ஜெபக்குறிப்பு: மே 1 திங்கள்
“அவர் என் கால்களை மான்கால்களைப்போலாக்கி, உயரமான ஸ்தலங்களில் என்னை நடக்கப்பண்ணுவார்” (ஆபகூக்.3:19) என்ற வாக்குப்படியே இம்மாதம் முழுவதும் கர்த்தர் நம்மை தமது பெலத்தால் இடைகட்டி செவ்வையான வழியில் நடத்திட ஜெபிப்போம்.
முதல்முதல்
தியானம்: மே 1 திங்கள்; வேத வாசிப்பு: யோவான் 20:11-18
“வாரத்தின் முதலாம்நாள் அதிகாலையிலே இயேசு எழுந்திருந்தபின்பு, மகதலேனா மரியாளுக்கு முதல்முதல் தரிசனமானார்” (மாற்கு 16:9).
பாடசாலை வகுப்புத் தேர்வில் ‘முதலாவதாக’ வந்ததால் கிடைத்த வாழ்த்துக்கள் இன்னமும் நினைவிலிருக்கிறது. ‘முதலாவதாக அல்லது முதன்முதலாக’ என்ற தருணம் கிடைப்பது உண்மையிலேயே மிகப் பெரிய சந்தோஷம்தான். உயிர்த்தெழுந்த இயேசுவையும் முதன்முதலாகக் கண்ட பாக்கியம் அவருடனே இருந்த சீஷருக்கு அல்ல; அவரைப் பின்பற்றிய ஒரு பெண்ணுக்குத்தான் கிடைத்தது. அவள்தான் மகதலேனா மரியாள்.
சீஷர்களைப்போலவே உயிர்த்தெழுதலைக் குறித்து மரியாளுக்கும் தெளிவு இருக்கவில்லை. ஆனாலும், மரித்துப்போன உடலுக்கு மரியாதை செய்யப் பின்நிற்கவில்லை. அதிகாலையிலே கல்லறைக்குச் சென்றவள், வாசலில் வைக்கப்பட்டிருந்த கல் புரட்டப்பட்டிருந்ததைக் கண்டு, ஓடிச்சென்று பேதுருவுக்கும் யோவானுக்கும் அறிவித்தாள். அவர்களும் வந்து வெறுமையான கல்லறையைக் கண்டும், மேற்கொண்டு எதுவும் சிந்திக்க முடியாதவர்களாக திரும்பிப் போய்விட்டனர். மற்ற சுவிசேஷகர்கள் குறிப்பிட்டபடி மரியாளுடன்கூட வந்த பெண்களும் திரும்பிவிட்டனர். ஆனால், இவளோ கல்லறைத் தோட்டத்தைவிட்டு அகலவில்லை. இன்னுமொரு தடவை அவள் இயேசுவை இழக்க தயாரில்லை. கல்லறையினருகே நின்று உயிர்த்த இயேசுவுக்காக அல்ல; காணாமற்போன அவருடைய சரீரத்துக்காக அழுதுகொண்டிருந்தாள். சரீரத்தை யார் எடுத்திருப்பார் என்று தேடினாள். இயேசுவே வந்து முன்னே நின்றபோதும் அவளுடைய துக்கம் அவரை அவள் கண்களுக்கு மறைத்துவிட்டது. ஆனால், “மரியாளே” என்று இயேசு அவளுடைய பெயரைச் சொல்லிக் கூப்பிட்டபோது, நிச்சயமாகவே அவள் திகைத்திருப்பாள். அவள் பெயர் அழைக்கப்பட்டதும் அவர்தான் இயேசு என்று அறிந்து, “ரபூனி” என்றாள்.
