ஜெபக்குறிப்பு: மார்ச் 1 புதன்
“அப்படியே நாங்கள் உபவாசம்பண்ணி, எங்கள் தேவனிடத்திலே அதைத்தேடினோம்; எங்கள் விண்ணப்பத்தைக் கேட்டருளினார்” (எஸ்றா 8:23) இவ்வாக்குப்படி இந்த லெந்து நாட்களில் கர்த்தரைத் தேடுகிறதற்கு ஒருமுகப்படுவதற்கு நம்மை அர்ப்பணித்து ஜெபிப்போம்.
லெந்துகாலம்
தியானம்: மார்ச் 1 புதன்; வேத வாசிப்பு: யோவேல் 2:11-18
“தேவனுக்கேற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவிதான். தேவனே, நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தை நீர் புறக்கணியீர்” (சங்கீதம் 51:17).
திருச்சபை நாட்காட்டியில் சாம்பல் புதன் வந்தவுடன் லெந்துகாலமும், உபவாசமும் நினைவுக்கு வந்துவிடும். இந்நாட்களில் உபவாசம்பண்ணி முடிந்ததும், ஏதோ பெரிதாகச் சாதித்துவிட்டதாக ஒரு எண்ணம் எனக்குள் எழுந்தது. ஆனால், தான் அந்த நாற்பது நாட்களும் உபவாசமிருந்து, அந்த உணவுக்கான பணத்தைச் சேகரித்து, கஷ்டப்பட்ட ஒரு குடும்பத்துக்கு உதவியதாக ஒருவர் கூறினார். அதைக் கேட்டபோது, எனக்கு தற்பெருமையையும், பக்தி வைராக்கியத்தையும் உண்டுபண்ணிய அதே லெந்து காலங்கள், இன்னுமொருவர் மூலமாக ஒரு குடும்பத்தின் வறுமையைப் போக்கியதை எண்ணி நான் வியப்படைந்த நாட்களும் உண்டு. கோடையும், மாரியும், வசந்தமும், இலையுதிர் காலங்களும் மாறி மாறி வருவதுபோல, கிறிஸ்தவர்களாகிய நமது வாழ்விலும் லெந்து காலங்கள் வந்து போகின்றது. கால மாற்றங்கள், சூழலில் பல பயனுள்ள மாற்றங்களை ஏற்படுத்தும்போது, லெந்து காலம் நமது வாழ்வில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாமல் கடந்துபோவது எப்படி?
யோவேல் தீர்க்கதரிசி, கர்த்தருடைய நாளைக் குறிப்பிட்டு, மனந்திரும் புதலுக்கு மக்களை அழைத்தபோது, “உபவாசத்தோடும், அழுகையோடும், புலம்பலோடும் உங்கள் முழு இருதயத்தோடும் என்னிடத்தில் திரும்புங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்” (யோவேல் 2:12) என்றார். மாத்திரமல்ல, “நீங்கள் உங்கள் வஸ்திரங்களையல்ல, உங்கள் இருதயங்களைக் கிழித்து, உங்கள் தேவனாகிய கர்த்தர் இடத்தில் திரும்புங்கள்” என்கிறார். பழைய ஏற்பாட்டுக் காலத்தில் மனந்திரும்புதலின் அடையாளமாக தங்கள் வஸ்திரங்களைக் கிழிப்பது வழக்கமாயிருந்தது. ஆனால் அது போதாது; இருதயக் கடினம், பெருமை, அகங்காரம், போன்ற இருதயத்திலுள்ள அழுக்குகள் நீங்க இருதயத்தைக் கிழித்து மனந்திரும்புங்கள் என்று அழைக்கிறார் யோவேல்.
இந்த லெந்துநாட்கள் நமது நடைமுறை வாழ்வில் மாத்திரமல்ல, நமது இருதயத்திலும் சிந்தனையிலும் மாற்றத்தைக் கொண்டுவரவேண்டும். ஆனால் இன்று, எல்லா அசுத்தமும், காமவிகாரமும், வன்கண்ணும் இருதயத்தில் ஒளிந்திருக்க, நாற்பது நாட்கள் உபவாசித்தோம் என்று பெருமைபேசுவதில் பயன் இல்லை. இந்த லெந்துநாட்களாவது நமது இருதயத்திலும், நமது சிந்தனை களிலும் மாற்றத்தைக் கொண்டுவரும்படிக்கு வேண்டுதல் செய்வோம். இருதயத்தில் ஏற்படும் மாற்றத்திலேயே தேவன் பிரியப்படுகிறார். அவரைப் பிரியப்படுத்தும்படி நம்மை மாற்றிக்கொள்ள நாம் ஆயத்தமா? “தேவனே, சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும். நிலைவரமான ஆவியை என் உள்ளத்திலே புதுப்பியும்” (சங்கீதம் 51:10).
