ஜெபக்குறிப்பு: ஜுன் 9 வெள்ளி

அன்பு தணிந்துபோய் கொண்டிருக்கிற இந்நாட்களிலே பிரிவினைகள், குடும்பங்களுக்குள் உள்ள உறவுகள் யாவும் சீர்ப்படுத்தப்பட, மனவேற்றுமையினால் பிரிந்திருக்கிற குடும்பங்கள் கிறிஸ்து இயேசுவினால் ஒன்றாக சேர்ந்து வாழ தேவனுடைய கிருபைக்காய் வேண்டுதல் செய்வோம்.

பலவீனமான பாத்திரம்

தியானம்: ஜுன் 9 வெள்ளி; வேத வாசிப்பு: யோவான் 21:1-17

“…நீ பேதுருவாய் இருக்கிறாய். இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்…” மத்தேயு 16:18

தனக்குப் பிரியமானதும் உபயோகமானதும் என்று தானே வனைந்தெடுத்த பாத்திரம், பலம் குன்றியதாய் தெரிந்தால் அதை உரியவன் எறிந்துவிடுவானா, இல்லையே! அதனையே பெலமுள்ள பாத்திரமாக மீண்டும் வனைந்து, பயனுள்ளதாக்கமாட்டானா!

இயேசுவின் இவ்வுலக ஊழியத்தின் ஆரம்பத்திலேயே பேதுரு இயேசுவுக்குச் சீஷனானார். இந்தப் பேதுரு முற்கோபம், பயம், பின்வாங்கும் தன்மை, உணர்ச்சி வசப்படுகின்ற சுபாவம் என்று பல பலவீனமான குணாதிசயங்களை உடையவராக, ஒரு பெலவீனமுள்ள மண்பாண்டம்போல இருந்தார். இயேசுவின் நியாய விசாரணையின்போதும், ‘இவரை அறியேன்’ என்று மறுதலித்துவிட்டார். அது மட்டுமல்ல, இயேசு உயிர்த்தெழுந்த செய்தியைக் கேள்விப்பட்ட பின்னரும், வெறுங் கல்லறையைக் கண்ட பின்னரும், தன் விசுவாசத்தில் நிலைத்திருக்க முடியாதவராக, திரும்பவும் தன் சொந்தத் தொழிலான மீன்பிடிக்கும் தொழிலுக்குத் திரும்பினார். ஆனால், பேதுருவைத் தமது சீஷனாகத் தெரிந்துகொண்ட இயேசுகிறிஸ்துவோ, அவன் பல பெலவீனங்களைக் கொண்டிருந்தானாயினும், ‘நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து’ என்று அறிக்கையிட்ட அவனுக்குள்ளிருந்த விசுவாசத்தைக் கண்டார். அந்த விசுவாசத்திலே சபை கட்டப்படும் (மத்தேயு 16:18) என்பதை இயேசு சொல்லியிருந்தார். அந்தப்படியே, பூரண ஒப்புக்கொடுத்தலின் அறிக்கைக்கூடாக ஆண்டவர் பேதுருவை வழிநடத்தி (யோவான் 21:15-17), பேதுருவைத் திடப்படுத்தி தமது ஊழியத்தையும் கொடுத்து, மிகவும் பெலமுள்ள பாத்திரமாக மாற்றினார்.

ஜென்ம சுபாவமான பலவீனங்கள் நம்மை ஆட்கொண்டிருந்தால் நாமும் பலவீனமுள்ள பாத்திரங்களே. இதனாலேயே பாடுகள் நெருக்கங்கள் வரும்போது நாம் தளர்ந்துபோகிறோம். மட்டுமல்ல, நமக்குரிய அழைப்பிலிருந்தும் விலகிவிடுகிறோம். பவுலும் நம்மைப்போல ஒரு பலவீனமான பாத்திரமாகவே விளங்கினார். ஆயினும், “நான் பலவீனமாயிருக்கும்போதே பலமுள்ளவனாயிருக்கிறேன். ஆகையால், கிறிஸ்துவின் நிமித்தம் எனக்கு வரும் பலவீனங்களிலும், நிந்தைகளிலும், நெருக்கங்களிலும், துன்பங்களிலும், இடுக்கண்களிலும் நான் பிரியப்படுகிறேன்” (2கொரி.12:10) என எழுதியதிலிருந்து அவர் கிறிஸ்துவுக்குள் எவ்வளவாகப் பெலங்கொண்டு ஜீவித்தார் என்பது விளங்குகிறது. இன்று நம்மில் யாராவது ‘நான் பலவீனமான பாத்திரம்’ என்று சோர்ந்துபோயிருந்தால், இதோ, ஆண்டவர் நம்மைத்தான் தேடுகிறார் என்ற நற்செய்தி நமக்குத்தான். நமது பலவீனத்தில் தமது கிருபையைப் பெருகப்பண்ணி, தமது நாமத்தை நம்மில் விளங்கப்பண்ணுமளவுக்கு நம்மைப் பெலப்படுத்த அவர் ஆயத்தமாயிருக்கிறார். ஆனால், அதற்கு நம்மைநாமே ஒப்புக்கொடுக்கவேண்டும். நாம் பலவீனராயினும் அவர் பெலன் நம்மில் விளங்கட்டும்.

ஜெபம்: அன்பின் தேவனே, எனது பலவீனங்கள் என்னை மேற்கொள்ளாதபடிக்கு பெலப்படுத்துகிற உம்மைப் பற்றிக்கொண்டு முன்செல்ல கிருபை தாரும். ஆமென்.