் மேகங்களின்மேல் வருகிறதைக் காண்பார்கள்” (மாற்கு13:26). ஆம், அந்த வருகை மகிமையான வருகையாய் இருக்கும். “இதோ, மேகங்களுடனே வருகிறார்; கண்கள் யாவும் அவரைக் காணும், அவரைக் குத்தினவர்களும் அவரைக் காண்பார்கள்; பூமியின் கோத்திரத்தாரெல்லாரும் அவரைப் பார்த்துப் புலம்புவார்கள். அப்படியே ஆகும், ஆமென்” (வெளி.1:7). அந்த மகிமையின் காட்சியைக் காண நமது கண்கள் ஆயத்தமா? அல்லது, புலம்புகிறவர்களோடே கூடவே இருந்து புலம்புவோமா?
அடுத்தது, கர்த்தருடைய இரண்டாம் வருகை திடீரெனவும் எதிர்பாராத நேரத்தில் நிகழுவதாகவும் இருப்பதால், கடைசி நிமிஷ மனந்திரும்புதலுக்கோ, வாக்குவாதத்திற்கோ நேரமிராது. “…இரண்டுபேர் வயலில் இருப்பார்கள்; ஒருவன் ஏற்றுக்கொள்ளப்படுவான், ஒருவன் கைவிடப்படுவான். இரண்டு ஸ்திரீகள் ஏந்திரம் அரைத்துக்கொண்டிருப்பார்கள்; ஒருத்தி ஏற்றுக்கொள்ளப்படுவாள், ஒருத்தி கைவிடப்படுவாள்” (மத்.24:40,41). அதாவது, நாம் வாழும்போது செய்கின்ற தெரிந்தெடுப்புத்தான் நமது நித்தியத்தின் முடிவை நிர்ணயிக்கிறது என்பது விளங்குகிறது. இயேசுவின் அருகில் தொங்கிய கள்வனைப்போல கடைசி நிமிஷம் மனந்திரும்ப எண்ணுவது வீண்.
கிறிஸ்துவின் இரண்டாம் வருகையைக் குறித்து வேதம் தெளிவுபடுத்தியிருப்பது, நாள் குறிப்பதற்கோ, குறிசொல்லுகிறவர்களை ஊக்குவிக்கவோ அல்ல. மாறாக, அந்த மகிமையின் நாளில், எல்லோரும் அதில் சேர ஆயத்தமாகவேண்டும் என்பதற்காகவே ஆகும். ஆகவே, இன்றே நமது பாவநிலையை உணர்ந்து, மனந்திரும்பி, கிறிஸ்துவைத் தரித்துக்கொள்ள நம்மை ஒப்புவிப்போமாக. கர்த்தருடைய பிள்ளைகள் அந்த மகிமையிலே சேருவது உறுதி.
ஜெபம்: “ஆண்டவரே, உமது மகிமையின் நாளிலே, அடியேனையும் சேர்த்துக் கொள்ளும். இன்றே என்னை உமது பாதத்தில் அர்ப்பணிக்கிறேன். ஆமென்.”