ஜெபக்குறிப்பு: செப்டம்பர் 1 வியாழன்
“.. இந்தக் காரியங்களை நான் அவர்களுக்குச் செய்து அவர்களைக் கைவிடாதிருப்பேன்” (ஏசா.42:16) என்று வாக்குப்பண்ணின ஆண்டவர்தாமே இம்மாதத்தில் நம்மை கரம்பிடித்து தம்முடைய வழிகளில் நடத்திச் செல்ல கைவிடாத நேசரின் கரங்களில் நம்மை அர்ப்பணித்து ஜெபிப்போம்.
பாடுகளிலும் நம்பிக்கை!
தியானம்: செப்டம்பர் 1 வியாழன்; வேத வாசிப்பு: 1பேதுரு 5:1-11
“இரட்சிப்பு கர்த்தருடையது. தேவரீருடைய ஆசீர்வாதம் உம்முடைய ஜனத்தின்மேல் இருப்பதாக” (சங். 3:8).
ஒரு வீட்டின் முன்னால் ஒரு பிளாஸ்டிக் பொருள் கட்டித் தொங்கவிட்டிருப்பதைக் கண்ட பிள்ளைகள் அதை அடித்து உடைத்து விளையாடினர். இதைக் கவனித்த ஒருவர், அந்த வீட்டுக்காரரிடம் பிள்ளைகள் அதை உடைப்பதாகச் சொன்னார். அதற்கு அவர், “என்னால் உடைக்கமுடியாததை அவர்கள் உடைக்கட்டும் என்றுதான் விட்டுவிட்டேன். பின்னர் அதை நான் வேறு உபயோகத்திற்காகப் பயன்படுத்தமுடியும்” என்றார்.
“கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மைத் தமது நித்திய மகிமைக்கு அழைத்தவராயிருக்கிற சகல கிருபையும் பொருந்திய தேவன்தாமே கொஞ்சக்காலம் பாடனுபவிக்கிற உங்களைச் சீர்ப்படுத்தி, ஸ்திரப்படுத்தி, பலப்படுத்தி, நிலை நிறுத்துவாராக (வச10) என்று பேதுரு எழுதியதை இன்று வாசித்தோம். முதலாவது தேவபிள்ளைகளாகிய நாம் அறிந்துகொள்ளவேண்டியது, நாம் இவ்வுலக சந்தோஷத்துக்கோ அல்லது இவ்வுலகத்தில் நித்தியமாய் வாழுவதற்கோ அழைக்கப்படவில்லை; மாறாக, தேவனுடைய நித்திய மகிமைக்காகவே நாம் அழைக்கப்பட்டுள்ளோம். இந்த அழைப்புக்குத் தகுதிப்படும்படிக்கு உடைக்கப்படவேண்டிய நேரங்களும், காயப்படவேண்டிய தருணங்களும் நமது வாழ்விற்கு அவசியமாகிறது. அதன் மூலமாகவே தேவன் நம்மை ஸ்திரப்படுத்திப் பலப்படுத்தி நிலைநிறுத்துகிறார். அது நமக்குக் கடினமான காலமாக இருக்கலாம்; நமது உணர்வுகள் அசைக்கப்படும் நேரமாகவும் இருக்கலாம்.
