ஜெபக்குறிப்பு: ஜுன் 17 சனி
இந்தியாவின் தலைநகரான டெல்லிக்காக ஜெபிப்போம். அங்கு வாழும் பூர்வீக மக்கள் மெய்தேவனாம் இயேசுகிறிஸ்துவை அறிந்துகொள்ளவும், சபைகளுக்குள் எழுப்புதல் உண்டாக, சுவிசேஷத்திற்கு எதிரான மக்களது இருதயக்கடினம் நீங்க, அங்கே சிலுவைக்கொடி ஏற்றப்பட மன்றாடுவோம்.
தகுதியான பாத்திரம்
தியானம்: ஜுன் 17 சனி; வேத வாசிப்பு: ஏசாயா 6:1-9
“…நான் அசுத்த உதடுகளுள்ள மனுஷன். …இதோ, அடியேன் இருக்கிறேன். என்னை அனுப்பும் என்றேன்.” ஏசாயா 6:5,8
ஒரு தொழிலில் சேர பலவித தகுதி தராதரங்கள் அங்கு எதிர் பார்க்கப்படும். அப்படியே சேர்ந்துகொண்டாலும், உறுதிப்படுத்தப்பட்டு நிலைப்படுத்தப்படுவதும் முக்கியம். இது இயல்பாக நடக்கின்ற விஷயம். ஆனால், தேவனுடைய பணியைச் செய்வதற்கு, அந்தத் தகுதியைப் பெறுவதற்கு, வெறுமனே பணிசெய்கின்ற செயற்திறன் இருந்தால்மட்டும் போதாது; தாழ்மையும் அர்ப்பணமும் மிகவும் அவசியம்.
உசியா, யோதாம், ஆகாஸ், எசேக்கியா என்ற யூதாவின் ராஜாக்களின் காலத்தில் ஏசாயா தரிசனங்களைக் கண்டு தேவனின் வார்த்தையை அறிவித்து வந்தார். உசியா ராஜா மரணமடைந்தபோது மக்கள் ஒரு தலைவனின்றி செய்வதறியாமல் திகைத்தார்கள். அந்த சமயத்திலே கர்த்தர், ஏசாயாவிற்கு ஒரு விசேஷித்த தரிசனத்தைக் காண்பித்தார். உயரமும் உன்னதமுமான சிங்காசனம்; அதிலே வீற்றிருக்கிறவரின் வஸ்திரத்தொங்கலால் தேவாலயம் நிறைந்தது. “சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர்” என்றொலித்த சேராபீன்களின் துதியின் சத்தம் ஏசாயாவின் செவிகளை நிறைத்தது; மனக்கண்களைத் திறந்தது. ஏசாயா தனது அபாத்திர நிலைமையை உணர்ந்தார். தன்னைத் தாழ்த்தி, தன் உதடுகளின் அசுத்தத்தை அறிக்கையிட்டார். அப்பொழுது ஒரு சேராபீன், பலிபீடத்தின் நெருப்புத் தழலினால் ஏசாயாவின் வாயைத் தொட்டு, “இதோ, இது உன் உதடுகளைத் தொட்டதினால் உன் அக்கிரமம் நீங்கி, உன் பாவம் நிவிர்த்தியானது” என்றான்.
அதைத் தொடர்ந்து, “யாரை அனுப்புவேன்” என்றுரைத்த ஆண்டவருடைய சத்தத்தைக் கேட்டார் ஏசாயா. தாமதமின்றி, “இதோ அடியேனிருக்கிறேன் என்னை அனுப்பும்” என்றார். இதுவரை ஒரு தீர்க்கதரிசியாக செயற்பட்ட ஏசாயா, இப்பொழுது ஆண்டவரால் ஒரு தீர்க்கதரிசியாக உறுதிப்படுத்தப்பட்டார். கர்த்தர் ஏசாயாவைத் திடப்படுத்தி, மக்களுக்கு சொல்ல வேண்டிய கடின வார்த்தைகளை ஏசாயாவின் வாயில் வைத்தார். தேவ சந்நிதானத்திலே ஏசாயா தன்னை ஒரு தகுதியற்ற பாத்திரமாக தாழ்த்தினார்; ஒன்றுமில்லை என அர்ப்பணித்தார். கர்த்தரோ அவரைத் தகுதியுள்ள பாத்திரமாக்கி தமது சேவையில் நிலைநிறுத்தினார்.
நமது நிலைமை என்ன? நம்மைவிட்டால் யாருமில்லை என்ற பெருமை நமக்குள் இருக்கும்வரைக்கும் தேவனால் நம்மைப் பயன்படுத்த முடியாது. “எங்களால் ஏதாகிலும் ஆகும் என்பதுபோல ஒன்றை யோசிக்கிறதற்கு நாங்கள் எங்களாலே தகுதியானவர்கள் அல்ல. எங்களுடைய தகுதி தேவனால் உண்டாயிருக்கிறது” (2கொரி.3:5). பவுலடியாரின் இந்த வார்த்தைகளைச் சிந்திப்போம். நமது பாவநிலையை உணர்ந்து, தேவசந்நிதானத்தில் நம்மை தாழ்த் தும்போது நிச்சயம் தேவன் நம்மைச் சுத்திகரித்து தகுதிப்படுத்துவார்.
ஜெபம்: அன்பின் தேவனே, உமது சமுகத்தில் ஒரு தகுதியுள்ள பாத்திரமாக நிற்கும்படியாக தாழ்மையையும் அர்ப்பணத்தையும் பெற்று வாழ கிருபை தாரும். ஆமென்.