ஜெபக்குறிப்பு: செப்டம்பர் 1 வெள்ளி

“இதோ, நான் … அவன் வாசஸ்தலங்களுக்கு இரக்கஞ்செய்வேன்” (எரே.30:18) என்ற வாக்குப்படியே இரக்கங்களின் பிதாதாமே இம்மாதம் முழுவதும் நம்மோடிருந்து நம்மை வழிநடத்திட அவரிடத்தில் நம்மை ஒப்புவித்து ஜெபிப்போம்.

உள்ளம் நொறுங்கட்டும்!

தியானம்: செப்டம்பர் 1 வெள்ளி; வேத வாசிப்பு: சங்கீதம் 51: 1-10

“தேவனே, சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும், நிலை வரமான ஆவியை என் உள்ளத்திலே புதுப்பியும்” (சங். 51:10).

வருடத்தின் இறுதிக் கால்வருடத்திற்குள் வந்துவிட்ட நமது வாழ்வில் ஏதாவது மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறதா? கர்த்தருக்குள் இன்னும் அதிகமாக பெலமடைந்திருக்கிறோமா? ஆவிக்குரிய வாழ்வில் மாற்றமும் வளர்ச்சியும் ஏற்பட்டால்தான் நமது வெளிவாழ்வில் வளர்ச்சியும் முதிர்ச்சியும் தெரியும். வளர்ச்சி இல்லாவிட்டால் நாம் ஏதோ குறைபாடுள்ளவர்கள் என்பதை ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். சிலவேளை நமது வெளிவாழ்வில் உலக ரீதியாக பெரிய வெற்றிகளைச் சாதித்து பொருளாதார ரீதியில் நாம் வளர்ந்திருக்கலாம். ஆனால், இவை எவ்வளவுதூரம் நிலைநிற்கும்?

தாவீது ராஜா தேவனுக்குப் பயந்தவர்; கர்த்தருடைய அன்பையும் வல்லமை யையும் நன்கு ருசிபார்த்தவர். என்றாலும் பாவத்தில் வழுக்கி விழுந்துவிட்டார். மாத்திரமல்ல, தன் விழுகையை உணராமல் சில காலம் வாழ்ந்தாரே; ஒரு விதவைக்கு வாழ்வு கொடுத்த நல்லவராக உலகக் கண்களை மூடினாரே; அதுதான் பயங்கரமான விஷயம். என்றாலும் அவர் உணர்த்தப்பட்டபோது, இன்று நாம் செய்வதுபோல், பாவத்தை அறிக்கைசெய்து, மன்னிப்புக் கேட்டு, மனந்திரும்பி, மறுபடியும் விழுந்துபோகவில்லை. ‘என் மீறுதல் எனக்குத் தெரியும், தேவனுடைய கண்கள் அதைக் கண்டது’ என்றார். உள்ளத்தின் உண்மையையே தேவன் விரும்புகிறார் என்பதை தாவீது உணர்ந்தார். தன் எலும்புகள் நொறுக்கப்பட்டது போன்ற வேதனையை அனுபவித்தார். ‘அரண்மனை வேலையாட்களுக்கு என் பாவத்தை மறைத்து, என் ராஜ வாழ்வைப் பங்கமின்றி காப்பாற்றும்’ என்று அவர் ஜெபிக்கவில்லை. மாறாக, சுத்த இருதயத்திற்காகவும், உறுதியான ஆவியை உள்ளத்திலே புதுப்பிக்கும்படிக்குமே ஜெபித்தார். ஆம், அவர் தனது உள்ளான வாழ்வின் உண்மையைக்குறித்தே அதிகம் வாஞ்சித்தார்.

