ஜெபக்குறிப்பு: ஆகஸ்டு 31 திங்கள்
இம்மாதம் முழுவதும் நம்மை தமது கரத்தின் நிழலினால் மறைத்து, கூப்பிட்ட வேளைகளில் எல்லாம் அருகில் வந்து நமக்கு உதவி செய்த தேவாதிதேவனை ஆயுளுள்ள நாளெல்லாம் நன்றி செலுத்தி அவருடைய பாதத்தில் விழுந்து மகிமைப்படுத்துவோம்.
தேவனுடைய கோல்!
தியானம்: ஆகஸ்டு 31 திங்கள்; வாசிப்பு: சங்கீதம் 40:1-11
“…மோசே தன் மனைவியையும் தன் பிள்ளைகளையும்
கழுதையின் மேல் ஏற்றிக்கொண்டு… தேவனுடைய கோலையும்…
தன் கையிலே பிடித்துக்கொண்டுபோனான்” (யாத்.4:20).
அமெரிக்காவில் நியூயார்க் நகரில் ஒரு கலைஞர் இருந்தார். அவர் வீதிகளில் செல்லும்பொழுதெல்லாம் அவரது கண்கள் உடைந்த கண்ணாடித் துண்டுகளையும், வாகனங்களின் உடைந்து நொறுங்கிய சமிக்ஞை விளக்குத் துண்டுகளையும் தேடும். வீணானவைகள் என்று விடப்பட்ட இத்தகைய பொருட்களை அவர் சேகரித்து வீட்டிற்கு எடுத்துச்செல்வது வழக்கம். பின்னர், மிகச் சாதாரணமான அப் பொருட்களை தமது திறமையினால் மொசைக் வேலைப்பாடுடன் கூடிய வண்ணமிகு கலைப்பொருட்களாய் மாற்றிவிடுவார். அற்பமான வைகளாய் எண்ணப்பட்டவைகள் அவரது கைகள் பட்டதும் அசாதாரண உயிரோவியங்களாய் உருப்பெற்றுவிடும்.
நமது தேவனும் இவ்வண்ணமே செயலாற்றுபவர். அவரது அற்புத வல்லமையினால் மோசேயின் கையிலிருந்த அந்த சாதாரண கோல் எனப்பட்டது, தேவனுடைய கோல் என மாற்றியமைக்கப்பட்டது. அவனது கையிலிருந்த சாதாரண மரத்தடியைப் பயன்படுத்தி, எகிப்தியர்மீது வாதைகளை வரப்பண்ணவும், சமுத்திரத்தைப் பிளக்கவும், கன்மலையிலிருந்து தண்ணீரைப் புறப்படப் பண்ணவும் தேவனாலே மாத்திரமே கூடுமாதானயிருந்தது.
அன்பானவர்களே! இந்த உண்மை நமது வாழ்வுக்கும் பொருந்தும். நாம் கிறிஸ்துவுக்குள் வரும்பொழுது, ஆண்டவருக்குள் ஒரு புது சிருஷ்டியாக மாற்றம் அடைகிறோம். தேவன் நமது பழைய தன்மைகளில் ஒரு சிறிய மாற்றத்தைச் செய்துவிட்டு, அத்துடன் நிறுத்திக்கொள்பவர் அல்ல. மாறாக, அவர் பழையவைகள் அனைத்தையும் ஒழித்து, சகலத்தையும் புதிதாக்குகிறார். ஆம், இயேசுகிறிஸ்துவுக்கு நாம் நமது வாழ்வை அர்ப்பணித்து, அவரை நமது சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளும்பொழுது, ஒரு அசாதாரண மாறுதல் நம்மில் தோன்றுகின்றது. மிகச் சாதாரணமானவர்களாய் நாம் எண்ணப்பட்டா லும், அவர் நம்மை விசேஷித்தவர்களாய் வனைய வல்லவர்.
அன்று கலிலேயா கடற்கரையில் வாழ்ந்த சாதாரண மீனவர்களை அழைத்து, முழு உலகுக்கும் வாசனை வீசும் மலர்களாகவும், பாவ இருளில் ஒளிவீசும் தீபங்களாகவும், சரித்திரத்தில் அழியாத ஜீவ சிற்பங்களாகவும், பலமுள்ள ஜீவ சாட்சிகளாகவும், ஆதித் திருச்சபையின் ஆதார தூண்களாகவும் தேவனின் கரம் அவர்களை வடிவமைத்தது. எனவே சாதாரணமான நம்மையும் அவருடைய கரத்திலே கொடுப்போமா!
தேவன் சாதாரணமானவைகளை அசாதாரணமானவைகளாக்கும் அதிசயங்களைச் செய்ய வல்லவர்.
ஜெபம்: “அதிசயமானவரே, அற்பமான என்னைக் கொண்டு அசாதாரணமானவைகளை நடப்பிக்கும்படி என்னை உமது கரத்தில் அர்ப்பணிக்கிறேன். ஆமென்.”