தம்மைத் தேடுகிறவர்களுக்குக் காணப்படுகிற ஆண்டவர், நம்மையும் பெயர் பெயராக அறிந்திருக்கிறவர் என்ற அறிவு நமக்குப் புதிதல்ல. ஆனால், பல உயிர்த்தெழுந்த ஞாயிறுகளைக் கொண்டாடியும், அந்த உண்மை நமது வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறதா என்று சிந்தித்துப் பார்ப்போம். உயிர்த்த ஆண்டவர் இன்று மீண்டும் அந்த நிச்சயத்தை நிச்சயப்படுத்துகிறார். வீண் கலக்கங்கள் நமது கண்களைக் குருடாக்காதபடி விழித்திருப்போம். நமது பெயர் அழைக்கப்படும் சத்தம் இன்று நமது செவிகளில் கேட்கட்டும்.
“உங்கள் முழு இருதயத்தோடும் என்னைத் தேடினீர்களானால், என்னைத் தேடுகையில் கண்டுபிடிப்பீர்கள். நான் உங்களுக்குக் காணப்படுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்” (எரேமியா 29:13,14).
ஜெபம்: ஆண்டவரே, முழு இருதயத்தோடும் உம்மைத் தேடுகையில் எங்களுக்கு காணப்படுவீர் என்ற நம்பிக்கையைத் தந்ததற்காக ஸ்தோத்திரம். ஆமென்.
விமர்சிக்கும் வரம்
அதிகாலை வேளையில்… (மே-ஜுன் 2017)
– Dr.உட்ரோ குரோல்
வேதபகுதி: யோவான் 8: 1-32
மறுநாள் காலையிலே அவர் திரும்பி தேவாலயத்திற்கு வந்தபோது, ஜனங்களெல்லாரும் அவரிடத்தில் வந்தார்கள். அவர் உட்கார்ந்து அவர்களுக்கு உபதேசம் பண்ணினார் (யோவான் 8:2).
ஓர் ஆலயத்தின் போதகர் காலை ஆராதனையில் ஆவியின் வரங்களைப் பற்றி பிரசங்கம் பண்ணினார். அவரை சந்தித்த ஒரு பெண்மணி, “பாஸ்டர், எனக்கு விமர்சிக்கும் வரம் உண்டென்று நம்புகிறேன்” என்றார். போதகர் அவரைப் பார்த்து ‘இயேசு கிறிஸ்து கூறிய தாலந்துகளின் உவமையில் ஒரு தாலந்தைப் பெற்ற மனிதனை நினைவிருக்கிறதா?’ என்று கேட்டார். புரிந்துகொண்ட பெண்மணி தனது தலையை அசைத்தார். “அவன் அதை என்ன செய்தான் என்பதை அறிவீர்களா?” என்று அவர் கேட்டவுடன் ‘ஆம்; அவன் அதைப் புதைத்து வைத்தான்” என்று அவள் பதிலளித்தார். “நீயும் போய் அந்தப்படியே செய்!” என்றார் அப்போதகர்.
பரிசேயரும் சதுசேயரும் தங்களுக்கு விமர்சிக்கும் வரம் உண்டென்று எண்ணினர். எனவே அவர்கள் அடிக்கடி ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவை பேச்சில் அகப்படுத்த சூழ்ச்சி செய்தனர். இயேசு தமது வழக்கத்தின்படியே ஒலிவ மலையைக் கடந்து எருசலேமுக்குச் சென்றார். “மறுநாள் காலையிலே அவர் திரும்பி தேவாலயத்திற்கு வந்தபோது, ஜனங்களெல்லாரும் அவரிடத்தில் வந்தார்கள். அவர் உட்கார்ந்து அவர்களுக்கு உபதேசம் பண்ணினார்” (யோவா.8:2). அவர் தேவாலயத்துக்குத் திரும்பி வந்தது பரிசேயர்களுக்கும் வேதபாரகர்களுக்கும் அவரை அகப்படுத்தும் ஒரு நுட்பமான சூழ்ச்சியாக அமைந்தது. அவர்கள் விபசாரத்தில் பிடிபட்ட ஒரு பெண்ணை அழைத்துவந்தனர்.