தேவபிள்ளையே, மனந்திரும்பும் பாவியை தேவன் வெட்கப்படுத்தவே மாட்டார்; போலியான வாழ்வையோ அவர் வெறுக்கிறார். பத்சேபாள் குளிக்க வந்ததால்தான் தான் பாவம் செய்ததாக தாவீது ஜெபிக்கவில்லையே! நமது பாவ நிலைமையை உணர்ந்து, உலகம் நம்மை வெறுத்தாலும்கூட, தேவ சமுகத்தில் நமது உள்ளத்திலே உடைந்து நொறுங்கவேண்டும். நொறுங்குண்ட ஆவியே தேவனுக்குப் பிரியம். இன்று நாம் எப்படி ஜெபிக்கிறோம்? அதைப் பொறுத்தே மனமாற்றம், ஆவிக்குரிய வளர்ச்சி, முதிர்ச்சி எல்லாம் நமது வாழ்வில் ஏற்படும். அந்த மாற்றங்கள் வெளிவாழ்வில் வெளிப்படும்போது, அது நமது வாழ்விலும் பிறர் வாழ்விலும் ஆசீர்வாதமான தாக்கங்களை ஏற்படுத்தும்.

‘துணிகரமான பாவங்களுக்கு உமது அடியேனை விலக்கிக்காரும். அவைகள் என்னை ஆண்டுகொள்ள ஒட்டாதிரும்” (சங்.19:13).

ஜெபம்: தேவனே, உமது மிகுந்த இரக்கங்களின்படி எங்களது மீறுதல்கள் நீங்க சுத்திகரித்து, இருதயத்தைப் புதுப்பிக்கும்படியாக மன்றாடுகிறோம். ஆமென்.

அதிகாலை நேரம்

அதிகாலை வேளையில்… (செப்டம்பர்-அக்டோபர் 2017)
– Dr.உட்ரோ குரோல்

வேதபகுதி: சங்கீதம் 119: 129-152
அதிகாலையில் நான் எழுந்து சத்தமிட்டேன்; உம்முடைய வசனத்துக்குக்  காத்திருக்கிறேன். (சங்கீதம் 119: 147).

இவ்விதழின் தியானப்பகுதியில் நாம் சங்கீதம் 119ஐ ஆராய்வோம். வேதத்தின் மகத்துவத்தை அழகாக விவரிக்கும் இச்சங்கீதம் மிகவும் நீண்டதும் ஆழமுள்ளதுமான அகர வரிசையிலுள்ள ஒன்றாகும். சங்கீதங்கள் 9, 10, 25, 34, 37, 111, 112 முதலியனவும் இதைப் போன்றதாகும். இவை எல்லாவற்றையும் இச்சங்கீதம் மிஞ்சி நிற்கிறது. 22 எபிரெய எழுத்துக்களைத் தலைப்பாகக் கொண்டு 22 பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதியின் முதல் எழுத்தும் அத்தலைப்பின் எபிரெய எழுத்தில் ஆரம்பமாகிறது. இவ்வழக்கை நமது மொழியில் தரமுடியாவிட்டாலும் அதன் தலைப்பில் அந்த எபிரெய எழுத்தின் பெயர் தரப்பட்டுள்ளது.

இச்சங்கீதத்தின் ஆசிரியர் யார் என கூறப்படவில்லை. ஆனாலும் அதன் மொழிநடையும் உணர்ச்சிகளும் அநேக வசனங்களில் தாவீதையே சுட்டிக்காட்டுகின்றன என்பது பலரது கருத்து. இச்சங்கீதத்தைப் பற்றிய இக் குறிப்புகள் ஆர்வமூட்டுவதாக இருப்பினும் இதைவிட முக்கியமானவைகள் சில உண்டு.  எபிரெய  மொழியில் எழுதப்பட்டிருந்த பழைய ஏற்பாட்டை நகல் எடுத்த வேத எழுத்தாளர்கள் ”உமது அடியேனுக்கு நன்மையாகத் துணை நில்லும்; அகங்காரிகள் என்னையொடுக்க வொட்டாதேயும்” என்ற 122ம் வசனத்தைத்தவிர ஒவ்வொரு வசனத்திலும் தேவனுடைய வார்த்தையைப்பற்றிய பத்து சொற்களுள் ஒன்றினைக் கண்டார்கள். ஒரு சிலர் இதனை மறுத்தாலும் இந்த நீண்ட சங்கீதமானது தேவனுடைய வார்த்தையை விளக்குகிறது. என்றும் அச்சங்கீதக்காரன் அதனைப் போற்றிப் பாடுவதாகவும் அமைந்துள்ளதை அவர்களால் மறுக்க முடியாது.

