ஜெபக்குறிப்பு: ஏப்ரல் 1 சனி
“யாக்கோபின் தேவனுடைய நாமம் உமக்கு உயர்ந்த அடைக்கலமாவதாக” (சங்.20:1) நமது அடைக்கலமும் கேடகமுமாகிய தேவன்தாமே இம்மாதம் முழுவதும் நம்மை கண்மணிப் போல் பாதுகாக்கவும், கர்த்தருடைய மெல்லிய சத்தத்தைக் கேட்டு அவர் சித்தப்படி நடப்பதற்கும் நம்மை அர்ப்பணித்து ஜெபிப்போம்.
காலம் பொன்னானது!
தியானம்: ஏப்ரல் 1 சனி; வேத வாசிப்பு: சங்கீதம் 1:1-6
“துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாமலும், பாவிகளுடைய வழியில் நில்லாமலும், பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காராமலும்…” (சங்கீதம் 1:1).
உடைகள் விற்கும் கடைக்குள்ளே ஒரு அம்மா எதையும் வாங்காமல், எப்போதும் சுற்றி சுற்றியே வருவார். இதை கவனித்த ஒருவர், “அம்மா, நீங்கள் எந்தப் பொருளும் வாங்குவதாகத் தெரியவில்லை; ஆனால், அதிக நேரத்தை இக்கடையில் அநியாயமாகச் செலவிடுகிறீர்களே” என்று முணுமுணுத்தார். “நான் பணத்தை வீண்விரயம் செய்யவில்லை, ஆசைப்பட்டு பொருட்களை வேண்டிக் குவிக்கவுமில்லை. கடைக்குள் சும்மா சுற்றித்திரிந்து உடைகளைத் தொட்டுப்பார்த்து திருப்தியடையலாம் என்றால், அதுகூட உமக்கு பொறுக்கவில்லையோ” என்று எரிந்து விழுந்தார் அந்த அம்மா.
முதலாம் சங்கீதம் வாழ்க்கை முறைக்குத் தேவையான ஒரு வழிமுறையைக் காட்டுகிறது. எப்படி இருக்கக்கூடாது, எப்படியிருப்பது, எப்படி நடப்பது, நமது தியான வாழ்வினால் கிடைக்கும் பலன் என்ன, நாம் கர்த்தருக்குப் பயந்திருந்தால் எப்படி இருப்போம் என்றெல்லாம் பல்வேறு காரியங்களை விளக்கிக் காட்டுகிறது. எப்படி வாழுவது என்ற ஒரு வரையறைக்குள் நமது வாழ்வை அமைத்துக்கொள்ளாவிடில், அநேக காலத்தையும் நேரத்தையும் வீண்விரயம் செய்ய வேண்டியிருக்கும். நமது வாழ்க்கை முறைக்கு அடித்தளமாக இருக்க வேண்டியது தேவனுடைய வார்த்தையே. அது துன்மார்க்கமான ஆலோசனையைத் தள்ளி, பாவிகளுடைய வழியை விலக்கி, பரியாசக்காரரின் இடத்தைத் தவிர்த்து, கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அதைத் தியானித்தால், நாம் தேவபார்வையிலும் மனுஷர் பார்வையிலும் பாக்கியவான்களாய் இருப்போம் என்ற ஆழமான ஆலோசனைகளை நமக்குக் கற்றுத்தருகிறது.
சில சமயங்களில் நமக்குத் தெரியாமலேயே பல காரியங்களுக்குள் நாம் அகப்பட்டுவிடுகிறோம். அவைகள் பாவமான விஷயங்களாக இல்லாவிட்டாலும் கூட, நமது நேரகாலத்தை வீண்விரயம் செய்யத் தூண்டுபவையாக அமைந்துவிடுகிறது என்பதை நாம் உணருவதில்லை. தொலைக்காட்சிகள், கணினி விளையாட்டுக்கள், முகநூல் போன்றவை நம்மையறியாமலேயே அதற்குள் நம்மை சிறைவைத்துவிடுகின்றன. நாம் ஜாக்கிரதையாய் கையாள வேண்டியவைகள் பல உண்டு. காலங்கள் போனால் திரும்பாது. ஆகையால், நேரத்தை வீண்விரயம் செய்யலாகாது. எதற்கும் ஒரு கட்டுப்பாடு அவசியம். பிற காரியங்கள் நம்மைக் கட்டுப்படுத்தி அடிமையாக்க முன்னர் நாம் அவற்றைக் கட்டுப்படுத்தி வாழக் கற்றுக்கொள்ளவேண்டும்.
“கோணலும் மாறுபாடுமான சந்ததியின் நடுவிலே குற்றமற்றவர்களும் கபடற்றவர்களும், தேவனுடைய மாசற்ற பிள்ளைகளுமாயிருக்கும்படிக்கு…” (பிலிப்பியர் 2:15).
ஜெபம்: அன்பின் தேவனே, எங்களது நேரத்தை வீண்விரயம் செய்யும் நாங்கள் அடிமைப்பட்டிருக்கும் காரியங்களிலிருந்து விடுதலையைத் தாரும். ஆமென்.