ஜெபக்குறிப்பு: ஆகஸ்டு 28 திங்கள்
தாத்ராநாகர் – ஹவேலி, டாமன் டையூ, இலட்சத்தீவுகள் போன்ற யூனியன் பிரதேசங்களில் தேவ ஊழியர்கள் எழும்பவும், சபைகள் உயிர்மீட்சி அடையவும், சுவிசேஷப்பணிக்கு தடைகளை கொண்டுவரும் அந்த காரவல்லமைகள் அழிக்கப்பட ஜெபிப்போம்.
எல்லாரும் கைவிட்டாலும்…
தியானம்: ஆகஸ்டு 28 திங்கள்; வேத வாசிப்பு: பிலிப்பியர் 4:16-18
“…எல்லாரும் என்னைக் கைவிட்டார்கள். …கர்த்தரோ எனக்குத் துணையாக நின்று….” (2 தீமோ.4:16,17).
‘எல்லாரும் என்னைக் கைவிட்டார்கள். பெற்றோர் இருந்தும் அவர்களாலும் எதுவும் செய்யமுடியாத, உதவமுடியாத அவல நிலை. நான் தனித்து நின்று விசாரணைக்கு முகங்கொடுத்தேன். என் கர்த்தர் எனக்குத் துணை நின்றார். என்னை விசாரணைக்கு நிறுத்தியவர்கள் இன்று எங்கே என்றும் தெரியாது. விசாரித்தவர்கள் இன்று உயிருடன் இருப்பதே சந்தேகம். ஆனால், கர்த்தர் என்னைத் திடமாக வைத்திருக்கிறார்’ என்று ஒரு சகோதரி பல ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த சம்பவத்தை நினைவு கூர்ந்தார்.
தன் முடிவு நெருங்கிவிட்டதை உணர்ந்த பவுல் சிறையிலிருந்து தீமோத்தேயுவுக்கு எழுதிய இக்கடைசி நிருபம் (இதன் பின்னர் பவுல் எழுதியதாகத் தெரியவில்லை. இந்த நிருபத்தை எழுதியபின் ஓரிரு ஆண்டுகளுக்குள் பாதாளச் சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் சிரைச்சேதம் செய்யப்பட்டு மரித்தார் என்று சொல்லப்படுகிறது) இன்றும் நமது உள்ளத்தை நெகிழச்செய்கிறது. முதல்தரம் உத்தரவு சொல்ல நிற்கையில் தன்னைத் தனித்து விட்டுவிட்டு எல்லாரும் ஓடிவிட்டார்கள் என்று எழுதுகிறார் பவுல். அந்த நிலையிலும் அவர்களைக் குற்றப்படுத்தாத அவருடைய பெருந்தன்மை நமக்குண்டா? கர்த்தர் தனக்குத் துணைநின்றார் என்கிறார் பவுல். எத்தனை உறுதியான விசுவாசம்! சாவு நெருங்கிவிட்ட நிலையிலும் பவுல் தளரவில்லை.
இயேசுவோ சீஷர்கள் தமக்கு என்ன செய்வார்கள், தமது நிலை என்னவாயிருக்கும் என்று முன்னரே சொல்லிவிட்டார். “இதோ, நீங்கள் சிதறுண்டு, அவனவன் தன்தன் இடத்துக்குப் போய், என்னைத் தனியே விட்டுவிடுங்காலம் வரும். அது இப்பொழுது வந்திருக்கிறது. ஆனாலும் நான் தனித்திரேன். பிதா என்னுடனேகூட இருக்கிறார்” (யோவா.16:32) என்றார். அப்படியே நடந்தது. ஆனால், ஒரு விஷயத்தைக் கவனிக்கவேண்டும். இங்கே பிதா கூடவே இருக்கிறார் என்பதற்காக இயேசுவின் சிலுவை மரணம் தவிர்க்கப்படவுமில்லை. அங்கே கர்த்தர் துணை நின்றார் என்பதற்காக, பவுலின் சிரைச்சேதம் மாற்றப்படவுமில்லை. இரண்டும் நிறைவேறியது. ஆனால், இயேசு உயிர்த்தெழுந்து வெற்றி சிறந்தார். அதனால் பவுலுக்கும் அந்த நிச்சயம் உண்டாயிருந்தது.
நம்மில் யாரும் இந்த உலகில் தனித்தவர்களே அல்ல. தனித்து விடப்பட்டாலும், வியாதியில் துடிதுடித்தாலும் கர்த்தர் நமக்குத் துணை நிற்கிறார். உலகத்தில் பாடுகளும் உபத்திரவங்களும் இருக்கத்தான் செய்யும். அதற்காக நாம் ஒருபோதும் தோற்றுப்போவதே இல்லை.
“நான் விழும்படி நீ என்னை தள்ளினாய். கர்த்தரோ எனக்கு உதவி செய்தார்” (சங்கீதம் 118:13).
ஜெபம்: அன்பின் தேவனே, எல்லாருமே என்னை கைவிட்டாலும் உலகத்தை ஜெயித்தவராகிய நீர் என்னோடு இருப்பதால் உமக்கு ஸ்தோத்திரம். ஆமென்.