ஜெபக்குறிப்பு: பிப்ரவரி 3 வெள்ளி
“.. கட்டுண்டவர்களைக் கர்த்தர் விடுதலையாக்குகிறார்” (சங்.148:7) என்ற வாக்குப்படியே குடிப்பழக்கத்திலுள்ள 9 நபர்களை கர்த்தர் விடுதலையாக்கி, குடும்ப சமாதானத்திற்காக ஜெபிக்கக் கேட்ட 9 குடும்பங்களுக்கு தாம் வாக்குப்பண்ணின சமாதானத்தை அருளி அக்குடும்பங்களை ஆசீர்வதித்திடவும் ஜெபிப்போம்.
நமக்கொரு முத்திரை
தியானம்: பிப்ரவரி 3 வெள்ளி; வேத வாசிப்பு: எபேசியர் 1:1-14
“அவருக்குச் சொந்தமானவர்கள் அவருடைய மகிமைக்குப் புகழ்ச்சியாக மீட்கப்படுவார்கள்” (எபேசியர் 1:14).
‘நாம் கிறிஸ்துவாலே மீட்கப்பட்டவர்கள்’ என்று சொல்லுகின்ற நாம், கிறிஸ்து நம்மேல் வைத்த அந்த நேசத்தை உணர்ந்தவர்களாக வாழுகின்றோமா என்று நம்மை நாமே இன்றைய நாளிலே ஒரு கேள்வியைக் கேட்டுப் பார்ப்போமாக. நாம் அநேகருக்குப் பிரயோஜனமாக ஜீவித்திருக்கலாம். பல பல நன்மைகளைச் செய்திருக்கலாம். உண்மையும் உத்தமமுமாகவும் வாழ்ந்திருக்கலாம். ஒன்று தெரியுமா? அதை யாரும் செய்யலாம். ஆனால், எல்லா சூழ்நிலைகளிலும், எந்தப் பாடுகளிலும் கிறிஸ்துவை வெளிப்படுத்தவேண்டிய நாம் இன்று அதைச் செய்கிறோமா என்பதே கேள்வி. நாம் பாவத்தினால் தீட்டுப்பட்டிருக்கிறோமா? அல்லது தேவனுக்கென்று வாழுகிறோமா? நாம் இன்றுவரை யாராக இருந்திருந்தாலும், இனி என்னவாக இருக்கப்போகிறோம் என்பதே மிகவும் முக்கியமானது.
நான் சிறியவனாயிருந்தபோது, ஆசிரியனாகவோ பாடசாலை அதிபராகவோ வரவேண்டுமென்று என் பெற்றோர்களிடம் கூறுவேன். என் கிறிஸ்தவ பெற்றோர்கள் என்ன கூறுவார்கள் தெரியுமா? “நீ யாராக வந்தாலும்சரி, பெரியவனானபின், நீ இப்போது இருப்பதுபோலவே தேவனுக்குப் பிரியமானவனாக இராவிட்டால், நீ இப்பவே செத்துப்போகவேண்டும் என்றே நாங்கள் ஜெபிப்போம்” என்றார்கள். இவ்வார்த்தைகள் இன்றும் என் மனசாட்சியைக் குத்திக்கொண்டேயிருக்கும். நான் அப்பொழுதே என்னை ஆண்டவருக்கு ஒப்புக்கொடுத்தேன். என் பிஞ்சு மனதில் அந்த வசனங்கள் ஆழமாகப் பதிந்துவிட்டதனால் அடிக்கடி நான் தவறும் போதெல்லாம் அது என் மனதில் வந்து மனசாட்சியைப் புடமிடும்.
ஆம், நம் எதிர்காலத்தைக் குறித்து நமது பெற்றோரின் கரிசனை இத்தனை பெரிதானால், நம்மைப் படைத்த பரமபிதா நம்மீது அதிக அக்கறையுள்ளவராக இருப்பாரல்லவா? அதற்காகதான் நாம் மீட்கப்பட்டபோதே, பரிசுத்த ஆவியானவரை நமக்கு முத்திரையாக தேவன் கொடுத்துவிட்டார். முத்திரை என்பது முடிவுற்ற ஒரு காரியத்தை அல்லது உரிமை, பாதுகாப்பு, அதிகாரம் என்பவற்றை உறுதிப்படுத்துகிறது. ஆம், மீட்கப்பட்ட நாம் தேவனுக்கே சொந்தமானவர்கள் என்பதற்கு ஆவியானவர் நமக்கு முத்திரையாக இருக்கிறார். அப்படியிருக்க நாம் எப்படித் தவறிப்போக முடியும்?
ஒரு விஷயத்தை நினைவுபடுத்திக்கொள்வோம். விழுந்துபோன லூசிபருக்காக, அவனுடன் விழுந்த தேவதூதர்களுக்காக தேவன் தேவதூதனாகி அவர்களை மீட்கவில்லை. ஆனால் அற்பரும் தூசிகளும், விழுந்துபோன தூதனுக்கு செவிகொடுத்து தேவனைத் துக்கப்படுத்தியவர்களுமாகிய மனிதனுக்காக அவர் தம்மைக் கொடுத்ததுமல்லாமல், தமது பிள்ளைகள் என்ற அதிகாரத்தையும் நமக்கு அருளியுள்ளார் என்பதை சிந்திப்போமாக.
ஜெபம்: தேவனே, எங்களுக்கு முத்திரையாகக் கொடுக்கப்பட்ட பரிசுத்தாவியானவரை நாங்கள் துக்கப்படுத்தாதபடி நடந்துகொள்ள கிருபைதாரும்.ஆமென்.