இச்சங்கீதத்தில் தேவனுடைய வார்த்தையைப் புகழும் அநேக பாராட்டுச் சொற்கள் நிரம்பியுள்ளதை நாமும் காணலாம். ”வாலிபன் தன் வழியை எதினால் சுத்தம் பண்ணுவான்? உமது வசனத்தின்படி தன்னைக் காத்துக்கொள்ளுவதினால்தானே”(வச.9). ”திரளான செல்வத்தில் களிகூருவதுபோல, நான் உமது சாட்சிகளின் வழியில் களிகூருகிறேன்” (வச.14). ”நான் உம்முடைய சாட்சிகளைத் குறித்து, ராஜாக்களுக்கு முன்பாகவும் வெட்கப்படாமல் பேசுவேன்” (வச.46). ”கர்த்தாவே உமது வசனம் என்றென்றைக்கும் வானங்களில் நிலைத்திருக்கிறது” (வச.89). ”உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது”(வச.105). இவ்விதமாய் அன்பும் பக்தியும் நிறைந்த அறிக்கைகள் நிச்சயமாகவே தேவனுடைய செவிகளுக்கு இன்பமாய் இருக்கும் அல்லவா? தேவனுடைய கட்டளைகளை அறிந்து கொள்வதற்கு தனக்குள்ள ஆர்வத்தை இச்சங்கீதக்காரன் எவ்விதமாய் வெளிப்படுத்த முடிந்தது?

இதற்குரிய பதிலை 149ம் வசனம் உரைக்கிறது:”உமது வசனத்தைத் தியானிக்கும்படி, குறித்த ஜாமங்களுக்கு முன்னே என் கண்கள் விழித்துக்கொள்ளும்”. இருள் அகன்று வெளிச்சம் தோன்று முன்னரே சங்கீதக்காரன் தேவனைத் தேட எழுந்துகொள்ளுகிறார். தனது சக மனிதர்களுடன் பேசுவதற்கு முன்னரே தேவனை நோக்கிக் கூப்பிடுகிறார். வைகறை நேரமே தேவவார்த்தையைத் தேடுவதற்கு மிகச்சிறந்த நேரம் என்பதை அவர் கண்டுகொள்ளுகிறார்.

“உதயசூரியனின் கதிர்கள் உன்னை சோம்பேறியாக படுக்கையில் காணும்பொழுது அது வெட்கத்துக்குரிய காரியமாகும். மேலும் கண்களைக் கூசச் செய்யும் சூரியனின் கதிர்கள் வந்த பின்னரும் நீ எழும்பவில்லையெனில் அது மிகவும் வருத்தப்பட வேண்டிய காரியமாகும்” என்று போதகர் அம்புரோஸ் கண்டிக்கிறார். தேவனுடைய பிரமாணங்களில் மகிழ்ச்சியாயிருப்பதும் அவரது வார்த்தையைப் புகழ்வதும் அவருடைய சாட்சிகளை வாசித்து தியானிப்பதும் தேவனுக்கு மகிழ்ச்சியைக் கொண்டு வரும். ஆனால் இவை எல்லாவற்றையும் நாம் அதிகாலையில் செய்வதே அவருக்கு அதிக மகிழ்ச்சியைத் தரும். எல்லாவற்றுக்கும் மேலாக அவருடைய வார்த்தையையும் அவருடைய ஊக்கத்தையும் அவருடைய சத்தியத்தையும் நாம் தேடும்பொழுது அவரைப் பிரியப்படுத்துகிறவர்களாய் காணப்படுவோம்.