இவ்விதமாக அசைக்கப்பட்ட உடைக்கப்பட்ட காலங்களுக்கூடாக நாம் சென்றிருக்கிறோமா? ‘இனி வாழ்ந்தென்ன லாபம்’ என்று நம்பிக்கையிழந்து நின்றிருக்கிறோமா? தவறு செய்து தண்டிக்கப்படுகிற வேளைகளைவிட, தவறே செய்யாமல் தண்டிக்கப்படும்போது ஏற்படும் வலி கொடுமையானது. அப்படியான தருணங்களை நாமும் கடந்துவந்திருக்கலாம். எது நிகழ்ந்தாலும் நமது நம்பிக்கையைத் தளரவிடக்கூடாது. அவர் நம்மை விசாரிக்கிறவராகையால் நமது கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுவதே நாம் செய்யக்கூடிய காரியமாய் இருக்கிறது. ஆகையால் சோர்ந்துபோகாமல் கர்த்தருக்குள் பெலன் கொண்டு எல்லாச் சூழ்நிலைகளையும் தைரியமாய் எதிர்கொள்வோம். நாம் உடைக்கப்பட்டு நொறுக்கப்பட்டு கர்த்தருக்கு உகந்தவர்களாய் வனையப்பட நம்மை நம்பிக்கையோடு அவரது கரங்களில் ஒப்புக்கொடுப்போம். தேவனே நம்மை உருவாக்குகிறவர்.
“என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு” (பிலிப்பியர் 4:13).
ஜெபம்: அன்பின் பிதாவே, நாங்கள் சோர்ந்துபோன நேரங்களில், சரீர பெலன் குன்றிப்போன தருணங்களில், நீர் எங்களைப் பெலப்படுத்தியதை நினைத்து உம்மை ஸ்தோத்தரிக்கிறோம். ஆமென்.
தரிசனமா அல்லது விசுவாசமா?
அதிகாலை வேளையில்… (செப்டம்பர்-அக்டோபர் 2016)
– Dr.உட்ரோ குரோல்
வேதபகுதி: நியாயாதிபதிகள் 6:16-40
அப்படியே ஆயிற்று. அவன் மறுநாள் காலமே எழுந்திருந்து, தோலைக் கசக்கி, அதிலிருந்த பனிநீரை ஒரு கிண்ணம் நிறையப் பிழிந்தான் (நியா.6:38).
இஸ்ரவேல் நாட்டை முன் நடத்திச் செல்ல ஒரு தலைவர் இல்லாததால் அதைரியமிழந்து ஒரு பரிதாப நிலையில் இருந்த நாட்டை இரட்சிப்பதற்கு ஒரு பராக்கிரமசாலி தேவைப்பட்டார். தேவன் தமது மனிதன் ஒருவரை அப்பணிக்கெனத் தெரிந்தெடுத்தார். கர்த்தருடைய தூதனானவர் கிதியோனுக்கு தரிசனமாகி தேவ தரிசனத்தையும் வல்லமையும் உறுதிப்படுத்தி அவரைத் தைரியப்படுத்தினார். அந்தத் தைரியத்தில் கிதியோன் பாகாலின் பலிபீடத்தைத் தகர்த்துப் போட்டார். மேலும் இஸ்ரவேல் நாடு முழுவதும் உள்ள விக்கிரக ஆராதனையையும் ஒழித்துப்போட்டார். ஓப்ராவில் யெகோவா தேவன் மாத்திரமே ஆராதிக்கப்பட்டார். கிதியோனின் புகழ் இஸ்ரவேல் நாடு முழுவதும் பரவியது. எனவே இஸ்ரவேல் மக்கள் அனைவரும் கிதியோனைப் பின்பற்றலாம் என்பது தெளிவாக விளங்கிற்று.
மீண்டும் மீதியானியர் அமலேக்கியரும் கிழக்கத்திப் புத்திரர் யாவரும் யுத்தத்துக்குப் புறப்பட்டு வந்தனர். கிதியோன் இந்த போருக்கு ஆயத்தமாயிருந்தார். “கர்த்தருடைய ஆவியா னவர் கிதியோன்மேல் இறங்கினார்; என்று நியாயாதிபதிகள் 6: 34 கூறுகிறது. அதாவது யெகோவாவின் ஆவி கிதியோனை ஓர் ஆடையைப் போல மூடிற்று என்று இது பொருள்படும். ஒரு காலத்தில் தைரியமிழந்து மனத்தளர்ச்சி அடைந்திருந்த ஓர்பாவின் அந்த இளம் விவசாயி தேவனுடைய ஆவியின் ஆயுதங்களை அணிந்தவராய் அப்போருக்கு ஆயத்தமானார். அவர் எக்காளத்தை ஊதிய பொழுது அபியேசர் குடும்பத்தினர் அவரைப் பின்பற்றினர். நாடு முழுவதும் அவர் தூதுவர்களை அனுப்பினார். நப்தலி, செபுலோன், ஆசேர் மற்றும் மனாசே குடும்பத்தினரும் அவரைப் பின்பற்றி யுத்தம் செய்ய ஆயத்தமாயினர்.
