ஜெபக்குறிப்பு: ஜுன் 4 ஞாயிறு

“நம்மை நாமே நிதானித்து அறிந்தால் நாம் நியாயந்தீர்க்கப்படோம்” (1கொரி.11:31) இவ்வாக்குப்படி நாம் நம்மை ஆராய்ந்து இந்தநாளின் திருவிருந்தில் பங்கு பெற்றிடவும், சாந்தத்தையும் மனத்தாழ்மையையும் ஆண்டவரிடத்தில் கற்றுக்கொண்டு அவருக்காக வாழ்ந்திட நம்மை அர்ப்பணித்து ஜெபிப்போம்.

வெறுமையான பாத்திரம்

தியானம்: ஜுன் 4 ஞாயிறு; வேத வாசிப்பு: சங்கீதம் 23:1-6

“என் பாத்திரம் நிரம்பி வழிகிறது.” சங்கீதம் 23:5

யுத்தங்களும் உள்நாட்டுக் கலவரங்களும் அதிகரிக்கும்போது, அந்த நாட்டின் ஜனங்கள், தம்மைக் காப்பாற்றிக்கொள்வதற்காக நாட்டைவிட்டு வெளியேறி பிறநாடுகளில் அகதிகளாகத் தஞ்சமடைகின்றனர். சகலத்தையும் இழந்த இவர்களுடைய நிலைமை, “வெறுமையான பாத்திரங்கள்” போன்றதுதான். ஆனால், இதே பாத்திரங்கள் நிரம்பி வழிகின்ற பாத்திரங்களாக, சகல சலுகைகளும் பெற்று வாழும்போது எத்தனை சந்தோஷம்!

தாவீதின் மகனான அப்சலோம், இஸ்ரவேல் மனுஷரை சேர்த்துக்கொண்டு தன் தகப்பனைக் கொன்றுபோடும்படி பின்தொடர்ந்து கீலேயாத் தேசத்தில் பாளயம் இறங்கினான். தாவீதும் அவனுடைய ஜனங்களும் மக்னாயீமில் சேர்ந்தார்கள். அப்போது, தாவீதும், அவரோடிருந்த ஜனத்தாரும் வனாந்தரத்திலே பசியும், இளைப்பும், தவனமுமாயிருந்தார்கள். அம்மோன் புத்திரரில் சோபி, மாகீர், பர்சிலா என்பவர்கள், தாவீதையும் அவனோடு இருந்தவர்களையும் போஷித்து பராமரித்தார்கள் (2சாமு.17:1-29). இவ்விதமாக ஓரிரு முறைகள் அல்ல; பல தடவைகள் ஒரு வெறுமையான பாத்திரம்போன்ற உணர்வினால் தாவீது தாக்குண்டார். எனினும், தான் நம்பியிருந்த தேவன்மீது கொண்டிருந்த பற்றுதலை தாவீது எந்தச் சமயத்திலும் இழந்துவிடவில்லை.

ஒரு பாத்திரம் நிரம்பி வழியவேண்டுமாகில், அது பயன்பாட்டுக்கு உகந்த தாய், வெடிப்பற்றதும், உடைந்து போகாததும், அதின் வாய் மேல்நோக்கிப் பார்த்ததுமாய் வைக்கப்பட்டிருக்கவேண்டும். தாவீது எப்போதும், எல்லாச் சூழ்நிலையிலும் அனைவருக்கும் உபயோகமுள்ளவராக வாழ முயற்சித்தார். தேவனுக்குப் பிரியமற்ற எந்தக் காரியமும் தன் வாழ்க்கையில் வெடிப்பை ஏற்படுத்தி, தேவனுக்கும் தனக்கும் இடையிலான உறவு உடைந்துவிடாதபடி தேவசமுகத்தில் தன்னை எப்போதும் ஆராய்ந்து பார்த்து நடந்தார். தன் சூழ்நிலைகள் எப்படி அமைந்தாலும், சூழ்நிலைகளையல்ல, தேவனையே நோக்கிப்பார்த்து நடந்தார். இவற்றினாலேயே தாவீதின் வாழ்வின் ஆவிக்குரிய பிரகாரமும், உலக பிரகாரமும் நிரம்பி வழிந்தது. ஆம் தாவீதின் பாத்திரம் நிரம்பி வழிந்தது.

நாம் இன்று வெறுமையான பாத்திரங்களா? நிரம்பி வழியும் பாத்திரங்களா? வெறுமை சூழும்போது, அது நிச்சயம் மாறும் என்ற நம்பிக்கை நமக்கு அவசியம். எந்தச் சூழ்நிலைகளும் நம்மை ஆட்கொள்ள இடமளிக்காமல், நாம் தேவனுக்காக வாழ முயற்சிக்கவேண்டும். மேலும், நாம் உடைந்துபோகக்கூடிய சூழ்நிலைகள் ஏற்படினும் சூழ்நிலைகளை அல்ல, தேவனையே நோக்கி பார்க்கவேண்டும். தேவனுக்குப் பிரியமற்ற காரியங்கள் நம் ஆவிக்குரிய வாழ்க்கையில் வெடிப்பை ஏற்படுத்தாதபடிக்கு நம்மைக் காத்துக்கொள்ளவும் வேண்டும். “என் ஆத்துமாவே, நீ ஏன் கலங்குகிறாய்? ஏன் எனக்குள் தியங்குகிறாய்? தேவனை நோக்கிக் காத்திரு.” சங்கீதம் 42:5

ஜெபம்: அன்பின் ஆண்டவரே, நிரம்பி வழியும் பாத்திரமாக நான் வாழ முடியாத படி என் வாழ்வில் உள்ள தடைகள் யாவற்றையும் நீக்கியருளும். ஆமென்.