ஜெபக்குறிப்பு: ஜுன் 5 திங்கள்

இப்புதிய கல்வியாண்டில் உயர்கல்விக்காக முயற்சிக்கும் பிள்ளைகளுக்கு நல்ல கல்லூரிகளில் இடம் கிடைக்கச்செய்து அவர்கள் விருப்பப்பாடங்களை ஆரம்பம் முதற்கொண்டே நன்கு படித்து வருவதற்கு ‘ஞானக்கன்மலையாகிய கிறிஸ்து’தாமே உதவி செய்திடவும் அவர்களது படிப்பிற்கான பணத்தேவைகள் சந்திக்கப்படுவதற்கும் ஜெபிப்போம்.

சுத்தமான பாத்திரமாக்குவீர்!

தியானம்: ஜுன் 5 திங்கள்; வேத வாசிப்பு: சங்கீதம் 51:1-17

“நீர் என்னை ஈசோப்பினால் சுத்திகரியும், அப்பொழுது நான் சுத்தமாவேன். என்னைக் கழுவியருளும் அப்பொழுது நான் உறைந்த மழையிலும் வெண்மையாவேன்.” சங்கீதம் 51:7

அநேக பாத்திரங்களுள் பிரயோஜனமுள்ளது என்று நாமே மிகவும் விரும்பித் தெரிந்தெடுத்த பாத்திரத்தின் உட்புறம் அழுக்கானால் நாம் சும்மாவிட்டு விடுவோமா? அதனை கவனமாக அதிக சிரமமெடுத்து சுத்தப்படுத்தி, திரும்பவும் அதனை அழகாக வைத்திருக்க முற்படுவோம் அல்லவா!

தாவீது தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டு, சகல நற்குணங்களாலும் அலங்கரிக்கப்பட்டு, அனைவராலும் போற்றப்பட்ட தேவனுக்குப் பிரியமான பாத்திரமாக வாழ்ந்தார். ஆனால், தன் ஊழியக்காரனான உரியாவின் மனைவியில் ஆசை கொண்டு, அவளைத் தனதாக்கி, கொலை, சரீர இச்சை என்பவற்றுக்கு இடமளித்ததால் அழுக்கான பாத்திரமானார். தன் அழுக்கான நிலையை தீர்க்கதரிசியான நாத்தானுக்கூடாகத் தேவன் வெளிப்படுத்தியதும் தாவீது பின்நிற்கவில்லை. தன் வாழ்வின் பங்கான தேவனுக்கு உகந்த பாத்திரமாய்த் தொடர்ந்தும் வாழ வேண்டும் என்ற வாஞ்சையோடு தாமதமின்றி தன் குற்றத்தை தேவனிடம் அறிக்கை செய்து மன்னிப்புக்கேட்டார். தாவீது வேண்டிக்கொண்டபடி தேவன் தாவீதை மன்னித்து, திரும்பவும் சுத்தம்செய்து தமக்கு உகந்த பாத்திரமாக்கினார்.

நம்மைத் தமது பாத்திரங்களாகத் தெரிந்துகொண்ட தேவன் பரிசுத்தமானவர் மட்டுமல்ல, “நான் பரிசுத்தராய் இருக்கிறதுபோல, நீங்களும் பரிசுத்தராயிருங்கள்” என்று பல தடவைகள் இஸ்ரவேல் ஜனங்களுக்குக் கூறி, அவர்களைப் பரிசுத்த பாதையில் வழிநடத்திச் சென்றார். அதையே அவர் இன்று நம்மிடமும் எதிர்பார்க்கின்றார். நாமோ உட்புறமான நமது வாழ்க்கையின் அந்தரங்க பாவங்களைக் குறித்து உணர்வற்றவர்களாய், அவற்றை அறிக்கை செய்து விட்டுவிடாமல், தொடர்ந்தும் அந்தப் பாவங்களை மூடிமறைத்து வாழ முயற்சிக்கின்றோம். இது நமக்கு ஆபத்தைக் கொண்டுவரும் என்பதுவும் நாம் அறிந்ததே. ஆகவே, தேவன் நம் பாவங்களை வெளிப்படுத்தும்போது நம்மைத் தாழ்த்தி, நமது குற்றங்களை ஒப்புக்கொண்டு, அறிக்கைசெய்து விட்டுவிடுவதே நல்லது. தாவீது மாத்திரமல்ல, தேவனுடைய பாத்திரங்களாக வாழ்ந்த அனைவருமே இதையே செய்தார்கள் என்று வேதாகமத்தில் காண்கிறோம். தேவன் நம்மிடம் எதிர்பார்ப்பதும் இதையேதான். ஆகவே, “தேவனே, என்னை ஆராய்ந்து என் இருதயத்தை அறிந்துகொள்ளும். என்னைச் சோதித்து என் சிந்தனைகளை அறிந்துகொள்ளும். வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பார்த்து நித்திய வழியிலே என்னை நடத்தும்” (சங்.139:23,24) என்று ஜெபித்து, உண்மைத்துவத்துடன் நமது நிலைமையை அறிக்கைசெய்து விடுதலையைப் பெற்றுக்கொள்வோமாக.

ஜெபம்: பரிசுத்தமான தேவனே, நீர் எங்களுக்குப் போதித்தபடி எங்கள் வாழ்வின் வெளிப்புறத்தையல்ல; முதலாவது எங்கள் இருதயத்தின் உட்புறத்தை ஆராய்ந்து, அதை சுத்தஞ்செய்ய எங்களை ஒப்புவிக்கிறோம். ஆமென்.