ஜெபக்குறிப்பு: செப்டம்பர் 30 சனி
“யாபேஸ் வேண்டிக்கொண்டதை தேவன் அருளிச் செய்ததுபோல” (1நாளா.4:!0) இந்த மாதம் முழுவதும் நம்முடைய விண்ணப்பங்களை அங்கிகரித்த கர்த்தரை முழு இருதயத்தோடும் ஸ்தோத்திரித்து ஜெபிப்போம்.
நானா பரிபூரணன்?
தியானம்: செப்டம்பர் 30 சனி; வேத வாசிப்பு: கொலோசெயர் 2:6-15
“மேலும் சகல துரைத்தனங்களுக்கும் அதிகாரத்துக்கும் தலைவராயிருக்கிற அவருக்குள் நீங்கள் பரிபூரணமுள்ளவர்களாயிருக்கிறீர்கள்” (கொலோ.2:10).
“அடிக்கடி பாவத்தில் அகப்பட்டுத் திண்டாடும் நானா பரிபூரணன்? கிறிஸ்துவின் வருகையில்தான் அது நிறைவேறும். அதுவரையும் போராட்டம்தான்” இப்படி நாம் சொல்லக்கூடும். ஆனால் வேதாகமமோ, ‘நீங்கள் பரிபூரணமுள்ளவர்களாய் இருக்கிறீர்கள்’ என்கிறது. அப்படியானால் நமது தகுதி என்ன? இந்த வார்த்தையில் ஒரு சொல்லை நாம் கவனிக்கவேண்டும். ‘கிறிஸ்துவுக்குள்’ ஆம், அவருக்குள்தான் நாம் பரிபூரணர் என்று தேவன் நம்மைக் காண்கிறாரே.
சுட்டெரிக்கும் வெயிலில் பார்க்கும்போது கண்கள் எவ்வளவாய் கூச்சமெடுக்கின்றன. ஆனால் என் கண்ணாடியைப் போட்டுப் பார்க்கும்போது, அதே காட்சி, அதே வெயில்; ஆனால் கண்களின் பார்வையோ குளிர்மையாக இருக்கிறது. இப்படித்தானா தேவனும் கிறிஸ்துவுக்குள் நம்மைக் காண்கிறாரோ என்று நான் சிந்தித்துப் பார்த்தேன். ஆம், நமக்கும் பிதாவுக்கும் இடையே கிறிஸ்து நிற்கிறார். சுட்டெரிக்கும் வெயிலைப் பார்க்கிலும் கொடூரமான நம்மை கிறிஸ்து தமக்குள் மறைத்து வைத்திருக்கிறார்.தேவன் நம்மைப் பார்க்கும்போது முதலில் பரிசுத்தரும் பரிபூரணருமாகிய கிறிஸ்துவையே காண்கிறார். அவருக்கூடாக தேவன் நம்மைக் காணும்போது கிறிஸ்துவின் பரிபூரணத்தால் எனது குறைகள் யாவும் மூடப்படுகின்றன. ஆகவேதான், நாம் கிறிஸ்துவுக்குள் பரிபூரணர் என்று வேதம் நமக்கு உறுதியளிக்கிறது. இது ஆச்சரியம்தான்!
ஆக, நாம் ஜெயங்கொண்டவர்கள், பரிபூரணர், புதுசிருஷ்டிகள் என்று சொல்லப்பட்டிருப்பதால் நாம் பெருமை கொள்ளக்கூடாது. நான் புதுசிருஷ்டி என்று சொல்லிக்கொண்டு நூதனங்களைச் செய்யக்கூடாது. நாம் நினைவில் நிறுத்த வேண்டிய இரு காரியங்களுண்டு. ஒன்று, நாம் இயேசுவின் இரத்தத்தாலே மீட்கப்பட்டதால் நமது தகுதி இயேசுவே. அடுத்தது, நம்மைப் பரிபூரணர் என்று அழைப்பதனாலே நாம் முழுமையானவர்கள் என்று ஆகிவிடாது. ஆனால், நாம் ஆண்டவரின் பிள்ளைகள் என்ற தகுதியின் இடத்தில் பரிபூரணத்தின் சாயல் நமக்குள் வைக்கப்பட்டிருக்கிறது, அதை நோக்கி கிறிஸ்துவின் பெலத்தால் நம்மால் வாழமுடியும், அந்த கிருபை நமக்குண்டு.
இப்படியிருக்க, நான் மனுஷன், நான் பலவீனன் என்று சொல்லிக்கொண்டு நம்மைநாமே ஏன் அழித்துக்கொள்ளவேண்டும். கிறிஸ்துவுக்குள் நம்மால் எதுவும் முடியும் என்ற நம்பிக்கையோடு முன்னே செல்லுவோமாக. இறுதியில் கிறிஸ்துவைக் காணும்போது எவ்வளவு ஆச்சரியமாக இருக்கும்.
“நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலே நமக்கு ஜெயங்கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம்” (1கொரிந்தியர் 15:57).
ஜெபம்: அன்பின் தேவனே நீரே என் ஜெயபலமானவர் என்பதை அறிக்கையிடுகிறேன். உமக்கே எல்லா மகிமையும் உண்டாகட்டும். ஆமென்.
