ஜெபக்குறிப்பு: பிப்ரவரி 23 வியாழன்
“.. சேனைகளின் தேவனாகிய கர்த்தர் அவனோடேகூட இருந்தார்” (2நாளா.5:10) இவ்வாக்குப்படியே சத்தியவசன ஊழியத்தை பங்காளர்களாக ஆதரவாளர்களாக ஜெபத்தோடு தாங்கி வருகிற ஒவ்வொருவரோடும் கர்த்தர் கூட இருந்து அவர்களை ஆசீர்வதிக்க, விருத்தியாக்க ஜெபம் செய்வோம்.
சர்வ வல்ல தேவன்
தியானம்: பிப்ரவரி 23 வியாழன்; வேத வாசிப்பு: ரோமர் 4:16-25
“…நான் சர்வவல்லமையுள்ள தேவன். நீ எனக்கு முன்பாக நடந்து கொண்டு உத்தமனாயிரு” (ஆதியாகமம் 17:1).
இந்த வானத்தையும் பூமியையும் அவற்றிலுள்ளவற்றையும் உற்று நோக்கினோமானால் உண்மையில் நாம் ஆச்சரியப்படாமல் இருக்கமுடியாது. தேவன் யாவையும் எவ்வளவு அருமையாகப் படைத்திருக்கிறார். வெளிச்சம் கொடுப்பதற்கென்றே சூரியன் படைக்கப்பட்டதென்று என் சிறுவயதிலே நினைத்ததுண்டு. ஆனால் வெளிச்சத்தைப் படைத்து, அதற்கு பகல் என்று பெயரிட்டு, அந்தப் பகலை ஆளுவதற்கே தேவன் சூரியனைப் படைத்தார் என்பதைப் படித்தபோது உண்மையாகவே ஆச்சரியமாயிருந்தது. ஒவ்வொரு மிருகங்களையும், பிராணிகளையும், பறவைகளையும் அவ்வவற்றின் இருப்பிடங்கள், மற்றும் அவை வாழும் முறைகளை சற்று சிந்தித்துப் பாருங்கள். ஒவ்வொரு சிருஷ்டிக்கும் அவற்றிற்கேற்ப காரியங்களை தேவன் அமைத்துக் கொடுத்திருக்கிறார். எவ்வளவு ஆச்சரியம்! தமது சிருஷ்டிகளை தேவன் பாதுகாக்கிறார்; போஷிக்கிறார். “காக்கைக்குஞ்சுகள் தேவனை நோக்கிக் கூப்பிட்டு, ஆகாரமில்லாமல் பறந்து அலைகிறபோது, அவைகளுக்கு இரையைச் சவதரித்துக் கொடுக்கிறவர் யார்?” (யோபு 38:41) என்று கர்த்தர் யோபுவிடம் கேட்ட கேள்வி நம்மையும் இந்த நாளிலே சிந்திக்க வைக்கட்டும். நம் தேவன் உண்மையிலேயே ஆச்சரியமானவர். இப்படிப்பட்ட தேவனுக்கு முன்பாக நாம் செய்யவேண்டியது என்ன?
“இல்லாதவைகளை இருக்கிறவைகளைப்போல் அழைக்கிற தேவன்” (ரோமர் 4:17) என்று பவுல் தேவனை மகிமைப்படுத்தினார். ஆபிராம், ஆபிரகாம் என்று பெயர் பெற்றபோது, அவனுக்குத் தரிசனமாகி, “நான் சர்வ வல்லமையுள்ள தேவன்” என்று தம்மை அறிமுகப்படுத்தியதோடு, “நீ எனக்கு முன்பாக நடந்து கொண்டு உத்தமனாயிரு” என்று அவனைப் பெலப்படுத்தினார்.
அந்த செய்தியையே தேவன் இன்றும் நமக்கும் கொடுக்கிறார். நாம் எல்லா வகையிலும் அவருக்குக் கீழ்ப்படிந்திருக்க வேண்டும். ஏனெனில், அவர் தேவன்; நம்மைப் படைத்தவர். கீழ்ப்படிதல் ஒன்றையே அவர் நம்மிடம் எதிர்பார்க்கிறார். ஆம், “சர்வ வல்லமையுள்ள தேவன்” அவர், நூறு வயதிலே ஒரு பிள்ளையைப் பெற்றெடுக்கும் சக்தியை ஆபிரகாமுக்குக் கொடுக்குமளவுக்கு அவர் சர்வ வல்லமையுள்ள தேவன். ஆனால் இன்று அந்த சர்வவல்ல தேவனிடமே சவால் விடுகிறதுபோல நாம் நடந்துகொள்வது எப்படி? ஆபிரகாம் தேவனை விசுவாசித்து கீழ்ப்படிந்திருந்தார்; ஜாதிகளுக்குத் தந்தையானார். அருமையான தேவபிள்ளையே, நாம் அவருடைய சர்வ வல்லமையைக் கனப்படுத்துகிறோமா? அவருடைய வார்த்தைக்கு எப்பொழுதும் மதிப்பளித்து, கீழ்ப்படிந்து உத்தமர்களாக வாழ்கிறோமா? என்ன செய்யப்போகிறோம் என்று இன்றே தீர்மானம் செய்வோமாக.
ஜெபம்: ஆண்டவரே, சகலத்தையும் படைத்து ஆளுகின்ற சர்வவல்லவரின் கரத்தில் இருப்பதே எங்களுக்குப் பாதுகாப்பு. அதையே நாங்கள் எப்பொழுதும் நாடுகிறோம். ஆமென்.