ஜெபக்குறிப்பு: மே 31 புதன்
“கர்த்தர் எளியவர்களின் விண்ணப்பத்தைக் கேட்கிறார்” (சங்.69:33) இவ்வாக்குப்படியே கர்த்தர் நம் விண்ணப்பங்களின் சத்தத்தைக் கேட்டிருக்கிறார். இம்மாதம் முழுவதும் நம்மை வழுவாதபடி காத்த அவருக்கு ஸ்தோத்திரங்களை செலுத்தி ஜெபிப்போம்.
தேவன் தெரிந்துகொண்ட பாத்திரம்
தியானம்: மே 31 புதன்; வேத வாசிப்பு: ரோமர் 9:16-23
“மிதியிட்ட ஒரே களிமண்ணினாலே குயவன் ஒரு பாத்திரத்தைக் கனமான காரியத்துக்கும், ஒரு பாத்திரத்தைக் கனவீனமான காரியத்துக்கும் பண்ணுகிறதற்கு மண்ணின்மேல் அவனுக்கு அதிகாரம் இல்லையோ?” (ரோமர் 9:21).
இன்றைய தியானப் பகுதியிலே பவுல், பார்வோனை உதாரணம் காட்டியிருக்கிறார். “என்னுடைய வல்லமையை உன்னிடத்தில் காண்பிக்கும்படியாகவும், என் நாமம் பூமியிலெங்கும் பிரஸ்தாபமாகும்படியாகவும் உன்னை நிலைநிறுத்தினேன்” (யாத்.9:16) என்று பார்வோனுக்குச் சொல்லும்படி கர்த்தர் மோசேக்குச் சொன்னதையே பவுல் இங்கே குறிப்பிடுகிறார். பார்வோனுக்குக் கர்த்தர் பல தருணங்களைக் கொடுத்தார். முதலில் வாதைகள் வருமுன்னதாக பார்வோனுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அவன் தன்னை தொடர்ந்து மனக் கடினப்படுத்தியபோது, கர்த்தர் அவனது கடினத்துக்கு அவனை விட்டுவிட்டார். அவனுடைய மனக் கடினமே அவனுக்குத் தண்டனையைக் கொண்டு வந்தது. ஆனால், கர்த்தரோ அந்தக் கடினத்தன்மையை வீணாக்கவில்லை. தமது வல்லமை விளங்க அதைப் பயன்படுத்தினார் என்று பவுல் விளங்கவைக்கிறார். பெலவீனராகிய மக்கள் முன்னிலையில் பலமுள்ள எகிப்திய இராணுவம் முறிந்து அழிந்ததைப் பார்வோனே காண நேர்ந்தபோது, நிச்சயம் இஸ்ரவேலின் தேவனுடைய வல்லமையைப் பார்வோன் உணர்ந்திருப்பான்.
இந்த விளக்கத்தைக்கொண்டு, பார்வோனைக்காட்டிலும், மற்றவர்களைப் பார்க்கிலும் நாம் சிறந்தவர்கள் என்று நாம் நினைத்துவிடக்கூடாது. சிருஷ்டிப்புக்களின் சகல கட்டுப்பாடும் சிருஷ்டிகரான தேவனுடைய கரங்களில்தான் இருக்கிறது என்பதை புரிந்துகொள்ளவேண்டும். மிதியிட்ட களிமண்ணிலிருந்து குயவன் தன் மனவிருப்பப்படி வேறுபட்ட பாத்திரங்களைச் செய்து எப்படி அவற்றைப் பயன்படுத்துகிறானோ, கர்த்தரும் தமது படைப்புகள்மீது அதிகாரம் உடையவராயிருக்கிறார். படைப்புகள் யாவும் தப்பிப் பிழைத்திருப்பது படைப்பாளியின் கருணையில்தான் தங்கியிருக்கிறது. ஆகவே, படைக்கப்பட்டது படைப்பாளியிடம் எதைத்தான் கேட்கமுடியும்?
நாம் இன்று எப்படிப்பட்ட பாத்திரமாக இருந்தாலும், பிறருடன் நம்மை ஒப்பிட்டுப்பார்க்கிறதை நிறுத்திக்கொள்வோம். நம்மை எந்த நோக்கத்திற்கு என்ன வித பாத்திரமாக தேவன் வனைந்து வைத்திருக்கிறாரோ, அது அவருக்காகப் பாடுபடும் பாத்திரமாக இருந்தாலும் மனநிறைவோடு அதை நிறைவேற்றுவோமாக.
“நீ போ; அவன் புறஜாதிகளுக்கும் ராஜாக்களுக்கும் இஸ்ரவேல் புத்திரருக்கும் என்னுடைய நாமத்தை அறிவிக்கிறதற்காக நான் தெரிந்துகொண்ட பாத்திரமாயிருக்கிறான்” (அப்.9:15).
ஜெபம்: தேவனே நீர் எங்களை எவ்வித பாத்திரமாக தெரிந்தெடுத்திருந்தாலும், அவற்றிலும் உம்மையே நாங்கள் மகிமைப்படுத்த எங்களை ஒப்புக்கொடுக்கிறோம். ஆமென்.
