ஜெபக்குறிப்பு: செப்டம்பர் 2 வெள்ளி

“..தம்முடைய ஜனத்தை நெகிழவிடாமலும், தம்முடைய சுதந்தரத்தைக் கைவிடாமலும் இருக்கிற” (சங்.94:14) கர்த்தர்தாமே 9 குடும்பங்களுக்கு செய்த அனைத்து நன்மையான காரியங்களுக்காகவும், தேவனுடைய வழிநடத்துதல்களுக்காகவும்  ஸ்தோத்திரித்து ஜெபிப்போம்.

நன்மைக்கு ஏதுவாக…

தியானம்: செப்டம்பர் 2 வெள்ளி; வேத வாசிப்பு: ஆதியாகமம் 50:14-26

“நீங்கள் எனக்குத் தீமைசெய்ய நினைத்தீர்கள். தேவனோ, இப்பொழுது நடந்துவருகிறபடியே, வெகு ஜனங்களை உயிரோடே காக்கும்படிக்கு அதை நன்மையாக முடியப்பண்ணினார்” (ஆதி. 50:20).  

“குறித்தகாலம் முடியுமுன்னரே, வாடகை வீட்டை காலிப்பண்ணி தரும்படி வீட்டின் சொந்தக்காரர் எங்களுக்கு கஷ்டம் தந்தார். இனியும் இக்கஷ்டம் வேண்டாம் என்று முயற்சிபண்ணி தேவகிருபையால் எங்களுக்கென்று ஒரு வீட்டை வாங்கினோம். எங்களுக்குக் கஷ்டம் கொடுக்க எண்ணி வீட்டுக்காரர் செய்த காரியம், எங்களது சந்தோஷமான வாழ்வுக்கு வழிவகுத்துவிட்டது” என்று ஒருவர் சொன்னார்.

யோசேப்பில் எரிச்சல்கொண்ட சகோதரர் அவனைக் கொன்றுபோடவே திட்டமிட்டனர். பின்னர் அவனைப் பாழுங்கிணற்றில் தூக்கிப்போட்டனர். பின்னர் தங்கள் கண்களைவிட்டே அவனை அகற்றிப்போடும்படிக்கு அவனை இஸ்மவேலருக்கு விற்று இருபது வெள்ளிக்காசையும் தமதாக்கிக்கொண்டனர்;. இவ்விதமாக எகிப்துக்கு வந்த யோசேப்பு இப்போது எகிப்தியரையும் தனது குடும்பத்தினரையும் கொடிய பஞ்சத்தில் ஆதரிக்கிறவனாய் நிலைநிறுத்தப்பட்டிருப்பதைக் காண்கிறோம். இதற்கு முக்கியக் காரணம், யோசேப்பு எப்போதும் கர்த்தருக்கு முன்பாக உண்மையுள்ளவனாய் இருந்தான் என்பதாகும். குற்றவாளிகளைச் சிறைவைக்கும் சிறைச்சாலையில் குற்றமற்றவனாய் யோசேப்பு அடைக்கப்பட்டபோது அவனோடுகூட தேவனும் இருந்தார் என்று வாசிக்கிறோம் (ஆதி.39:21-23). சகோதரர் யோசேப்புக்குத் திட்டமிட்டுச்செய்த தீமையை, தேவன் யோசேப்புக்கு நன்மையாக மாற்றினார். அதுமாத்திரமல்ல, அது அவனது சகோதரருக்கும் எகிப்துதேசம் முழுமைக்குமே நன்மையாக மாறியது.

கடந்துவந்த பாதைகளைத் திரும்பிப் பார்க்கும்போது, இவ்விதமாக பல தீமைகளை நாம் கடந்து வந்திருந்திருக்கலாம். அவைகள் நன்மையாக மாறிய பல சந்தர்ப்பங்களைக்கூட நம்மால் எண்ணிப் பார்க்கக்கூடியதாக இருக்கும். தேவனையே நம்பி, அவரையே சார்ந்து வாழும்போது அவர் நமக்காகக் காரியங்களை நடப்பிக்க வல்லவராயிருக்கிறார். யோசேப்பின் வாழ்வில் செயற்பட்ட தேவனே இன்றும் நமது தேவனாக நமது மத்தியில் இருக்கிறார். நமது வாழ்விலும் பிறர் தீமை எண்ணும்போது, நமக்கும், நம்மூலம் பிறருக்கும், தீமை செய்கிறவர்களுக்கும்கூட அவற்றை நன்மைக்கு ஏதுவாக மாற்ற அவர் வல்லவராயிருக்கிறார். இது உண்மைத்துவமாக அவருடன் வாழ்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.

“அன்றியும் அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்” (ரோமர் 8:28).

ஜெபம்: ஆண்டவரே, எவ்வித கடின சூழ்நிலையையும் உமது கரத்தில் ஒப்பு வித்து, உம்மையே சார்ந்து ஜீவிக்க கிருபைதாரும். ஆமென்.