ஜெபம்: ஆண்டவரே இந்த லெந்துகால தியானங்கள் எங்களது இருதயத்தில் மாற்றத்தைக் கொண்டுவரவேண்டுமென்று தாழ்மையோடு ஜெபிக்கிறோம். பிதாவே ஆமென்.
அர்த்தமுள்ள அர்ப்பணிப்பு
அதிகாலை வேளையில்… (மார்ச்-ஏப்ரல் 2017)
– Dr.உட்ரோ குரோல்
“மோசே கர்த்தருடைய வார்த்தைகளையெல்லாம் எழுதிவைத்து, அதிகாலமே எழுந்து, மலையின் அடியில் ஒரு பலிபீடத்தைக் கட்டி, இஸ்ரவேலுடைய பன்னிரண்டு கோத்திரங்களுடைய இலக்கத்தின்படியே பன்னிரண்டு தூண்களை நிறுத்தினான்” (யாத்.24:4).
தேவனிடம் நம்மை அர்ப்பணிப்பதற்கு தீமையிலிருந்து விலகுதல், தேவனிடம் உண்மையான பக்தி கொள்ளுதல், தொடர்ச்சியான பரிசுத்தத்தை நாடுதல் ஆகியன அவசியம். தம்முடைய பிள்ளைகள் யாவரும் தம்முடைய ஊழியத்துக்கு முழு அர்ப்பணம் செய்யவேண்டும் என்று அவர் விரும்பினாலும் அது “அர்த்தமுள்ளதாய்” இருக்கவேண்டும் (ரோம. 12:1) என்று வாஞ்சிக்கிறார். உணர்ச்சிகளால் உந்தப்பட்டோ, தற்காலிக ஆர்வத்தினாலோ செய்யப்படும் அர்ப்பணிப்பு நம்பத்தகுந்ததல்ல. ஒரு விசுவாசி மிகவும் கவனத்துடனும், ஜெபத்துடனும் சீடத்து வத்தின் ஆபத்துக்களை உணர்ந்து, தனது வாழ்வை ஆண்டவரின் ஊழியத்துக்கு அர்ப்பணிக்க வேண்டும்.
மோசேக்கு சீனாய் மலையில் தேவன் நியாயப்பிரமாணங்களைக் கொடுத்த பின்னர் அதனை இஸ்ரவேலருடன் உறுதிப்பாடு செய்ய தேவன் விரும்பினார். எனவே மோசே மீண்டும் அப்பரிசுத்த மலைக்கு ஆரோன், நாதாப், அபியூ மற்றும் இஸ்ரவேலின் மூப்பர்கள் எழுபது பேருடன் ஏறிச் சென்றார். அவர்கள் கீழே இறங்கி வந்தபின்னர் மோசே இஸ்ரவேலின் ஜனங்களுக்கு தேவனுடைய உடன்படிக்கையின் கட்டளைகள் யாவையும் விவரித்துச் சொன்னார். அப்பொழுது ஜனங்கள் எல்லாரும் ஏகசத்தமாய்: கர்த்தர் அருளின எல்லா வார்த்தைகளின்படியும் செய்வோம் என்று பிரதியுத்தரம் சொன்னார்கள். ஆனால் மோசேயோ தேவனுடைய நியாயங்களுக்கு உடனடியாகத் தங்களை அர்ப்பணிக்கமாட்டார்கள் என்பதை அறிந்துகொண்டார். எனவே அவர் அந்த அர்ப்பணிப்பை அர்த்தமுள்ளதாக்க திட்டமிட்டார்.
முதலாவதாக, அந்த அர்ப்பணிப்பு நிகழ்வை வேண்டுமென்றே நீட்டித்தார். உடனடியாக ஜனங்கள் அந்த உடன்படிக்கையை உறுதி செய்வதற்கு அனுமதிக்கவில்லை. மாறாக அந்த தேவமனிதர் கர்த்தருடைய வார்த்தைகளையெல்லாம் எழுதி வைத்துவிட்டு உறங்கச்சென்றார். அவர் அதிகாலையில் எழும்பி (யாத். 24:4), இந்த பலிபீடம் பலிசெலுத்துவதற்காகக் கட்டப்பட்டது. பலியில்லாமல் எந்த உடன்படிக்கையும் உறுதி செய்யப்பட மாட்டாது. உடன்பாட்டை உறுதி செய்வதற்கு முன்பாக மக்களை ஒருநாள் காத்திருக்க வைத்தார். இதனால் இஸ்ரவேலர்கள் உணர்ச்சிகளால் தாக்கப்படாது அந்த உடன்படிக்கையை ஏற்றுக்கொள்ள முடிந்தது.