அதிகாலையில் வேதத்தை வாசித்து ஜெபிக்கும்பொழுது அந்த நாளில் அவருடைய ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்வது மாத்திரமல்ல; நாள் முழுவதும் அவரது வார்த்தை நம்மை நடத்திச்செல்லும். தேவனுடைய வார்த்தையை நம்பிய அச்சங்கீதக்காரன் அவ்வார்த்தையைத் தியானிக்கும்படி குறித்த ஜாமத்துக்கு முன்னரே விழித்துக்கொள்ளுகிறார் (வச.148). ஒருநாளின் அதிகாலையை ஜெபத்திலும் வேதவாசிப்பிலும் ஆரம்பித்து அதனை நாள் முழுவதும் செயல்படுத்தி இரவில் அவருடைய பாதத்தில் வரும்பொழுது அவருடைய பிரசன்னத்தை உணர்ந்த மகிழ்ச்சி நம்மை நிரப்பும். தேவவார்த்தையை நாள் முழுவதும் நாம் தியானித்து அதில் மகிழுவோமாக.


அதிகாலைப்பாடல்

சத்தியவேதம் பக்தரின் கீதம்
சுத்தர்கள் போகும் பாதையின் தீபம்
உத்தம மார்க்கம் காட்டும்
எத்தனை துன்பம் துயரம் வந்தும்
பக்தனைத் தேற்றிடும் ஒளஷதம்
பேதைகளிடம் ஞானம் அருளும்
வேதபுத்தகம் மேன்மை தரும்
இரவும் பகலும் இதனின் தியானம்
இனிமை தங்கும் தனிமையிலும்

மொழியாக்கம்: Sis.அகஸ்டா மங்களதுரை

அனைத்துலக மொழிபெயர்ப்புப் பணிகள்

புனித வேதாகமத்தின் வரலாறு (செப்டம்பர்-அக்டோபர் 2017)
அத்தியாயம்-10
சகோ.M.S.வசந்தகுமார்

தமிழ் வேதாகமத்தின் வரலாறு

(6) புதிய மொழிபெயர்ப்பு

ஹென்றி பவரின் திருத்தப்பட்ட மொழி பெயர்ப்பு வெளிவந்து 50 வருடங்களாவதற்குள் அதை மறுபடியும் திருத்தி மொழிபெயர்க்க வேண்டும் எனும் எண்ணம் ஏற்படத் தொடங்கியது. இதற்கு முக்கிய காரணம், அதுவரை காலமும் மூலப்பிரதியாக உபயோகிக்கப்பட்டுவந்த வேதப்பிரதிகளைவிட பழைமையானதும் நம்பகமானதுமான இரு வேதப்பிரதிகள் கண்டுபடிக்கப்பட்டமையேயாகும். கி.பி.4ஆம் நூற்றாண்டில் வல்கேட் என அழைக்கப்படும் ஜெரோமின் லத்தீன் மொழிபெயர்ப்பு வேதாகமம் வெளிவந்தபின், அதையே ரோம சபை உபயோகித்து வந்தது. கி.பி. 1453இல் கான்ஸ்டன்டிநோபிள் எனும் நகரைத் துரக்கியர்கள் கைப்பற்றியபோது, கிரேக்க மொழியை அறிந்திருந்த பல பண்டிதர்கள் ஐரோப்பாவில் குடியேறத் தொடங்கினர்.

