ஜெபக்குறிப்பு: ஜுன் 2 வெள்ளி

“.. நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி” (மத்.28:19) என்ற கட்டளைக்கிணங்க இப்பணிகளை செய்துவரும் அனைத்து மிஷனரி ஸ்தாபனங்கள் வாயிலாக புதிய மிஷனரிகள் அனுப்பப்படவும், அவர்களை தாங்கும் விசுவாசக் குடும்பங்களை தேவன் ஆசீர்வதிக்கவும், ஊழியர்கள் அனைவருக்குள்ளும் ஒருமனமும் ஐக்கியமும் காணப்பட பாரத்துடன் ஜெபிப்போம்.

என் பாத்திரத்தின் பங்கானவர்

தியானம்: ஜுன் 2 வெள்ளி; வேத வாசிப்பு: சங்கீதம் 16:1-11

“கர்த்தர் …என் பாத்திரத்தின் பங்குமானவர்…” சங்கீதம் 16:5

“உபயோகமற்ற பாத்திரம் என என்னை வெளியே எறிந்துவிட்டார்கள். என்னைக் கண்டெடுத்த ஒரு அழகான பையன், நீ ‘கவலைப்படாதே; இனி நானே உனக்கு எல்லாம்’ என்று சொல்லி தன் அறையில் என்னைப் பத்திரப்படுத்தினான். இப்போ அவனே என் எல்லாம்.” ஐந்தாம் வகுப்புப் படிக்கின்ற ஒரு மாணவி எழுதிய, ‘ஒரு பாத்திரத்தின் சுயசரிதை’ என்ற சிறிய கட்டுரையின் ஒரு சிறு பகுதி இது. இங்கே தாவீது, “கர்த்தர் என் பாத்திரத்தின் பங்குமானவர்” என்று பாடுகிறார்.

இஸ்ரவேலை எகிப்திலிருந்து மீட்டெடுத்த தேவன், அவர்கள் தமக்குப் பிரியமான ஜனங்களாக வாழவேண்டுமென்று கற்பனைகளையும், கட்டளைகளையும் கொடுத்தார். இவற்றுள், ஆசாரியருக்குரியவையும் அடங்கும். அவர் ஆரோனை நோக்கி, “அவர்களுடைய தேசத்தில் நீ ஒன்றையும் சுதந்தரித்துக் கொள்ளவேண்டாம். அவர்கள் நடுவே உனக்குப் பங்கு உண்டாயிருக்கவும் வேண்டாம். இஸ்ரவேல் புத்திரர் நடுவில் நானே உனக்குப் பங்கும், உன் சுதந்தரமுமாயிருக்கிறேன்” (எண்.18:20) என்று கூறினார். இக்கட்டளையின்படி, ஆசாரியர் ஏனைய ஜனத்தாரிடத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்டவர்களாகவும், உலக காரியங்கள் எவற்றையும் தமது பங்காக்கிக்கொள்ளாமல், தேவனையே தமது பங்காக ஏற்று வாழவும் அழைக்கப்பட்டது தெளிவாகிறது.

தாவீது, தன் குடும்பம், சொத்து, செல்வம், ராஜ்யபாரம் என்று இவ்வுலக காரியங்கள் அனைத்தையும் இழந்து, எதிராளிகளினால் நெருக்கப்பட்டபோதும், “கர்த்தர் என் வாழ்க்கையின் பங்கானவர்” என்று கூறி, தேவனையே முற்றிலும் சார்ந்து, அவருக்குப் பிரியமான பாத்திரமாய் வாழ்ந்தார்.

இன்று நமக்கும் இந்த உலகில் பங்கென்ன? பாகமென்ன? ஆண்டவர் தமது சீஷர்களுக்காக ஜெபித்ததுபோல, நாமும் இந்த உலகத்திலிருந்தாலும், உலகத்துக்குரியவர்கள் அல்ல (யோவா.17:16). பவுல் கூறியதுபோல, நாம் எதையும் கொண்டுவந்ததுமில்லை; இங்கிருந்து எதையும் கொண்டுபோகப் போவதும் இல்லை (1தீமோ.6:7). ஆனால் நம்மில் பலர், இவ்வுலகத்தின் பங்குகளான செல்வம், சொத்து, அந்தஸ்து, கல்வி, குடும்பம் போன்றவற்றை மனதில் சுமந்துகொண்டிருக்கிறோம். அநித்தியமான இவை யாவும் நாம் மரிக்கும் போது நம்மைவிட்டு அகன்றுபோகும். ஆகையால், நமக்களிக்கப்பட்ட நித்திய பங்கான தேவனை இழந்துவிடாமல், அவரையே பிரியப்படுத்தி, “கர்த்தாவே, நீரே என் பங்கு. நான் உமது வசனங்களைக் கைக்கொள்ளுவேன்” (சங்.119:57) என்று கூறலாமே, கர்த்தரை தன் பங்காய் கொண்டிருக்கும்போது, கர்த்தரே நம்மைப் பார்த்துக்கொள்வார் என்ற நம்பிக்கையும் நமக்கு அவசியம்.

ஜெபம்: என் வாழ்வின் பங்குமானவரே!  உலக காரியங்களை என் பங்காக்கி வாழ்ந்த என் கடந்த கால தவறுகளை மன்னியும். இனி உம்மையே என் பங்காகக்கொண்டு வாழ இன்றே என்னை அர்ப்பணிக்கிறேன்.