ஜெபக்குறிப்பு: ஜூலை 1 சனி
“என் மறைவிடமும் என் கேடகமும் நீரே; உம்முடைய வசனத்துக்குக் காத்திருக்கிறேன்” (சங்.119:114) என்ற வாக்குப்படியே இம்மாதம் முழுவதும் கர்த்தர் நமக்கு மறைவிடமாக கேடகமாக இருந்து நம்மை வழிநடத்த ஆசீர்வதிக்கவேண்டுதல் செய்வோம்.
கர்த்தருக்குப் பயப்படுதல்!
தியானம்: ஜூலை 1 சனி; வேத வாசிப்பு: நீதிமொழிகள் 1:1-33
“கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம். மூடர் ஞானத்தையும் போதகத்தையும் அசட்டை பண்ணுகிறார்கள்” (நீதி.1:7).
தன்னிடம் பணிபுரியும் பணியாட்கள் இருவரிலும் எவன் உண்மையுள்ளவன் என்பதைக் கண்டறிய விரும்பிய எஜமான், அவர்கள் இருவரிடமும் ஆளுக்கு ஒரு பெட்டியைக் கொடுத்து, தான் திரும்பி வரும்வரைக்கும் அதைத் திறக்காமல் பத்திரப்படுத்தி வைக்கும்படிக்குச் சொன்னான். ஒருவன் அப்படியே செய்தான்; ஆனால், மற்றவனோ ஒருமுறை திறந்துபார்த்து மூடினால் என்ன, எஜமானுக்குத் தெரியவாபோகிறது என்று எண்ணியவனாக அதைத் திறந்து பார்க்கும் ஆவலில் திறந்தான். அதற்குள் இருந்த ஒரு பாம்பு சீறிக்கொண்டு வெளியே வந்ததைக் கண்டு ஓட்டமெடுத்தான் அவன்.
இதுபோலவே கர்த்தருக்குப் பயப்படுதல் என்பது, பிறர் நம்மைப் பார்க்கும்போதோ, அல்லது பிறருக்குத் தெரியாதவரைக்கோ என்று எந்த வரையறையும் இல்லாமல், எல்லா வேளைகளிலும் உண்மைத்துவத்துடன் இருப்பதையே அது குறிக்கும். ‘கர்த்தருக்குப் பயப்படுதல் ஞானத்தின் ஆரம்பம்’ என்று சொல்லும்போது, உண்மையாகவே கர்த்தருக்குப் பயப்படுகிறவனின் வாழ்வில் அவன் எது செய்தாலும் அது நிதானமான காரியமாய், அவனது வாழ்விற்கு நல்வழி காட்டும் காரியமாய் அமையும். ஆனால் மூடனோ இந்த ஞானத்தை வெறுப்பதால் அவன் வழிகள் மாறுபாடானவைகளாக, கோணலானவைகளாகவே இருக்கும். அவன் பாவத்தின் மீதும், பொருளாசையிலும் பற்றுக்கொண்டவனாய், துன்மார்க்கரோடே சேர்ந்து அழிவின் பாதையை நோக்கிச் செல்லுவான் என்பதில் ஐயமில்லை.
ஞானமுள்ளவன் தேவனின் சத்தத்துக்குச் செவிகொடுத்து தன் வழியை காத்துக் கொள்வான். அவன் விக்கினமின்றி வாசம்பண்ணி ஆபத்துக்குப் பயப்படாதிருப்பான். ஆனால் மூடனோ, தேவனின் சத்தத்தைக் கேட்கமாட்டேன் என்று அடம் பிடித்து ஆர்ப்பாட்டம் பண்ணுவான். அவன் பயப்படும் காரியம் வரும்போது அவன் கூப்பிட்டாலும் அவன் குரல் கேட்கப்படமாட்டாது.