இதனால் 15 ஆம் நூற்றாண்டில் ஐரோப் பாவில் கிரேக்க மொழியறிவு அதிகரித்தபோது, லத்தீன் வேதாகமம் மொழி பெயர்க்கப்படுவதற்குமுன் உபயோகத்தில் இருந்த பல கிரேக்க புதிய ஏற்பாட்டுப் பிரதிகளையும் மக்கள் உபயோகிக்கத் தொடங்கினர். எனினும், இவற்றில் பல வித்தியாசமான வாக்கிய அமைப்புகள் இருந்தமையினால், இரஸ்மஸ் என்பவர், தனக்கு கிடைத்த 20 கிரேக்க வேதப்பிரதிகளை அடிப்படையாய்க் கொண்டு ஒரு புதிய கிரேக்க வேதப்பிரதியைத் தயாரித்தார். இதுவே, அதன்பின் அங்கீகரிக்கப்பட்ட மூலப்பிரதியாக எல்லா மொழி பெயர்ப்பாளர்களினாலும் கருதப்பட்டது. இதிலிருந்தே 250 வருடங்களாக ஆங்கில உலகை ஆக்கிரமித்திருந்த ஜேம்ஸ் அரசனின் பதிப்பு வேதாகமம் மொழி பெயர்க்கப்பட்டிருந்தது. ஹென்றி பவரின் திருத்தப்பட்ட மொழிபெயர்ப்பு இவ்வாங்கில மொழிபெயர்ப்பைத் தழுவிய மொழி பெயர்ப்பாகவே இருந்தது.

ஹென்றி பவரின் திருத்தப்பட்ட மொழி பெயர்ப்பு வெளிவந்தபின், வேதாகமத்தின் இரு முக்கியமான கிரேக்க மூலப்பிரதிகள் கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றுள் ஒன்று 1859இல் சீனாய் மலையிலுள்ள புனித கத்தரின் துறவுமடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இது கி.பி. நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த சுவடியாகும். அதேசமயம் வத்திக்கான் நூலகத்திலிருந்த வேதச்சுவடியும் கி.பி. நான்காம் நூற்றாண்டில் பிரதி பண்ணப்பட்டதாகும். இச்சுவடி 15ஆம் நூற்றாண்டிலிருந்தே அறியப்பட்டிருந்தாலும், 1843 இலேயே இதை உபயோகிப்பதற்கு ரோம சபை அனுமதியளித்தது. இவ்விரு வேதச் சுவடிகளையும் ஆராய்ச்சி செய்த பண்டிதர்கள், அதுவரை காலமும் மூலப்பிரதியாக உபயோகிக்கப்பட்டு வந்த அங்கீகரிக்கப்பட்ட வேதப்பிரதியைவிட, இவையிரண்டும் சிறப்பானதாகவும் நம்பகமானதாகவும் இருப்பதைக் கண்டுகொண்டனர்.

இதன்பின்னர், 16 ஆம் நூற்றாண்டில் இரஸ்மஸ் தயாரித்த மூலப்பிரதியை ஆராய்ச்சியாளர்கள் நம்பகமானதாகக் கருதவில்லை. இதிலிருந்து, அதுவரை காலமும் மொழிபெயர்க்கப்பட்ட வேதாகமங்கள் எல்லாம் பிழையானவை என நாம் எண்ணலாகாது. கிரேக்க மொழி கையெழுத்துப் பிரதிகளில் சில வித்தியாசமான வாக்கிய அமைப்புகள் ஏற்பட்டிருந்தன. இது பிரதிபண்ணியவர்களினால் ஏற்பட்ட தவறாகும். எனவே, கிடைக்கக்கூடிய எல்லா பிரதிகளையும் ஆராய்ந்து பார்த்து எது நம்பகமானது என்பதைக் கண்டுகொள்ள வேண்டும்.

