ஜெபக்குறிப்பு: ஜுன் 16 வெள்ளி

சத்தியவசன பிரதிநிதிகள் திருச்சியில் உள்ள சகோ.சந்திரசேகர், சிவகாசியில் உள்ள சகோ.சாமுவேல் துரைராஜ், மதுரை மற்றும் நாகப்பட்டினம் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் இவர்களது ஊழியப்பணிகளையும் குடும்பங்களையும் கர்த்தர் ஆசீர்வதித்திட ஜெபிப்போம்.

தலைவனான பாத்திரம்

தியானம்: ஜுன் 16 வெள்ளி; வேத வாசிப்பு: யாத்திராகமம் 4:1-13

“…நீ போ நான் உன் வாயோடேயிருந்து நீ பேசவேண்டியதை உனக்குப் போதிப்பேன்” யாத்திராகமம் 4:12

மனத்துணிவு, பேச்சுத்திறன், உறுதியான நம்பிக்கை, புத்தி சாதுரியம், ஞானமான அணுகுமுறை, இவை ஒரு தலைவனுக்குத் தேவை. ஆனால், இத்திறமை இருந்தும், அவன் சிந்தித்துச் செயலாற்ற தவறினால் அவனுக்குரிய தலைமைப் பதவி தவறிப்போகாதா? இப்படியாக தவறவிட்ட ஒருவன், திரும்பவுமாக தலைமைத்துவப் பதவிக்கு அழைக்கப்பட்டால் அவன் அதற்கு எப்படி முகங்கொடுப்பான்?

மோசே ஒரு எபிரெயனாக இருந்தும், அரண்மனையில் வளர்க்கப்பட்டதால் ராஜ கல்வி, ராஜ தந்திரங்கள் அனைத்தையும் கற்று ஒரு வீரமுள்ள தலைவனுக்குரிய அனைத்துத் திறமைகளையும் தனக்குள்ளே வளர்த்துக் கொண்டிருந்தான். ஆனால், தருணத்தில் சிந்தித்துச் செயலாற்றத் தவறினான். எபிரெயனுடன் சண்டையிட்ட ஒரு எகிப்தியனை இரகசியமாகக் கொன்று புதைத்துவிட்டான். இந்த சம்பவம் வெளிப்பட்டதும், பார்வோனுக்குப் பயந்து (யாத்.2:14,15) தப்பியோடினான். ஆனால், மோசேக்குள் இருந்த தலைவனுக்குரிய குணாதிசயங்களையும், சொந்த ஜனத்தைக் குறித்து அவன் காட்டிய வைராக்கியத்தையும் தேவன் கண்டார். ஒரு தலைவனாக மோசேயைக் கண்ட கர்த்தர், அவனது எண்பது வயதுவரைக்கும் அவனை ஆயத்தம் செய்தார். வேளை வந்தபோது, தமது ஜனத்தை அடிமைத்தனத்திலிருந்து மீட்டெடுக்கும் மீட்பின் தலைவனாக மோசேயை உயர்த்தினார். என்றாலும், அவனுக்குள்ளிருந்த பயமும், தன்னம்பிக்கை அற்ற நிலையும் தேவ அழைப்பை ஏற்கத் தடையாயின. என்றாலும், கர்த்தர் அவனைப் பெலப்படுத்தி, இஸ்ரவேலின் தலைவனாக எகிப்துக்கு அனுப்பினார் என்று காண்கிறோம்.

இன்றும் நம் ஒவ்வொருவரையும் ஏதோவொரு விதத்தில் தலைமைத்துவப் பாத்திரங்களாக தேவன் ஆயத்தஞ்செய்து, அழைத்துமிருக்கிறார். வீட்டுத் தலைவன் தலைவி, பாடசாலையில் ஆசிரியப் பதவி என்று ஏதோவொரு பொறுப்பு நமக்கும் தரப்பட்டுள்ளது. ஆனால் நாமோ மோசேயைப்போல வாழ்வில் தவறின அனுபவங்களினால் ஏற்பட்ட விளைவுகளுக்குப் பயந்து, தன்னம் பிக்கை இழந்து, திரும்பவும் அதே தவறுகளை விட்டுவிடுவோமோ என தயக்கத்தால் தேவ அழைப்பை ஏற்க மறுக்கிறவர்களாகக் காணப்படுகிறோம்.

ஆம்! எப்படிப்பட்ட தகுதியற்ற நிலைகளிலிருந்தும் நம்மை தகுதிப்படுத்திப் பயன்படுத்த தேவன் வல்லவராயிருக்கிறார். ஆகவே, நம்மைத் தகுதியற்றவர்கள் என்று எண்ணவைக்கும் நம் குணாதிசயங்களைத் தேவனிடம் அறிக்கை செய்து, தேவபெலத்தோடு, “…பின்னானவைகளை மறந்து, முன்னானவைகளை நாடி…” (பிலிப்பியர் 3:13), தேவபெலத்துடன் கொடுக்கப்பட்ட பொறுப்பை, பொறுப்புடன் முன்னெடுப்போமாக.

ஜெபம்: அன்பின் தேவனே, எனக்குத் தரப்பட்ட பொறுப்புகளில் நான் எங்கே தவறியிருக்கிறேன் என்பதை நிதானித்து, அதை சரிசெய்ய கிருபை தாரும். ஆமென்.