ஜெபக்குறிப்பு: ஏப்ரல் 30 ஞாயிறு
“கர்த்தருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; அவர் அதிசயங்களைச் செய்திருக்கிறார்; அவருடைய வலதுகரமும், அவருடைய பரிசுத்த புயமும் இரட்சிப்பை உண்டாக்கினது” (சங்.98:1) இம்மாதம் முழுவதும் கர்த்தர் செய்த நன்மைகளை அதிசயங்களை எண்ணி புதுப்பாட்டைப் பாடி தேவனை மகிமைப்படுத்தி ஸ்தோத்திரிப்போம்.
இணைப்பு ஏணி
தியானம்: ஏப்ரல் 30 ஞாயிறு; வேத வாசிப்பு: ஆதி. 28:10-15; யோவான் 1:47-51
“…வானம் திறந்திருக்கிறதையும், தேவதூதர்கள் மனுஷ குமாரனிடத்திலிருந்து ஏறுகிறதையும் இறங்குகிறதையும் நீங்கள் இதுமுதல் காண்பீர்கள்” (யோவான் 1:51).
தூரதேசத்திலே இருக்கும் அப்பா எப்போ வருவார் என்று அம்மாவும் பிள்ளைகளும் எதிர்பார்த்திருக்கும் எதிர்பார்ப்பு இருக்கிறதே, அது வித்தியாசமான ஒரு எதிர்பார்ப்பு. பிள்ளைகள் நாட்களை எண்ணுவார்கள். அப்பா என்ன கொண்டுவருவார் என்று கற்பனை பண்ணுவார்கள். மனைவியோ எதையும் எதிர்பாராமல், தன் மணவாளனையே நினைத்து ஏங்கி நிற்பாள் அல்லவா! ஆம், நாமும் ஒருவருக்காக ஏங்கி நிற்கிறோம். நமக்காகப் பாடுபட்டு மரித்து உயிர்த்து பரத்துக்கு ஏறிய ஆண்டவர் மறுபடியும் நம்மை அழைத்துச்செல்ல திரும்பவும் வருவார் என்று எதிர்பார்த்திருக்கிறோம். நிச்சயம் அவர் வருவார். ஆனால் அதற்கு முன், இவ்வுலகில் நாம் வாழும்வரைக்கும் பிதாவையும் நம்மையும் இணைப்பிலே வைத்திருக்க ஒரு பாலம் வேண்டுமே.
இயேசுவிடம் அழைத்துவரப்பட்ட நாத்தான்வேலிடம்: “..இதிலும் பெரிய காரியங்களைக் காண்பாய், வானம் திறந்திருக்கிறதையும், தேவதூதர்கள் மனுஷகுமாரனிடத்திலிருந்து ஏறுகிறதையும் இறங்குகிறதையும் நீங்கள் இதுமுதல் காண்பீர்கள் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்” (யோவான் 1:50,51) என்றார் இயேசு. அவர் சொன்ன இந்தக் காரியம் யாக்கோபு கண்ட கனவின் அடிப்படையில் சொல்லப்பட்டது. வீட்டை விட்டு ஓடி, களைத்து, நடுவழியிலே தனிமையிலே கண்மூடி நித்திரை செய்த யாக்கோபு, ஒரு கனவு கண்டார். வானத்துக்கும் பூமிக்கும் நடுவே ஒரு ஏணி. அதிலே தேவதூதர்கள் ஏறுகிறவர்களாகவும் இறங்குகிறவர்களாகவும் காணப்பட்டார்கள். அதற்கும் மேலாகக் கர்த்தர் நின்றார். இந்தக் காட்சியைத் தான் இயேசு நாத்தான்வேலிடமும் ஞாபகப்படுத்தியிருப்பார். வானத்துக்கும் பூமிக்கும் நடுவே, மேலே நிற்கும் பிதாவுக்கும், அவரைக் கிட்டிச்சேரமுடியாத நிலையில், பூமியில் நிற்கும் நமக்கும், இடையே ஒரு ஏணி தேவை. அந்த ஏணி, மேலே நிற்கிறவரிடம் நாம் ஏறிப்போக நமக்கு நடுநிலையாக நிற்கும் ஏணி. அந்த இணைப்பு ஏணி வேறு யாருமில்லை; இயேசு கிறிஸ்துதான்.
கிரகங்களையெல்லாம் கண்டறிய முயலும் விஞ்ஞானிகளால் வானம் திறக்கப்படுவதையோ அந்த ஏணியையோ காணமுடியாது! நம்மால் மட்டுமே காணமுடியும். எப்படி இது சாத்தியமாகும்? இதை நமது மாம்ச கண்களால் காணவே முடியாது. கிறிஸ்துவின் உண்மையான இயல்பையும் அவர் வானத்திலிருந்து இறங்கி பூமிக்கு வந்த நோக்கத்தையும் அறிய நமக்கு ஆவிக்குரிய கண்கள் தேவை. மேலே நிற்கும் கர்த்தரை நாம் போய் அடைய நமக்கு ஒரே ஏணி நம் ஆண்டவர்தான். அந்த ஏணியைக் காண நம் ஆவிக்குரிய கண்களை அகலமாகத் திறக்கும்படி ஜெபிப்போமா!
ஜெபம்: ஆண்டவரே, பிதாவுக்கும் எங்களுக்கும் நடுவே இணைப்பு ஏணியாய் நிற்கும் இயேசுவே உமக்கே ஸ்தோத்திரம். ஆமென்.