கூடாரப்பண்டிகை கொண்டாட்ட காலத்தில் இவ்வித ஒழுக்கக்கேடுகள் மலிந்திருந்தன. மோசேயின் நியாயப்பிரமாணத்தை மேற்கோள் காட்டிய வேதபாரகர்கள் கிறிஸ்துவின்மேல் குற்றம் சுமத்த முயற்சித்தனர். அப்பெண்ணை கல்லெறியவேண்டும் என்று அவர் பதிலளித்தால் ரோம சட்டத்தை மீறினவராவார். ஏனெனில் இவ்வித தண்டனை ரோம அரசாங்க சட்டம் தடை செய்திருந்தது. ஆனால் அப்பெண்ணை கல்லெறியக்கூடாது என்றால் மோசேயின் சட்டதை மீறினவராவார் (உபா. 22:24). இயேசு எந்தப் பதிலைக் கூறினாலும் அவரை தாங்கள் குற்றம் கண்டுபிடித்துவிடலாம் என காத்திருந்தனர். மதத்தலைவர்களுக்கு அவ்விபச்சாரப் பெண்ணின் மீது ஆர்வமில்லை; ஆனால் இயேசுவின் பதிலிலேயே அவர்கள் குறியாயிருந்தனர். அப் பெண்ணைப் பற்றிய அவர்களுடைய விமர்சனம் இயேசுவை குற்றம் பிடிப்பதிலேயே ஆர்வமாயிருந்தது. ஆனால் கிறிஸ்துவோ இவ்விதமான எதிர்ப்புகளை எவ்விதம் சமாளிப்பது என்பதை அறிந்திருந்தார். அவர் உயர்வான கொள்கையை அறிவித்தார். “ஒரு குற்றவாளியை கல்லெறிய தீர்ப்பு வழங்கும்பொழுது, சாட்சிகள் முதலாவது கல்லெறியவேண்டும்” என்ற நிபந்தனையையும் மோசேயின் சட்டம் உள்ளடக்கியிருந்தது. “உங்களில் பாவமில்லாதவன் இவள்மேல் முதலாவது கல்லெறியக்கடவன்” என்று அவர் அறிவித்தது அவர்களுடைய விமர்சனத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தது. கூட்டத்தினர் ஒவ்வொருவராகக் கலைந்து சென்றனர். அங்கு பரிபூரண வாழ்வை நடத்திய ஆண்டவராகிய இயேசு மட்டுமே மீந்திருந்தார். அவர் ஒருவர் மட்டுமே அவளை நியாயந்தீர்க்கும் தகுதியுடையவர்.
அப்.பவுல் ரோமாபுரியாருக்கு எழுதின நிருபத்தில் இதுபோன்றதொரு வினாவையே எழுப்புகிறார். “இவைகளைக் குறித்து நாம் என்ன சொல்லுவோம்? தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார்? தேவன் தெரிந்து கொண்டவர்கள்மேல் குற்றஞ்சாட்டுகிறவன் யார்? தேவனே அவர்களை நீதிமான்களாக்குகிறவர். ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறவன் யார்? கிறிஸ்துவே மரித்தவர்; அவரே எழுந்துமிருக்கிறவர்; அவரே தேவனுடைய வலது பாரிசத்திலும் இருக்கிறவர்; நமக்காக வேண்டுதல் செய்கிறவரும் அவரே” (ரோம. 8:31,33-34). நீதியுள்ள வாழ்வு நடத்தி, நமக்காக தமது ஜீவனைத் தந்த ஒரே மனிதராலே அவர் மாத்திரமே நம்மை நியாயந்தீர்க்க முடியும் என்ற ஒரு திட்டத்தை தேவன் உருவாக்கியிருந்தார். உலகத்தை நியாயந்தீர்க்க வராமல் உலகத்தை இரட்சிக்க வந்தவரிடமே அந்த பெண் பேசிக்கொண்டிருந்தாள்.
