ஜெபக்குறிப்பு: பிப்ரவரி 28 செவ்வாய்
“..அவர் வருகையில் அவருக்குமுன்பாக வெட்கப்பட்டுப் போகாமல் தைரியமுள்ளவர்களாயிருக்கும்படிக்கு அவரில் நிலைத்திருங்கள்” (1யோவா.2:28) என்ற எச்சரிப்பின்படியே தொடர்ந்து கர்த்தரில் நிலைத்திருந்து அவரது வருகைக்கு எப்பொழுதும் ஆயத்தமுள்ளவர்களாய் காணப்பட நம்மை அர்ப்பணித்து ஜெபிப்போம்.
நித்தியத்திற்குரியவர்கள்
தியானம்: பிப்ரவரி 28 செவ்வாய்; வேத வாசிப்பு: 2கொரிந்தியர் 5:1-9
“…நாம் சரீரத்தில் குடியிருந்தாலும் குடியிராமற்போனாலும் அவருக்குப் பிரியமானவர்களாயிருக்க நாடுகிறோம்” (2கொரி 5:9).
தேவன் மனிதனைப் படைத்தபோது, தம்மைப்போல பரிசுத்த மானவனாகவே அவனைப் படைத்தார். அவனுடைய சரீரம் பரிசுத்தமாகவே இருந்தது. ஆனால், அவன் பாவத்தில் விழுந்தபோது மனுக்குலமே மாசடைந்தது; மனிதனின் பரிசுத்த சரீரமும் மாசடைந்தது. நாம் தேவ மகிமையை முற்றிலுமாக இழந்தோம். கர்த்தருக்குள் நாம் கொண்டிருந்த சுதந்திரமும் மாசடைந்தது. இதன் பலனாக வாழ்வில் நம்பிக்கை இல்லாமற்போனது. இனி என்னவாகும் என்ற அங்கலாய்ப்பு உண்டானது. தேவபிரசன்னம் விலகியது. தேவனோடு கொண்டிருந்த உறவு உடைந்தது. அதற்காக நல்ல தேவன் நம்மைப் பாவத்திற்கென்றே விட்டுவிடவில்லை. தாமே நம்மைத் தேடி வந்தார். நம்மை மீட்பதற்காகவே கிறிஸ்து தமது ஜீவனைக் கொடுத்தார். இதை நாம் அறிந்து விசுவாசித்திருக்கிறோம். ஆகவே இப்போது நமக்கொரு நம்பிக்கையுண்டு. இந்தப் பாவ சரீரம் இந்த மண்ணோடு மண்ணாக அற்றுப்போனாலும், நமக்கொரு புதிய சரீரம் உண்டு; புதிய வாழ்வு உண்டு என்பதை கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் நமக்கு உறுதிப்படுத்தியுள்ளது.
பவுல் சாவிற்குப் பயப்படவில்லை. இந்த சரீரத்தைப் பூமிக்குரிய கூடாரம் என்றும், நமக்குக் கிடைக்கவிருக்கும் உயிர்த்தெழுதலின் புதிய சரீரத்தை, தேவனால் கட்டப்பட்ட வீடு என்றும், நமது நித்திய குடியிருப்பு என்றும் திடமாக எழுதுகிறார். இந்த சரீரம் நமது பாடுகளுக்குக் காரணமானாலும், நமது மரணத்தின்பின் நமக்கு ஒரு நித்திய சரீரமுண்டு என்றும், நித்திய வாழ்வுக்கு அது தகுதியானது என்றும் நமக்குத் திடமளிக்கிறார். இந்த உறுதியை நமக்கு அளிப்பவர் பரிசுத்த ஆவியானவர். ஆனாலும் நாம் இதுவரை கண்டிராத ஒரு புதிய காரியத்தைக் காணும் அங்கலாய்ப்பும், நமக்கு அருமையானவர்களை இழந்துபோன தவிப்பும் நமக்குள் உண்டாயிருக்கலாம். என்றாலும், பவுல் நமக்குக் கற்றுத்தந்த அந்த நம்பிக்கை நமக்குள் ஒரு உறுதியை உருவாக்குகிறது.
நாம் உண்மையாகவே கிறிஸ்துவை, அவருடைய மரணம் உயிர்த்தெழுதலை விசுவாசிக்கிறோமா? அப்படியானால் மரணம் என்பது நமது நித்திய வாழ்வுக்குமுன் வாசிக்கும் ஒரு ஆயத்த இசையைப் போன்றதாகவே இருக்கும். ஒரு இரகசியம் தெரியுமா? நமக்குள் நித்திய ராஜ்யமும் அதற்குரிய வாஞ்சையும் வைக்கப்பட்டிருக்கிறது. அது தேவனால் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த ஒரே நம்பிக்கையோடே நாம் வாழலாமே. தேவனுக்கு சேவை செய்யலாமே. நமது சுயவிருப்பங்களை எடுத்துப்போட்டு, மனந்திரும்பி, மாம்ச இச்சைகளை சிலுவையில் அறைந்துபோட்டு, உயிர்த்தெழுந்த கிறிஸ்துவுக்கு சாட்சியாக வாழலாமே. அப்போது நமது கிரியைகளும் மாற்றமடையும்.
ஜெபம்: நித்திய ஜீவனைத் தருவேன் என வாக்குப்பண்ணினவரே, நாங்கள் இப்பூமிக்குரியவர்கள் அல்ல; தேவனோடு என்றும் வாழ வேண்டியவர்கள் என்ற நினைவோடு உமக்குப் பிரியமாய் வாழ உதவிச்செய்யும். ஆமென்.
