ஜெபக்குறிப்பு: ஆகஸ்டு 31 வியாழன்
“அவர்களுடைய விண்ணப்பம் … பரலோகத்தில் வந்து எட்டினது” (2 நாளா.30:27) என்ற வாக்கைப்போலே இம்மாதத்தில் நாம் ஏறெடுத்த ஜெபங்களுக்கு கர்த்தர் அருளிய பதில்களுக்காக நன்மைகளுக்காக கர்த்தரை ஸ்தோத்திரிப்போம்.
ஒரே சொல்லில்…
தியானம்: ஆகஸ்டு 31 வியாழன்; வேத வாசிப்பு: எண்ணாகமம் 12:1-8
“என் தாசனாகிய மோசேயோ …என் வீட்டில் எங்கும் அவன் உண்மையுள்ளவன்” (எண்.12:7).
உங்கள் பிறந்தநாள் வைபவத்தில், எல்லோரிடமும் ஒரு அட்டையைக் கொடுத்து, உங்களைக் குறித்து ஒரேயொரு சொல் எழுதும்படியும், எழுதுகிறவர்கள் தங்கள் பெயரைக் குறிப்பிடத்தேவையில்லை என்றும் கூறிப்பாருங்கள். பெயரை எழுதச்சொன்னால் உண்மை வெளிவராது. உங்களைப் பற்றி மற்றவர்கள் தங்கள் மனதில் என்ன எண்ணத்தைப் புதைத்து வைத்திருக்கிறார்கள் என்பது அப்போது உங்களுக்குத் தெரியவரும்.
எண்.12-ம் அதிகாரத்திலே கர்த்தர் ஒரே சொல்லில் மோசேக்கு ஒரு பெயர் சூட்டுகிறார்: “சாந்தகுணமுள்ளவன்”. ஆனால், மோசேயின் சகோதரரான ஆரோனும் மிரியாமும், மோசே எத்தியோப்பியப் பெண்ணை விவாகம்பண்ணியிருந்ததைச் சாக்காக வைத்து மோசேக்கு விரோதமாகப் பேசினார்கள். கர்த்தரோ, “அவன் அப்படிப்பட்டவன் அல்ல” (வச.7) என்றார். இதற்கு, மோசேயின் விவாகத்தைக் கர்த்தர் ஏற்றுக்கொண்டாரா என்பது விவாதமல்ல. அர்த்தமற்ற எரிச்சல் மிரியாமையும் ஆரோனையும் ஆட்டிப்படைத்ததைக் கர்த்தர் கண்டார் என்பதுதான் உண்மை. ஆரோன் ஆசாரியத்துவத்தையும், மிரியாம் தீர்க்கதரிசன ஊழியத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தினார்கள். மோசேயின் தலைமைத்துவத்துவத்துக்கு அடுத்ததாக இவை முக்கியமாயிருந்தது. அப்படியிருக்க மோசேயின் வளர்ச்சி அவர்களுக்குள் எரிச்சலை மூட்டிவிட்டிருந்தது. இல்லையானால், “கர்த்தர் மோசேயைக்கொண்டு மாத்திரமா எங்களைக் கொண்டும் பேசினதில்லையோ” என முறுமுறுத்திருக்கமாட்டார்கள். கர்த்தரோ மோசேயை குறித்து இன்னுமொரு சொல் குறிப்பிட்டார்: “உண்மையுள்ளவன்” (வச.7)
எத்தனை ஆச்சரியம்! இன்று கர்த்தர் நம்மைக் குறித்து ஒரே சொல்லில் என்ன சொல்லுவார்? நல்லதோ கெட்டதோ, அல்லது இடைப்பட்டதோ எதுவாயினும் நமது வாழ்வு முழுவதுமே நமது குணாதிசயத்தை வெளிப்படுத்துகிறது. மரண ஆராதனையில் சொல்லுகின்ற இரங்கலுரைக்காக அல்ல; வாழும்போதே நம்மைக் குறித்து நாம் என்ன அடையாளத்தை வைக்கப்போகிறோம் என்பதே காரியம். இயேசு சீஷரின் கால்களைக் கழுவிய பின்னர் “…உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்” (யோவா.13:15) என்றார். இன்று நாம் என்ன மாதிரியை வைத்துப்போகப்போகிறோம். ‘உண்மையுள்ளவன்’ என்பதைப் பார்க்கிலும், ‘இவன் இயேசுவைப் போன்றவன்’ என்று நம்மைக் குறித்து ஒரே சொல்லில் பிறர் சொல்லத் தக்கதாக நாம் வாழ்ந்தால் நலமாயிருக்குமே!
“…நீங்கள் தம்முடைய அடிச்சுவடுகளைத் தொடர்ந்து வரும்படி உங்களுக்கு மாதிரியைப் பின்வைத்துப் போனார்” (1 பேதுரு 2:21).
ஜெபம்: அன்பின் கர்த்தாவே, நீர் எங்களுக்குக் காட்டின மாதிரியின்படியே வாழ்ந்து உண்மையைக் காத்துக்கொள்ள கிருபை தாரும். ஆமென்.