ஒரு பெரிய யுத்தத்துக்கு அனை வரும் தயாராயிருந்தனர். ஆனாலும் கிதியோனை ஒரு காரியம் கலங்கச் செய்தது. அவர் தேவனிடம் ஓர் அடையாளத்தைக் கேட்டார். இவ்வாறு அடையாளத்தைக் கேட்பது யூதர்களின் ஒரு பண்பு ஆகும் (1 கொரி.1: 22). இராணுவம் யுத்தத்துக்கு அணி வகுத்து நிற்கும்பொழுது, கிதியோன் ஓர் ஆட்டுக் கம்பளியைத் தரையில் விரித்து வைத்து, தேவனை நோக்கி, “கம்பளிமேல் மட்டும் பனி இறங்கி இருந்து. தரைமுழுவதும் காய்ந்திருந்ததேயானால், நீர் கூறியபடி என் மூலம் இஸ்ரவேலை நீர் விடுவிப்பீர் என அறிந்து கொள்வேன்” என்றார். பாலஸ்தீன மேட்டுப் பகுதியில் பயங்கரமான பனியைக் காண்பது மிகச் சாதாரணமான ஒரு காரியம். இன்றும் இரவில் வெளியே விட்டுவிடப்படும் துணிகளில் படிந்திருக்கும் பனியைப் பிழிந்துதான் எடுக்க வேண்டும். தேவனிடமிருந்து அந்த அடையாளத்தை எதிர்பார்த்து இஸ்ரவேல் சேனை இராமுழுவதும் காத்திருந்தது.
கிதியோன் மறுநாள் காலமே எழுந்திருந்து, தோலைக் கசக்கி, அதிலிருந்த பனிநீரை ஒரு கிண்ணம் நிறையப் பிழிந்தான் (நியா.6:38). என்று வேதபுத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது. ஆம், அவர் கேட்ட அடையாளம் நிறைவேறியது. ஆயினும் கிதியோன் திருப்தியடையாது தேவனுடைய கிருபையையும் பொறுமையையும் மீண்டும் சோதித்தார். அந்த அடையாளத்தை மாற்றிக் கேட்டார்.
மற்றொரு இரவையும் இஸ்ரவேல் சேனை காத்திருப்பதில் செலவிட்டது. மறுநாளில் தோல்மாத்திரம் காய்ந்திருந்தது, பூமியெங்கும் பனி பெய்திருந்தது. இந்த யுத்தத்தில் தேவன் கலந்து கொள்கிறார் என்றும் அவர் தெரிந்து கொண்ட தலைவர் கிதியோன் என்பதற்கு இது சிறந்த சாட்சியாக அமைந்தது.
