ஜெபக்குறிப்பு: ஏப்ரல் 7 வெள்ளி

சத்தியவசன ஊழியத்தை மதுரை பட்டணத்தில் 33 ஆண்டுகளாக தேவாதி தேவனின் வழிகாட்டுதலில் நடத்துவதற்கு உதவி செய்த ஆண்டவருக்கே மகிமையைச் செலுத்துகிறோம். புதுவருடத்திலும் கர்த்தருடைய சித்தம் நிறைவேற அநேக விசுவாச குடும்பங்கள் ஊழியத்தின்மூலம் ஆசீர்வதிக்கப்பட மன்றாடுவோம்.

சமூகப்பணி

தியானம்: ஏப்ரல் 7 வெள்ளி; வேத வாசிப்பு: லூக்கா 10:30-37

“அப்பொழுது இயேசு அவனை நோக்கி: நீயும் போய் அந்தப் படியே செய் என்றார்” (லூக்கா 10:37).

இன்று சமூகப்பணி என்று சொல்லி, கஷ்டப்படுவோர் மத்தியில் சென்று, அவர்களுக்கு உணவுப் பொட்டலத்தைக் கொடுத்து, தேவையான பணத்தைக் கொடுத்துவிட்டு, அவற்றைப் புகைப்படங்களாய் எடுத்து, மக்களின் பார்வைக்குப் போடுவது நாகரீகமாகிவிட்டது. அதைப்பார்த்து புகழுவோர் ஒருபுறம் என்றால், படங்களை வெளிநாட்டிற்கு அனுப்பி பணம் சம்பாதிப்போரும் உண்டு. இன்னும் சமூகப்பணி என்று பெரியளவில் செய்யப் புறப்படுவோரும் உண்டு. ஆனால் நமக்கு அருகில் கிடக்கும் சமூகப்பணியினை நாம் கண்டும் காணாதவராய் இருப்பதும் வேடிக்கையல்லவா!

“எனக்குப் பிறன் யார்” என்று தன்னை நியாயப்படுத்தும் நோக்கோடு நியாய சாஸ்திரி கேட்ட கேள்விக்கு இயேசு ஒரு உவமை சொன்னார். அந்த உவமையிலிருந்து, கள்வர் கையில் அகப்பட்டவனுக்கு அந்த சமாரியனே நல்ல அயலானாக இருந்தான் என்பதை அவன் புரிந்துகொண்டாலும், அவன் யூதனாயிருந்ததால், “உனக்கு எப்படித் தோன்றுகிறது” என்று இயேசு கேட்டபோது, ‘சமாரியன்’ என்று சொல்ல விரும்பாமல், “அவனுக்கு இரக்கஞ் செய்தவனே” என்று பதிலளிக்கிறான் அந்த நியாயசாஸ்திரி. நியாயவிதிகளை அறிந்திருந்த அவனது உள்ளத்தில், இருக்கவேண்டிய அன்பு இருக்கவில்லை என்பதைக் கர்த்தர் கண்டார். அதனால், “நீயும் போய் அப்படியே செய்” என்று அனுப்பிவிட்டார்.

இன்று நமது கண்கள் காண தேவையோடிருப்போர் ஏராளம்; உதவி கேட்டு நிற்போர் பலர். அவர்களையெல்லாம் கண்டும் காணாதவர்களாய், பெரியளவில் சமூகப்பணிக்குப் புறப்பட்டு செல்லுவது என்ன? சிலசமயம் அவசர தேவையோடு அருகிலிருப்பவர்களை நாம் அலட்சியம் செய்வதால், உயிராபத்துக்கூட ஏற்பட வாய்ப்புண்டு. சற்று நமது கண்களைத் திறந்து நமக்குச் சுற்றியிருக்கிற மக்களை நோக்கிப் பார்ப்போமாக. நாம் செய்யவேண்டிய சமூகப்பணிகள் எத்தனையோ நமக்கு முன்னே குவிந்துகிடக்க நாம் பெரிதாக எதையோ சாதிக்க எண்ணித் திட்டமிட்டு அலைவது ஏன்? நன்மை செய்யக்கூடிய எத்தனையோ தருணங்கள் நமக்குக் கிடைத்தும் நாம் அதை நழுவவிட்டிருக்கிறோம். அல்லது நமது சொந்த அலுவல்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதால் பிறருக்கு சேவையாற்ற நமக்கு நேரமில்லாமல் போகிறது. இன்னும் சொல்லப்போனால், நமது பணப்பைகளைத் திறக்கவும் நம்மில் அநேகர் தயாராய் இல்லை. பின்னர் பிறர் நேசம், அன்புபாராட்டல் இவற்றைக் குறித்து நாம் பேசுவது எப்படி? நமக்கும் அந்த நியாயசாஸ்திரிக்கும் வேறுபாடு இருக்காதே!

“ஆதலால், ஒருவன் நன்மை செய்ய அறிந்தவனாயிருந்தும், அதைச் செய்யாமற்போனால் அது அவனுக்குப் பாவமாயிருக்கும்” (யாக்கோபு 4:17).

ஜெபம்: அன்பின் தேவனே, நாங்கள் செய்த தீமைகள், செய்யாமற்போன நன்மைகள், வேண்டுமென்றே விலகிப்போன சந்தர்ப்பங்கள் ஆகியவற்றிற்காக மனம் வருந்துகிறோம். இனி சேவையாற்ற நீர் எங்களுக்குத் தரும் தருணங்களை தவற விடாமல் இருக்க கிருபை தாரும். ஆமென்.