ஜெபக்குறிப்பு: பிப்ரவரி 26 ஞாயிறு
“.. யாரை நான் அனுப்புவேன், யார் நமது காரியமாய்ப் போவான்” (ஏசா.6:8) என்ற ஆண்டவருடைய ஏக்கத்தை இந்நாட்களில் திருச்சபைகளில் நடத்தப்படும் மிஷனரி கூடுகைகள், நற்செய்திக் கூட்டங்கள் போன்றவை மூலமாக திருச்சபை மக்கள் உணர்ந்துகொள்ள இக்கூட்டங்கள் யாவும் ஆசீர்வாதமாக காணப்பட ஜெபிப்போம்.
பரிசுத்த உறவு
தியானம்: பிப்ரவரி 26 ஞாயிறு; வேத வாசிப்பு: ஆதியாகமம் 2:10-25
“தேவனாகிய கர்த்தர் தாம் மனுஷனில் எடுத்த விலா எலும்பை மனுஷியாக உருவாக்கி, அவளை மனுஷனிடத்தில் கொண்டு வந்தார்” (ஆதி 2:22).
தேவனுடைய படைப்புகளிலே மனிதன் விசேஷமானவன். அப்படி என்னதான் விசேஷம்! தேவன் தமது சாயலிலும் ரூபத்திலும் படைத்தது மனிதனையேதான். இன்னுமொரு காரியமும் உண்டு. எல்லா உயிரினங்களையும் பலுகிப் பெருகி பூமியை நிரப்பும்படி இருபாலாகவே படைத்தார். ஆனால், மனிதனைப் படைத்தபோது முதலில் ஆணைப் படைத்து அவனை ஏதேன் தோட்டத்திற்கு அழைத்து வந்து, அதைப் பண்படுத்தவும் காக்கவும் வைத்தார் என்று வாசிக்கிறோம்.
பின்னர் மனுஷன் தனிமையாய் இருப்பது நல்லதல்ல என்று தேவன் கண்டார். கண்டவர் மனிதனைப் படைத்ததுபோலவே ஒரு பிடி மண்ணை எடுத்து மனுஷியைப் படைத்திருக்கலாம். ஆனால் தேவன் அப்படிச் செய்யவில்லை. ‘ஏற்ற துணையை உண்டாக்குவேன்’ என்ற கர்த்தருடைய சிந்தனையிலிருந்து உருவானவள்தான் மனுஷி. மனுஷியை உருவாக்குமளவும் தேவனுடைய படைப்பு முடிவடையவில்லை. மனுஷியையும் உருவாக்கிய பின்னர்தான் தேவன் அது மிக நன்றாயிருக்கிறது என்று கண்டார். மாத்திரமல்ல, மனுஷனும் மனுஷியும் ஒரே மாம்சமாயிருப்பது தேவதிட்டம். ஆகவே, மனுஷனுடைய எலும்பிலும் தசையிலுமிருந்தே தேவன் மனுஷியை உருவாக்கினார்.
மிருகங்களையும் பறவைகளையும் படைத்து, பலுகிப் பெருகுங்கள் என்று சொன்னதுபோல தேவன் மனிதனை விட்டுவிடவில்லை. அவனை ஒரு பரிசுத்த உறவுக்குள் கொண்டுவந்தார் தேவன். ஏனைய உயிரினங்கள்போல மனுஷன் உறவுகொள்ள முடியாது. ஏனெனில், அவன் விசேஷமாகப் படைக்கப்பட்டவன். தேவனுடைய தன்மைகளை வாழ்விலும் உணர்விலும் வெளிப்படுத்த வேண்டியவன். இன்னும், மனுஷியைப் படைத்தவர் அவளை தாமே அழைத்து வந்து மனுஷனிடம் ஒப்புவித்த தேவனுடைய செயலை நாம் நன்றாக சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஆகவே திருமணபந்தம் என்பது தேவனுடைய பார்வையிலே மிகவும் பெறுமதிப்பு வாய்ந்தது.
கர்த்தருக்குள் அருமையானவர்களே, உங்கள் குடும்ப உறவு பரிசுத்தமாகக் காக்கப்படவேண்டிய ஒன்று என்பதை ஒருபோதும் மறக்கக்கூடாது. அன்று ஆதாமும் ஏவாளும் தங்கள் திருமண பந்தத்தை அசுத்தப்படுத்திவிடவில்லை. ஆனால் கீழ்ப்படியாமையால் தேவனின் மகிமையை இழந்து, பரிசுத்த தன்மையையும் இழந்துவிட்டார்கள். அவர்களுடைய மூத்த மகனே கொலைகாரனானான். என்றாலும், இயேசுகிறிஸ்துவின்மூலம் இழந்துபோன மகிமையை நாம் இன்று திரும்பவும் பெற்றிருக்கிறோம். ஆகையால், உணர்வுள்ளவர்களாக நமது குடும்ப உறவைக் கட்டிக் காப்போமாக. அங்கே தேவன் மகிமைப்படுவார்.
ஜெபம்: ஆண்டவரே, நீர் எங்களுக்கு கிருபையாய் கொடுத்த குடும்ப உறவுகளுக்காய் ஸ்தோத்திரம். அவற்றை உண்மையாய் பேணிக் காக்க உதவிச் செய்யும். ஆமென்.