ஒரு பெரிய தொழிலதிபர் தன்னுடைய மேசையின்மேல் ஒரு பெரிய கல்லை வைத்திருந்தார். அதில் “முதலாவது” என்ற சொல் எழுதப்பட்டிருந்தது. “உங்களில் பாவமில்லாதவன் … முதலாவது கல்லெறியக்கடவன்” என்ற இயேசு கிறிஸ்துவின் வார்த்தையை அது அவருக்கு எப்பொழுதும் நினைவூட்டிக் கொண்டிருந்தது. அவரிடம் பணிபுரிபவர்கள் கொடுக்கப்பட்ட இலக்கை அடையாமல் இருந்தால், அவர்களை குற்றப்படுத்தாமல் தன்னுடைய குறைகளை எண்ணிப் பார்க்க அச்சொல் அவருக்கு உதவியது. எனவே அவருடைய பணியாளர்களை அவர் இரக்கத்துடனும் அன்புடனும் நடத்தினார். மற்றவர்கள் பாவம்செய்யும்பொழுது நாம் எவ்வாறு நடக்க வேண்டும் என்று நாம் வாசித்த வேதபகுதியானது குறிக்கவில்லை. விபசாரத்தையும் மற்ற பாவங்களையும் நாம் கண்டிக்க வேண்டும், மற்றவர்களது குறைகளையும் பாவங்களையும் நாம் கவனிக்கவேண்டியதில்லை. நாம் ஒரு குறைபாடற்ற வாழ்வை வாழும் பொழுது அவ்வாறு வாழாத மற்றவர்களிடம் நாம் குற்றம் காண முயற்சிக்கலாம். அப்பெண் ஒரு பெரிய பாவியாயிருந்தாலும் அவளுடைய காலத்தில் வாழ்ந்த மற்றவர்களைவிட அவள் மோசமானவளல்ல. நாம் சந்திக்கும் மக்களை குற்றமுடையவர்களாய் காண்பது நமது காரியமல்ல என்பதை நினைவில் நிறுத்தவேண்டும்.
அதிகாலைப் பாடல்:
இயேசுவைப் போல நான் வாழ்ந்திட வேண்டும்,
அவருடைய அன்பை நான் காண்பிக்க வேண்டும்;
கலிலேயாவிலே அவருடைய சுயவெறுப்பு வாழ்வை,
நானும் கடைபிடிக்க நிதம் வாஞ்சிக்கிறேன்.
மொழியாக்கம்: Sis.அகஸ்டா மங்களதுரை
அனைத்துலக மொழிபெயர்ப்புப் பணிகள்
புனித வேதாகமத்தின் வரலாறு (மே-ஜுன் 2017)
அத்தியாயம்-10
சகோ.M.S.வசந்தகுமார்
தமிழ் வேதாகமத்தின் வரலாறு
(4) பேர்சிவெல் மொழிபெயர்ப்பு
பீட்டர் பேர்சிவெல் மெதடிஸ்ட் மிஷனைச் சேர்ந்தவராவார். இவர்களுக்கு வேதாகம மொழிபெயர்ப்பில் உதவி செய்தவர் தமிழ்ப்புலவர் ஆறுமுக நாவலராவார். உண்மையில், பேர்சிவெல் மொழிபெயர்ப்பின் தமிழ் நடை ஆறுமுக நாவலருடையதாகவே இருந்தது. இம்மொழிபெயர்ப்பின் வேலைகள் 1846 இல் ஆரம்பமானது.