இரண்டாவதாக, மக்கள் தங்களை அர்ப்பணிக்கவும் உடன்படிக்கையை உறுதிசெய்யவும் சில ஆழமான சடங்குகளைச் செய்தார். லேவியர்களின் பணி ஒதுக்கப்படாததால் அவர் இஸ்ரவேல் புத்திரர்களின் வாலிபர்களைத் தெரிந்தெடுத்து, (இவர்கள் அந்தந்த வம்சத்து முதற்பேறானவர்களாயிருக்கலாம்) அவர்கள் சர்வாங்க தகனபலிகளைச் செலுத்தி, கர்த்தருக்குச் சமாதானபலிகளாகக் காளைகளைப் பலியிட்டார்கள். இது இஸ்ரவேலர்கள் எளிதில் மறக்க இயலாததாயும் பயபக்தியை ஏற்படுத்தக் கூடியதாகவும் அமைந்தது.
மூன்றாவதாக, இந்த உடன்படிக்கையின் வார்த்தைகள் மக்களுக்குப் புரிய வேண்டும் என்பதற்காக அதிக பிரயத்தனம் எடுக்கப்பட்டது. தங்களுடைய அர்ப்பணிப்பின் காரியத்தையும் அதன் பொருளையும் அவர்கள் அறிந்துகொள்ளவில்லை எனில் அந்த அர்ப்பணிப்பு அர்த்த மற்றதாகிவிடும். மலையிலிருந்து இறங்கிய மோசே கர்த்தருடைய வார்த்தையை மக்களுக்கு அறிவித்ததுமன்றி, மறுநாள் ஜனங்கள் அனைவரும் கேட்குமாறு உடன்படிக்கை புஸ்தகத்தை வாசித்தார். மக்களுடைய அர்ப்பணிப்பு பூரணமாய் அமையவேண்டும் என்பதில் மோசே மிகக் கவனமாய் இருந்தார்.
இறுதியாக மோசே பலியின் இரத்தத்தை எடுத்து அதனை ஜனங்களின்மேல் தெளித்து “இந்த வார்த்தைகள் யாவையுங்குறித்து கர்த்தர் உங்களோடே பண்ணின உடன்படிக்கையின் இரத்தம் இதுவே” என்றான். இந்த உடன்படிக்கையை முத்திரை போட்டது இரத்தமே. இது உடன்படிக்கையின் அடையாளமாய் அமைந்தது. தாங்கள் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் என்பதையும் அவருக்கு அர்ப்பணிக்கப் பட்டவர்கள் என்பதையும் இச்செயல் மக்களின் மனதில் அழுத்தமாகப் பதிக்க உதவியது.
அர்ப்பணிப்புள்ள வாழ்வு வாழ வேண்டுமானால் அது அர்த்தமுள்ளதாயும், அறிவுள்ளதாகவும் சிந்தித்து எடுக்கப்பட்டதாகவும் இருக்கவேண்டும். நம்மை தேவனுக்கும் அவரது ஊழியத்துக்கும் அர்ப்பணிக்க எடுக்கப்படும் தீர்மானம் உணர்ச்சியின் அடிப்படையில் அமையாமல் அறிவின் அடிப்படையில் அமையவேண்டும். ஒரு விசுவாசி தனது வாழ்வை தேவனுக்கு அர்ப்பணிப்பது அவசியமானது. ஆனால் அதை அலட்சியமாக கருதக்கூடாது. இன்று உங்களுடைய வாழ்வை தேவனுடைய ஊழியத்துக்கென்று ஒப்புக் கொடுப்பதற்கு முன் அதனால் ஏற்படும் இழப்புகளை எண்ணிப் பாருங்கள்.
ஏனெனில் ‘கலப்பையின்மேல் தன் கையை வைத்துப் பின்னிட்டுப் பார்க்கிற எவனும் தேவனுடைய ராஜ்யத்துக்குத் தகுதியுள்ளவன் அல்ல’ (லூக்கா 9:62).
