ஜெபக்குறிப்பு: பிப்ரவரி 19 ஞாயிறு

“… சுவிசேஷ ஊழியத்தின் வேலைக்காகவும், கிறிஸ்துவின் சரீரமாகிய சபையானது பக்திவிருத்தி அடைவதற்காகவும்” (எபேசி.4:12) தேவன்தாமே ஏற்படுத்தின சபை போதகர்கள், மேய்ப்பர்கள் ஊழியர்கள் திருச்சபைத் தலைவர்கள் யாவருக்காகவும் இந்நாளில் பாரத்தோடு ஜெபிப்போம்.

கனியற்ற வாழ்வு வேண்டாம்

தியானம்: பிப்ரவரி 19 ஞாயிறு; வேத வாசிப்பு: யோவான் 15:13-19

“…நீங்கள் போய்க் கனிகொடுக்கும்படிக்கும், உங்கள் கனி நிலைத்திருக்கும் படிக்கும், நான் உங்களை ஏற்படுத்தினேன்” (யோவான் 15:16).

நாஸ்திகனும், சோவியத்தின் சர்வாதிகாரியுமான ‘அந்ரோ போவ்’ என்பவன் தனது மரணத்தருவாயில் எழுதிய குறிப்பு: “இந்த உலகம் நான் வருமுன்னே இருந்தது. இன்னமும் தொடர்ந்து நான் இன்றியே எத்தனையோ வருடங்கள் இருக்கத்தான் போகிறது. அதிலே நான் சொற்ப காலம் வாழ்ந்தேன். சீக்கிரமாக மரித்துவிடுவேன். அதன்பின்பு நான் வெகு சீக்கிரத்தில் முற்றிலும் மறக்கப்பட்டுப் போய்விடுவேன். இதை எண்ணிப் பார்க்கும்போதே பயங்கரமாயுள்ளதே” என்பதாகும். இந்த மனுஷனுக்கு வாழ்க்கை வெறுமையாக இருந்தது. ஆனால், அன்பு இராவிட்டால்தான் ஒன்றுமில்லை (1கொரி.13:2) என்ற பவுலோ, கிறிஸ்து தனக்குள் வாழுகிறார் என்று முழங்கினார். அதனால் அவருடைய வாழ்வில் ஒரு அர்த்தம் இருந்தது. கடைசி வரைக்கும் கனியுள்ள வாழ்வு வாழ்ந்த அவர், இன்றும் நமக்கு ஒரு முன்மாதிரியாய் இருக்கிறார்.

கனியற்ற மரத்தையும், உப்பில்லாத உணவையும், வெளிச்சமற்ற நாட்களையும் யார் விரும்புவார்? அப்படியிருக்க, நமது வாழ்வு மாத்திரம் வெறுமை யாக ஏனோதானோ என்றிருப்பது எப்படி? நமது ஆண்டவர் இவ்வுலகில் வாழ்ந்த நாட்களில், அவர் தனித்து வாழவில்லை. ‘நான் என் பிதாவின்… அன்பிலே நிலைத்திருக்கிறதுபோல…’ (யோவா.15:10) என்ற ஆண்டவரின் மனித வாழ்வின் இரகசியம் இதுதான். அதனால்தான் அவர் நன்மை செய்கிறவராகவும் பாடுகள் அனுபவிக்கிறவராகவும் சுற்றித்திரிந்தார். இந்தக் கிறிஸ்துவின் சாயலைப் பிரதிபலிக்கும் நாம் எப்படி வாழுகிறோம்? நம்மால் பிறருக்கு பயனுள்ள வாழ்வு வாழ முடியாதிருப்பது ஏன்? ஆண்டவரே அதற்குப் பதிலும் தருகிறார். “என்னில் நிலைத்திருங்கள். …என்னில் நிலைத்திராவிட்டால் கனிகொடுக்க மாட்டீர்கள்…” (யோவான் 15:4). இதுதான் கனிகொடுக்கும் வாழ்வின், அதாவது பயனுள்ள வாழ்வின் இரகசியம். நாம் கிறிஸ்துவில் நிலைத்திருப்பது என்பது அவருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிவதாகும். கீழ்ப்படிதல் ஒன்றே, நமது வாழ்வை அர்த்த முள்ளதாக்கப் போதுமானதாகும். அதன்பின் அந்த நாஸ்திகனைப்போல மரணத்தைக் கண்டு பயப்படமாட்டோம் அல்லவா!

தேவபிள்ளையே, கிறிஸ்துவுக்குள் வாழுவது இலகுவானதாக தெரியலாம். இயலாத ஒன்றைத் தேவன் எதிர்பார்ப்பாரா? ஆனால் அந்த வாழ்வு இல்லையானால் நமது வாழ்வில் அர்த்தமும் இல்லை. ஆகவே, என்ன துன்பம் நேரிட்டாலும், எத்தனை கல்லெறிகள் விழுந்தாலும், கிறிஸ்துவுக்காக வாழ நம்மை அர்ப்பணிப்போமாக. அவருடைய வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்து வாழ உறுதியெடுப்போமாக.

ஜெபம்: அன்பின் தேவனே, உமக்குரியவர்களாகிய நாங்கள் எத்தகைய துன்பத்திலும் துயரத்திலும் உறுதியாகவும் கனியுள்ள வாழ்க்கை வாழ்வதற்கும் உமது பெலனை ஈந்தருளும். ஆமென்.