ஜெபக்குறிப்பு: ஏப்ரல் 13 வியாழன்

“அவர் மிகவும் வியாகுலப்பட்டு, அதிக ஊக்கத்தோடே ஜெபம்பண்ணினார்” (லூக்.22:44) நமது நிமித்தமாகவே வியாகுலப்படவும், நொறுக்கப்படவும் ஒப்புக்கொடுத்த இயேசுகிறிஸ்துவின் இராப்போஜன வேளையை பயபக்தியோடே தியானித்து அவரை நோக்கி வேண்டுதல் செய்வோம்.

உமது சித்தம் ஆகக்கடவது!

தியானம்: ஏப்ரல் 13 வியாழன்; வேத வாசிப்பு: மத்தேயு 26:36-46

“….என் பிதாவே, இந்தப் பாத்திரத்தில் நான் பானம்பண்ணினாலொழிய இது என்னைவிட்டு நீங்கக்கூடாதாகில், உம்முடைய சித்தத்தின்படி ஆகக்கடவது என்று ஜெபம் பண்ணினார்” (மத்தேயு 26:42).
மரணப்படுக்கையில் போராடிக்கொண்டிருந்த குழந்தைக்கு முன்னே மண்டியிட்ட தாய், “ஆண்டவரே! இந்தக் குழந்தையை நீர் உமது சமுகத்துக்கு எடுத்துக்கொள்ளச் சித்தமானால் எடுத்துக்கொள்ளும். நீர் சிறிதுகாலம் எனக்குத் தந்த குழந்தையை மீண்டும் உமக்கே ஒப்புக்கொடுக்கிறேன்” என்று ஜெபித்து ஒப்புக்கொடுத்தபோது சுற்றியிருந்த அனைவருமே கதறி அழ ஆரம்பித்தனர்.

வாழ்வில் மிகவும் மனம் உடைந்துபோகும் நேரங்களில், நம்மால் இனி ஒன்றுமே செய்யமுடியாது என்று உணரும் வேளைகளில், “ஆண்டவரே! உமது சித்தம் ஆகட்டும்” என்று நாம் ஒப்புக்கொடுத்தாலும்கூட, அது நமக்குத் தாங்க முடியாத வேதனையையும் இருதய நொருங்குதலையும் தருகிறது என்பதை மறுக்கமுடியாது. அப்படிப்பட்ட நேரங்களில் அவ்விதமான பாடுகளுக்கூடாகக் கடந்து சென்ற ஆண்டவரை நினைத்துப் பார்த்து தேறுதலடையலாம்.

பரிசுத்தமானவர், மனுக்குலத்தின் பாவத்தைச் சுமந்து மரிக்கத் தம்மை ஒப்புக்கொடுப்பதென்பது சிந்திப்பதற்குக் கடினமான விஷயம். அதிலும், பாவத்தை சுமப்பதால் பிதாவின் முகத்தைவிட்டு மறைக்கப்பட்டுப்போவதை இயேசுவால் ஜீரணிக்க முடியாதிருந்ததோ! என்றாலும், அந்தக் கொடிய பாத்திரத்தில் பானம் பண்ணுவதே பிதாவின் சித்தம் என்றால், அந்தச் சித்தத்திற்குத் தம்மைத் தத்தம் செய்யவும் இயேசுவானவர் தயங்கவில்லை.

நமது அன்றாட வாழ்வில், “எல்லாம் அவர் சித்தப்படி நடக்கட்டும்” என கூறுவோம். ஜெபிக்கும்போதும், “ஆண்டவரே உமது சித்தப்படி தாரும்” என்போம். ஆனால், உண்மையாகவே அவருடைய சித்தம் செய்வது நமக்குக் கடினமாகத் தெரியும்போது, தனித்துவிடப்பட்டதுபோல உணரும்போது, நாம் தடுமாறிப்போக நேரிடுகிறது. அப்போதெல்லாம், நமது ஆண்டவரை நினைத்துப் பார்ப்போம். அவரையும் அன்று தூதன் பலப்படுத்தினான். ஆகையால் நம்மையும் பலப்படுத்த ஆண்டவர் ஆயத்தமாக இருக்கிறார் என்பதுதான் உண்மை. மெய்யாகவே ஆண்டவரின் சித்தத்திற்கு நமது வாழ்வை ஒப்படைத்திருப்போமானால், சோதனைகளையும் போராட்டங்களையும் கண்டு உடைந்துபோக இடமளிக்கவேண்டிய அவசியமில்லை. “உன் கண்ணீரைத் துடைக்கும் இயேசு உனக்காய் இருக்கிறார்; உன் கவலைகள் போக்கும் இயேசு உனக்காய் ஜெபிக்கிறார்” என்பது ஒரு பாடலின் வரிகள். ஆகையால், தைரியமாய் வாழ்வின் போராட்டங்களைச் சந்தித்து ஜெயம் பெறுவோமாக.

“ஆகையால், நீங்கள் மதியற்றவர்களாயிராமல், கர்த்தருடைய சித்தம் இன்னதென்று உணந்துகொள்ளுங்கள்” (எபேசியர் 5:17).

ஜெபம்: தேவனே, “உம்முடைய சித்தப்படி எல்லாம் ஆகக்கடவது” என்று எந்தப் பாதகமான சூழ்நிலையிலும்கூட ஒப்புக்கொடுக்க உமது பெலன் தாரும். ஆமென்.