ஜெபக்குறிப்பு: ஜூலை 31 திங்கள்

“நீர் மீட்டுக்கொண்ட இந்த ஜனங்களை உமது கிருபையினாலே அழைத்து வந்தீர்” (யாத்.15:13) இம் மாதம் முழுவதும் கர்த்தருடைய கிருபையினாலும் அவரது தயவினாலும் கிடைத்த வழிநடத்துதல்கள் ஆறுதல் ஆலோசனைகள் எல்லாவற்றிற்காகவும் கர்த்தரை ஸ்தோத்திரிப்போம்.

குணசாலியான ஸ்திரீ!

தியானம்: ஜூலை 31 திங்கள்; வேத வாசிப்பு: நீதிமொழிகள் 31:1-31

“அவள் பிள்ளைகள் எழும்பி அவளைப் பாக்கியவதி என்கிறார்கள். அவள் புருஷனும் அவளைப் பார்த்து, … புகழுகிறான்” (நீதி.31:28-29).

ஒரு குடும்பத்தில் பெண் குழந்தை பிறக்கப்போகிறது என்றதுமே குடும்பத்தினர் தங்கத்தின் விலையைக் குறித்து விசாரிக்க ஆரம்பித்துவிடுவர். காரணம் பெண் என்றாலே அலங்காரமானவள் என்றுதான் கருதப்படுகிறாள். ஆனால், இங்கே குணத்திலே நிறைந்திருக்கும் குணசாலியான பெண்; அந்த அலங்காரமான முத்துக்களைவிட அவளது விலையதிகம் என்று ஆக்கியோன் குறிப்பிடுவதைக் காண்கிறோம். பல உன்னதமான நீதிமொழிகள் அடங்கிய இந்த நீதிமொழிகள் புத்தகத்தின் கடைசி அதிகாரம், உன்னதமான ஒரு பெண்ணைக் குறித்து எழுதப்பட்ட நீதிமொழிகளுடன் நிறைவடைகிறது.

இந்தக் குணசாலியான பெண்ணினாலே அவளுக்கும் அவளது குடும்பத்துக்கும் மட்டுமல்ல; ஏனையோருக்கும் ஆசீர்வாதம் பெருகுவதைக் காண்கிறோம். அவள் தன்னைச் சுற்றியிருக்கும் அனைவருக்குமே ஒரு ஆசீர்வாதமாகத் திகழுகிறாள். அவளது அனைத்து தன்மைகளுக்கும் மூலகாரணம் அவள் கர்த்தருக்குப் பயப்படும் பெண்ணாக இருப்பதேயாகும். கர்த்தருக்குப் பயந்து அவள் வாழுவதால் அவளைச் சுற்றி அவள் செய்யும் காரியங்கள் அனைத்துமே வாய்க்கிறது. அனைத்திலும் தேவாசீர்வாதம் வெளிப்படுகிறது.

அவள் எதிர்காலத்தை எதிர்கொள்ளும்படிக்கு ஆயத்தமுள்ளவளாய் இருப்பதோடு தன் வீட்டுக்காரியங்கள் எப்படி நடக்கிறது என்பதைக் குறித்தும் கவனமாய் இருக்கிறாள். அதில் அவளின் பொறுப்பான தன்மை விளங்குகிறது. இருட்டோடே எழுகிறாள்; இரவிலும் அவளது விளக்கு அணையாதிருக்கிறது என்பதிலிருந்து, அவள் எவ்வளவு சுறுசுறுப்பானவளாய் இருக்கிறாள் என்பது புலனாகிறது. அவளது புருஷன் எந்த இடத்திலிருந்தாலும் பேர்பெற்றவனாய் இருக்கிறான். அதற்குக் காரணமாய் அந்த ஸ்திரீயே இருக்கிறாள். புருஷனின் நம்பிக்கைக்கும், பெருமைக்கும் காரணமானவளாய் இருக்கிறாள்.

வெளியலங்காரங்களில் அதிகமான நேரத்தையும், பணத்தையும் செலவிடும் தற்காலப் பெண்களுக்கு சவாலாக அமைகிறாள் இந்தக் குணசாலியான பெண். அவள் தனது அலங்காரத்துக்காக நேரத்தையும், பணத்தையும் விரயம் செய்யவில்லை, கர்த்தருக்குப் பயந்து வாழும் பெண்ணாக அவள் வாழ்வதால் அவளது அலங்காரம் தானாக உருவாகி வெளிப்படுகிறது.

“குணசாலியான ஸ்திரீ தன் புருஷனுக்குக் கிரீடமாயிருக்கிறாள், இலச்சை உண்டுபண்ணுகிறவளோ அவனுக்கு எலும்புருக்கியாயிருக்கிறாள்” (நீதி.12:4).

ஜெபம்: அன்பின் ஆண்டவரே, இந்தநாளில் தியானித்த குணசாலியான ஸ்திரீயைப்போல் எங்களைச் சுற்றியுள்ள அநேகருக்கு ஆசீர்வாதமானவர்களாய்க் காணப்பட எங்களுக்குக் கிருபைதாரும். ஆமென்.