அநேகவேளைகளில் தீர்மானம் எடுக்க இயலாமையையும் தைரியமின்மையையும் நாம் மறைப்பதற்கு “கம்பளியைத் தரையில் விரிப்பதைப்” போன்று அடையாளத்தைக் கேட்டு செயல்படுகின்றோம். இத்தகைய எதிர்பார்ப்பு அனைத்து வேளையிலும் வியப்புக்குரியதாகவோ விரும்பும் விளைவுகளையும் தராது. ஜான் வெஸ்லி தனது 32ம் வயதில் ஜார்ஜியா மாகாணத்தில் அருட்பணி யாளராக இருந்தபொழுது அவர் ஓர் இளம்பெண்ணை நேசித்து அவரை திருமணம் செய்துகொள்ளவும் விரும்பினார். அவரது சில நண்பர்கள் அவர் திருமணம் செய்துகொள்ளாமல் ஊழியம் செய்வதில் தனது காலத்தைச் செலவிட ஆலோசனை கூறினர். தேவனுடைய சித்தத்தை அறிந்துகொள்ள சீட்டுப்போட்டுப் பார்க்கவும் சிலர் கூறினர். எனவே அவர் மூன்று துண்டு சீட்டுகளில் தனித்தனியே “திருமணம் பண்ணலாம்” என்றும், “இந்த ஆண்டு அது வேண்டாம்” என்றும், மூன்றாவது சீட்டில் “திருமணத்தைப் பற்றி எண்ணவே வேண்டாம்” என்றும் எழுதப்பட்டது.
வெஸ்லி ஒரு சீட்டை எடுத்தார். அதில் ‘திருமண எண்ணம் வேண்டாம்’ என்று எழுதப்பட்டிருந்தது. இருதயம் உடைந்தவராக அவர் அப்பெண்ணுடனான அவ்வுறவை முடித்துக்கொண்டார். 15 ஆண்டுகள் கழித்து அவர் ஒரு பணக்கார விதவையை மணம்புரிந்தார். ஆனால் அப்பெண்மணி அவரது ஊழியத்துக்கு பெருந்தடையாக இருந்தார். துக்கமான 20 ஆண்டுகளின் மணவாழ்வுக்குப் பிறகு அப்பெண் அவரைவிட்டுப் பிரிந்துவிட்டார். வெஸ்லி தனது எதிர்காலத்தை ‘கம்பளியைத் தரையில் விரித்து’ அடையாளம் கேட்டார்.
தேவன் தமது அளவுநிலைகளை உருவாக்கும்பொழுது, சூழ்நிலைக்குத் தகுந்தவாறு நம்மைத் தைரியப்படுத்தி செயல்படுத்த அழைக்கிறார். கம்பளித்துணியை விரித்து அடையாளம் கேட்கும் தவறுக்கு நம்மை ஆளாக்கிக்கொள்ள வேண்டாம். தனது கம்பளித்துணியால் அடையாளம் கேட்பதற்குப் பதிலாக அவர் ஆபிரகாமின் விசுவாசத்தை எண்ணி யிருக்கவேண்டும்.
நீங்கள் எதனை நம்பியிருக்கிறீர்கள்? அடையாளத்தையா அல்லது விசுவாசத்தையா?
அதிகாலைப் பாடல்:
உம்மையே நான் நம்புவேன்; இயேசுவே
பெரிதும் இலவசமுமான முழு இரட்சிப்புக்கும்
உம்மை மாத்திரமே நான் நம்புவேன்.
நீரே என்னை வழிநடத்த நம்புவேன்;
நீர் மாத்திரமே என்னை நடத்திச் செல்லுவீர்,
ஒவ்வொரு நாளும் அனைத்து நேரமும்
என் தேவை எல்லாம் நீர் சந்திப்பீர்!
மொழியாக்கம்: Mrs.அகஸ்டா மங்களதுரை
அனைத்துலக மொழிபெயர்ப்புப் பணிகள்
புனித வேதாகமத்தின் வரலாறு (செப்டம்பர்-அக்டோபர் 2016)
அத்தியாயம்-10
சகோ.M.S.வசந்தகுமார்
தமிழ் வேதாகமத்தின் வரலாறு
(2) பெப்ரீஷியஸ் மொழிபெயர்ப்பு
சீகன்பால்க் கடவுளுக்கு உபயோகித்த சருவேசுவரன் எனும் பதத்திற்குப் பதிலாக பெப்ரீஷியஸ், “பராபரன்” எனும் பதத்தைத் தன்னுடைய மொழிபெயர்ப்பில் உபயோகித்திருந்தார். இது, அக்காலத்தில் பொது வழக்கில் இருந்த ஒரு பதம் அல்ல. தாயுமானவர் எனும் சைவ சமயப் புலவரது பாடல்களிலேயே இப்பதம் உபயோகிக்கப்பட்டிருந்தது.