19 ஆம் நூற்றாண்டில், சீனாய் மற்றும் வத்திக்கான் சுவடிகளே நம்பகமானவை என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அதற்கும் முன்னர் அங்கீகரிக்கப்பட்டிருந்த கிரேக்க பிரதியை அடிப்படையாய்க்கொண்டு மொழிபெயர்க்கப்பட்ட வேதாகமங்கள் திருத்தப்படவேண்டியது அவசியமாகிறது. ஹென்றி பவரின் திருத்தப்பட்ட வேதாகமம் வெளிவந்த காலத்தில், 1611 ஆம் ஆண்டு வெளிவந்த ஜேம்ஸ் அரசனின் பதிப்பு வேதாகமம் ஆங்கில உலகில் தனது முக்கியத்துவத்தை இழந்துவிட்டது. இதனால் அதை அடிப்படையாய்க்கொண்டு மொழி பெயர்க்கப்பட்ட தமிழ் வேதாகமம் திருத்தப் பட வேண்டும் எனும் கருத்து உருவானது.

ஹென்றி பவரின் மொழிபெயர்ப்பில் சில பிழைகள் இருப்பதனால் அது திருத்தப்படவேண்டும் என சென்னைக் கிறிஸ்தவப் பிரதிநிதிச் சங்கம் 1915இல் தெரிவித்தது. மேலும், அங்கீகரிக்கப்பட்ட கிரேக்க வேதப் பிரதியை 50 ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்த வேதப்பண்டிதர்கள், அதைவிட சீனாய் மற்றும் வத்திக்கான் சுவடிகளே நம்பகமானவை என்பதை அறியத்தந்தமையினால், தற்சமயம் பல கையெழுத்துப் பிரதிகளை ஆராய்ந்த நெஸ்லே என்பவர் தயாரித்த கிரேக்கப் பிரதியை அடிப்படையாய்க் கொண்டதாக தமிழ் மொழி பெயர்ப்பு இருக்கவேண்டும் என்றும் கூறப்பட்டது. அத்தோடு, வேதாகமத்தில் பவுல் போன்றவர்களை அவன் என்று மரியாதைக் குறைவாக அழைக்கக்கூடாது என்றும் இச்சங்கம் தெரிவித்தது. இக்கருத்துக்கள் அனைத்தும் இச்சங்கத்தினால் சென்னை வேதாகமச் சங்கத்துக்குத் தெரிவிக்கப்பட்டது.

கிறிஸ்தவப் பிரதிநிதிச்சங்கத்தின் கருத்துக்களை ஆராய்ந்த சென்னை வேதாகமச் சங்கம், லூத்தரன் சபை ஹென்றி பவரின் திருத்தப்பட்ட மொழிபெயர்ப்பை ஏற்றுக்கொள்ளாதமையினால், அவர்களும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் வேதாகமத்தைத் திருத்த வேண்டுமென 1917இல் தீர்மானித்து அதற்கென ஒரு குழுவை நியமித்தது. 1920இல், புதிய ஏற்பாட்டில் திருத்தப்படவேண்டிய பகுதிகள் எவை என்பதை இக்குழு வேதாகமச்சங்கத்திற்கு எடுத்துக்காட்டியது. எல்.பி.லார்சன் என்பவர் இக்குழுவுக்குத் தலைவராக இருந்தார். டென்மார்க் தேசத்தைச் சேர்ந்த இவர், 1889ஆம் ஆண்டு இந்தியாவுக்கு வந்து, மாணவர்கள் மத்தியில் ஊழியம் செய்துவந்தார். 1910இல் பெங்களூரில் புதிதாக ஒரு இறையியல் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டபோது லார்சன் அதன் தலைவராக நியமிக்கப்பட்டார்.

