ஜெபக்குறிப்பு: ஆகஸ்டு 11 செவ்வாய்

“.. அது முளைத்து, ஒன்று நூறாகப் பலன் கொடுத்தது” (லூக்.8:8) இவ்வாக்குப்படியே ஹிந்தி ஊழியங்களை கர்த்தர் ஆசீர்வதிக்கவும், பேராட்டங்கள் மத்தியிலும் இவ்வூழியம் தடையின்றி செய்யப்படுவதற்கும், நற்செய்தி கேள்விப்பட்டிராத மக்களுக்கு இரட்சிப்பின் நற்செய்தி சென்றடைவதற்கும் ஜெபிப்போம்.

இப்பூமி சொந்தமல்ல!

தியானம்: ஆகஸ்டு 11 செவ்வாய்; வாசிப்பு: பிலிப்பியர் 3:11-21

“மோசே அந்த மனிதனிடத்தில் தங்கியிருக்கச்
சம்மதித்தான்” (யாத்.2:21).

இஸ்ரவேல் தேசத்துக்கு சுற்றுப்பயணம் சென்றிருந்த ஒரு அமெரிக்கர், புகழ்பெற்ற யூத ரபீ ஒருவரைச் சந்திக்க விரும்பினார். அவர் விரும்பியபடியே குறிப்பிட்ட நாளில் ரபீ வசிக்கும் இடத்துக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார். சுற்றும் முற்றும் பார்த்த அவர் அவ்விடத்தில் அமருவதற்கு ஆசனங்கள் இல்லாததைக் கண்டார். சந்திப்பு முடிவடையும் நேரத்தில் அவர் ரபீயைப் பார்த்து, “உங்கள் இல்லத்தில் அமருவதற்கான ஆசனங்கள் எங்கே?” என்று கேட்டார். உடனே அவர் “உங்கள் ஆசனங்கள் எங்கே?” எனத் திருப்பிக் கேட்டார். அதற்கு அப்பயணி, “இது என்னுடைய சொந்த இடமல்ல, நான் இந்த நாட்டைச் சுற்றிப் பார்ப்பதற்கு வந்தவன்” என்றார். உடனே ரபீ “நானும் இப்பூமியில் சுற்றுப் பயணியாகவே வந்துள்ளேன். இந்த உலகம் எனது சொந்த இடமல்ல” என்றார்.

மீதியான் தேசத்து வனாந்தரமோ, எகிப்து தேசமோ தன்னுடைய தேசம் அல்ல என்பதை மோசே உணர்ந்துகொண்டார். “விசுவாசத்தினாலே மோசே தான் பெரியவனானபோது பார்வோனுடைய குமாரத்தியின் மகன் என்னப்படுவதை வெறுத்து, அநித்தியமான பாவசந்தோஷங்களை அநுபவிப்பதைப் பார்க்கிலும் தேவனுடைய ஜனங்களோடே துன்பத்தை அநுபவிப்பதையே தெரிந்து கொண்டு, இனிவரும் பலன்மேல் நோக்கமாயிருந்து, எகிப்திலுள்ள பொக்கிஷங்களிலும் கிறிஸ்துவினிமித்தம் வரும் நிந்தையை அதிக பாக்கியமென்று எண்ணினான். ஆபிரகாமைப்போல தேவன் தாமே கட்டி உண்டாக்கின அஸ்திபாரங்களுள்ள நகரத்துக்கு அவன் காத்திருந்தான்” (எபிரெயர் 11:24,25,10).

ஆம், “உங்கள் பொக்கிஷம் எங்கேயிருக்கிறதோ அங்கே உங்கள் இருதய மும் இருக்கும்” (மத்.6:21) என்று இயேசு கூறினார். தனது வாழ்வின் இறுதிக் கட்டத்தை நெருங்கிய ஒருவர், “ஐயோ, நான் எனது வாழ்வை எப்படி வீணாக்கி விட்டேன். நிழல்களை நிஜமென்று தொடர்ந்து கனவுகளில் வாழ்ந்தேனே. வெறும் குப்பைகளைச் சேமித்து இதுவரை காலமும் வெறுமையில் வாழ்ந்திருந்தேனே” என்று வேதனையோடு கூறினார். நாம் நியாயமாய் சம்பாதிப்பதும், சேர்த்து வைப்பதும் தவறல்ல. ஆனால் அதற்காக மட்டும் வாழ்வோமானால் நமது வாழ்வு அர்த்தமற்ற ஒரு வாழ்வாகிவிடும். பூலோக செல்வம் இன்பமென்றி ருக்கிறாயா? இன்று உன்னுடைய நாள். உன்னை நீயே மாற்றிக்கொள்.

உன் வாழ்வு சீக்கிரம் முடியுமானால் என்ன செய்வாய்? பரலோகத்தில் உனக்கு பொக்கிஷங்களைச் சேர்த்து வைத்திருக்கின்றாயா? அப்படியானால் நீ பாக்கியவான்!

ஜெபம்: “பிதாவே, நாங்கள் நித்தியமாய் வாழப் போகிற பரலோகத்திலே எங்கள் பொக்கிஷங்களைச் சேர்க்கக் கிருபைதாரும். ஆமென்.”