ஜெபக்குறிப்பு: ஜுன் 30 வெள்ளி

“என் ஜீவனுள்ளமட்டும் நான் உம்மைத் துதித்து, உமது நாமத்தைச் சொல்லி கையெடுப்பேன்” (சங்.63:4) என்ற ஜெபத்தைப்போலவே ஒவ்வொரு நாளிலும் இயேசு என்னும் நாமத்தால் நமக்குக் கிடைத்த ஆசீர்வாதங்களுக்காக கர்த்தரை ஸ்தோத்திரித்து ஜெபிப்போம்…

மீண்டும் வனையும் கர்த்தாவே!

தியானம்: ஜுன் 30 வெள்ளி; வேத வாசிப்பு: ஏசாயா 43:1-23

“இந்த ஜனத்தை எனக்கென்று ஏற்படுத்தினேன். இவர்கள் என் துதியைச் சொல்லி வருவார்கள்.” ஏசாயா 43:21

“என் மகன் என் பெயரைப் பெருமைப்படுத்துவான் என்று எதிர்பார்த்தேன். ஆனால், அவனோ அதைக் கெடுத்துப்போட்டான். ஆனாலும் அவன் என் மகன். நான் அவனைத் திரும்பவும் தூக்கியெடுத்து, என் பெயர் சொல்லும் பாத்திரமாக மாற்றுவேன்” என்று ஒரு தகப்பன் உணர்ச்சிவசப்பட்டுப் பேசினார்.

தமது நாமத்தைப் பூமியிலே மகிமைப்படுத்தி, தமது துதியைச் சொல்லுவார்கள் என்றுதான் கர்த்தர் இஸ்ரவேலர்களை அழைத்தார். எகிப்திலிருந்து அவர்களை அத்தனை அதிசயமாக மீட்டெடுத்து, வழிநெடுகே மற்ற ராஜாக்கள் இவர்களுக்குப் பயப்படுமளவுக்கு இவர்களிடம் பராக்கிரமமான காரியங்களைச் செய்தார். கானானில் அவர்களைக் குடியமர்த்தியதை முழு உலகமும் அன்று கண்டு வியந்தது. ஆனால், அவர்கள் வழிவிலகியதால், மறுபடியும் பாபிலோனின் சிறைப்பிடித்தலுக்கு ஆளாக நேர்ந்தது. இந்த 43ம் அதிகாரத்தில் மீண்டும் ஒரு யாத்திரையைக் குறித்து ஏசாயா முன்னுரைப்பதை நாம் காணலாம். “நான் என் மகிமைக்கென்று சிருஷ்டித்து உருவாக்கிப் படைத்து, என் நாமந்தரிக்கப்பட்ட யாவரையும் கொண்டுவா என்பேன்” (ஏசாயா 43:7) என்றார் கர்த்தர். “என் ஜனத்தை நான் மறுபடியும் கொண்டுவருவேன். அவர்கள் எனக்கென்று ஏற்படுத்தப்பட்டவர்கள். அவர்கள் என் துதியைச் சொல்லி வருவார்கள்” என்றும் உறுதியளித்தார்.

கர்த்தர் இஸ்ரவேலை அழுகையின் பாத்திரமாக அல்ல; துதியின் பாத்திரமாகவே உருவாக்கியிருந்தார். அந்தத் துதி அவர்கள் வாயில் மறைந்துபோக அவர்களே காரணராயினர். அவர்கள் கெட்டுப்போன களிமண்போல ஆயினர். ஆனாலும் கர்த்தர் அவர்களைப் புறக்கணிக்கவில்லை. மறுபடியும் அவர்களை வனையும்படி சித்தம்கொண்டார். பாபிலோனிலிருந்து மீண்டும் அழைத்துவந்து, தமக்கேற்றதாக வனைவதாக உறுதி கூறினார்.

தேவன் நம்மை வீணாய் அழைக்கவில்லை. தமக்குச் சாட்சியாகவும், தமது துதியை இந்த உலகில் கூறி அறிவிப்போம் என்று நம்பியே, தமது பிள்ளைகள் என்ற உரிமையை நமக்குத் தந்திருக்கிறார். நாமோ இந்த உலகத்தின் அசூசிகளுடன் கலந்து கெட்டுப்போன களிமண் ஆனோம். ஆனாலும், தேவன் இன்று நமக்கு ஒரு நம்பிக்கை தருகிறார். அவர் நம்மை மறுபடியும் புதுப்பிக்க, தமக்கு உகந்த பாத்திரமாக, தேவனுடைய துதியைச் சொல்லும் பாத்திரமாக வனைய ஆயத்தமாயிருக்கிறார். அவர் கைகளில் நம்மைத்தர நாம் ஆயத்தமா? “கர்த்தரை நான் எக்காலத்திலும் ஸ்தோத்தரிப்பேன். அவர் துதி எப்போதும் என் வாயிலிருக்கும்” (சங்கீதம் 34:1).

ஜெபம்: அன்பின் தேவனே, நான் உம்முடைய சித்தத்தினுள் வாழவும், என் வாயில் என்றும் துதி மங்காத பாத்திரமாக மீண்டும் வனையும்படியும் உமது கரத்தில் களிமண்ணாக என்னை ஒப்புவிக்கிறேன். ஆமென்.

