ஜெபக்குறிப்பு: மார்ச் 30 வியாழன்
“என் கிருபை உனக்குப் போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும்” (2கொரி.12:9) என்ற வாக்குப்போலவே சத்தியவசன ஊழியர்களை கர்த்தர் பலப்படுத்தி தமது கிருபையால் தாங்கி நடத்தவும், அவர்களது தேவைகளைச் சந்தித்திடவும் பாரத்துடன் ஜெபிப்போம்.
பொறுமையோடு சகித்தல்
தியானம்: மார்ச் 30 வியாழன்; வேத வாசிப்பு: ஆதியாகமம் 45:1-11
“என்னை இவ்விடத்திற்கு வரும்படி விற்றுப்போட்டதினால், நீங்கள் சஞ்சலப்படவேண்டாம். …ஜீவரட்சணை செய்யும் படிக்குத் தேவன் என்னை உங்களுக்கு முன்னே அனுப்பினார்” (ஆதி. 45:5).
வாழ்க்கையில் பலவிதமான துன்பங்களை நாம் எதிர்நோக்கியிருக்கலாம். ஆனால் இப்போது அவற்றைத் திரும்பிப்பார்த்தால், அந்தத் துன்பங்களுக் கூடாகவும் நாம் பெற்ற அனுபவங்களையும் நன்மைகளையும் கண்டுகொள்ளக் கூடியதாகவே இருக்கும். எனினும் துன்பங்களுக்கூடாகச் செல்லுகையில் நாம் எப்படி அவற்றை எதிர்கொள்கிறோம் என்பதிலேதான் நமது வெற்றி தங்கியிருக்கிறது. பொறுமையோடு சகித்திருக்கிறோமா? அல்லது, நமது துன்பங்களுக்குக் காரணமானவர்களை நொந்துகொண்டோமா?
யோசேப்பு தனது வாழ்வில் எத்தனையோ துன்பங்களை எதிர்கொண்டார். ஆனால் முடிவில் அவை யாவுமே அவருக்கு ஆசீர்வாதமாய் அமைந்ததே தவிர, எதுவும் கேடாய்ப் போகவில்லை. அவரது துன்பங்களுக்குப் பலர் காரணமாய் இருந்தனர். அதிலும் முக்கியமாக அவரது சகோதரர் காரணமாய் இருந்தனர். யோசேப்பு தனது துன்பங்களுக்குக் காரணமாயிருந்த தனது சகோதரரை நொந்துகொள்ளாமல், அவர்கள் தன்னை எகிப்துக்கு வரும்படி விற்றுப்போட்டாலும், ஜீவரட்சணை செய்யும்படிக்கே தேவன் தன்னை அந்த இடத்திற்குக் கொண்டுவந்தார் என்று, தனது துன்பங்களைப் பெரிதுபடுத்தாமல், அதில் நேர்ந்த நன்மைகளை நினைத்து தேவனை மகிமைப்படுத்தினார்.
இயேசுவானவரும் தமது சிலுவைப் பாடுகளை பொறுமையோடு சகித்துக்கொண்டார். தனது பாடுகள் பிதாவின் சித்தமே என்பதையும், அதற்குப் பின்னால் மனுக்குலத்தின் மீட்பு அடங்கியுள்ளதென்பதையும் அறிந்தவராய் அனைத்தையும் பொறுமையோடு சகித்துக்கொண்டார். சிலுவையில் தன்னைக் காயப்படுத்தி துன்பப்படுத்தினவர்களுக்காகவும் ஜெபம் பண்ணினார். சந்தோஷமான நேரத்தை எதிர்கொள்வதைப் பார்க்கிலும், துன்பமான நேரத்தை எப்படி எதிர் கொள்ளுகிறோம் என்பதில்தான் நாம் தேவன்மீது வைத்திருக்கிற நம்பிக்கையின் உறுதி வெளிப்படுகிறது. இன்று நமது காரியம் என்ன? துன்ப சூழ்நிலைகளிலும் நாம் நிதானமாக நடக்கிறோமா? அல்லது நமது துன்பங்களுக்குக் காரணமானவர்களைக் கண்டறிந்து அவர்களை நாம் துன்பப்படுத்துகிறோமா? தேவன்மேல் பாரத்தைப் போட்டுவிட்டு, அவர் தரும் பெலனோடுகூட பிரச்சனைகளைப் பொறுமையோடு சகித்து, அதனை எதிர்கொண்டு ஜெயம் பெற தேவன் கிருபை செய்வாராக. துன்பங்களைக் கண்டு துவளக் கூடாது. நமது ஆண்டவர் நமக்காகத் துன்பப்பட்டாரே!
“என் சிநேகத்துக்குப் பதிலாக என்னை விரோதிக்கிறார்கள். நானோ ஜெபம் பண்ணிக்கொண்டிருக்கிறேன்” (சங்கீதம் 109:4).
ஜெபம்: ஆண்டவரே, துன்பமான நேரத்தில் உம்மில் சார்ந்து நீர் தந்தருளும் பெலத்தோடு எதிர்கொண்டு ஜெயமெடுக்க உமது கிருபை தாரும். ஆமென்.