வாக்குத்தத்தம்: ஏப்ரல் 29 சனி
… அவர்கள் கண்களுக்கு மறைவாக ஒரு மேகம் அவரை எடுத்துக்கொண்டது. (அப்.1:9)
வேதவாசிப்பு: 1சாமுவேல்.23-25 லூக்கா.21:1-19
ஜெபக்குறிப்பு: ஏப்ரல் 29 சனி
“உன்னை இரட்சிப்பதற்காக நான் உன்னோடே இருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்” (எரேமி.30:11) என்ற வாக்குப்படியே பலவிதத் தேவைகளோடிருக்கும் 9 நபர்களுடைய பிரச்சனைகளில் நல்லத் தீர்வுகளையும், விடுதலையையும் ஆலோசனைகளையும் கர்த்தர் கொடுத்து அவர்களை வழிநடத்த ஜெபிப்போம்.
ஸ்திரமாயும் உறுதியாயும்
தியானம்: ஏப்ரல் 29 சனி; வேத வாசிப்பு: கொலோசெயர் 1:9-22
“நீங்கள் கேட்ட சுவிசேஷத்தினால் உண்டாகும் நம்பிக்கையை விட்டு அசையாமல், …விசுவாசத்தினாலே நிலைத்திருப்பீர்களானால் அப்படியாகும்” (கொலோசெயர் 1:22).
தான் ஈன்றெடுத்த கன்றுக்குட்டி காலூன்றி நிற்க முடியாமல் விழுந்து விழுந்து எழுவதைக் கண்ட தாய்ப் பசு, தன்னுடைய கழுத்தை நீட்டி கன்றுக்குட்டியின் மார்புப் பகுதியைத் தூக்கி நிறுத்தி, நாவினால் நக்கிக் கொடுத்தது. கன்றுக்குட்டி ஒவ்வொரு அடியாக நடந்து, சில நிமிடங்களின் பின் துள்ளிக் குதித்து ஓட ஆரம்பித்தது. எங்கிருந்து வருகிறது இந்த பெலன்!
தமது சாயலில் படைக்கப்பட்ட மனிதன், தமக்குள் பெலனடைந்து வாழ வேண்டுமென்பதே தேவசித்தம். அதற்கான சகலவற்றையும் ஆண்டவர் செய்து முடித்துவிட்டார்; பாவ இருளின் அந்தகாரத்திலிருந்து நம்மை விடுதலையாக்கி தமது ராஜ்யத்தில் உட்படுத்தச் சித்தங்கொண்டார். அதற்காகவே தமது பரிசுத்த இரத்தத்தைச் சிந்தி பாவமன்னிப்பாகிய மீட்பை நமக்குத் தந்தார். பரிசுத்தவான் களின் சுதந்திரத்தில் பங்கடைவதற்கு நம்மைத் தகுதியுள்ளவராக்கினார் (வச.13, 14). தேவனைவிட்டுப் பிரிக்கப்பட்டு துர்க்கிரியையினால் அந்நியராயும், மனதிலே சத்துருக்களாயும் இருந்த நம்மைக் குற்றமற்றவர்களாகவும், தண்டனைக்குத் தப்பினவர்களாகவும், தமக்கு முன்னே நிறுத்தும்படியாக தமது மாம்ச சரீரத்தில் அடைந்த மரணத்தினாலே பரலோகத்துடன் நம்மை ஒப்புரவாக்கினார்.
இவ்வண்ணமாக, பிரிக்கப்பட்டு, இருளிலே தள்ளப்பட்டு, விழுந்துபோன மனுக்குலத்தை ஆண்டவர் தூக்கி நிறுத்தியது எதற்காக? மறுபடியும் மறுபடியும் விழுவதற்காகவா? இல்லை! தமக்காக ஸ்திரமாகவும், உறுதியாயும் நாம் நிற்க வேண்டும் என்பதற்காகத்தானே! இப்படியிருக்க, நாம் அடிக்கடி அலைமோத வேண்டிய அவசியம் என்ன? அந்தக் கன்றுக்குட்டியே தன் தாயின் வருடலினால் தூக்கி விடப்பட்டபோது துள்ளி ஓடுமானால், நாம் எவ்வளவாக தேவனுக்காக திடமாக ஓடவேண்டும்! நாம் பெற்றுக்கொண்ட மீட்பின் மேன்மையை உணர்ந்து, அதற்காகச் செலுத்தப்பட்ட கிரயத்தின் பெறுமதிப்பை உணர்ந்து, இந்த உலகத்தின் பயமுறுத்தலுக்குப் பயப்படாமல், கிறிஸ்துவுக்காய் திடமாக நின்று, அவரது பணியை உறுதியுடன் நிறைவேற்றுவோமாக. இன்னுமொரு லெந்து காலத்துக்குள் பிரவேசிக்க இருக்கின்ற நாம், பரிசுத்த ஆவியானவரின் துணையுடன்; தினமும் வேதத்தை வாசித்து, தியானித்து ஜெபத்திலே தரித்திருந்து, தேவபெலத்தைப் பெற்றுக்கொண்டு, உறுதியுடன் முன்செல்லுவோமாக.
“பயங்கரமான குழியிலும், உளையான சேற்றிலுமிருந்து என்னைத் தூக்கியெடுத்து, என் கால்களைக் கன்மலையின்மேல் நிறுத்தி, என் அடிகளை உறுதிப்படுத்தி…” (சங்கீதம் 40:2).
ஜெபம்: உளையான சேற்றிலிருந்து எங்களைத் தூக்கியெடுத்தவரே, எங்கள் கால்கள் தள்ளாடிப்போகாமல் கிறிஸ்துவுக்காய் திடமாயும் ஸ்திரமாயும் விசுவாசத்திலே நிலைத்திருக்க கிருபை செய்யும். ஆமென்.