ஜெபக்குறிப்பு: ஆகஸ்டு 3 வியாழன்

“இதோ, நான் புதிய காரியத்தைச் செய்கிறேன்” (ஏசா.43:19) என்ற வேதவாக்குப்படி அமெரிக்க தேசத்தில் உள்ள வேதாகமத்திற்கு திரும்புக ஊழியம் பல்லாயிரக் கணக்கான மக்களுக்கு பிரயோஜனப்படுவதற்கும், இவ்வூழியத்தின் தலைவர்கள், செய்தியாளர்களை தேவன் வல்லமையாய் பயன்படுத்தவும் ஜெபிப்போம்.

ஆலோசனைக்காரருக்கு ஆலோசனையா?

தியானம்: ஆகஸ்டு 3 வியாழன்; வேத வாசிப்பு: ரோமர் 11:33-36

“தனக்குப் பதில் கொடுக்கப்படும்படி, முந்தி எனக்குக் கொடுத்தவன் யார்? வானத்தின் கீழுள்ளவைகள் எல்லாம் என்னுடையவைகள்” (யோபு 41:11).

‘மொபைல் போன் வாங்கித் தருவேன் என்று சொல்லுங்கப்பா’ அடம்பிடித்தான் மகன். ‘உனக்கு என்ன சொல்லவேண்டுமென்று எனக்கு தெரியும். நான் உன் அப்பா.’ கண்டித்த தகப்பனின் முன் அமைதியாய் நின்றான் மகன். ஒரு சாதாரண உலக தகப்பனுக்கு இத்தனை உரிமையுண்டு என்றால், நமது பரமதகப்பன் கேட்கிறார், என்ன பதில் சொல்லுவோம்?

தேவனுடைய ஞானம், அறிவு, நீதி என்பவற்றை நினைந்து அவரைத் துதிக்க ஆரம்பித்த பவுல், சில கேள்விகளை முன்வைக்கிறார். கர்த்தருடைய சிந்தையை அறிந்தவன் யார்? அவருக்கு ஆலோசனை சொல்பவன் யார்? தனக்கு என்ன பதில் தரவேண்டுமென்று கர்த்தருக்கே பாடம் எடுக்கிறவன் யார்? இக்கேள்விகளுக்குப் பின்னே பவுல், விசுவாசிகளாகிய நமக்கு இடுகின்ற சவாலை நாம் புரிந்துகொள்ள வேண்டும். நாம் எவ்வளவுதான் அறிவாளிகளாக இருந்தாலும் கர்த்தரின் நினைவுகளை யாரும் முழுமையாக அறிந்துகொள்ள முடியாது என்பதையே பவுல் உணர்த்துகிறார். தேவன் நமக்குக் கடமைப்பட்டவர் அல்ல. தேவனின் வழிகளைக் குறித்து விமரிசனம் செய்யவோ, அவருக்கு ஆலோசனை சொல்லவோ எவராலும் முடியாது என்பதை தீர்க்கதரிசிகளும் உணர்த்தினார்கள். “கர்த்தருடைய ஆவியை அளவிட்டு, அவருக்கு ஆலோசனைக்காரனாயிருந்து, அவருக்குப் போதித்தவன் யார்?” (ஏசாயா 40:13). சர்வ ஞானமும், சகல சம்பத்தும் கர்த்தருடையது. அவர் தமக்கென்றே மனுஷனைப் படைத்திருக்க, படைத்தவருக்கே நாம் ஆலோசனை சொல்வது எப்படி? சில சமயங்களில் நமது மனதிலே சந்தேகக் கேள்விகள் எழத்தான் செய்கிறது. ஆனாலும், எல்லாவற்றுக்கும் பின்னே தேவன் இருக்கிறார் என்பதை விசுவாசிக்கின்ற எவரும் வாழ்வில் தோற்றுப்போக முடியாது. மரணத்துடன் போராடிய மகனுக்காக பெற்றோர் ஜெபித்தபோது, வியாதி மாறியது; ஆனால், ஒரு கால் முடமாகியது. பெற்றோர் திகைத்தனர். சில வருடங்களின் பின், கட்டாய இராணுவ சேவைக்கான தெரிவு வந்தபோது, கால் ஊனம் என்பதால் இந்த மகனைவிட்டுவிட்டார்கள். அப்போதுதான் பெற்றோரின் கண்கள் திறந்தன. தேவஞானத்தை நினைத்து தேவனைத் துதித்தார்கள் (அவன் பெயர் ஹென்றி பொஸ்ச்).

தேவபிள்ளைக்கு தேவன் நன்மையை அன்றி தீமையை அனுமதியார். அந்த விசுவாசத்துடன், கேள்வி கேட்பதை விடுத்து, தேவனுடைய அனந்த ஞானத்தின் முன் மண்டியிட்டு நம்மை ஒப்புக்கொடுப்போமா?

“கர்த்தருடைய ஆலோசனையில் கூடநின்று, அவருடைய வார்த்தையைக் கேட்டறிந்தவன் யார்?…” (எரே. 23:18).

ஜெபம்: நன்மையை அன்றி தீமையை அனுமதியாத சர்வ ஞானமுள்ள தேவனே, உமது கரத்தில் என் வாழ்வை இன்று முழுமனதுடன் ஒப்புவிக்கிறேன். ஆமென்.