ஜெபக்குறிப்பு: ஜுன் 29 வியாழன்

“… தேவனாகிய கர்த்தரிடத்திலே அநியாயமும் முகதாட்சிணியமும் இல்லை” (2நாளா.19:7) எல்லார்மேலும் தயவுள்ள கர்த்தர்தாமே பற்பலவிதத் தேவைகளோடிருக்கும் 12 நபர்களுக்கு வேண்டிய விடுதலையையும் சகாயத்தையும் கட்டளையிட்டு வழிநடத்த வேண்டுதல் செய்வோம்.

கனவீனத்திற்குரிய பாத்திரமானாலும்…

தியானம்: ஜுன் 29 வியாழன்; வேத வாசிப்பு: 2தீமோத்தேயு 2:10-21

“ஒரு பெரிய வீட்டிலே பொன்னும் வெள்ளியுமான பாத்திரங்களுமல்லாமல், மரமும் மண்ணுமான பாத்திரங்களுமுண்டு. அவைகளில் சில கனத்திற்கும் சில கனவீனத்திற்குமானவைகள்” ( 2 தீமோ. 2:20).

நமது வீடுகளில் உள்ள பாத்திரங்களில் சில உபயோகத்துக்கு உகந்தவை அல்ல. இருந்தாலும், நாம் இலகுவில் அவற்றை எறிந்துவிட மாட்டோமல்லவா! ஏதாவது செய்து அவற்றைப் பயன்படுத்த முயற்சிப்பதும் உண்டு. சாதாரண பாத்திரங்கள் பற்றிய விஷயத்திலே இப்படியென்றால், நமது சகோதர சகோதரிகளின் விஷயத்தில் நாம் எவ்வளவு ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்!

தன் ஊழியப் பயணத்தில் தீமோத்தேயுவைச் சந்தித்த பவுல், அவனை தன் சொந்த மகனைப்போல ஏற்றுக்கொண்டு, வேதசத்தியங்களைக் கற்றுக் கொடுத்து, அதில் நிலைத்திருக்கும்படி புத்திசொன்னதுமல்லாமல், எபேசு சபையினருக்கு அவற்றை ஜாக்கிரதையாகக் கற்றுக்கொடுக்கும்படிக்கும் பணித்தார். ஆனால், சபையிலே சத்தியத்திற்கு முரண்பட்ட பல போதனைகள் எழுந்தன. அந்தச்சமயத்தில் பவுல் தீமோத்தேயுவை திடப்படுத்தினார். ஒரு பெரிய வீட்டிலே கனத்துக்கும் கனவீனத்திற்குமுரிய பாத்திரங்கள் இருக்கத்தான் செய்யும் என்று உதாரணம் காட்டி விளங்கவைத்தார். அதற்காக கனவீனமான பாத்திரங்களை வெளியே எறியும்படி கூறவில்லை. மாறாக, கனவீனமுள்ளதும், எஜமானுக்குப் பிரயோஜனமுள்ள கனத்துக்குரிய பாத்திரமாக மாறமுடியும் என்ற நம்பிக்கையைக் கொடுத்து, அவர்களை நடத்துகின்ற தைரியத்தையும் கொடுத்தார் பவுல்.

இன்றும் கனவீனமான பாத்திரங்களாக, கிறிஸ்துவின் போதனைகளை தவறான முறையில் போதிப்போர் நம் மத்தியிலும் இருக்கிறார்கள். இவர்களால், கிறிஸ்துவுக்குள் வளர்ந்துவருகின்ற விசுவாசிகளில் சிலர் பல வழிகளிலும் இடறலடைந்து விடுவதுண்டு. ஆகவே, கனவீனமான அந்தப் பாத்திரங்கள், சுத்திகரிக்கப்படவேண்டிய அவசியத்தை அவர்களுக்குப் புரியவைக்கின்ற பொறுப்பு இன்று நம்முடையதே. முதலாவது, சத்தியத்திற்கு ஏற்ற கனமுள்ள பாத்திரமாக நாம் வாழுகின்றோமா என்று நம்மை ஆராய்ந்து பார்ப்போமாக. அடுத்து, நமது சபைகளில் சத்தியத்திற்குப் புறம்பான போதனைகள், வீண்பேச்சுகள் எதுவும் எழும்பாதபடி காத்துக்கொள்வோமாக. இவ்விரண்டையும் பவுல் தன் வாழ்க்கையில் நிலைநிறுத்தியது மட்டுமல்ல, சபையினரின் வாழ்க்கையிலும் இது கடைப்பிடிக்கப்படவேண்டும் என்றும் பவுல் தீமோத்தேயுவுக்கு அறிவுரை எழுதினார்.

அவ்வாறே, “…உங்களில் ஒருவன் சத்தியத்தைவிட்டு விலகி மோசம் போகும்போது, மற்றொருவன் அவனைத் திருப்பினால், தப்பிப்போன மார்க்கத்தினின்று பாவியைத் திருப்புகிறவன் ஒரு ஆத்துமாவை மரணத்தினின்று இரட்சித்து, திரளான பாவங்களை மூடுவானென்று அறியக்கடவன்” (யாக்.5:19-20) என்பதை மனதிற்கொண்டு கனவீனமான பாத்திரங்களும் கனத்துக்குரியவர்களாகும்படி அவர்களை நடத்துவோமாக.

ஜெபம்: அன்பின் தேவனே, கனவீனமான பாத்திரமாய் இருப்பவர்களை ஒதுக்கி தள்ளாதவாறு அவர்களும் கனத்துக்குரிய பாத்திரமாகும்படி நாங்கள் பிரயாசப்பட உதவியருளும். ஆமென்.