வாக்குத்தத்தம்: செப்டம்பர் 29 வெள்ளி
… தயவு செய்கிற கர்த்தராலே அவன் ஆசீர்வதிக்கப்படுவானாக. (ரூத்.2:20)
வேதவாசிப்பு: ஏசாயா. 30,31 | எபேசி.1
ஜெபக்குறிப்பு: செப்டம்பர் 29 வெள்ளி
தமிழ்நாட்டிலும் பிரச்சனைக்குரிய ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள அரசியல் குழப்பங்கள் நீங்க, மதவாத செயல்கள் தடுக்கப்பட, நீண்ட காலமாக தீர்க்கப்பட முடியாத பிரச்சனைகளுக்கு ஒரு முடிவுண்டாக பாரத்துடன் ஜெபிப்போம்.
கிறிஸ்துவுக்குள்…
தியானம்: செப்டம்பர் 29 வெள்ளி; வேத வாசிப்பு: 1யோவான் 3:1-7
“நாம் தேவனுடைய பிள்ளைகளென்று அழைக்கப்படுவதினாலே பிதாவானவர் நமக்குப் பாராட்டின அன்பு எவ்வளவு பெரிதென்று பாருங்கள்” (1யோவான் 3:1).
“நான் வாழும் நாட்டிலே ஏறத்தாழ 60-க்கும் அதிகமானோர் மன உளைச்சலினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்” என்று வெளிநாட்டிலிருந்து வந்த ஒருவர் கூறினார். இவர்களைவிட தோல்வி மனப்பான்மையினாலும், விட்டுக்கொடுத்து தாழ்ந்துபோகமுடியாத மனநிலைமையினாலும் நிம்மதி இழந்து அமைதிதேடி அலைகிறவர்களும் பலர் இருக்கத்தான் செய்கிறார்கள். இவ்விதமாக மனமொடிந்த நிலையில் இத்தியானத்தில் யாராவது கலந்துகொண்டிருக்கிறீர்களா? பிரச்சனையின் உண்மை நிலை என்ன தெரியுமா? ‘நான் யார்?’ இக்கேள்விக்கு நமக்குச் சரியான பதில் புரிவதில்லை என்பதே பிரச்சனைக்கு முதற் காரணம். ‘நான் யார் என்று வெறுமனே சிந்தித்தால் மனமடிவு இன்னுமதிகரிக்கும். கிறிஸ்துவுக்குள் நான் யார் என்பதை அறிந்துகொள்ளாததால்தான் நாம் தோற்கடிக்கப்பட்ட உணர்விலும், சுயபச்சாதாபத்திலும் குழம்பிப்போய் வாழுகிறோம்’ என்று ஒரு அடியார் எழுதுகிறார். அப்படியானால் நாம் யார்? ஆண்டவர் நம்மை எப்படிக் காண்கிறாரோ அப்படித்தான் நாம் எல்லோரும் இருக்கிறோம்.
இதோ சில குறிப்புகள்: நான் தேவனுடைய பிள்ளை (1யோவா.3:2). நான் தேவனாலே பிறந்தவன் (யோவா.1:13). நான் தேவனுடைய சுதந்திரன் (கலா.4:7). நான் கிறிஸ்துவுக்குள் புது சிருஷ்டி (2கொரி.5:17). நான் உலகத் தோற்றத்துக்கு முன்னரே கிறிஸ்துவுக்குள் தெரிந்துகொள்ளப்பட்டவன் (எபே.1:4). எனக்கு ஆக்கினைத் தீர்ப்புக் கிடையாது (ரோமர் 8:1). கிறிஸ்துவுக்குள் நான் பரிபூரணமுள்ளவன் (கொலோ.2:10). நான் கிறிஸ்துவுக்குள் ஜெயம் பெற்றவன் (1யோவா. 4:4). நான் கிறிஸ்துவுக்குள் முற்றும் ஜெயங்கொள்ளுகிறவன் (ரோமர் 8:37). என் பிதாவின் வீட்டிலே எனக்கான வாசஸ்தலம் உண்டு (யோவான் 14:1).
இப்படியாக, கிறிஸ்துவுக்குள் நம்மைக்குறித்து ஏராளமான, ஆச்சரியமான, இன்னும் சொல்லப்போனால் நமது அறிவுக்கு எட்டாத காரியங்களை பரிசுத்தாவியானவர் நமக்கு எழுதியே தந்துள்ளார். இப்படியிருக்க, நாம் தோற்றுப்போன வாழ்வு வாழுவது எப்படி? தேவனுடைய பரிபூரணத்தில் நாம் பங்குகொள்வது எப்படி? இப்படிப்பட்ட பெரிய மேன்மை நமக்கு அருளப்பட்டிருக்கும்போது நாம் பின்வாங்கிப்போகவேண்டியதும் இல்லை; மனம் சோர்ந்துபோக வேண்டியதும் இல்லை. அதேசமயம் நாம் எதிர்கொள்ளுகின்ற கஷ்ட துன்பங்களுக்காகப் பிறரைக் குறைசொல்லவேண்டிய அவசியமும் இல்லை.
“நீ என் பார்வைக்கு அருமையானபடியினால் கனம்பெற்றாய். நானும் உன்னைச் சிநேகித்தேன்” (ஏசாயா 43:4).
ஜெபம்: அன்பின் ஆண்டவரே கிறிஸ்துவுக்குள் தேவன் அருளியிருக்கிற மேன்மையை நாங்கள் இழந்துவிடாதபடி ஜாக்கிரதையோடேயிருக்க உதவி செய்யும். ஆமென்.