அதிகாலைப் பாடல்:
அனைத்தும் கிறிஸ்துவுக்கே
எந்தன் அனைத்தும் அர்ப்பணமே
என் முழுதன்மைகள் ஆவல்களும்
அனைத்தும் கிறிஸ்துவுக்கே.
மொழியாக்கம்: Sis.அகஸ்டா மங்களதுரை
அனைத்துலக மொழிபெயர்ப்புப் பணிகள்
புனித வேதாகமத்தின் வரலாறு (மார்ச்-ஏப்ரல் 2017)
அத்தியாயம்-10
சகோ.M.S.வசந்தகுமார்
தமிழ் வேதாகமத்தின் வரலாறு
(3) ரேனியஸ் மொழிபெயர்ப்பு
தமிழ் மொழியில் சிறப்பான முறையில் பிரசங்கிக்கக்கூடிய ஆற்றலைப் பெற்றிருந்த ரேனியஸ், பல தமிழ் நூல்களையும் எழுதியுள்ளார். தமிழ் மொழியில் முதன் முதலில் பூமி சாஸ்திரப் பாடப்புத்தகம் இவராலேயே எழுதப்பட்டது. இவர் தமிழ் இலக்கண நூல் ஒன்றையும் எழுதியுள்ளார். மேலும், வசனத்தமிழை முதன் முதலாகச் சந்தி பிரித்து எளிமையாக்கியவரும் இவரேயாவார். சுவிசேஷம் அறிவிப்பதிலும், பாடசாலைகளையும் சபைகளையும் ஸ்தாபிக்கும் முயற்சியிலும் இவரது பணி மிகவும் பாராட்டப்பட்டுள்ளது. இவர் திருநெல்வேலியில் 300 சபைகளை ஸ்தா பித்துள்ளார். இவர் பெப்ரீஷியசின் மொழி பெயர்ப்பின் மொழி நடையைத் திருத்தினார். இவரால் திருத்தப்பட்ட சுவிசேஷங்களும் அப்போஸ் தலர் நடபடிகளும் 1827இலும், புதிய ஏற்பாடு முழுவதும் 1833இலும் வெளியிடப்பட்டது. 1840இல் இவரது புதிய ஏற்பாடும் பெப்ரீஷியசின் பழைய ஏற்பாடும் ஒன்றாக வெளியிடப்பட்டது.
பெப்ரீஷியசைப் போலவே ரேனியசும் கடவுளுக்குப் பராபரன் எனும் பதத்தை உபயோகித்துள்ள போதிலும், அவர் சில இடங்களில், ‘தேவன்’ எனும் பதத்தையும் குறிப்பிட்டுள்ளார்.
பெப்ரீஷியசின் மொழி பெயர்ப்பிலிருந்த சில இலக்கணப் பிழைகளையும் ரேனியஸ் திருத்தியுள்ளார். குறிப்பாக, அஃறிணைப் பன்மை எழுவாய்க்கு, ஒருமைப் பயனிலையே பெப்ரீஷியசின் மொழிபெயர்ப்பில் உபயோகிக்கப்பட்டிருந்தது. இதற்குக் காரணம், சாதாரண பேச்சு வழக்கில் இவ்விதம் பன்மை எழுவாய், ஒருமைப் பயனிலையுடன் உபயோகிக்கப் பட்டமையேயாகும். உதாரணமாக, விதைப்பவனுடைய உவமையில் விதைகள் விழுந்தது, பறவைகள் பட்சித்தது, அவை முளைத்தது, என்றே பெப்ரீஷியசின் மொழிபெயர்ப்பில் எழுதப்பட்டிருந்தது. ரேனியஸ் இவ்வாக்கியத்தை இலக்கணமுறைப்படி, விதைகள் விழுந்தன, பறவைகள் பட்சித்தன, அவை முளைத்தன என திருத்தினார். பெப்ரீஷியசின் மொழிபெயர்ப்பில் இதைப்போன்ற பல திருத்தங்கள் செய்யப்பட்டன.