யாழ்ப்பாணத்திலிருந்த மிஷனரிகள் தமது மொழிபெயர்ப்பின் பிரதிகளை சென்னைக்கு அனுப்பியபோது, அது மூலமொழியின் சரியான மொழிபெயர்ப்பு அல்ல என்றும், யாழ்ப்பாணத்தமிழ் இந்தியாவுக்கு ஒத்துவராது என்றும் சென்னை வேதாகமச் சங்கம் தெரிவித்தது. எனினும், இக் குற்றச்சாட்டுகளை யாழ்ப்பாணத்திலிருந்த மிஷனரிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆறுமுகநாவலருடைய தமிழ்நடை உயர்வானதாக இருப்பதினாலேயே சென்னை வேதாகமச் சங்கம் இவ்வாறு கூறுவதாக அவர்கள் வாதிட்டனர். 1848 இல் யாழ்ப்பாண வேதாகமத்தின் மொழிபெயர்ப்பு வேலைகள் பூர்த்தியடைந்தன. இம் மொழிபெயர்ப்பிலேயே கடவுளுக்குத் ‘தேவன்’ எனும் பதம் அறிமுகப்படுத்தப்பட்டது. ரேனியஸ் இப்பதத்தை ஒருசில இடங்களில் பயன்படுத்தியிருந்தபோதிலும், அவர் பராபரன் எனக் குறிப்பிட்டிருந்த இடங்களிலெல்லாம் பேர்சிவெல் குழுவினர் தேவன் எனும் பதத்தை உபயோகித்தனர். தேவன் எனும் பதம் அக்காலத்தில் பன்மையில் இந்து சமயத்தில் உள்ள தெய்வங்களைக் குறிக்கும் பதமாயிருந்தது. ஒருமையில், அத்தெய்வங்களில் ஏதாவது ஒரு தெய்வத்தைக் குறிக்கும். எனினும், இந்து சமயத்தில் முழுமுதற் கடவுள்களான பிரம்மா, சிவன், விஷ்ணு எனும் தெய்வங்களுக்குத் தேவன் எனும் பதம் அக்காலத்தில் உபயோகிக்கப்படவேயில்லை. முழுமுதற்கடவுள்களுக்குக் கீழானவர்களாயுள்ள தேவர்களே தேவன் என அழைக்கப்பட்டனர். இதனால், கிறிஸ்தவ கடவுளை இப்பதத்தால் அழைப்பது முறையல்ல என்று கருதப்படுகின்றது. ஆறுமுக நாவலரே தந்திரமாக இச்சொல்லை வேதாகமத்தில் புகுத்திவிட்டதாகவும் கூறப்படுகின்றது.
யாழ்ப்பாண மொழிபெயர்ப்பு சிறப்பான மொழிநடையில் மொழி பெயர்க்கப்பட்டிருந்த போதிலும், தென்னிந்தியாவிலிருந்த மிஷனரிகள் அதை ஏற்றுக்கொள்ள மறுத்தனர். அதில் சமஸ்கிருத வார்த்தைகள் அதிகம் உபயோகிக்கப்பட்டிருக்கிறது என்றும், அது தனி ஒரு மனிதனுடைய மொழிபெயர்ப்புப்போலத் தென்படுகிறது என்றும் குற்றஞ்சாட்டினர். இம்மொழி பெயர்ப்பு, சாதாரண பாமர மக்களால் விளங்கிக் கொள்ளப்பட முடியாத மொழிநடையில் உள்ளதென்றும் கருதப்பட்டது. இதனால் சென்னை வேதாகமச் சங்கம் இம்மொழி பெயர்ப்பை நிராகரித்துவிட்டது.
(5) ஹென்றி பவர் மொழிபெயர்ப்பு
யாழ்ப்பாண மொழிபெயர்ப்பு இந்தியாவில் ஏற்றுக்கொள்ளப் படாதமையினால், சகல சபைகளும் ஏற்றுக்கொள்ளக்கூடிய விதமான ஒரு புதிய மொழிபெயர்ப்பைத் தயாரிக்க வேண்டுமென சென்னை வேதாகமச் சங்கம் 1853 இல் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. அக்காலத்தில், அதுவரை காலமும் மொழிபெயர்க்கப்பட்டிருந்த 4 மொழிபெயர்ப்புகள் மக்கள் மத்தியில் இருந்தன. ஒவ்வொரு மிஷன் சங்கமும் தமக்கு விருப்பமான மொழிபெயர்ப்பை உபயோகித்து வந்தது. அந்நிலை மாறி, அனைவரும் ஒரு மொழிபெயர்ப்பை உபயோகிக்க வேண்டும் என்பதே வேதாகமச் சங்கத்தினது தீர்மானத்திற்கான காரணமாயிருந்தது.
