ஜெபக்குறிப்பு: ஜுன் 19 திங்கள்
அமெரிக்க தேசத்திலுள்ள லிங்கன் வேதாகமத்திற்குக திரும்புக ஊழியம் பல தேசாதேசங்களிலும் பரந்து செய்யப்படுவதற்கான வளர்ச்சியடைய, வானொலி செய்தியாளர்கள், வேத ஆராய்ச்சியாளர்கள், ஊழியத்தலைவர்களை கர்த்தர் நல்ல சுகத்தோடு காத்து, ஊழியத்தேவைகள் அனைத்தையும் சந்தித்து வழிநடத்த ஜெபிப்போம்.
தகுந்த பாத்திரம்
தியானம்: ஜுன் 19 திங்கள்; வேத வாசிப்பு: எஸ்தர் 4:1-16
“நீ இந்தக் காலத்திலே மவுனமாயிருந்தால் யூதருக்குச் சகாயமும் இரட்சிப்பும் வேறொரு இடத்திலிருந்து எழும்பும்” (எஸ்.4:14).
குடும்பம், சமுதாயம், அரசியல் என்று எவ்விடத்திலும் பெண்களுக்கு எவ்வித மதிப்பும் கொடுக்கப்படாத காலகட்டத்தில், சிறைப்பிடிக்கப்பட்டு அந்நியநாட்டில், குலம் கோத்திரம் அறியப்படாத நிலையில் இருந்த ஒரு பெண்ணை, தமது மக்களின் விடுதலைக்காகக் கர்த்தர் பயன்படுத்தினார் என்றால், அந்தப் பெண்ணில் அப்படி என்ன இருந்தது?
அகாஸ்வேரு ராஜாவின் மனைவி தன் ராஜஸ்தானத்தை இழந்ததால், அந்த இடத்திற்கு எஸ்தர் என்ற யூதப்பெண் தெரிந்தெடுக்கப்பட்டாள். எஸ்தரில் ராஜா அதிக அன்பு வைத்திருந்த போதிலும், அவளது இனத்தையோ குடும்பத்தையோ அறியாதிருந்தான். மொர்தெகாயின் ஆலோசனைப்படி எஸ்தரும் அதை யாருக்கும் தெரிவிக்காது மவுனமாயிருந்தாள். மொர்தெகாய்க்கும், தன் ஜனத்தாருக்கும், துஷ்டனான ஆமானின் சூழ்ச்சியால் சாவுமணி அடிக்கப்பட்டதை அறிந்தபோதும் அவள் பொங்கி எழவில்லை. “நீ இந்தக் காலத்திலே மவுனமாயிருந்தால் யூதருக்குச் சகாயமும் இரட்சிப்பும் வேறொரு இடத்திலிருந்து எழும்பும்… நீ இப்படிப்பட்ட காலத்துக்கு உதவியாயிருக்கும்படி உனக்கு ராஜ மேன்மை கிடைத்திருக்கலாமே, யாருக்குத் தெரியும்” எஸ்.4:14 என்று மொர்தெகாய் சொல்லியனுப்பிய பின்பே எஸ்தர் உணர்வடைந்தாள். தன் ராஜ மேன்மை, சௌகரியங்கள் அனைத்தையும் துச்சமாய் எண்ணி, தைரியத்தோடும், ஞானத்தோடும் ராஜ சமுகத்தை நாடினாள். காரியம் வாய்த்தது. துஷ்ட ஆமான் தூக்கிலிடப்பட்டான். யூத இனம் அழிவினின்று காக்கப்பட்டது. ஒரு சாதாரண பெண், ஒரு இனத்தின் பாதுகாப்பிற்கு உகந்த பாத்திரமானாள். தன் உயிரையும் பாராமல் எஸ்தர் எடுத்த முடிவு யூத இனத்தையே காப்பாற்றியது.
சுயநலமற்ற மனதையுடையவன், பிறருக்காக எதையாகிலும் செய்ய வேண்டுமென்ற உணர்வுடையவனாக இருப்பான். மறுபக்கத்தில், சுயநலக்காரன் தன் சொந்த நலன், சொகுசு இவற்றை விட்டுக்கொடுக்கமாட்டான். இதில் நாம் யார்? தேவன் தாம் செய்வதை ஒருபோதும் நிறுத்திவிடுகிறவர் அல்ல. அவர் நம்மை நம்பி நமக்கு சில இடங்களில் பதவிகளைக் கொடுக்கிறார் என்றால், நிச்சயமாக அதில் ஒரு நோக்கம் இருக்கும். பிறர் முன்னிலையில் செய்யவேண்டியதை நமக்குக் கிடைத்த தருணத்தைப் பயன்படுத்திச் செய்ய நாம் தயங்கினாலும், தேவபணி நிற்காது. அவர் வேறு யாரைக் கொண்டாகிலும் செய்வார். ஆகையால், நமக்குக் கொடுக்கப்பட்ட தருணங்களை தவறவிடாதிருப்போமாக. நமக்காகத் தமது உயிரையே கொடுத்தவருக்காக நாம் எதையாகிலும் விட்டுக் கொடுக்கலாமே. அவருக்கு உகந்த பாத்திரமாக வாழலாமே. நமக்கூடாகவும் தேவன் நிச்சயம் பெரிய காரியம் செய்வாராக.
ஜெபம்: தேவனே, இன்று நான் எஸ்தரைப் போன்று இல்லாவிட்டாலும், நீர் என்னை எங்கே நிறுத்துகிறீரோ, அந்த இடத்திலே சுயநலமில்லாமல் நீர் கொடுத்த பணியைச் சரிவரச் செய்ய என்னை அர்ப்பணிக்கிறேன். ஆமென்.