பெப்ரீஷியசின் மொழிபெயர்ப்பிலிருந்த சில வார்த்தைகளையும் ரேனியஸ் மாற்றியுள்ளார். உதாரணமாக, இந்த லோகம் என்பதை இவ்வுலகம் என்றும், வெளிச்சம் என்பதை ஒளி என்றும், வானராச்சியம் என்பதை பரலோகராச்சியம் என்றும், பாஷா என்பதை பஸ்கா என்றும், சிநேகம் என்பதை அன்பு என்றும் ரேனியஸ் மாற்றினார். மேலும் 1கொரிந்தியர்13 இல் ஓசைதரும் கிண்கிணி என்றிருந்ததை ஓசையிடுகிற கைத்தாளம் என்றும், அப்போஸ்தலர் 1:3இல் உயிரோடிருக்கிறவராகப் பிரசன்னப்படுத்தினார் என்பதை, உயிரோடிருக்கிறவராகக் காண்பித்தார் என்றும், 2தீமோத்தேயு 4:7இல், விசுவாசத்தைக் கைக்கொண்டேன் என்றிருந்ததை விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன் என்றும், எபிரேயர் 12:1 இல், சாட்சிகளின் இத்தனை பெரிய மேகம் என்றிருந்ததை மேகம் போல் இத்தனை திரளான சாட்சிகள் என்றும் திருத்தினார். இதிலிருந்து ரேனியசின் திருத்தங்கள் எத்தகையவை என்பதை அறியக்கூடியதாயுள்ளது.
இதைப்போன்று, பெப்ரீஷியசின் மொழி நடையில் ரேனியஸ் பல திருத்தங்களைக் கொண்டுவந்துள்ளார். இவர் பெப்ரீஷியசின் பழைய ஏற்பாட்டில் ஆதியாகமம் முதல் நியாயாதிபதிகள் வரையிலான புத்தகங்களையும், சங்கீதங்கள், ஏசாயா, தானியேல் எனும் புத்தகங்களையும் திருத்தியுள்ளார். ரேனியஸ் மொழிபெயர்ப்பு இலக்கணத்தில் ஆர்வமிக்கவர்களாய் இருந்தவர்களினாலேயே பாராட்டப்பட்டது. பெரும்பாலான கிறிஸ்தவர்கள் இவருடைய மொழிபெயர்ப்பை ஏற்றுக்கொள்ளவில்லை.
(4) பேர்சிவெல் மொழிபெயர்ப்பு
ரேனியசினுடைய மொழி பெயர்ப்பு வெளிவந்த பின்னர், சில சபைகள் அம்மொழிபெயர்ப்பின் வசனநடை சிறந்ததெனக் கருதி அதை உபயோகிக்கத் தொடங்கினாலும் பெரும்பாலான சபைகள், அது மூல மொழியை விட்டு விலகிச்சென்றுள்ளது எனக் கூறி அம்மொழி பெயர்ப்பை ஏற்றுக் கொள்ளவில்லை. அச்சபைகள், பெப்ரீஷியசின் மொழி பெயர்ப்பையே தொடர்ந்தும் உபயோகித்துவந்த போதிலும், அதன் வசன நடை அவர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால், இவ்விரு மொழிபெயர்ப்புகளிலும் உள்ள குறைகள் நீக்கப்பட்டதாகவும், அதேசமயம் இரண்டினதும் சிறப்பம்சங்கள் ஒருங்கே காணப்படுவதுமான ஒரு புதிய மொழிபெயர்ப்பு தயாரிக்கப்பட வேண்டியதன் அவசியம் அனைத்து சபையினராலும் உணரப்பட்டது. அச் சமயம், இத்தகைய ஒரு மொழி பெயர்ப்பைத் தாம் செய்து தருவதாக வட இலங்கையிலுள்ள யாழ்ப்பாணத்தில் பணியாற்றிய மிஷனரிகள் சென்னை வேதாகமச் சங்கத்துக்குத் தெரிவித்தனர். இதனால் யாழ்ப்பாணத்தில் வேதாகம மொழிபெயர்ப்புப் பணிகளைச் செய்வதற்கு ஒரு குழு உருவாக்கப்பட்டது. பீட்டர் பேர்சிவெல் எனும் மிஷனரி இக்குழுவுக்குத் தலைவராக நியமிக்கப்பட்டார்.
பீட்டர் பேர்சிவெல் மெதடிஸ்ட் மிஷனைச் சேர்ந்தவராவார். 1826 இல் யாழ்ப்பாணத்துக்கு வந்த இவர் தயாரித்த ஆங்கில தமிழ் அகராதி மிகவும் பிரபல்யமானது. யாழ்ப்பாண மொழிபெயர்ப்புக் குழுவில் மெதடிஸ்ட் மற்றும் அமெரிக்கன் மிஷன்களைச் சேர்ந்தவர்கள் அங்கம் வகித்தனர். இவர்களுக்கு வேதாகம மொழிபெயர்ப்பில் உதவி செய்தவர் தமிழ்ப்புலவர் ஆறுமுகநாவலராவார்.