இவர், பராபரக் கண்ணிகள் என்ற 389 பாடல்களைப் பாடியவராவார். இப்பாடல்களில் இந்துசமயக் கருத்துக்கள் அதிகம் புகுத்தப்படவில்லை. எனினும் இவை பக்திரசம் மிகுந்த பாடல்களாகும். இப்பாடல்கள் ஒவ்வொன்றும் பராபரமே என முற்றுப் பெற்றன. இப்பதம், இந்துமதத் தெய்வமான சிவபெருமானுடன் அதிகமாகச் சேர்த்து உபயோகிக்கப் படாதமையினால், கடவுளைக் குறிக்க பொதுவான பெயராக இருக்கக்கூடியது என தரங்கம்பாடியிலிருந்த ஏர்னஸ்ட் வோல்ட்டர் எனும் மிஷனரி கண்டுகொண்டார். இதனால், தரங்கம்பாடியிலிருந்த மிஷனரிகள் கடவுளைக் குறிக்க பராபரன் எனும் பதத்தையே உபயோகித்தனர்.
மேலும், அக்காலத்தில் தமிழ் நாட்டில் இருந்த ரோமன் கத்தோலிக்க மிஷனரியான கொன்ஸ்டன்டைன் பெஸ்கி, சீகன்பால்க்கின் வேதாகம மொழிபெயர்ப்பு தரம் குறைவானது என ஏளனம் செய்தமையினால், தங்களை ரோமன் கத்தோலிக்க மிஷனரிகளில் இருந்து வேறுபடுத்திக் காட்டுவதற்காக, தரங்கம்பாடியிலிருந்த புரட்டஸ்தாந்து சபை மிஷனரிகள், ரோமன் கத்தோலிக்க மிஷனரிகள் உபயோகித்த சருவேசுவரன் எனும் பதத்தை விடுத்து பராபரன் எனும் பதத்தை உபயோகிக்கத் தொடங்கியதாகவும் சொல்லப்படுகின்றது. பெப்ரீஷியசும் இப்பதத்தையே தனது மொழி பெயர்ப்பில் உபயோகித்திருந்தார்.
பெப்ரீஷியஸ் மொழிபெயர்த்த பழைய ஏற்பாடு, பகுதி பகுதியாகவே வெளியிடப்பட்டது. 1777 இல், ஆதி யாகமம் முதல் நியாயாதிபதிகள்வரையிலும், 1782 இல், ரூத் முதல் யோபு வரையிலும், 1791 இல் சங்கீதங்கள் முதல் உன்னதப்பாட்டு வரையிலும் அச்சிடப்பட்டன. அவ்வருடம் பெப்ரீஷியஸ் மரணமடைந்தார். பழைய ஏற்பாட்டில் அவர் மொழிபெயர்த்திருந்த தீர்க்கதரிசனப் புத்தகங்கள் 1796ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. பெப்ரீஷியஸ் தமிழ் மொழிபெயர்ப்பு 1813 இல் வில்லியம் கேரியினாலும் அச்சிட்டு வெளியிடப்பட்டுள்ளது. தமிழில் வெளிவந்துள்ள வேதாகமங்களில் பெப்ரீஷியஸ் மொழி பெயர்ப்பே சிறந்ததாகக் கருதப்படுகின்றது. பிற்காலத்தைய திருத்தப் பதிப்புகளுக்கெல்லாம் இம்மொழி பெயர்ப்பே அடிப்படையாய் அமைந்தது.