வாக்குத்தத்தம்: மே 30 செவ்வாய்
கர்த்தரால் ஆகாத காரியம் உண்டோ? (ஆதி.18:14)
வேதவாசிப்பு: 2இராஜாக்கள்.9,10 | யோவான்.9:1-20
ஜெபக்குறிப்பு: மே 30 செவ்வாய்
“இந்தச் சுவிசேஷம் .. சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும்” (மத்.24:14) என்ற வாக்குப்படியே 6 நாடுகளில் இயங்கிவரும் வேதாகமத்திற்கு திரும்புக ஊழியங்களை கர்த்தர் ஆசீர்வதித்து பலமடங்காக பெருகப்பண்ணி, சகல தேசத்தார்களும் சுவிசேஷத்தை அறிவதற்கு இவ்வூழியங்கள் ஏதுகரங்களாய் அமைய ஜெபிப்போம்.
எதுவும் வீணல்ல!
தியானம்: மே 30 செவ்வாய்; வேத வாசிப்பு: 1கொரிந்தியர் 15:51-58
“…எனக்குப் பிரியமான சகோதரரே, கர்த்தருக்குள் நீங்கள் படுகிற பிரயாசம் விருதாவாயிராதென்று அறிந்து, நீங்கள் உறுதிப்பட்டவர்களாயும், அசையாதவர்களாயும், கர்த்தருடைய கிரியையிலே எப்பொழுதும் பெருகுகிறவர்களாயும் இருப்பீர்களாக” (1கொரி. 15:58).
கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலினாலுண்டான நம்பிக்கையில் உறுதிப்பட்டவர்களாக மாதத்தின் கடைசி நாட்களுக்குள் வந்துவிட்டோம். நமது கால்கள் மேலும் சறுக்கிவிடாதபடிக்கு கர்த்தர்தாமே நம்மைத் தாங்கி நடத்துகிறார். பலவேளைகளிலும் விடை தெரியாத, காரணம் தெரியாத சில நிகழ்வுகள் நம்மை குழப்பத்தில் ஆழ்த்திவிடுகின்றன. ஆனால், சகலத்தையும், முடிவையும் கூட அறிந்தவர் சிலசமயங்களில் அமைதியாக இருக்கிறார் என்றால், அதற்கு நிச்சயம் ஒரு காரணம் இருக்கும், எதற்கும் பலன் உண்டு என்ற நம்பிக்கையில் உறுதிப்படுவோமானால், அதுவே நமது வாழ்வின் பெரிய வெற்றி!
ஏதேனிலும், சிலுவையிலும் தான் வென்றுவிட்டதாக சாத்தான் நிச்சயம் குதூகலித்திருப்பான். ஆனால், கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலினால், அவனது வெற்றி தலைகீழாய் மாறியது. தமது குமாரன் சிலுவையில் பாடுபட்டபோது, பிதா அமைதியாய் இருந்ததன் இரகசியம் கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலில் வெளிப்பட்டது. கிறிஸ்து மரித்திராவிட்டால், இந்த உலகம் அந்த மகிமையின் நாளைச் சந்தித்திருக்க முடியாது. ஆகவே, எந்தச் சந்தர்ப்பத்திலும் நாம் நம்பிக்கை இழக்கவேண்டிய அவசியமே இல்லை. மரணம் தோற்கடிக்கப்பட்டாயிற்று. அன்று ஏதேனிலே, சாத்தான் சொன்னபடியே ஆதாம் உடனே சாகாவிட்டாலும், தேவனை விட்டுப் பிரிக்கப்பட்டு நித்திய சாவை மனிதன் தழுவிவிட்டான். அந்த சாவை கிறிஸ்து தோற்கடித்துவிட்டார். ஆகவே, இனி நமது வாழ்வில் எதுவுமே வீணுக்கல்ல என்ற நம்பிக்கையை கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் நமக்குத் தந்துள்ளது. நமது நற்கிரியைகளுக்கு உடனடி பதில் கிடைக்காவிட்டாலும், எதுவும் வீணல்ல என்ற நம்பிக்கை இன்றும் நமக்கு உண்டு.
நாம் தோற்றுப்போனவர்கள்போல தோன்றலாம்; என்ன செய்தும் பலன் இல்லையே என்று அங்கலாய்க்க நேரிடலாம். நோய்வாய்ப்பட்டு, முதுமையடைந்து கலங்கி நிற்கலாம். ஆனால், கிறிஸ்து சகலத்தையும் முற்றிலும் வெற்றி சிறந்தார் என்ற நம்பிக்கை இருக்குமானால் இந்த சோர்வுகள் நம்மை ஒன்றும் செய்யமுடியாது. ஏனெனில் நமது வாழ்வும், செய்கின்ற ஒவ்வொரு நற்கிரியையும் நமக்காக அல்ல; இயேசு நம்மை இரட்சித்தபடியாலும், அவரது நாமத்திற்காகவுமே எல்லாம் செய்யவேண்டும். ஆகவே, உறுதியோடு முன்செல்வோம். உயிர்த்தெழுந்த ஆண்டவருடைய வல்லமை நம்மை பெலப்படுத்தி தொடர்ந்தும் வழிநடத்தட்டும்.
“கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபை உங்களுடனேகூட இருப்பதாக” (1கொரிந்தியர் 16:23).
ஜெபம்: இதுவரையிலும் எங்களை தாங்கி நடத்தி வந்த அன்பின் ஆண்டவரே, இனியும் உமக்குள் திடமாக நிற்க எங்களுக்கு அருள்தாரும். ஆமென்.