கர்த்தருக்குப் பயப்படும் பயம் நம்மிடம் உண்டா? எல்லா வேளைகளிலும் உண்மைத்துவத்துடன் வாழ நாம் பிரயாசப்படுவதுண்டா? நமது வாழ்வில் நாம் யாரை பிரியப்படுத்தப் பார்க்கிறோம்; தேவனையா அல்லது மனுஷரையா? மனுஷருக்குத் தெரியாமல் நாம் காரியங்களை மறைக்கலாம். ஆனால் தேவனுக்கு நாம் எதையுமே மறைக்கமுடியாது. கர்த்தரைப் பிரியப்படுத்த நினைப்பவன் எல்லா நேரங்களிலும், தருணங்களிலும் உண்மையாய் இருப்பான்.
“தீமையை வெறுப்பதே கர்த்தருக்குப் பயப்படும் பயம். பெருமையையும், அகந்தையையும், தீயவழியையும், புரட்டு வாயையும் நான் வெறுக்கிறேன்” (நீதி.8:13).
ஜெபம்: அன்பின் ஆண்டவரே, பெருமை அகந்தை தீய வழிகள் இவைகளை வெறுத்து எனது அந்தரங்க வாழ்வில், சிந்தனைகளில் தூய்மையோடு வாழ உதவி செய்யும். ஆமென்.
தேவனுக்கே மகிமை!
அதிகாலை வேளையில்… (ஜூலை-ஆகஸ்டு 2017)
– Dr.உட்ரோ குரோல்
வேதபகுதி : நியாயாதிபதிகள் 7:1-25
அப்பொழுது கிதியோனாகிய யெருபாகாலும் அவனோடிருந்த ஜனங்கள் யாவரும் காலமே எழுந்து புறப்பட்டு, ஆரோத் என்னும் நீருற்றின் கிட்டப் பாளயமிறங்கினார்கள்; மீதியானியரின் பாளயம் அவனுக்கு வடக்கே மோரே மேட்டிற்குப் பின்னான பள்ளத்தாக்கிலே இருந்தது (நியாதி.7:1).
இயல்பாகவே மனிதன் இறைவனைத் தேடும் மனநிலை கொண்டவனாய் உள்ளான். பரிணாமக் கொள்கையானது ‘இறைவனே சிருஷ்டிகர்’ என்ற கருத்தை மறுக்கிறது. தாராளவாதிகளான சில இறைவல்லுநர்களும் வேதாகமத்தில் காணப்படும் தேவனுடைய அற்புதங்களை ஏற்காமல் பல மரபு இயல்புகளை மாற்ற முயற்சிக்கின்றனர். இறைவனால் தோற்றுவிக்கப்பட்ட அபூர்வ காரியங்களை மனிதன் மறுத்து அதனைத் தன்னால் இயன்ற அளவு வேறுமுறைகளில் விளக்கமளிக்க முயற்சிக்கிறான்.
தம்முடைய பதவியையும் அதிகாரத்தையும் அபகரிக்க விரும்பும் மனிதனின் இயல்பை தேவன் நன்கு அறிவார். தேவனால் மாத்திரமே விடுதலையைத் தரமுடியும் என்று மனிதர்கள் அறிந்துகொள்ள வேண்டிய சில சிக்கலானச் சூழ்நிலைகளை அவர் உருவாக்கினார் என்று வேதாகமத்தில் பல இடங்களில் நாம் வாசிக்கிறோம். இயல்பான விளக்கத்தைக் கூற இயலாத காரியங்களை அவர் நீக்கிவிடும்பொழுது, மனிதன் தேவனுடைய அதிசய செயல்களைத் தெளிவுற அறிந்துகொள்கிறான். இன்றைய வேதப்பகுதியும் அவ்விதமான ஒன்று.