பெப்ரீஷியஸ், சீகன்பால்க்கின் மொழிபெயர்ப்பில் காணப்பட்ட குறைகளையெல்லாம் நீக்கி, சிறப்பாக வேதாகமத்தைத் தமிழில் மொழிபெயர்த்திருந்தார். பிற்காலத்தில் இம்மொழிபெயர்ப்பு சில திருத்தங்களுக்குட்பட்ட போதிலும், அதன் உள்ளடக்கம் இன்றுவரை மாற்றமடையாமலேயே உள்ளது. இம்மொழிபெயர்ப்பில் வடமொழிச் சொற்கள் அதிகம் என்பதே இதற்கெதிராகக் கொண்டுவரப்பட்ட ஒரே ஒரு குற்றச்சாட்டாகும். இதைத்தவிர, இது பொன்மொழி பெயர்ப்பு என பலராலும் புகழப்பட்டுள்ளது. பெப்ரீஷியசின் மொழிபெயர்ப்பு இன்று உபயோகத்தில் இல்லாதபோதிலும், இதற்குப் பின்னர் வெளிவந்த மொழிபெயர்ப்புகளில் புகுந்துள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. பிற்கால மொழி பெயர்ப்புகள் பெப்ரீஷியசின் மொழி பெயர்ப்பின் திருத்தப்பதிப்புகளாகவே இருக்கின்றன. 19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தென்னிந்தியாவில் பணியாற்றிய மிஷனரிச் சங்கங்கள் ஒவ்வொன்றும், பெப்ரீஷியசின் மொழிபெயர்ப்பைச் சிறிது திருத்தி மொழிபெயர்த்து உபயோகித்தன.
(3) ரேனியஸ் மொழிபெயர்ப்பு
1820 ஆம் ஆண்டு சென்னையில் ஆரம்பிக்கப்பட்ட வேதாகமச் சங்கம், பெப்ரீஷியசின் மொழிபெயர்ப்பைத் திருத்தி மொழிபெயர்க்கத் தீர்மானித்தது. பெப்ரீஷியசின் மொழி பெயர்ப்பு வெளிவந்து 50 வருடங்களாகிவிட்டமையினால் அதன் மொழிநடை மாற்றப்பட வேண்டிய தன் அவசியத்தைச் சென்னை வேதாகமச் சங்கம் உணர்ந்தமையே இதற்கான காரணமாகும். மேலும், அக்காலத்தில் தமிழ்நாட்டில் பணியாற்றிய மிஷனரி சங்கங்கள் ஒவ்வொன்றும், தத்தமது விருப்பப்படி பெப்ரீஷியசின் மொழிபெயர்ப்பைத் திருத்திவந்தமையினால், சகல கிறிஸ்தவர்களும் உபயோகிக்கக் கூடிய தனி ஒரு மொழிபெயர்ப்பு இருக்கவேண்டும் என எண்ணிய சென்னை வேதாகமச் சங்கம், அத்தகு ஒரு மொழிபெயர்ப்பைத் தயாரிக்கும் பொறுப்பை சார்ள்ஸ் ரேனியஸ் என்பவரிடம் ஒப்படைத்தது.
ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த சார்ள்ஸ் ரேனியஸ், 1814ஆம் ஆண்டு ஜுலை மாதம் 4 ஆம் தேதி இந்தியாவுக்கு வந்து அங்கிருந்த சபை மிஷனரி சங்கத்தில் சேர்ந்து பணிபுரியத் தொடங்கினார். இவர் தமிழ் மொழியைத் திறம்பட கற்க விரும்பியவராய், திருப்பாற் கடல நாதன் கவிராயர் எனும் கல்வி மானிடம் 14 வருடங்களாகத் தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்றார். தமிழ் மொழியில் சிறப்பான முறையில் பிரசங்கிக்கக்கூடிய ஆற்றலைப் பெற்றிருந்த ரேனியஸ், பல தமிழ் நூல்களையும் எழுதியுள்ளார். தமிழ் மொழியில் முதன் முதலில் பூமிசாஸ்திரப் பாடப்புத்தகம் இவராலேயே எழுதப்பட்டது. இவர் தமிழ் இலக்கண நூல் ஒன்றையும் எழுதியுள்ளார்.