இதனால், 1857இல், ஹென்றி பவர் என்பவருடைய தலைமையில் ஒரு புதிய வேதாகம மொழிபெயர்ப்புக் குழு நியமிக்கப்பட்டது. இக்குழுவில், தமிழ்நாட்டிலும் யாழ்ப்பாணத்திலும் பணியாற்றும் அனைத்து மிஷனரி சங்கங்களினது பிரதிநிதிகளும் இருக்க வேண்டும் என கூறப்பட்டபோதிலும், தமது மொழிபெயர்ப்பு நிராகரிக்கப் பட்டமையினால், யாழ்ப்பாணத்தில் பணிபுரிந்த மிஷனரிகள் இம்மொழி பெயர்ப்புக்குழுவில் இருக்கவிரும்பவில்லை.
புதிய வேதாகம மொழிபெயர்ப்புக் குழுவுக்குத் தலைவராக இருந்த ஹென்றி பவர் என்பவர், 1833ஆம் ஆண்டிலிருந்து லண்டன் மிஷனரி சங்கத்தின் சார்பில் இந்தியாவில் பணியாற்றியவராவார். இவர், கிரேக்கம், லத்தீன், சமஸ்கிருதம், ஆங்கிலம், தமிழ், கன்னடம், இந்துஸ்தானி எனும் மொழிகளை அறிந்திருந்தார். இவர் தமிழில் சில புத்தகங்களையும் எழுதியுள்ளார். இவர் 1858ஆம் ஆண்டு வேதாகம மொழிபெயர்ப்பு வேலைகளை ஆரம்பித்தார். இவரது மொழி பெயர்ப்புக் குழுவில் இருந்தவர்கள், மூலமொழி வேதாகமங்களையும், ஏற்கனவே தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருந்த வேதாகமங்களையும் ஆராய்ந்து பார்த்து ஒரு புதிய மொழி பெயர்ப்பைத் தயாரித்தனர். இதன் பிரதிகள் பலரிடம் பரிசீலனைக்காக அனுப்பப்பட்டு, அவர்களது விமர்சனங்களைக் கருத்திற்கொண்டு தேவையான திருத்தங்கள் செய்யப்பட்டபோதிலும், இம்மொழிபெயர்ப்பு 1611ஆம் ஆண்டு இங்கிலாந்தில் வெளிவந்த ஜேம்ஸ் அரசனது பதிப்பு வேதாகமத்தையே அடிப்படையாய்க் கொண்டிருந்தது.
ஹென்றி பவரின் குழுவினரது மொழி பெயர்ப்புப்பணிகளின் காரணமாக 1863 இல் புதிய ஏற்பாடும் 1868 இல் பழைய ஏற்பாடும் வெளிவந்தது. ஆரம்பத்தில், யாழ்ப்பாணக் கிறிஸ்தவர்கள் இப்புதிய மொழிபெயர்ப்பை ஏற்கவில்லை. அதேசமயம் அவர்கள், தமது மொழிபெயர்ப்பு இந்தியாவில் ஏற்றுக்கொள்ளப்படவேண்டும் என்றும் கூறவில்லை.