ஜெபக்குறிப்பு: ஜூலை 30 ஞாயிறு

“நான் பிதாவானால் என் கனம் எங்கே? நான் எஜமானானால் எனக்குப் பயப்படும் பயம் எங்கே” (மல்கியா 1:6) இந்நாளில் தேவனைத் தேடுகிறதற்கு உணர்வற்ற நிலையில் இருப்பவர்களோடு கர்த்தர் பேசவும், திருச்சபைகளில் முக்கியப் பொறுப்பில் உள்ளவர்கள் கர்த்தருக்கு பிரியமாய் ஜீவிக்கவும் பாரத்துடன் ஜெபிப்போம்.

இரண்டு மனு!

தியானம்: ஜூலை 30 ஞாயிறு; வேத வாசிப்பு: நீதிமொழிகள் 30:1-33

“நான் பரிபூரணம் அடைகிறதினால் மறுதலித்து, கர்த்தர் யார் என்று சொல்லாதபடிக்கும், … என் படியை எனக்கு அளந்து என்னைப் போஷித்தருளும்” (நீதி.30:9).

ஒரு ராஜாவின் முன்னால் இறைவன் தோன்றி உனக்கு வேண்டியது  என்னவென்று கேட்டபோது, அவன் ஏற்கனவே ராஜாவாக இருக்கிறான் என்றாலும், அவனது பேராசை அவனை விடவில்லை. நான் தொட்டதெல்லாம் பொன்னாக வேண்டும் என்று அவன் கேட்டான். அது அவனுக்குக் கொடுக்கப்பட்டது. அவன் சந்தோஷத்தால் புசித்துக் குடிப்பதற்காக உட்கார்ந்தான். சாப்பிடும்படிக்கு உணவைத் தொட்டதும் அது பொன்னானது, குடிப்பதற்கு குவளையைத் தூக்கினான்; தண்ணீர் பொன்னானது. கடைசியில் உணவும் தண்ணீரும் இல்லாமலேயே அவன் பட்டினியில் இறந்துபோனான்.

ஆனால் இன்றைய தியானப்பகுதியில் ஒருவர், ஆண்டவரிடம், “இரண்டு மனு உம்மிடத்தில் கேட்கிறேன். எனக்கு மறுக்காமல் தாரும். மாயையையும், பொய் வசனிப்பையும் எனக்குத் தூரப்படுத்தும், தரித்திரத்தையும் ஐசுவரியத்தையும் எனக்குக் கொடாதிரும். மாயையான வாழ்வும், பொய்பேசி வாழும் ஏமாற்று வாழ்வும் எனக்கு வேண்டாம். அதுபோலவே ஐசுவரியமும், தரித்திரமும் எனக்கு வேண்டாம். இவை இரண்டுமே என்னைத் தேவனைவிட்டுப் பிரித்துப்போடும். ஆகையால் எனக்கு எது தேவையோ அதை எனக்குத் தாரும், என் படியை எனக்கு அளந்து போடும்” என்று வேண்டுகிறார்.

ஐசுவரியத்தை வேண்டாம் என்று யாராவது சொல்லுவார்களா! ஐசுவரியம் இருந்தால் எல்லாம் இருந்ததுக்குச் சரி; அதற்குப் பிறகு கடவுளே தேவையில்லை என்று எண்ணுகின்ற ஒரு சமுதாயத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். “ஐசுவரியவான் பரலோக ராஜ்ஜியத்தில் பிரவேசிப்பது அரிதாயிருக்கிறது” என்றார் இயேசு. இன்று ஐசுவரியத்தை நம்பி வாழுவோரும், ஐசுவரியத்தைச் சம்பாதிக்க எல்லாவித தவறான வழிகளையும் பின்பற்றி, எல்லாப் பாவத்தையும் தண்ணீரைப் போலப் பருகிக் களித்திருப்போரும் எத்தனைபேர்! யாரும் நம்மைக் காணவில்லை யென்று இறுமாப்பாய் வாழும் வாழ்வு நிரந்தரமற்றது. அது அழிவின் பாதையென்பதை அவர்கள் உணராமல் வாழுகின்றனர்.

இருப்பதை விட்டு, இல்லாததை நோக்கி ஏன் போகவேண்டும்? தேவன் நமக்கு எது தேவையோ அதையே தருவார் என்று நம்புவோம். இல்லாததை எண்ணி ஏங்கி, முறுமுறுக்கும் வாழ்வு வேண்டாம். எந்நேரமும் ஸ்தோத்திரத்தோடும், துதியோடும், நன்றியறிதலோடும் வாழக் கற்றுக்கொள்வோம்.

“உங்கள் ஐசுவரியம் அழிந்து உங்கள் வஸ்திரங்கள் பொட்டரித்துப்போயின” (யாக்.5:2) என வசனம் கூறுவதை மறந்துவிடாதிருப்போம்.

ஜெபம்: தேவனே எங்களுக்கு எது தேவையோ அதை நீர் அறிந்திருக்கிறீர், அதை நிறைவாக தருகிறீர், உம்மையே நம்பி உமக்குள் மகிழ்ச்சியோடு வாழ்வோம். ஆமென்.