மீதியானியருக்கு விரோதமான ஒரு யுத்தத்துக்கு இஸ்ரவேலர் ஆயத்தமாகிக் கூடிவந்தனர். தேவனுடைய பிரசன்னத்தின் உறுதியைப் பெற்றுக்கொள்ள கிதியோன் தோலில் அடையாளத்தைக் காண காத்திருந்ததற்காய் யுத்தம் இரண்டு நாட்கள் தாமதமானது. இரண்டாவது நாளின் காலையில் கிதியோனும் அவனுடன் இருந்த மக்களும் “அதிகாலையில் எழுந்து ஆரோத் என்னும் நீரூற்றின் கிட்டப் பாளயமிறங்கினார்கள்” (நியா.7:1). போரிட ஆர்வத்துடன் முன்சென்ற வீரர்கள் அதிக எண்ணிக்கையுள்ளவர்களாய் உள்ளனர் என தேவன் கிதியோனிடம் கூறினார். தேவனுடைய கரமே வெற்றியைத் தந்தது என கிதியோனும் இஸ்ரவேலரும் மற்ற தேசத்தார் அனைவரும் அறிய வேண்டும் என தேவன் எண்ணினார். எனவே அவர் கிதியோனிடம் முப்பத்திரண்டாயிரம் போர்வீரர்களில் யுத்தத்துக்கு பயப்படுபவர்களைத் திரும்பிச் செல்லக் கட்டளையிடச் சொன்னார். தங்களுடைய அச்சத்தையும் திகிலையும் ஒப்புக்கொண்டு இருபத்திரண்டாயிரம்பேர் திரும்பிச் சென்றது கிதியோனுக்கு அதிர்ச்சியை அளித்தது. முப்பத்தைந்தாயிரம் மீதியானியருக்கு எதிராக பத்தாயிரம் இஸ்ரவேலர் சென்று போரிட்டு வென்றால் அது தேவனால் தரப்பட்ட வெற்றியாகும். ஆனால், இந்த பத்தாயிரம் பேரும் அதிகம் என தேவன் கூறியது கிதியோனுக்கு ஆச்சரியத்தை அளித்தது.
இப்போர்வீரர்களை வித்தியாசமான கடினமான ஒரு சோதனைக்குக் கீழ்ப்படுத்த ஆரோத் என்னும் நீருற்றின் அருகில் பாளயமிறங்கக் கிதியோன் கட்டளை பெற்றான். தண்ணீரை நாய்போல நக்கிக் குடித்தவர்கள், முழங்கால் ஊன்றிக் குனிந்து குடித்தவர்கள் என வீரர்கள் இருபிரிவுகளாகப் பிரிக்கப்பட்டனர். இந்த சோதனையின் நோக்கம் எதுவாக இருந்தாலும் கிதியோனின் படைக்கு முந்நூறு பேர் மாத்திரமே தெரிந்தெடுக்கப்பட்டனர்.
அடுத்ததாக தேவன் கிதியோனை அவனுடைய வேலைக்காரன் பூராவுடன் மீதியானியரின் கூடாரத்துக்குச் செல்ல அறிவுரை கூறினார். அவர்கள் அங்கு சென்றபொழுது ஒருவன் மற்றவனிடம் தான் கண்ட கனவினைப் பகிர்ந்துகொண்டிருந்தான். “சுட்டிருந்த ஒரு வாற்கோதுமை அப்பம் மீதியானியரின் பாளயத்திற்கு உருண்டு வந்தது, அது கூடாரம் மட்டும் வந்தபோது, அதை விழத் தள்ளிக் கவிழ்த்துப் போட்டது; கூடாரம் விழுந்துகிடந்தது” என்று கூற, மற்றவன் “அது கிதியோன் என்னும் இஸ்ரவேலனுடைய பட்டயமே அல்லாமல் வேறல்ல; தேவன் மீதியானியரையும் இந்தச் சேனை அனைத்தையும் அவன் கையிலே ஒப்புக் கொடுத்தார்” என்றான். கனவினையும் அதன் பொருளையும் செவியுற்ற கிதியோன் உடனடியாக இஸ்ரவேலின் பாளையத்துக்கு வந்து, “எழுந்திருங்கள். கர்த்தர் மீதியானியரின் பாளயத்தை உங்கள் கைகளில் ஒப்புக் கொடுத்தார்” என்று கூறினான். முந்நூறு இஸ்ரவேலர் மீதியானியரை வென்றனர். மகிமையனைத்தும் தேவனுக்கே உரித்தானது.