(தொடரும்)
வாசகர்கள் பேசுகிறார்கள்
(மே-ஜுன் 2017)
1. 2016 ஆம் ஆண்டு முழுவதும் தங்கள் வெளியீடு அனுதினமும் கிறிஸ்துவுடன் தினசரி தியான பத்திரிக்கையும், சத்தியவசனம் சஞ்சிகையும் ஒழுங்காக கிடைக்கப்பெற்றோம். மிக்க நன்றி. எங்கள் காலை குடும்ப ஜெபத்திற்கு அனுதினமும் கிறிஸ்துவுடன் வாசித்து பயன்பெறுகிறோம். மிக்க நன்றி.
Mrs.Sunder Selwyn,Vickramasinghpuram.
2. நான் மூன்று வருடங்களாக சத்தியவசன பங்காளராக இருக்கிறேன். அனுதினமும் கிறிஸ்துவுடன் புத்தகத்தைப் பெற்று அதிக பயன்பெற்று வருகிறேன். இந்த புத்தகத்தில் எழுதும் ஒவ்வொரு தியானப்பகுதியும் என் ஆத்துமாவில் பெலன் தருகிறதாயும், ஆவிக்குரிய வளர்ச்சிக்கு உதவியாகவும் இருக்கிறது. கடந்த வருடம் முழுவதும் கர்த்தர் ஆராய்ந்துமுடியாத காரியங்களையும் எண்ணிமுடியாத அதிசயங்களையும் என் வாழ்விலும் பிள்ளைகள் வாழ்விலும் செய்தார். கர்த்தருக்கு கோடி துதிகளை ஏறெடுக்கிறேன்.
Mrs.Maragatham, Chennai.
3. நாங்கள் அதிக நாட்களாக சத்தியவசன நிகழ்ச்சிகளைக் கேட்டு வருகிறோம். அது எங்கள் ஆவிக்குரிய வளர்ச்சிக்கு அதிக பயனுள்ளதாக இருக்கிறது.
Mrs.Prema George, Chennai.
4. அனுதினமும் கிறிஸ்துவுடன் தியானங்களை தினமும் வாசித்து அதன் மூலம் அநேக மனமாற்றம் அடைந்திருக்கிறேன். இத்தியானப் புத்தகத்தை வாசிப்பதன் மூலம் அதிக ஆறுதலடைகிறேன். 2016 ஆம் வருட கால அட்டவணைப்படி தினமும் பைபிள் வாசித்து முடித்துவிட்டேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். கடந்த 4 வருடங்களாக ஒழுங்காக படித்துவருகிறேன். ஆண்டவருக்கே ஸ்தோத்திரம் உண்டாவதாக!
Mrs.Darling Gunaranjitham, Vellore.
5. Sathiyavasanam and Anuthinamum Christhuvudan are a source of blessing to us. They are very useful to grow in our Lord Jesus Christ and know the Biblical truth to get blessings and be a blessings to others. I love the Radio and TV Programmes. May God bless the Gospel Ministry and supply the needs according to His Riches in Glory.
Mrs.Sakunthala Devamani, Palai.
6. நான் 86 வயதுள்ளவள். நீங்கள் அனுப்பும் அனுதினமும் கிறிஸ்துவுடன், சத்தியவசனம் புத்தகங்கள் கிடைக்கிறது. அதிக நன்றி. கர்த்தருக்கு ஸ்தோத்திரம். தின தியானங்கள் வாசிக்கிறது அதிக நன்மையாக இருக்கிறது. கர்த்தருடைய அழைப்புக்காக காத்திருக்கிறேன். எனக்காக ஜெபிக்கவும்.
Mrs.James, Secunderabad.
7. அனுதினமும் கிறிஸ்துவுடன் தியான புத்தகத்தின் அட்டவணை மூலம் வேதாகமத்தை வாசித்து முடிப்பதற்கும் கடந்த 4, 5 வருடங்களாக தினமும் காலை வேளையில் வாசிக்கவும் துதிஜெப விண்ணப்பங்களை ஏறெடுக்க தேவன் தந்த கிருபைக்காக அவரை ஸ்தோத்திரிக்கிறேன்.
Mr.Joel, Cbe.