ஜெபக்குறிப்பு: ஆகஸ்டு 4 வெள்ளி
சத்தியவசன வெப் டிவி, வெப் சைட் இவற்றின் மூலமாக பயனடையும் மக்களுக்காக ஆண்டவருக்கு நன்றி செலுத்தி, அனுதினமும் அனுப்பப்படும் வசனம் (SMS) இருளுள்ள ஸ்தலத்தில் பிரகாசிக்கிற விளக்கைப்போல அவர்களுக்கு பிரகாசத்தை ஏற்படுத்தவும் வேண்டுதல் செய்வோம்.
துதிக்குப் பாத்திரர்!
தியானம்: ஆகஸ்டு 4 வெள்ளி; வேத வாசிப்பு: கொலோசெயர் 1:12-22
“சகலமும் அவராலும் அவர் மூலமாயும் அவருக்காகவும் இருக்கிறது. அவருக்கே என்றென்றைக்கும் மகிமையுண்டாவதாக. ஆமென்” (ரோமர்.11:36).
நாம் எதையும் புரிந்துகொள்ளக்கூடிய அறிவு உள்ளவர்கள். என்றாலும், சில விஷயங்களைக் கற்றறியத்தான் வேண்டும்; சில கற்றாலும் விளங்கிக்கொள்ளக் கடினமாகத் தோன்றலாம். ஆனால், நாம் புரிந்து, அறிந்து, பெறுமதிப்பை உணர்ந்திருக்கும் சில விஷயங்களைக் குறித்து பலவேளைகளிலும் உணர்வற்றவர்களாக வாழ்வது ஏன்?
கொலோசேய சபையானது கிறிஸ்துவிலுள்ள விசுவாசத்திலும், பரிசுத்தவான்களிலுள்ள அன்பிலும் வளர்ந்திருந்தது (1:3). ஆனால், பல தவறான உபதேசங்கள் அதற்குள் ஊடுருவி விசுவாசிகளைக் குழப்பிவிட்டிருந்தது. ‘தேவன் ஒரு சாதாரண மனிதனாக வந்ததை பற்றி, இந்த உலகம் தீமையாயிருப்பதால், தேவன் இந்த உலகைச் சிருஷ்டித்திருக்க முடியாதென; கிறிஸ்து ஒருவரே தனித்துவமான தேவ குமாரன் என்பதைப் பற்றி இரட்சிப்பின் மூல காரணர் கிறிஸ்துவே என்ற விஷயத்திலும் குழப்பம் ஏற்பட்டிருந்தது. எனவேதான் பவுல், “சகல பரிபூரணமும் அவருக்குள்ளே (கிறிஸ்துவுக்குள்) வாசமாயிருக்கவும்…” (கொலோ.1:19) என்று ஆணித்தரமாக எழுதி, விசுவாசிகளை கிறிஸ்துவுக்கு நேராகத் திருப்புகிறார். சுவிசேஷத்தினிமித்தம் கட்டப்பட்டும், பவுல் தனது கையினாலே இந்த நிருபத்தை எழுதினார் (4:18) என்றால், இது கொலோசே சபையை நிச்சயம் சிந்திக்க வைத்திருக்கும்.
நாமோ இன்று தெளிவாக இருக்கிறோம். கிறிஸ்துவே இரட்சகர் என்று முழுமையாக ஏற்றுக்கொண்டுள்ளோம். அப்படியானால், கிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக்கொள்ள முடியாத மக்களுக்கும் நமக்கும் வித்தியாசம் உண்டா? தேவன் சகலத்தையும் தமக்கென்றே படைத்தார்; நம்மையும் தமக்கென்றே தமது சாயலில் சிருஷ்டித்தார். அதன் அர்த்தம் என்ன? நாம் எல்லோரும் முழுமையாக தேவனில் சார்ந்திருக்க வேண்டியவர்கள். அவரே யாவுக்கும் மூலகாரணர்; நமக்கும்தான். நாம் வாழுகின்ற இந்தப் பூமியை உருவாக்கியதும், அதைப் பாதுகாத்து ஆளுகை செய்கிறதும் அவரது வல்லமையே. கணக்கிட முடியாத ஆண்டுகளாக தனக்கு வகுக்கப்பட்ட பாதையில் சுற்றிவருகின்ற பூமி தன் அசைவை நிறுத்துமானால் என்னவாகும் என்பதை எப்பொழுதாவது சிந்தித்திருக்கிறோமா? தேவன் தமது மகிமைக்கென்றே யாவற்றையும் செய்கிறார். சர்வ வல்லமையும் பொருந்திய தேவன் சகல துதிகளுக்கும் பாத்திரர்.
“பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு. அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது. அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம். இயேசுகிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்குண்டு. அவர் மூலமாய் சகலமும் உண்டாயிருக்கிறது. அவர் மூலமாய் நாமும் உண்டாயிருக்கிறோம்” (1 கொரி. 8:6).
ஜெபம்: நன்மையை அன்றி தீமையை அனுமதியாத சர்வ ஞானமுள்ள தேவனே, உமது கரத்தில் என் வாழ்வை இன்று முழுமனதுடன் ஒப்புவிக்கிறேன். ஆமென்.