ஜெபக்குறிப்பு: பிப்ரவரி 29 திங்கள்
“பரலோகத்தின் தேவனைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது” (சங்.136:26) இவ்வாக்குப்படியே இம்மாதம் முழுவதும் கர்த்தர் நமக்கு செய்த எண்ணில்லா நன்மைகளுக்காகவும், பாராட்டின தயவுகளுக்காகவும் தேவனை ஸ்தோத்திரிப்போம்.
உடைக்கப்பட்ட கற்பனை!
தியானம்: பிப்ரவரி 29 திங்கள்; வேத வாசிப்பு: யாத்திராகமம் 32:7-20
“….மோசே கோபம் மூண்டவனாகி, தன் கையிலே இருந்த பலகைகளை மலையின் அடியிலே எறிந்து உடைத்துப்போட்டு….” (யாத். 32:19).
தன் கணவன் தனக்களித்த முதலாவதும், விலைமதிக்க முடியாததுமான ஒரு அன்பளிப்பைப் பத்திரமாகப் பாதுகாத்து வந்த மனைவி, கணவன் தனக்குத் துரோகம் செய்துவிட்டது உறுதிப்பட்டபோது, அந்த அன்பளிப்பைப் போட்டு உடைத்தாள். “நான் உடைத்தது கணவரின் அன்பளிப்பை அல்ல; அவருடைய தவறு எவ்வளவு கொடுமையானது என்பதை உணர்த்தவே அவருடைய அன்புப் பரிசை நான் உடைத்தேன்” என்றாள் அவள்.
தாம் மீட்டுக்கொண்ட ஜனங்கள்மீது அளவில்லா கரிசனைகொண்ட தேவன், தமக்குச் சாட்சியான வாழ்விலே அவர்களை வழிநடத்துவதற்காக “சீனாய் மலையில் அவர் மோசேயோடே பேசி முடித்தபின், தேவனுடைய விரலினால் எழுதப்பட்ட கற்பலகைகளாகிய சாட்சியின் இரண்டு பலகைகளை அவனிடத்தில் கொடுத்தார்.” (யாத்.31:18) அந்தப் பலகைகளைத்தான் கோபம் மிகுதியினால் மோசே போட்டு உடைத்தான். இப்போது மோசே உடைத்தது கற்பலகைகளையா? கற்பனைகளையா? மோசே உடைத்தது, ஏற்கனவே மலை அடிவாரத்திலே மக்கள் உடைத்துப்போட்ட கற்பனைகளைக்கொண்ட கற்பலகைகளை என்பதை நாம் கவனிக்கவேண்டும். அவர்கள் பொன் கன்றுக்குட்டி யைத் தங்கள் தெய்வமாக்கி, அதைக் கொண்டாடியபோதே அவர்கள் தேவனுடைய கற்பனைகளை உடைத்திருந்தார்கள். ஆக, மோசே, தேவனுடைய கையினாலே எழுதப்பட்ட கற்பலகைகளை உடைத்தபோது, தேவஜனத்தின் பாவம் எவ்வளவு கொடிதானது என்பதையே அது காட்டிற்று.
கற்பனையை மீறிய பாவத்திற்காக கர்த்தர் தமது ஜனத்தைக் கொன்று போட நினைத்தார். அது அவருடைய நீதி. ஆனால், மோசே ஜனங்களுக்காக மன்றாடியபோது, “…கர்த்தர் தமது ஜனங்களுக்குச் செய்ய நினைத்த தீங்கைச் செய்யாதபடிக்குப் பரிதாபங்கொண்டார்”(யாத்.32:14). இதுவே அவரது கிருபை! இன்று அந்தக் கிருபை கிறிஸ்துவில் நமக்கு வெளிப்பட்டுள்ளது. ஆக, அந்த நீதியைச் சோதிப்பதோ, கிருபையை நமக்குச் சாதகமாக்கிக்கொள்வதோ நமக்குத் தகாத காரியம். இஸ்ரவேல் கற்பனையை உடைத்தது; தேவகிருபை அவர்களைக் காத்துக்கொண்டது. அக்கிருபை நமக்கும் உண்டு என்பதற்காக இன்று நாமும் தேவனுடைய வார்த்தையை உடைத்தெறியக்கூடுமோ?
“பாவம் மரணத்துக்கு ஏதுவாக ஆண்டுகொண்டதுபோல, கிருபையானது நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மூலமாய் நீதியினாலே நித்திய ஜீவனுக்கு ஏதுவாக ஆண்டுகொண்டது” (ரோமர் 5:21).
சிந்தனைக்கு: இஸ்ரவேலைக் குற்றம் பேசுகின்ற நான், கிறிஸ்துவின் கிருபையின் கீழிருந்தும், தேவவார்த்தையை உடைத்தெறிவதுபோல வாழுவது தகுமா?
வாக்குத்தத்தம்: பிப்ரவரி 28 ஞாயிறு
.. என் ஜீவனுள்ள நாளெல்லாம் கர்த்தருடைய ஆலயத்தில் தங்கியிருப்பதையே நாடுவேன். (சங்.27:4)
ஜெபக்குறிப்பு: பிப்ரவரி 28 ஞாயிறு
“..பயப்படாதே, நான்…உயிருள்ளவருமாயிருக்கிறேன்” (வெளி.1:17) உயிர்த்தெழுந்த ஆண்டவரை ஆராதிக்கிற நாம் இந்நாட்களில் கிராமங்களில் உள்ள திருச்சபைகளுக்காகவும், போதகர்களுக்காகவும், அங்கே முழுநேரமாக ஊழியம் செய்துவரும் ஊழியர்களை கர்த்தர் வல்லமையாய் பயன்படுத்தவும் ஜெபிப்போம்.
