ஜெபக்குறிப்பு: ஜூலை 3 திங்கள்
“நம்முடைய தேவனுக்கு மகத்துவத்தைச் செலுத்துங்கள்” (உபா.32:3) என்ற வாக்குப்படி 11 நபர்களுக்கு கர்த்தர் அருளிய நன்மைகளுக்காக கர்த்தருடைய பரிசுத்த நாமத்தை ஸ்தோத்திரித்து ஜெபிப்போம்.
சுயபுத்தி
தியானம்: ஜூலை 3 திங்கள்; வேத வாசிப்பு: நீதிமொழிகள் 3:1-35
“உன் சுயபுத்தியின் மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து…” (நீதி.3:5).
பிரயாணமாய் வந்த ஒருவன் ஆறு ஒன்றைக் கடந்துசெல்ல நேர்ந்தது. அருகில் இருந்த படகைக் கண்டும், அதைப் பயன்படுத்திக்கொள்ளாமல், ‘செங்கடலைக் கடக்கச் செய்த ஆண்டவரே, இந்த ஆற்றையும் கடக்க செய்யும்’ என்று சொல்லிக்கொண்டு ஆற்றில் இறங்கி மாண்டுபோனான். அவன், ஆண்டவர் தனக்கு கொடுத்த சுயபுத்தியைப் உபயோகிக்காது போனான். “உன் சுய புத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிரு” என்பதன் கருத்து, நமது புத்தியை அப்படியே மழுங்கடித்துவிட்டு தேவனை மட்டும் எதிர்பார்ப்பதல்ல. நமக்குத் தேவன் தந்த புத்தியை தேவனுக்குள்ளாக ஒப்படைத்து, அதைத் தந்த தேவனை முழுமையாக நம்பி, அதைத் தேவனுக்குள்ளாக சரிவர உபயோகிக்கவேண்டும் என்பதே.
நாம் தேவனை நம்பாமல், நமது சுயபுத்தியில் எப்போது சாய்கிறோமோ, அல்லது நமது புத்தியை மூட்டைகட்டி வைத்துவிட்டு, ‘தேவனே, நீரே எல்லாவற்றையும் பார்த்துக்கொள்ளும்’ என்று எப்போது சோம்பேறியாய் இருக்கிறோமோ, அப்போது நாம் பெரும் தவறு செய்கிறோம். நாம் தேவனையும் முழுமையாக நம்பவேண்டும்; அதே வேளையில் தேவன் நமக்குத் தந்த புத்தியையும் சரிவர உபயோகிக்கப் பழக வேண்டும். இரண்டும் நமது வாழ்வில் ஒன்றுடன் ஒன்று கலந்து செயல்பட வேண்டும். அப்போது நாம் சரிவர தீர்மானிக்கவும், தேவ வழிநடத்துதலைப் பெற்றுக்கொள்ளவும் முடியும்.
நமது வாழ்வில் தீர்மானங்கள் எடுக்கும்போது, நாம் எப்படி நடந்து கொள்ளுகிறோம். தேவனை மறந்து நமது சுயபுத்தியை மட்டும் நம்புகிறோமா? தேவ பாதத்தில் அமர்ந்து நம்மை முழுமையாக அவரிடத்தில் அர்ப்பணித்து அவரது வழிநடத்துதலோடு காரியங்களை எதிர்நோக்குகிறோமா? அல்லது, அதற்கு முரணாக நடந்து தோல்விகளை எதிர்நோக்குகிறோமா? நமது காரியங்களை கர்த்தரே வாய்க்கப் பண்ணுகிறவர். அதேவேளை நம்மையும் சிந்தித்துச் செயற்பட அழைக்கிறார். நாம் ஞானமாய் நடந்துகொள்ளவும், தேவனின் விருப்பத்தையும், சித்தத்தையும் அறிந்து செயல்படவும் அவர் விரும்புகிறார்.
“கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தில் ஆரம்பம்…” (நீதி.1:7) என்று வார்த்தை கூறுகிறது. நாம் தேவனுக்குப் பயந்து உண்மையாய் நடக்கும்போது, சரிவர சிந்திக்கவும் தீர்மானிக்கவும் தேவன் நமக்கு ஞானத்தைத் தருகிறார். அதன் பிரகாரம் நாம் சிந்தித்து தேவவழிநடத்துதலோடு செயற்படும்போது சகலமும் தேவனுக்குள் நமக்கு வெற்றியாய் நடக்கும்.
“ஞானத்தைச் சம்பாதி, புத்தியையும் சம்பாதி. என் வாயின் வார்த்தைகளை மறவாமலும் விட்டு விலகாமலும் இரு” (நீதி.4:5).
ஜெபம்: அன்பின் தேவனே, நாங்கள் எடுக்கும் தீர்மானங்கள் யாவும் தேவனுக்குகந்ததாய் இருக்கவும், தேவசித்தத்தை அறிந்து செயல்படவும் எங்களுக்கு உதவி செய்யும். ஆமென்.