(தொடரும்)
வாசகர்கள் பேசுகிறார்கள்
(செப்டம்பர்-அக்டோபர் 2016)
1. நான் தினமும் அனுதினமும் கிறிஸ்துவுடன் தியானநூலை தவறாமல் வாசித்து தியானித்து கர்த்தருக்குள் புதுப்பெலன் அடைந்து வருகிறேன் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன். வேதவாசிப்பு அட்டவணைப்படி ஒவ்வொருவருடமும் வேதாகமத்தை வாசித்து முடித்து வருகிறேன் என்பதையும் மகிழ்வுடன் தெரியப்படுத்துகிறேன்.
Dr.F.S.Jesudasan Peters, Madurai.
2. அனுதினமும் கிறிஸ்துவுடன் புத்தகத்தில் தினசரி சிறப்பான தியானங்களை மிக நேர்த்தியாக தயாரித்து வழங்கிவரும் ஊழியர்கள் அனைவருக்கும் எங்கள் குடும்பத்தின் சார்பாக வாழ்த்துக்களைக் கூறிக்கொள்கிறோம். தியானபுத்தகத்தில் பிரசுரமாகும் வேதவாசிப்பு அட்டவணைப்படி கடந்த ஆண்டிலும் வேதாகமத்தை முழுவதுமாக வாசித்து முடிக்க அருள்நாதர் உதவி செய்தார் என்பதை மனம் நிறைந்த சந்தோஷத்தோடு, தேவனுக்கு கோடானகோடி ஸ்தோத்திரங்களை ஏறெடுத்துத் தெரிவிக்கிறேன். சத்தியவசன ஊழியங்கள் மேன்மேலும் வளர்ந்தோங்க சிறப்படைய ஆண்டவர் அருள்புரிய ஜெபிக்கிறேன்.
Mrs.Chandrabai paul, Chennai.
3. I admire and appreciate your soul winning Ministry. When I meditate on your Message contained in the bimonthly devotional Anuthinamum Christhuvudan in the early morning with the help of the Holy Bible. My spirit is filled with delight and enthusiasm.
Mr.Vincent, Srivilliputhur.
4. The book Anuthinamum Christhuvudan reached my hand unexpectedly by God’s Grace. I am reading the messages everyday in my prayer-time. It is very useful for me and my spiritual life. God bless you.
Mr. Pitchamani, Tuticorin.
5. சத்தியவசன ஊழியர்களுக்கு எனது அன்பின் வாழ்த்துக்கள். தங்களது ஒளிபரப்பை தவறாமல் கேட்டு பயன்பெற்று பிறருக்கும் பகிர்ந்தளிக்கும் வகையில் உள்ளது. அதற்காக தேவனைத் துதிக்கிறேன்.
Mr.M.K.Paul vasantharaj, Vellore.
6. அனுதினமும் கிறிஸ்துவுடன் வேதவாசிப்பு அட்டவணைப்படி பரிசுத்த வேதாகமத்தை படித்து வருகிறேன். அந்தந்த மாதத்தின் வேதபகுதிகளை அந்தநாட்களில் வாசித்து முடித்துவருகிற விபரத்தையும் உங்களுக்குத் தெரியப்படுத்தி வருகிறேன்.
Mr.A.John Raj, Pallapallam.
7. அனுதினமும் கிறிஸ்துவுடன் புத்தகத்தை தவறாமல் படித்து வருகிறோம். மிகவும் ஆசீர்வாதமாகவும், எழுப்புதலாகவும் இருக்கிறது. பல சூழ்நிலைகளின் மத்தியிலும் விழிப்படையச் செய்கிறதாய் இருக்கிறது. விசுவாசப் பாதையில் நாங்கள் நிலைநிற்க எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.
Mrs.M.Samuel, Nellikuppam.