ஜெபக்குறிப்பு: ஆகஸ்டு 24 திங்கள்

சத்தியவசன தமிழ் வானொலி நிகழ்ச்சிகளின் தொகுப்பாளர்களுக்காக, செய்தியாளர்களுக்காக, புதிய நேயர்கள் இந்நிகழ்ச்சியின் மூலம் ஆண்டவரை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ள, தடையின்றி இப்பணிகள் நிறைவேற்றப்பட ஜெபிப்போம்.

தேவதிட்டத்தை நிறைவேற்று!

தியானம்: ஆகஸ்டு 24 திங்கள்; வாசிப்பு: சங்கீதம் 107:1-16

“…இப்பொழுதும் நாங்கள் வனாந்தரத்தில் மூன்றுநாள் பிரயாணம்
போய், எங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பலியிடும்படி எங்களைப்
போகவிடவேண்டுமென்று சொல்லுங்கள்” (யாத்.3:18).

ஒரு கட்டிடத்தைக் கட்டுவதற்கு முன்பு அந்தக் கட்டிடத்திற்கான ஒரு திட்ட வரைபடம் இருக்கவேண்டியது அவசியம். அதன்பின் அந்தக் கட்டிடத்தின் கட்டுமானப் பணியில் ஈடுபடும் அனைவரும் அந்தத் திட்டத்தின்படியே கட்டிக் கொண்டுபோகவேண்டும். அவ்வாறு செயற்படாவிட்டால் அது ஆபத்தாக முடியும். அதுபோல, தேவன் நமக்காகத் திட்டமிட்டு வைத்திருக்கும் மேலான திட்டத்தை அறிந்து, அதன்படி நமது வாழ்க்கையை அமைத்துக்கொள்ளாவிடில், அது நமக்குப் பாதகமாகவே அமையும்.

இஸ்ரவேல் மக்களைக் குறித்து தேவன் தாம் வைத்திருந்த திட்டத்தை மோசேக்கு விளக்கிக்காட்டினார். ஆனால், அத்திட்டத்திற்கு பார்வோன் சம்மதிக்கமாட்டான் என்பது தேவனுக்குத் தெரியும். எனவே, தேவன் அவனுக்குப் பல எச்சரிப்புக்களைக் கொடுத்து அவனை உணரவைக்க வேண்டியதிருந்தது. அதன் பிரகாரம் எகிப்தில் பிறந்த தலைப்பிள்ளைகளின் மரணத்திற்குப் பின்னரே பார்வோன் தேவதிட்டத்திற்குச் சம்மதித்தான்.

அருமையானவர்களே, தேவன் நம் வாழ்வுக்கு ஒரு திட்டத்தை வைத்துள்ளார். நீங்களும் நானும் தேவனுடைய திட்டத்தின்படி செயற்படவேண்டும். நாம் அத்திட்டத்தின்படி நடந்தால் மாத்திரமே நமது வாழ்வு ஆசீர்வாதமுள்ளதாக அமையும். அவரது திட்டத்தை எப்படி நாம் கண்டுகொள்ள முடியும் என நீங்கள் கேட்கலாம். ஜெபம், விசுவாசிகளின் நல் ஆலோசனை, தேவ வார்த்தை ஆகிய இவைகள் தேவதிட்டத்தை அறிந்துகொள்ள நமக்கு உதவி செய்யும். அவரது திட்டத்தை அறிந்தபின்னர், நமது வாழ்க்கையை அதற்கு ஏற்ப மாற்றிக் கொள்ளவேண்டும். ஆனால், நாம் தேவனின் திட்டத்தை ஒதுக்கித் தள்ளினால், அதுவே ஏமாற்றமும் மனவருத்தமும் ஆபத்தானதாகவும் முடியலாம்.

அருமையான தேவபிள்ளையே, உனது வாழ்க்கையில் தேவன் உனக்காக வைத்திருக்கும் அழகிய திட்டத்தை அறிந்துகொள்வதில் உனக்கு நாட்டம் உண்டா? தேவதிட்டத்தின்படி வாழும்போது உன் வாழ்க்கையில் ஒருபோதும் தோல்வியோ துக்கமோ வராது என்று அர்த்தம் ஆகாது. ஆனால், உன் வாழ்வு அர்த்தமுள்ளதாக மாறும். எனவே, தேவனின் திட்டத்தை நிறைவேற்றுதலே மிக முக்கியமானது.

தேவன் நமக்கு தம்முடைய திட்டத்தை மாத்திரமே தருகிறார். ஆனால், அதற்குச் சம்மதித்து, ஏற்றுக்கொண்டு கீழ்ப்படிய வேண்டியது உன்னுடைய கைகளிலேதான் உள்ளது.

ஜெபம்: “என் வாழ்வை அர்த்தமுள்ளதாய் மாற்ற நீர் எனக்காக வைத்திருக்கும் உமது திட்டத்துக்கு நன்றி. அதற்காக என்னை அர்ப்பணிக்கின்றேன். ஆமென்”