வாக்குத்தத்தம்: ஆகஸ்டு 30 புதன்
முழு இருதயத்தோடும் உம்முடைய தயவுக்காகக் கெஞ்சுகிறேன்… எனக்கு இரங்கும். (சங்.119:58)
வேதவாசிப்பு: சங்கீதம். 120-131 | 1கொரி.9
ஜெபக்குறிப்பு: ஆகஸ்டு 30 புதன்
“இனிமேலும் நான் ஏந்துவேன், நான் சுமப்பேன், நான் தப்புவிப்பேன்” (ஏசா.46:4) இவ்வாக்கைப்போலவே பற்பலத் தேவைகளோடிருக்கிற 12 நபர்களை கர்த்தர் தமது கரத்தால் தாங்கி வழிநடத்திட ஜெபம் செய்வோம்.
கிறிஸ்து என்னும் நாமத்துக்காய்…
தியானம்: ஆகஸ்டு 30 புதன்; வேத வாசிப்பு: அப்போஸ்தலர் 5:34-42
“அவருடைய நாமத்துக்காகத் தாங்கள் அவமானமடைவதற்குப் பாத்திரராக எண்ணப்பட்டபடியினால், சந்தோஷமாய் …புறப்பட்டுப் போய்,…” (அப்.5:41).
‘எதெற்கெல்லாம் சந்தோஷப்படுவது என்று பேதுருவுக்கு ஒரு விவஸ்தை இல்லையா’ பொரிந்து தள்ளினார் ஒருவர். ‘அவமானப்படுத்தப்படும் போதும் ஒரு மனுஷன் சந்தோஷப்பட முடியுமா?’ மற்றவர் இவரைப்பார்த்து, ‘உமது நண்பன் விரும்பிய பெண்ணை அபகரித்த நீர் அது அவமானம் என்று எண்ணாமல் சந்தோஷமாய் இருக்க, கிறிஸ்துவினிமித்தம் அவமானமடைய தன்னைக் கர்த்தர் பாத்திரனாய் எண்ணியதற்கு பேதுரு எத்தனையாய் பெருமைப்படவேண்டும்’ என்றார். தலைகுனிந்தார் முந்தியவர்.
அனனியா சப்பீராளுக்கு நடந்த சங்கதியினால் பயம் உண்டாகி, திரள் மக்கள் கர்த்தரிடமாகச் சேர்ந்துகொண்டார்கள். இது பிரதான ஆசாரியர்களுக்கும், ஆலயக் காவலில் இருந்த சேனைத்தலைவனுக்கும் பொறுக்கவில்லை. பேதுருவையும் மற்றவர்களையும் பிடித்து, கொலை செய்ய யோசனை பண்ணினார்கள். கமாலியேலின் சொல்கேட்டுத் தங்கள் யோசனையைத் தற்காலிகமாக நிறுத்தினாலும், அவர்களை அடித்து, இயேசுவின் நாமத்தைக் குறித்துப்பேசக்கூடாது என்று எச்சரித்து அனுப்பினார்கள். இதுதான் நடந்தது (அப்.5:). இந்தப் பயமுறுத்தல் ஒன்றும் அப்போஸ்தலரின் வாய்களை அடைத்துப்போடவில்லை. அவர்கள் தொடர்ந்து, “இயேசுவே கிறிஸ்து” என்று பிரசங்கித்தனர். அத்தனை உற்சாகத்தை அவர்களுக்குக் கொடுத்தது எது? கிறிஸ்துவின் நாமத்திற்காக அவமானப்பட தம்மையும் தேவன் தெரிந்துகொண்டாரே, இத்தருணத்தைத் தந்தாரே என்ற எண்ணங்கள்தான் அவர்களை ஊக்குவித்தது.
இன்று ஆட்சி நிலைமைகள், ஆலய நிலைமைகள் வேறாக இருக்கலாம். ஆனால், சுவிசேஷமோ, உலக முடிவுபரியந்தம் அது அறிவிக்கப்படவேண்டும் என்ற கட்டளை மாறவில்லை; மாறாது. இன்று அநேகர் சுவிசேஷ பணியிலும், கிறிஸ்தவ சமூகப் பணியிலும் ஈடுபட்டிருக்கிறார்கள். நாமும் அவர்களில் ஒருவராய் இருக்கலாம். ஆனால், நாம் எவ்வளவுதூரம் உண்மையாகவே கிறிஸ்துவுக்காய் உழைக்கிறோம் என்பதைச் சிந்தித்துப் பார்ப்பது நல்லது. பணி யாரும் செய்யலாம்; ஆனால், கிறிஸ்துவுக்காய் ஜீவிப்பதும், அவரது கட்டளைகளை அவரது மாதிரியில் நின்று நிறைவேற்றுவதும் நமக்குக் கிடைத்திருக்கிற பெரிய பாக்கியம். பணம், பொருள் யாரும் கொடுக்கலாம். தங்களைக் கொடுக்கிறவர்களே ஆண்டவருக்குத் தேவை. நாளை மாறிப்போகும் நமது அன்றாடப் பிரச்சனைகள் தடையாக எழுந்திட நாம் அனுமதிக்கக் கூடாது. சகலத்தையும் தேவபாதத்தில் வைத்திடுவோம்.
“என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு” (பிலிப். 4:13).
ஜெபம்: அன்பின் தேவனே, இன்று என் பாவ வாழ்விற்காக அல்ல, நான் பரிசுத்தமாய் வாழ்ந்து கிறிஸ்துவுக்காக அவரது சுவிசேஷத்திற்காக அவமானங்களைச் சகிக்கக் கிருபை தாரும். ஆமென்.