ஜெபக்குறிப்பு: ஜுன் 24 சனி
“..கிறிஸ்துவினுடைய நாமம் சொல்லப்பட்டிராத இடங்களில் சுவிசேஷத்தை அறிவிக்கும்படி நாடுகிறேன்” (ரோம.15:21) என்ற வாக்குப்படியே சத்தியவசன முன்னேற்றப் பணிகளை எல்லா இடங்களிலும் செய்யப்படுவதற்கான வாசல்களை தேவன் திறந்துதர வேண்டுதல் செய்வோம்.
பிரகாசிக்கின்ற பாத்திரம்
தியானம்: ஜுன் 24 சனி; வேத வாசிப்பு: அப்போஸ்தலர் 9:1-22
“…ஆயினும், பிழைத்திருக்கிறேன். இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்” (கலாத்தியர் 2.20).
பவுல், சவுல் என்ற பெயரோடு எருசலேமில் வாழ்ந்த ஒரு பரிசேயன். யூதமதக் கொள்கைகளை மிகவும் பக்திவைராக்கியத்தோடு கடைப்பிடித்துவந்த ஒருவர். எனவேதான், கிறிஸ்துவின் மரணத்தின் பின் கிறிஸ்தவர்களைத் துன்பப்படுத்துவதிலும், ஸ்தேவானின் மரணத்திலும் முக்கிய பங்கு வகித்திருந்தார். கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவர்களைச் சிறைப்பிடித்து எருசலேமுக்குக் கொண்டுவருவதற்கான அனுமதியைப் பெற்று தமஸ்கு பட்டணத்தை நோக்கிச் சென்றார் சவுல். ஆனால், ஆண்டவர் அவருடன் இடைப்பட்டார். தமஸ்குவுக்குச் சமீபித்தபோது வானத்திலிருந்து ஒரு ஒளி அவரைச் சுற்றிலும் பிரகாசித்தது. அதற்கு முகங்கொடுக்க முடியாத சவுல் தரையிலே விழுந்தார். அப்பொழுது ஒரு சத்தம் உண்டாகி, “சவுலே, சவுலே, நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய்?” என்றும், பேசுகிறவர் யார் என்று சவுல் கேட்க, “நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே. முள்ளில் உதைக்கிறது உனக்குக் கடினமாம்” (அப்.9:4-5) என்றும் கேட்டது. அன்று மாற்றமடைந்தது சவுலின் வாழ்க்கை. எந்த கிறிஸ்துவுக்கு எதிராக சவுல் எழும்பினாரோ, அதே கிறிஸ்துவுக்குச் சாட்சியாக மாறினார். பவுல் என்ற பெயரில் ஒரு அப்போஸ்தலனாக கிறிஸ்துவுக்காகவே வாழ்ந்து, அவருக்காகவே பிரகாசித்தார்.
வெறும் கிறிஸ்தவ மதபக்தியோ, வேத அறிவோ நிறைந்திருப்பதால் அது கிறிஸ்தவ வாழ்வே அல்ல. அவற்றிலும் மேலாக, கிறிஸ்துவை ஒருவன் கொண்டிக்கவேண்டும். அதுவே மனமாற்றமடைந்த வாழ்க்கை. எல்லாவற்றிலும் சிறந்து விளங்கிய சவுல் என்பவன், ஒரே விநாடியில் ஒன்றுமே இல்லாதவன்போல கண்கள் குருடாகி நிலத்திலே விழுந்தான். அன்றே அவனுக்கு இந்த உலகம் செத்ததாயிற்று. தனது அறிவு, அந்தஸ்து, பேர், புகழ், அதிகாரம், ஆணவம் ஆகிய யாவற்றையும் சிலுவையில் அறைந்துவிட்டான். பவுலாக கிறிஸ்துவுக்குள் புதிய மனுஷனானான். இந்த உலகத்திற்கு தான் செத்தவன் போலத் தெரிந்தாலும், தன்னில் அன்புகூர்ந்து தனக்காக தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரனைப்பற்றும் விசுவாசத்தினாலே தான் உயிர்வாழுவதாக பவுல் எழுதுகிறார் (கலா.2:20). மாய்மாலமான ஒரு வெளிச்சத்தைக் கொண்டிருந்த பவுல், இப்போது கிறிஸ்துவுக்குள் பிரகாசிக்க ஆரம்பிக்கிறார். ஒரு புதிய வாழ்வு; பிரகாசமான வாழ்வு.
இன்று நமது நிலை என்ன? வெறும் அறிவிலும் திறமையிலும், பணி செய்வதிலும் மட்டுமா நாம் திருப்திகொண்டிருக்கிறோம்? நாம் கிறிஸ்துவுக்குள் இருக்கிறோமா? கிறிஸ்து நமக்குள் இருக்கிறாரா? நம்மைநாமே கேட்டுப்பார்க்க வேண்டிய கேள்விகள் இவை. மாயையான ஒளி நம் வாழ்வில் இருக்குமானால் அதை அகற்றி, மெய்யான பிரகாசம் நம்மில் வீச, இன்றே தேவனுடைய கரங்களில் நம்மைத் தருவோமாக.
ஜெபம்: அன்பின் தேவனே, கிறிஸ்தவனாக வாழ்கிற நான், மாயையான ஒளியை என்னைவிட்டு விலக்கி நீர் என்னில் பிரகாசிக்கும்படி வாழ உதவியருளும். ஆமென்.