ஜெபக்குறிப்பு: ஜுன் 26 திங்கள்

“மரத்திலே தூக்கப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து நமக்காக சாபமானார்” (கலா.3:13) இவ்வாக்குப்படியே நாம் அனுபவிக்க வேண்டிய சாபங்களை தம்மேல் ஏற்றுக்கொண்ட கிறிஸ்துதாமே மதுரை மாவட்டத்தின் சாபங்கள் நீங்குவதற்கும், விக்கிரகங்கள்யாவும் கட்டோடே அழிந்துபோவதற்கு உதவி செய்திடவும் ஜெபிப்போம்.

தகுதி இழந்த பாத்திரம்

தியானம்: ஜுன் 26 திங்கள்; வேத வாசிப்பு: 1சாமுவேல் 15:5-23

“இப்படியிருக்க, தன்னை நிற்கிறவனென்று எண்ணுகிறவன் விழாதபடிக்கு எச்சரிக்கையாயிருக்கக்கடவன்.” 1கொரி.10:12

உயர் நிலையிலிருக்கிறவர்கள் தங்கள் நிலையிலிருந்து கீழே இறங்க விரும்புவதில்லை. தாங்களே பெரியவர்கள், தாங்கள் நினைத்ததைத் தாங்கள் செய்யலாம் என்ற இறுமாப்பில் நடக்கும்போது, அவர்கள் தள்ளப் பட்டுப்போனால் எப்படியிருக்கும்?

இஸ்ரவேலர் தங்களுக்கு ஒரு ராஜா வேண்டுமென்று கேட்டபோது, அவர் கள் கேட்டுக்கொண்டதினால் கர்த்தர் சவுலை ராஜாவாக அபிஷேகம் பண்ணும்படி சாமுவேலைப் பணித்தார். ஆனால், தாழ்மையான சுபாவம் கொண்டவன் போல தன்னைக் காட்டிக்கொண்ட சவுல், தருணத்தில் தன் சுயரூபத்தை வெளிப்படுத்தினான். ஏற்கனவே அவசரப்பட்டு சர்வாங்க தகனபலியை செலுத்தி தேவனுடைய கட்டளையை மீறிய நிலையில் (1சாமு.13:13,14) சவுல் மறுபடியும் தனது இஷ்டப்படி பெரிய தவறைச் செய்கிறான். அமலேக்கியருடனான யுத்தத்தில், கர்த்தர் கட்டளையிட்டபடி யுத்தம் செய்தாலும், கர்த்தர் இட்ட கட்டளையை மீறி, அமலேக்கிய ராஜாவையும், ஆடு மாடுகள் உட்பட முதற்தரமான இரண்டாந்தரமான சகலவற்றையும் தப்பவைத்து தன்னுடன் கொண்டு வந்துவிட்டான். இது கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பாயிருந்ததால், கர்த்தர் சவுலைத் தள்ளிவிட்டார் (1சாமு.15:1-35). மாத்திரமல்ல, தாவீதில் எரிச்சலடைந்த சவுல், தாவீதைக் கொலை செய்யும்படி அவனைத் துரத்திக்கொண்டே இருந்தான். இறுதியிலே சவுல் பெலிஸ்தரினால் கொலைசெய்யப்பட்டான். ராஜா என்ற உயர்வான பாத்திரம், பெருமை, கீழ்ப்படியாமை, எரிச்சல்; என்பனவற்றுக்கு இடமளித்துத் தள்ளப்பட்ட பாத்திரமானது.

“தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார்” (யாக்.4:6). பெருமையுள்ளவன் தேவனைப் பிரியப்படுத்தமுடியாது. நாம் தேவனுக்கு மாத்திரமல்ல, “நீங்கள் மனுஷருடைய கட்டளைகள் யாவற்றிற்கும் கர்த்தர் நிமித்தம் கீழ்ப்படியுங்கள்” (1பேது.2:13) என்று நமக்குக் கட்டளையிடப்பட்டிருக்கிறது.நாம் எவ்வளவு உயர்நிலையில் வைக்கப்பட்டாலும், அதுவும் தேவனாலேதான் உண்டாயிருக்கிறது என்பதை மறக்கக்கூடாது. அதைவிட்டு, அகந்தைக்கும் பெருமைக்கும் இடமளித்தால், நாமே நமக்குத் தீங்குசெய்வது போலாகும். “கோபத்தை நெகிழ்ந்து, உக்கிரத்தை விட்டுவிட்டு, பொல்லாப்புச் செய்ய ஏதுவான எரிச்சல் உனக்கு வேண்டாம்” (சங். 37:8) என்கிறது தேவனின் வார்த்தை. நமது ஆண்டவரே, ஊழியம் கொள்ளும்படி வராமல் ஊழியம் செய்யும்படிக்கு வந்து, அப்படியே நமக்கு முன்மாதிரியை வைத்துப்போயிருக்க, நமக்கு ஏன் பெருமையும் அகங்காரமும். நாம் எந்த நிலையில் இருந்தாலும், அந்த நிலையில் தேவனை மகிமைப்படுத்துவோமாக. எக்காரணங்கொண்டும் நாம் தள்ளப்பட்டுப்போகாதபடிக்கு ஜாக்கிரதையாக இருப்போமாக.

ஜெபம்: தேவனே, வீண்பெருமை, அகங்காரம், என்னை யாரும் அசைக்க முடியாது என்ற வீம்பு எனக்கு இருக்குமானால் இன்று நீர் என்னைத் தயவாய் மன்னித்து தாழ்மையைக் கற்றுக்கொள்ள உதவியருளும். ஆமென்.