வாக்குத்தத்தம்: பிப்ரவரி 27 திங்கள்
கர்த்தராகிய நான் நிர்மூலமானவைகளைக் கட்டுகிறேன். (எசேக்கி.36:36)
வேதவாசிப்பு: எண்ணா.10,11 மாற்கு 6:32-56
ஜெபக்குறிப்பு: பிப்ரவரி 27 திங்கள்
“என் ஆத்துமாவே, தேவனையே நோக்கி அமர்ந்திரு; நான் நம்புகிறது அவராலே வரும்” (சங்.62:5) என்ற வாக்கிற்கிணங்க, பலவிதத் தேவைகளோடிருக்கிற நபர்களுக்கு நம்பிக்கையின் கன்மலையாகிய கர்த்தர் அவர்களது விசுவாசத்தை வர்த்திக்கப்பண்ண, தேவைகளைச் சந்திக்க வேண்டுதல் செய்வோம்.
எதற்கு முதலிடம்?
தியானம்: பிப்ரவரி 27 திங்கள்; வேத வாசிப்பு: யோவான் 1:35-41
“இயேசு: வந்து பாருங்கள் என்றார். அவர்கள் வந்து அவர் தங்கியிருந்த இடத்தைக் கண்டு, அன்றையத்தினம் அவரிடத்தில் தங்கினார்கள்…” (யோவா. 1:39).
நாம் யாருக்கு முதலிடம் கொடுக்கிறோமோ, அல்லது எதை அதிகமாக நேசிக்கிறோமோ, அவரால் அல்லது அதுவால் நாம் முற்றிலும் ஆட்கொள்ளப்பட்டு விடுகிறோம் என்பதுவே உண்மை. நமது வாழ்வில் நாம் யாருக்கு முதலிடம் கொடுத்திருக்கிறோம்? நாம் யாரை அதிகமாக நேசிக்கிறோம்? தகப்பனையா? தாயையா? மகனையா? மகளையா? தம்மிலும் அதிகமாய் இவற்றையெல்லாம் நேசிக்கிறவன் தமக்குப் பாத்திரன் அல்ல என்றார் இயேசு. “இயேசுவே, நான் உம்மைவிட யாரை எதை அதிகமாய் நேசிக்கிறேன் என்பதை எனக்கு உணர்த்தும்” என்று இன்றைய நாளில் நம்மை ஒப்புவிப்போம்! “என் இயேசுவை நான் நேசிக்கக்கூடாமல் பணம், பதவி, பாலியலுறவு போன்றவை என்னைத் தடுக்கின்றன” என்று ஒரு பக்தன் கூறுகிறான். உண்மையிலேயே இவை நமக்கெல்லாம் ஒரு போராட்டம் என்பதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். அதற்காக இவை யாவையும் வெறுத்து சன்னியாசியாகப் போகும்படி ஆண்டவர் நம்மிடம் எதிர்பார்க்கவில்லை. மாறாக, நாம் யாருக்கு முதலிடம் கொடுக்கிறோம் என்பதே காரியம்.
அன்று யோவான் ஸ்நானன், “இதோ தேவாட்டுக்குட்டி” என்று சொன்னதைக் கேட்ட இரண்டு சீஷர்கள், அங்கேயே அப்போதே இயேசுவைப் பின்பற்றிப் போனார்கள். இயேசுவுக்குத் தெரியாதா அவர்களுடைய மனதின் நினைவுகள்? தெரியும், ஆனாலும் என்ன தேடுகிறீர்கள் என்று கேட்டார். ஆம், நாம் எதற்காக இயேசுவைப் பின்பற்றுகிறோம் என்பதில் நமக்குத் தெளிவுவேண்டும். சுயலாபத்திற்காக பின்பற்றுவோமாகில் அது பின்பற்றுதலும் அல்ல; அவருக்குக் கொடுக்கும் முதலிடமும் அல்ல. ஆண்டவரோ, “நான் தங்கியிருக்கும் இடத்தை வந்து பாருங்கள்” என்றார். பார்த்தபின் முடிவெடுக்கட்டும் என ஆண்டவர் கேட்டாரோ என்று எண்ணத்தோன்றுகிறது. ஆனால் அவர்களோ உண்மையாகவே ஆண்டவரை நேசித்தனர். ஏனெனில் அன்றிலிருந்து அவர்கள் தமக்கென்று ஒரு சொந்த இடம் இல்லாத இயேசுவுடனே அன்றைய தினம் தங்கிவிட்டனர். அதற்குப் பின் அவர்கள் இயேசுவைவிட்டுப் போகவில்லை.
இயேசுவை வாழ்க்கையிலே எத்தனைபேர் தேடினார்கள்! அவரோடே எத்தனைபேர் போனார்கள்! எத்தனைபேர் அவரோடே தங்கினார்கள்! இவர்களில் நாம் யார்? இயேசுவை ஏற்றுக்கொண்டு அவரைப் பின்பற்றத் துணிந்த நாம், எதற்காக அவரைப் பின்பற்றுகிறோம் என்று சிந்தித்துப் பார்ப்போம். நமது சுயதேவைக்காகவா? அவரை பின்பற்றுவதற்கு நம்மையே கிரயமாகச் செலுத்த வேண்டி வந்தால் அதற்கும் நாம் ஆயத்தமா? அவர் நடந்த பாதையில் செல்ல நாம் ஆயத்தமா? ஆண்டவருக்கு முதலிடம் கொடுத்த எவரும் வெட்கப்பட்ட தில்லை. இன்று நான் என்ன தீர்மானம் எடுக்கப்போகிறேன்?
ஜெபம்: ஆண்டவரே, எங்கள் வாழ்வில் உமக்கு மாத்திரமே முதலிடம் கொடுத்து உண்மைத்துவத்துடன் உம்மைப் பின்பற்ற உமதருள் தாரும். ஆமென்.