தமிழ் மொழியில் சிறப்பான தேர்ச்சி பெற்றிருந்த இவர், 1924இல் வேதாகம மொழிபெயர்ப்பு வேலைகளை ஆரம்பித்தார். 1925ஆம் ஆண்டு மத்தேயு சுவிசேஷமும் பின்னர் மாற்கு, யோவான் சுவிசேஷங்களும் அப்போஸ்தலர் நடபடிகளும் வெளியிடப்பட்டன. திருத்தப்பட்ட இப்பதிப்பு சிலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. இம்மொழிபெயர்ப்பில் தேவன் என்பதற்குப் பதிலாகக் கடவுள் எனும் வார்த்தையை லார்சன் உபயோகித்திருந்தார். லூத்தரன் சபை தேவன் எனும் பதத்தை விரும்பாதமையினால் கடவுள் எனும் பதம் அவர்களைத் திருப்திப்படுத்தும் என வேதாகமச் சங்கம் எண்ணியது. அதேசமயம், தேவன் என்ற சொல் மூலப்பதத்தின் சரியான மொழிபெயர்ப்பல்ல என்பதும் சுட்டிக் காட்டப்பட்டது. 1927ஆம் ஆண்டு, லார்சன் குழுவினரால் திருத்தப்பட்ட புதிய ஏற்பாடு வெளிவந்தது.

(தொடரும்)

வாசகர்கள் பேசுகிறார்கள்

(செப்டம்பர்-அக்டோபர் 2017)

1. Anuthinamum Christhuvudan helps to meditate the word of God daily and renewal our family to live for Christ. Thanks for your Ministry in Jesus Name.

Mr.J.Mervin, Bangalore.


2. அனுதினமும் கிறிஸ்துவுடன் தியானபுத்தகம் எனது ஆவிக்குரிய வாழ்வில் சிறந்த வழிகாட்டி. சபை ஊழியனாகிய எனக்கு இறைபணியில் உதவும் கலங்கரை விளக்கம். இருமாத பத்திரிக்கை சத்தியவசன சஞ்சிகையும் அதிக பயனுள்ளது. புத்தகங்களை தொடர்ந்து அனுப்பித் தாருங்கள்.

Mr.Devdoss, Rajapalayam.


3. அனுதினமும் கிறிஸ்துவுடன், சத்தியவசன சஞ்சிகை, காலண்டர் மேலும் தாங்கள் அனுப்பும் மற்ற புத்தகங்களும் எங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக இருக்கின்றன. மிக்க நன்றி. எங்களுக்காக ஜெபித்துக்கொள்ளுங்கள்.

Mrs.P.Vasan, Agasteeswaram.


4. அனுதினமும் கிறிஸ்துவுடன் புத்தகத்தை தினமும் காலையில் எழுந்தவுடன் அதை வாசித்துவிட்டுதான் மற்ற வேலைகளைப் பார்ப்பேன். நான் நிற்கும் கன்மலை என்ற புத்தகமும் கிடைத்தது. மிக்க மகிழ்ச்சி. ஊழியங்களுக்காக ஜெபிக்கிறேன்.

Mr.N.A.Selvaraj, Agsathriyarpatti.


5. அனுதினமும் கிறிஸ்துவுடன் தின தியானபுத்தகம் மிகவும் பிரயோஜனமாக இருக்கிறது. ஒவ்வொருநாள் தியானமும் வாசிப்பவர்களை நல்வழிப்படுத்துவதற்கு மிகவும் உபயோகமாக உள்ளது. சத்தியவசன அனைத்து ஊழியங்களையும் கர்த்தர் ஆசீர்வதிப்பாராக!

Mrs.Padmini Victor, Madurai.


6. சத்தியவசன பத்திரிக்கைகள் யாவும் கிடைக்கப்பெற்றேன். அகிக நன்றி கூறுகிறேன். சத்தியவசன ஊழியத்தின் மூலமாக அநேக நன்மைகளை கர்த்தர் எங்களுக்கு அருளினார். அநேக காரியங்களை நன்மையாக செய்து முடித்திருக்கிறார். ஊழியத்திற்காக அனுதினமும் ஜெபிக்கிறேன். எங்கள் குடும்பத்திற்காகவும் ஜெபியுங்கள்.

Mrs.Salomi, Dharapuram.

page 1 of 2