ஆண்டவரை நினைந்து…
தியானம்: பிப்ரவரி 28 ஞாயிறு; வேத வாசிப்பு: சங்கீதம் 139
“நான் நடந்தாலும் படுத்திருந்தாலும் என்னைச் சூழ்ந்திருக்கிறீர்; என் வழிகளெல்லாம் உமக்குத் தெரியும்” (சங்கீதம் 139:3).
சிலி நாட்டிலே, 700 மீட்டர் (2300 அடி) ஆழமுள்ள ஒரு சுரங்கத்தில் 69 நாட்களாக சிக்குண்டிருந்த 33 சுரங்கத் தொழிலாளிகள் அதிசயத்தக்க விதமாக மீட்கப்பட்ட சங்கதியை நாம் மறக்கமுடியாது. அவர்களில் 19 வயதுள்ள ஒருவன் தன் அனுபவத்தை இப்படி எழுதுகிறான்: “உண்மையிலேயே நாங்கள் 33 பேர்கள் அல்ல; 34 பேர்கள் இருந்தோம். அந்த ஆழத்திலும் கர்த்தர் எங்களைக் கைவிடவில்லை” என்பதே அது. நமது கடின இருதயங்கள் உடைக்கப்பட, கர்த்தர் நம்மேல் எவ்வளவு கரிசனையாயிருக்கிறார் என்பதை ஒரு கணம் சிந்தித்தாலேபோதும் என்றே நான் நம்புகிறேன்.
தாவீது பகைமையுணர்வுடன் ஜீவித்திருந்தால் எத்தனைபேரைக் கொன்றிருக்கவேண்டும். சவுல் தொடக்கம், சொந்த மகன் அப்சலோம் வரைக்கும் எத்தனைபேர் தாவீதின் வாழ்வை உடைத்தெறிந்தனர். ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் மற்றவர்கள் அல்ல, தாவீதே மனமுடைந்தான் என்று காண்கிறோம். இது எப்படி? அவன் தன்னில் கரிசனையாயிருந்த தேவனை நன்கு அறிந்திருந்தான். கர்த்தர் எல்லாவற்றையும் அறிந்தவர் (வச.1), உணர்வுகளை அறிந்தவர் (வச.1), நினைவுகள் செயல்களை அறிந்தவர் (வச.2,3), பேசுவது, போகும் இடம் (வச.4,5) யாவையும் முற்றிலும் அறிந்தவர். மாத்திரமல்ல, தேவபிரசன்னம் எப்போதும் எந்த இடத்திலும் நம்முடன் இருக்கிறது (வச.7,8). கருவிலேயே கர்த்தர் நம்மைக் கண்டவர், ஒவ்வொரு நாட்களும் அவருடைய புஸ்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது. அத்தனையாய் கர்த்தர் சர்வவல்லமை மிக்கவராயிருக்கிறார் (வச.13-16). இப்படிப்பட்ட கர்த்தர் நமக்கிருக்க, நாம் அவருக்கு என்ன பதிலுரை செய்யப் போகிறோம்? பகைமையும், குரோதங்களும் கோபங்களும் மனதில்கொண்டு வாழுவோமானால் அது ஆண்டவரை எவ்வளவாய் துக்கப்படுத்தும் என்பதை நாம் சிந்திக்கவேண்டும். தாவீது தன்னை ஆராய்ந்து, நித்திய வழியிலே நடத்தும்படி தேவனிடம் சரணடைந்தான். வாழ்வில் உடைக்கப்பட்ட போதெல்லாம், தாவீது இன்னமும் அதிகமாகப் பெலனடைந்ததன் இரகசியம் இதுதான்.
இன்று நாம் பெலனற்றிருப்பதன் காரணம் என்ன? மனம் கடினப்படும் போதுதான் நாம் அதிகமாகப் பெலனை இழந்துபோகிறோம். நம்மேல் கரிசனையாயிருக்கிற கர்த்தரை ஒருகணம் நோக்கிப்பார்ப்போம். நமது ஒவ்வொரு அசைவையும் தமது கண்களுக்குள் வைத்து நம்மை நடத்துகிற தேவனை நினைத்தாலே நமது உள்ளங்கள் உடைந்துவிடும். அந்த ஒவ்வொரு உடைவுகளுக்குள்ளிருந்தும் தேவன் அழகிய பூக்களை நிச்சயம் மலரச்செய்வார்.
“கர்த்தருடைய கிருபையோ அவருக்குப் பயந்தவர்கள்மேலும்…. அநாதியாய் என்றென்றைக்கும் உள்ளது” (சங்கீதம் 103:17).
சிந்தனைக்கு: உண்மையுள்ள இருதயத்துடன் நம்முடைய உள்ளத்தைத் திறந்து உடைக்கப்படாத கடினமான பாகங்களை இன்றே தேவனிடம் ஒப்புவிப்போமா?