ஜெபக்குறிப்பு: ஜுன் 10 சனி
சத்தியவசன ஊழியத்திற்காக தங்கள் பகுதி நேரங்களில் பிரதிநிதிகளாக பணியாற்றிவரும் சகோதர, சகோதரிகளுக்கு கர்த்தரே அரணும் கோட்டையுமாய் இருந்து பாதுகாக்க, அவர்கள் கையிட்டுச் செய்யும் பணிகளில் எல்லாம் கர்த்தர் தமது கரத்தினால் பராக்கிரமம் செய்து அவர்களை வழிநடத்த ஜெபிப்போம்.
தரிசனம் பெற்ற பாத்திரம்
தியானம்: ஜுன் 10 சனி; வேத வாசிப்பு: வெளிப்படுத்தல் 1:1-20
“நான் அவரைக் கண்டபோது செத்தவனைப்போல அவருடைய பாதத்தில் விழுந்தேன். அப்பொழுது அவர் …நீ கண்டவைகளையும், இருக்கிறவைகளையும், இவைகளுக்குப் பின்பு சம்பவிப்பவைகளையும் எழுது…” வெளி.1:17,19
ஆழமான அன்பின் ஐக்கியம், அனல்கொண்ட ஆவிக்குரிய வாழ்க்கை, அர்ப்பணம் நிறைந்த ஆத்தும பணி; இம்மூன்றிலும் ஒன்றிணைந்து செயற்பட்ட ஒருவன் சடுதியாக தனிமையாக்கப்பட்டால், அவன் நிலை என்னவாகும்? அவன் ஆவி, ஆத்தும, சரீர, மனநிலை பாதிக்கப்பட்டு, தேவபணியிலும் பின்னடைவான் அல்லவா! ஆனால் யோவானோ, தனிமையாக்கப்பட்டும் தேவனின் மகிமையான தரிசனத்தைப் பெற்றுக்கொள்ளத்தக்கதான ஒரு பாத்திரமானான்.
யோவான் இயேசுவுக்கு மிகவும் அன்பான, நம்பிக்கைக்குரிய நெருங்கிய சீஷர்களில் ஒருவன். இயேசுவின் மரணவேளையில் இறுதிவரை சிலுவையண்டை நின்ற ஒரே சீஷன் இந்த யோவான்தான். பின்பு பரிசுத்தாவியினால் நிரப்பப்பட்டதும், தாமதமின்றி சுவிசேஷ பணியை ஆரம்பித்து எபேசுவிலே சபை தலைவனாகப் பணியாற்றினார். இந்தவேளை ரோம இராயன் யோவானைக் கொலை செய்யும் நோக்கோடு கொதிக்கிற எண்ணையில் அமிழ்த்தியபோதும், யோவான் அற்புத விதமாக காக்கப்பட்டார் என்று சரித்திரம் கூறுகின்றது. ரோம அரசாட்சியின் காலத்தில் சிறைக்கைதிகளை நாடு கடத்துவது வழக்கமாயிருந்ததால், யோவானும் பத்மு தீவுக்கு சிறைக்கைதியாக நாடுகடத்தப்பட்டார் (வெளி.1:9). தனிமைப்படுத்தப்பட்ட யோவான், மனமுடைந்து தன் பணியை நிறுத்தியிருக்கலாம். ஆனால், யோவானின் உறுதியான விசுவாசம், கிறிஸ்துவோடு கொண்டிருந்த ஐக்கியம், தன்னுடைய அழைப்பிற்குத் தன்னை அர்ப்பணித்திருந்த அர்ப்பணம் எதிலும் மாற்றம் ஏற்படவில்லை. அந்தத் தனிமையான தீவிலே யோவான், தேவதரிசனத்தைப் பெற்றுக்கொள்ளக்கூடிய ஒரு பாத்திரமானார். பத்மூ தீவின் தனிமையிலே யோவானுக்கு அருளப்பட்ட தரிசனங்களே வேதாகமத்திலுள்ள வெளிப்படுத்தின விசேஷமாகும்.
சாதாரணமாக தனிமையும் பாடுகளும் ஒருவனைப் பலவழிகளிலும் பாதிக்கும். ஆனால், நாமோ அசாதாரணமானவர்கள். கிறிஸ்துவுடனான ஐக்கியம், விசுவாசம், அர்ப்பணம் ஆகியவை நமக்குள் உறுதியாயிருக்குமானால், தேவதரிசனம் பெற்றுக்கொள்ளும் பாத்திரங்களாக நம்மையும் தேவன் மாற்றியமைப்பார். ஆகவே, தனிமையிலும் “இயேசுகிறிஸ்துவினிமித்தம் வருகிற உபத்திரவத்திற்கும், அவருடைய ராஜ்யத்திற்கும்; அவருடைய பொறுமைக்கும் உங்கள் உடன்பங்காளனுமாயிருக்கிற … நான் தேவவசனத்தினிமித்தமும், கிறிஸ்து வைப்பற்றிய சாட்சியினிமித்தமும்…” (வெளி.1:9) என யோவான் எழுதுகிறார். இந்தக் கடினமான பாதையிலும் கிறிஸ்துவோடு, கிறிஸ்துவுக்காக முன்செல்ல ஏதுவாயிற்று என்று இன்று நாமும் சொல்லக்கூடுமா?
ஜெபம்: அன்பின் ஆண்டவரே, பரலோகப் பாதையில் எங்களைத் தடுக்கின்ற பாடுகள், நெருக்கங்கள் மத்தியிலும் தரிசனத்தோடு முன்செல்ல உமது தயவை நாடி நிற்கிறோம். ஆமென்.