(தொடரும்)
வாசகர்கள் பேசுகிறார்கள்
(மார்ச்-ஏப்ரல் 2017)
01. சத்தியவசன டிவி நிகழ்ச்சிகளுக்காகவும் உங்கள் ஊழியங்களுக்காகவும் சரீர பெலனுக்காகவும் தினமும் ஜெபிக்கிறோம். உங்கள் வேதவசன விளக்கம்யாவும் என் வாழ்வில் மாற்றத்தையும் ஆசீர்வாதத்தையும் தந்தது. தேவனுக்கே கோடி நன்றி!
Mr.S.Ravichandran, Ambur.
02. கடந்தவருடம் முழுவதும் கர்த்தர் அதிசயமாக நடத்தி வந்தார். டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட புயலில் மிகவும் அதிகமான காற்றடித்தபோதும் எங்கள் மாடியில் போட்ட ஷீட் அப்படியே இருந்தது. ஷீட் போய்விடுமளவுக்கு காற்று என்றாலும் கர்த்தர் காத்துக்கொண்டார். கடந்த வருடத்தில் வேதாகமத்தை படித்து முடிக்க கர்த்தர் கிருபை செய்தார்.
Mrs. Sarojini , Tiruvellore.
03. தங்களின் இதழ்களான அனுதினமும் கிறிஸ்துவுடன் மற்றும் சத்திய வசனம் மிகவும் பிரயோஜனமாக உள்ளன. 2016ஆம் ஆண்டு முழுவதும் கண்மணி போன்று காத்த கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
Sis.Nagavalli, Salem.
04. நாங்கள் அதிக நாட்களாக சத்தியவசன நிகழ்ச்சிகளைக் கேட்டு ஆசீர்வாதம் பெற்றுவருகிறோம். அது எங்கள் ஆவிக்குரிய வளர்ச்சிக்கு அதிக பயனுள்ளதாக இருக்கிறது.
Mrs.Prema George,Chennai.
05. கடந்த 3 ஆண்டுகளாக எங்களது சுகத்திற்காக ஜெபிக்கும்படி கடிதம் எழுதினோம். யாவருடைய ஜெபத்தினாலும் 10 ஆண்டுகளாக இருந்த சர்க்கரைநோய் சற்று குறைந்துள்ளது. எனது மனைவியின் சுகவீனத்திற்காகவும் ஜெபியுங்கள். சுகத்தைக் கொடுத்த ஆண்டவருக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் செலுத்துகிறேன்.
Mr.Vijaya Kumar, Coimbatore.
06. அனுதினமும் கிறிஸ்துவுடன் முதல்பக்கத்தில் அதிகாலை வேளையில் “ஜெபமும் சமாதானமும்” என்ற தலைப்பில் Dr.உட்ரோகுரோல் ஐயா எழுதியதைப் படித்தேன். ‘நேற்றைய துன்பங்களால் இரவு முழுவதும் தூங்காமல் இருந்தீர்களானால் அதிகாலை வேளையில் அவற்றை தேவனிடம் ஒப்படையுங்கள். அவர் உங்கள் கவலைகளை மாற்றி தம்முடைய சமாதானத்தால் நிரப்புவார்’ என்று எழுதியதைப் படித்ததும் தேவன் என்னோடு பேசினார் என்பதை மட்டும் அறிந்து அழுதுவிட்டேன். என் தேவன் என்னோடு என் நிலை அறிந்து பேசினார் என்பதை சாட்சியாக எழுதுகிறேன்.
Mrs.Sundariammal, Madurai.
07. அனுதினமும் கிறிஸ்துவுடன் ஒரு மிகப் பெரிய ஆசீர்வாதப் பெட்டகம். அனுதின ஆசீர்வாதம், மன்னா, ஆறுதல், நம்பிக்கை, விசுவாசம் மொத்தத்தில் அது எனக்கு ஆண்டவர் கொடுத்த மாபெரும் கிருபை. சகோதரி சாந்தி பொன்னு முதற்கொண்டு தியானங்கள் எழுதும் அனைவரையும் ஆண்டவர் அதிகமதிகமாக ஆசீர்வதிப்பாராக. யாவருக்காகவும் ஜெபிக்கிறேன்.
Mrs.Nirmala Martin, Bangalore.