அசாதாரண சூழ்நிலையைக் கண்டு நாம் தயங்கக்கூடாது. நம்முடைய வெற்றிக்கு எதிரான காரணிகள் சில இருந்தாலும் அது நம் வெற்றியின் மூலம் தேவன் பெறும் மகிமைக்கு ஏது வானவைகளாகும். மாபெரும் படையைவிட அர்ப்பணிப்புள்ள சிறு குழுவே சிறந்தது. அமெரிக்க தேசத்தின் கடற்படையின் முழக்கமானது, “சில நல்ல மனிதர்கள்” என்பதாகும். தேவனும் இவர்களையே எதிர்பார்க்கிறார். நீங்கள் இவ்வாறான ஒருவரா?
அதிகாலைப் பாடல்:
இரட்சிப்பின் தலைக்கவசம் அணிந்தும்
சத்தியம் என்னும் கச்சையைக் கட்டியும்
விசுவாச வீரராய் விழித்தெழும்புவோம்.
சுகமான கூடாரத்தை தள்ளிவிட்டு
நாம் காணும் ஒவ்வொரு எதிரியையும்
எதிர்த்து பயப்படாமல் முன்னோக்கி
வரிசையாகச் செல்லுவோம்
உலகமனைத்தும் நமது காலடியில்;
ஜெயகிறிஸ்து நம்முன் செல்ல
நம் வெற்றி கீதம் எங்கும் எதிரொலிக்கட்டும்.
மொழியாக்கம்: Sis.அகஸ்டா மங்களதுரை
அனைத்துலக மொழிபெயர்ப்புப் பணிகள்
புனித வேதாகமத்தின் வரலாறு (ஜூலை-ஆகஸ்டு 2017)
அத்தியாயம்-10
சகோ.M.S.வசந்தகுமார்
தமிழ் வேதாகமத்தின் வரலாறு
(5) ஹென்றி பவர் மொழிபெயர்ப்பு
ஹென்றி பவரின் குழுவினரது மொழிபெயர்ப்புப் பணிகளின் காரணமாக 1863-ல் புதிய ஏற்பாடும் 1868-ல் பழைய ஏற்பாடும் வெளிவந்தது. ஆரம்பத்தில், யாழ்ப்பாணக் கிறிஸ்தவர்கள் இப்புதிய மொழிபெயர்ப்பை ஏற்றுக்கொள்ளவில்லை. அதே சமயம் அவர்கள், தமது மொழிபெயர்ப்பு இந்தியாவில் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்றும் கூறவில்லை.
மாறாக, புதிய மொழிபெயர்ப்பு இன்னும் திருத்தப்படவேண்டும் என்று தெரிவித்ததோடு, அதற்கான காரணங்களையும் சுட்டிக்காட்டினர். அதேசமயம், புதிய மொழிபெயர்ப்பு மூலமொழியைத் தழுவியதாயிருக்கையில் தமது மொழிபெயர்ப்பு தமிழ் நடையில் சிறந்ததாயிருக்கின்றமையினால், இவ்விரண்டையும் ஒருங்கே கொண்ட ஒரு மொழிபெயர்ப்பைத் தயாரிக்க யாழ்ப்பாணத்திலிருந்த மிஷனரிகள் தீர்மானித்தனர். எனினும், அச்சமயம் இன்னுமொரு புதிய மொழிபெயர்ப்பைச் செய்ய சென்னை வேதாகமச் சங்கம் விரும்பாததினால், யாழ்ப்பாண மிஷனெரிகளின் ஆலோசனைகளைக் கருத்திற்கொண்டு ஹென்றி பவரின் மொழி பெயர்ப்பைத் திருத்த தீர்மானித்தது. மூலமொழியில் உள்ள ஒரு வார்த்தையைப் பலவாறு தமிழில் எழுதக்கூடிய தாயிருப்பினும் அழகிய சொற்களை உபயோகிப்பதே நல்லது என யாழ்ப்பாணத்திலிருந்த மிஷனரிகள் கூறினர்.
1869-ல் இரு நாட்டினது மிஷனரிகளும் ஹென்றி பவரின் வீட்டில் கூடி அவரது மொழிபெயர்ப்பைத் திருத்தினர். மத்தேயு சுவிசேஷத்தில் மட்டும் 468 திருத்தங்கள் செய்யப்பட்டன. இதுபோல ஏனைய புத்தகங்களிலும் அநேக திருத்தங்கள் செய்யப்பட்டன. அதுவரை காலமும் பெரும்பாலான கிறிஸ்தவர்கள் பெப்ரீஷியசின் மொழி பெயர்ப்பையே உபயோகித்து வந்தமையினால், ஹென்றி பவரின் திருத்தப் பதிப்பு பெப்ரீஷியசினுடைய மொழி நடையையே பின்பற்றியது. எனினும், தேவை ஏற்படும்போது ரேனியஸ் மற்றும் பேர்சிவெல் என்போருடைய மொழிபெயர்ப்புகளில் இருந்தும் சொற்கள் எடுக்கப்பட்டன.
ஹென்றி பவரின் திருத்தப்பட்ட வேதாகமம் 1871-ல் சென்னையில் அச்சிடப்பட்டது. லூத்தரன் சபையைத் தவிர மற்ற அனைத்து சபைகளையும் சேர்ந்தவர்கள் இத்திருத்த மொழி பெயர்ப்புக் குழுவில் இருந்தமையினால், திருத்த மொழிபெயர்ப்பு, ஐக்கியப் பதிப்பு அல்லது ஒன்றிணைப்புப் பதிப்பு என அழைக்கப்படுகின்றது. லூத்தரன் சபையினர் மட்டும், பெப்ரீஷியசின் மொழிபெயர்ப்பை தொடர்ந்து உபயோகித்து வந்தனர்.
ஹென்றி பவரின் தலைமையின் கீழ் மொழிபெயர்க்கப்பட்டு, பின்னர் யாழ்ப்பாணத்திலிருந்த மிஷனெரிகளின் ஆலோசனையின்படி திருத்தப்பட்ட ஐக்கியப் பதிப்பு வேதாகமமே இன்று பெரும்பாலான கிறிஸ்தவர்கள் உபயோகிக்கும் வேதாகமமாகும். வேதாகமம் முதன்முதலில் 1714-ல் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது. எனினும், நாம் இன்று 1871-ல் வெளி வந்த திருத்தப்பட்ட மொழி பெயர்ப்பையே உபயோகிப்பது அநேக கிறிஸ்தவர்கள் அறியாத ஒரு உண்மையாகும். பெரும்பாலான கிறிஸ்தவர்கள், தாம் உபயோகிக்கும் வேதாகமமே முதன் முதலில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டதென்றும், இதை எவ்வகையிலும் திருத்த முயல்வது தேவனுடைய வார்த்தையை மாற்றுவது எனும் கருத்துடையவர்களாக இருக்கின்றனர். ஆயினும், நாம் உபயோகிக்கும் வேதாகமம் பல தடவைகள் திருப்பி மொழி பெயர்க்கப்பட்டும் திருத்தப்பட்டும் இருப்பதை நாம் அறிந்திருக்க வேண்டும்.
ஹென்றி பவரின் மொழி பெயர்ப்பிலும், அதைத் திருத்தும் பணியிலும் எல்லா மிஷனரி சங்கங்களையும் சேர்ந்தவர்கள் ஈடுபட்டிருந்தமையினால், திருத்த மொழிபெயர்ப்பு வெளிவந்த பின்னர் எல்லோரும் அதையே உபயோகிக்கத் தொடங்கினர். மேலும் வேதாகம மொழிபெயர்ப்பு பற்றி அக்காலத்தில் முரண்பட்ட கருத்துக்களைக் கொண்டிருந்தவர்களை இம்மொழி பெயர்ப்பு திருப்திப்படுத்துவதாய் இருந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக, இம்மொழி பெயர்ப்புக் குழுவுக்குத் தலைமை தாங்கிய ஹென்றி பவர், தமது மொழி பெயர்ப்பு எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படும் மொழி பெயர்ப்பாக இருப்பதற்காக, மொழி பெயர்ப்பு பற்றி எவர் எதைச்சொன்னாலும் அதையெல்லாம் கவனித்துக் கேட்டு எல்லோரிடமும் ஆலோசனைகளைப் பெற்று வேதாகமத்தை மொழி பெயர்த்துள்ளார்.
இதனால்தான், முதலில் தான் மொழிபெயர்த்த வேதாகமத்தைத் திருத்தவேண்டும் என யாழ்ப்பாணத்திலிருந்த மிஷனரிகள் கூறியபோது, அவர்களது ஆலோசனையின்படி தனது மொழிபெயர்ப்பைத் திருத்தினார். இம்மொழிபெயர்ப்பு வெளிவந்த பின்னர் வேதாகமச் சங்கம் வேறு எந்த ஒரு மொழிபெயர்ப்பையும் அச்சிடாததினால், நாளடைவில் இதுமட்டுமே தமிழ் மொழியில் இருக்கும் வேதாகமம் எனும் கருத்து தமிழ்க் கிறிஸ்தவர்கள் மத்தியில் ஏற்பட்டுவிட்டது.
(தொடரும்)
வாசகர்கள் பேசுகிறார்கள்
(ஜூலை-ஆகஸ்டு 2017)
1. சத்தியவசனம் இதழ் கருத்துள்ள ஆழமான ஆன்மீகக் காரியங்களை விளக்கும் சத்தியமாக வெளிவருவது மிக நன்றாக உள்ளது. ஆழ்ந்த விளக்கங்களுடன் செய்திகளை வடிக்கும் ஆண்டவரின் பிள்ளைகளை கர்த்தர் ஆசீர்வதிப்பாராக. அனுதினமும் கிறிஸ்துவுடன் தியானங்கள் எமது ஆன்மீக வாழ்க்கைக்கு மிகவும் பிரயோஜனமாக இருக்கிறது. தியானங்களை எழுதும் கர்த்தருடைய பிள்ளைகளை கர்த்தர் ஆசீர்வதிக்க ஜெபிக்கிறோம். வேதாகம அட்டவணைப்படி வேதாகமத்தை 2016-ம் ஆண்டிலும் வாசித்து முடித்தேன். ஒவ்வொரு ஆண்டும் மீண்டும் மீண்டும் வாசிக்க ஆவியானவரின் கிருபை வழிநடத்துதலுக்காக நன்றி செலுத்துகிறேன்.
Mr.D.Stephen Natarajan, Cuddalore.
2. அனுதினமும் கிறிஸ்துவுடன் தியானங்கள் அனுதினமும் குடும்ப ஜெபத்தில் வாசித்து ஜெபக்குறிப்புக்காகவும் ஊழியங்களுக்காகவும் ஜெபித்து வருகிறோம். உங்களுடைய புத்தகத்தில் குறிப்பிட்ட வேத வசன அட்டவணையின்படி கடந்த ஆண்டில் பரிசுத்த வேதாகமத்தை வாசித்து முடிக்கவும் கர்த்தர் கிருபை செய்தார்.
Mrs.Sarojini Arthur, Valliyur.
3. அனுதினமும் கிறிஸ்துவுடன் தியான புத்தகத்தை தவறாமல் படித்து வருகிறோம். மிகவும் ஆசீர்வாதமாக இருக்கிறது. இன்னும் விசுவாச பாதையில் நிலைநிற்கவும் அதிகமாக ஆண்டவரை கிட்டிச்சேரவும் உதவுகிறது. எங்களுக்காக ஜெபியுங்கள்.
Mrs.M.Samuel, Nellikuppam.
4. அனுதினமும் கிறிஸ்துவுடன் பத்திரிக்கை எனக்கு தவறாமல் வருகிறது. ஒவ்வொரு நாளும் தியானப்பகுதியை வாசிக்கிறேன். ஆன்மீக வாழ்க்கைக்கு ஏற்ற மன்னவாக இருக்கிறது. ஊழியங்களுக்காக ஜெபிக்கிறேன்.
Mr.Thangaraj, Avarikulam.
5. சத்தியவசனம் வானொலி நிகழ்ச்சிகளை திங்கள் செவ்வாய் ஆகிய நாட்களில் MW873 Khz-ல் தெளிவாகக் கேட்டு ஆண்டவரைத் துதிக்கிறேன்.
Mr.Milton, Tiruppathur.